/

திட்டக் குழுவும் கொள்கைக் குழுவும்

கடந்த 64 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த திட்டக் குழுவுக்கு மாற்றாக 'மத்திய கொள்கைக் குழு' ('நீதி ஆயோக்') என்ற புதிய அமைப்பை

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:21 am

முனைவா் அ. பிச்சை

கடந்த 64 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த திட்டக் குழுவுக்கு மாற்றாக "மத்திய கொள்கைக் குழு' ("நீதி ஆயோக்') என்ற புதிய அமைப்பை மத்திய அரசு அண்மையில் உருவாக்கியுள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு கொள்கைகளை வகுக்கும் நிபுணர் குழுவாக செயல்பட உள்ள இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, திட்டக் குழுவைக் கலைப்பதே சரி என்று சிலரும் கலைப்பது தவறு என்று சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பின்னணியில் திட்டக் குழுவைப் பற்றிய சில முக்கியத் தகவல்களை அறிந்து கொள்வது அவசியமானதும் பொருத்தமுடையதும் ஆகும்.

நமது நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, 1950-ஆம் ஆண்டு, சக அமைச்சர்களை, மூத்த அதிகாரிகளை, சில பொருளாதார நிபுணர்களை அழைத்துப் பேசினார். அப்பொழுது தேசத்தில் வளர்ச்சியும் முன்னேற்றமும் விரைவாக நடைபெற வேண்டும். அதற்கு சோவியத் ரஷியாவின் பாணியில் நாமும் திட்டக் குழுவை ஏற்படுத்தலாமா எனக் கேட்டார்.

நமக்கும் ரஷியாவுக்கும் ஆட்சி அமைப்பு முறை வித்தியாசமானது. அவர்களது சேமிப்பு 30 சதவீதம், நமது சேமிப்பு 5 சதவீதத்திற்கும் குறைவானது. அவர்களால் அதிக முதலீட்டைத் திரட்ட முடியும், நம் நாட்டில் முதலீடுகளை அதிகம் திரட்டுவது கடினம்.

இருப்பினும் நாட்டில் சீரான, முறையான வளர்ச்சிக்கு திட்டமிடுதல் அவசியம். திட்டக் குழுவும் அவசியம் என்று முடிவு எடுக்கப்பட்டது. 1950 மார்ச் 15-ஆம் நாளன்று திட்டக் குழு அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

திட்டக் குழு பிறக்கும் போதே, ஒரு பிரச்னையும் எழுந்தது. "நிதி திரட்டுவதையும், ஒதுக்குவதையும் நிதி அமைச்சகமும், பிற அமைச்சகங்களும் பார்த்துக் கொள்ள முடியும். திட்டக் குழு தேவை இல்லை. அது நிதி அமைச்சகத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து விடும்' என்று எதிர்ப்புத் தெரிவித்து, தன் பதவியையே ராஜிநாமா செய்தார் அன்றைய நிதி அமைச்சர் ஜான் மத்தாய்.

முதல் திட்டக் குழுவில் இடம் பெற்றவர்கள் நேரு, நந்தா, வி.டி.கிருஷ்ணமாச்சாரி, ஜி.எல். மேத்தா ஆகியோர் மட்டுமே. அவர்கள் எந்தெந்தத் துறைகளுக்கு முன்னுரிமை (P‌r‌i‌o‌r‌i‌t‌y S‌e​c‌t‌o‌r‌s)​, பொதுவான இலக்குகள் என்ன என்பதை Pa‌r​a‌m‌e‌t‌e‌r‌s)​​ நிர்ணயம் செய்தார்கள்.

ஜெ.ஜெ. அஞ்சாரியா, டாக்டர். கே.எஸ். கிருஷ்ணசாமி, டாக்டர் எல்.எஸ். குல்ஹாதி, கே.என். ராஜ், தர்லோக்சிங் போன்ற முதிர்ந்த பொருளாதார நிபுணர்களும், மூத்த அரசு அலுவலர்களும் இணைந்து திட்ட ஆவணத்தைத் தயாரித்தார்கள். அவர்கள் அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த இடமோ ராஷ்ட்ரபதி பவனின் ஒரு சிறிய பகுதியே.

சிறப்பு அழைப்பாளராக வந்திருந்து பங்கேற்ற மேதை அசோக் மேத்தா உங்கள் ஆவணத்தில் வேலை வாய்ப்பைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்ற கேள்வியை எழுப்பினார். அதன் பின்புதான் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான விவரமான பகுதியும் சேர்க்கப்பட்டது.

திட்டக் குழுவில் சில சுவையான நிகழ்வுகள் நடந்தன.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்திற்கான ஆவணம் தயாரிக்கப்பட்டு விட்டது. அதற்கு திட்டக் குழு ஒப்புதல் வழங்க வேண்டும். திட்டக் குழுவிற்கான கூட்ட நாள், நேரம் முடிவு செய்யப்பட வேண்டும். அமைச்சர் நந்தாவுக்கு எண் சோதிடத்தில் அளவு கடந்த நம்பிக்கை.

7 என்ற எண் தான் அவருக்கு மிகவும் ராசியான எண்ணாம். ஆகவே, கூட்டத்திற்கான நாளை 07.07.1951 என்று முடிவு செய்தார். இதில் ஒவ்வொரு எண்ணிலும் 7 வருகிறது.

அடுத்து கூட்ட நேரத்தை முடிவு செய்ய வேண்டும். காலை 7 மணியா? மாலை 7 மணியா? காலை 7 மணி என்பது எவருக்கும் ஒத்துவராது. மாலை 7 மணிக்கு நேருஜிக்கு வேறு நிகழ்ச்சி இருந்தது. என்ன செய்வது? பிற்பகல் 3.30 என்று முடிவு செய்தார்.

"இதில் 7-ஆம் எண் வரவில்லையே' எனக் கேட்டபோது, "பரவாயில்லை 7-இல் பாதி வருகிறது அதுபோதும்' என்று நந்தா சிரித்துக் கொண்டே சொன்னார்.

தீட்டிய திட்டங்களை செயல்படுத்துவதில் நேரு காட்டிய ஆர்வமும், அர்ப்பணிப்பு உணர்வும் அளப்பரியது. தன் அமைச்சரவையின் கூட்டத்தைக் கூட்டுவார். அவர்களிடம் திட்டங்களின் முக்கியப் பகுதிகளை எடுத்து விளக்குவார்.

அதன்பின் அவர்களைப் பார்த்து எல்லாம் முடிந்ததா, ஏதாவது சந்தேகமா என்று பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் எடுப்பது போல் கேட்பார்.

திட்டங்கள் செயல்படும் விதத்தையும், வேகத்தையும் அடிக்கடி தானே ஆய்வு செய்வார்.

அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்ட தோடு, அறிஞர் பெருமக்களின் ஆலோசனைகளும், ஒத்துழைப்பும் திட்டக் குழுவுக்குக் கிடைப்பதை உறுதி செய்தார்.

அவ்வாறு ஒத்துழைத்து உதவிய மேதைகளின் பட்டியலில், புள்ளியியல் நிபுணர் மகனலோபிஸ், பொருளாதார மேதை பி.எஸ்.லோகநாதன், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், மேதை பிதாம்பர் பட் ஆகியோர் அடங்குவர்.

அதேபோல், மேல் நாட்டு அறிஞர்கள் சுமார் 15 பேர் இந்தியாவுக்கு வந்து, தங்கி திட்டக் குழுவுக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.

"இவை எல்லாம் அவசியமா' என்று சிலர் கேட்டபோது, "நான் வெளிநாட்டுப் பொருள்களை இறக்குமதி செய்ய விரும்பவில்லை. மாறாக, வெளிநாட்டிலிருந்து சிறந்த நவீன சிந்தனைகளை இறக்குமதி செய்ய விரும்புகிறேன்' என்றார் நேரு.

இவ்வாறு ஆழ்ந்த ஆய்வுக்குப் பின் உருவாக்கப்பட்டு, அறிஞர் பெருமக்களின் வழி காட்டுதலில் இயங்கி வந்த திட்டக் குழுவை திடீரென்று கலைப்பதாக அறிவித்திருப்பது சரியான அணுகுமுறையா என்பது தெரியவில்லை.

திட்டக் குழுவின் செயல்பாட்டில் சொல்லப்படும் முதலாவது குறை. திட்டங்கள் மேலே வகுக்கப்பட்டு கீழே திணிக்கப்படுகிறது. மாறாக, கீழே இருந்து திட்டங்கள் உருவாகி மேலே செல்ல வேண்டும் என்பதாகும்.

உண்மையில் இன்றைய நடைமுறையில், ஒவ்வொரு துறையிலும் (விவசாயம், கல்வி, மருத்துவம்) உள்ள மாவட்ட அளவிலான நிர்வாகிகள் களத் தேவைகளை அறிந்து, கலந்து பேசி, திட்டங்களை தனது துறையின் மாநிலத் தலைவருக்கு அனுப்புகிறார்கள்.

முறையான ஆய்வுக்குப்பின், துறைத் தலைவர்கள் மாநிலத் திட்டக் குழுவுக்கு அனுப்புகிறார்கள். அது, முதல் அமைச்சர் தலைமையிலான நிரந்தர நிதிக் குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டு முழுவடிவம் பெறுகிறது. அதன்பின் மத்திய திட்டக் குழுவிற்கு அனுப்பப்பட்டு விவாதத்திற்குப் பின்பு ஒப்புதல் தரப்படுகிறது.

ஆகவே, இப்பொழுது நடைமுறையில் இருப்பது தான் உண்மையான கீழிருந்து மேலே செல்லும் நடைமுறை ஆகும். ஒதுக்கப்படும் நிதி தான் மேலிருந்து கீழே வருகிறது.

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பது இரண்டாவது குற்றச்சாட்டு. இன்றுள்ள யதார்த்த நிலை என்ன? திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் மூன்று வகையாக அரசு பிரித்துள்ளது. அவை:

(1) திட்டம் சார்ந்த செலவுகள் (P‌l​a‌n Sc‌h‌e‌m‌e‌s)​:​​ இவை தான் மத்திய திட்டக் குழுவால் ஒப்புதல் பெறப்படுபவை. இதற்குரிய செலவை மத்திய, மாநில அரசுகள் ஒரு விகிதாசாரத்தில் பகிர்ந்து கொள்கின்றன.

(2) மத்திய அரசு பரிந்துரைத்த திட்டங்கள் (C‌e‌n‌t‌r​a‌l‌l‌y S‌p‌o‌n‌s‌o‌r‌e‌d Sc‌h‌e‌m‌e‌s)​:​​ இத்திட்டங்களின் செலவை, மத்திய, மாநில, நகராட்சி, ஊராட்சிகள் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதில் மத்திய அரசின் பங்களிப்பு அதிகம் இருக்கும்.

(3) திட்டம் சாரா செலவுகள் - N‌o‌n-​P‌l​a‌n Sc‌h‌e‌m‌e‌s:​​ இவை மாநில அரசின் திட்டங்கள். இவற்றிற்கான செலவை, மாநில அரசே தன் வரி வருவாய் மூலம் ஏற்க வேண்டும்.

ஆகவே, முதல் இரண்டு வகையான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பது, சில அடிப்படை விதிகளின்படி விகிதாச்சார முறைப்படிதான் அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. இதில் பாரபட்சம் காட்ட வழியும் இல்லை; முறையும் இல்லை.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம், முதல் 5 ஆண்டுத் திட்ட காலத்தில் (1951-1956) 3.5 சதவீதம் மட்டுமே. அது 6-ஆவது திட்ட காலத்தில் 5.5 ஆகக் கூடியது. 10-ஆவது திட்ட காலத்தில் 7.6 சதவீதமாகவும், 11-ஆவது திட்ட காலத்தில் 7.9 சதவீதமாகவும் (2007-2012) உயர்ந்துள்ளது. 12-ஆவது திட்ட காலத்தில் (2012-2017) இந்த வளர்ச்சி விகிதத்தை 8 சதவீதமாக ஆக்க வேண்டும் என்பதே திட்டக் குழுவின் இலக்காகும்.

உலகமே பொருளாதார மந்தத்தில் சிக்கியிருக்கும் சூழலில், இத்தகைய பொருளாதார வளர்ச்சி திருப்திகரமானது மட்டுமல்ல, பாராட்டத் தக்கது என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.

திட்டக் குழு 64 ஆண்டுகள் நின்று, நிலைத்து விட்டது. அதனால் தேசத்தில் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இன்று நிபுணர்களின் கருத்துகளைக் கேட்பதில் தயக்கம், திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதில் சரியான கண்காணிப்பு இல்லாமை - போன்ற குறைபாடுகள் இருந்தால் அவற்றை நீக்கலாம்.

மேதைகளால் உருவாக்கப்பட்டு, மேதைகளின் கருத்துகளைப் பெற்று, மேதைகளால் இயக்கப்பட்டு, தேசத்தின் சீரான முறையான வளர்ச்சிக்கு வழிவகுத்த, தேவைக்கு ஏற்ப தனக்குத் தானே பல மாற்றங்களை ஏற்படுத்தி ஏற்றுக் கொண்ட, இன்று வரை நின்று நிலைத்துவிட்ட திட்டக் குழுவை கலைப்பதைவிட, இன்றைய அமைப்பை மேலும் வலுவுள்ளதாக, செயல் திறன் மிக்கதாகத் திருத்துவதே சரியான முடிவாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.