ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சாலைப் பாதுகாப்பு வாரத்தையொட்டி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் அறிவுறுத்தலின்படி, ஆங்காங்கே உள்ள ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளிலும், பொது இடங்களிலும், பள்ளி மாணவ - மாணவியர், ஓட்டுநர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரைக் கொண்டு ஆண்டுதோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி, விளக்கு முகப்புகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுவது, விழிப்புணர்வுப் பேரணி நடத்துவது, சாலைப் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்குதல் ஆகியவை நடைபெறும்.
அத்துடன் தங்களுடைய கடமை முடிந்து விட்டதாக எண்ணி அவரவர் வேறு வேலைகளில் இறங்கி விடுவர். இதுதான் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் சாலைப் பாதுகாப்பு வார விழா.
இத்தகைய விழாக்களால் மக்களிடையே எந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதற்கு, ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டிருக்கும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையே சான்றாகும்.
சாலைப் பாதுகாப்பு என்பது வாகன ஓட்டிகளுக்கானது என்று பலரும் எண்ணுவதே விபத்துகள் அதிகரிப்பதற்கான முக்கியக் காரணம்.
சாலைப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமானால், கூட்டு முயற்சி அவசியமாகும். வாகன ஓட்டிகள், பாதசாரிகள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள், வாகன உரிமையாளர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், அரசு என அனைத்துத் துறையினரின் கூட்டு முயற்சியால்தான் முழுப் பாதுகாப்பு சாத்தியமாகும்.
தரமற்ற சாலைகள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், தகுதியற்ற வாகனங்களைப் பயன்படுத்துதல், உரிமம் இல்லாதவர்கள் வாகனங்களை ஓட்டுதல் போன்ற காரணங்களாலேயே சாலைப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதனை சரி செய்ய வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு உண்டு.
முதலில் அரசு நாடு முழுதும் தரமான சாலைகளை அமைக்க வேண்டும். அத்துடன் அவ்வப்போது பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அனைத்து ரக வாகனங்களையும் அவற்றின் தயாரிப்பு தேதியிலிருந்து 15 ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.
அவற்றிற்கு மறு தகுதிச் சான்று வழங்குவதை நிறுத்தி, அந்த வாகனங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும். இதன் மூலம் தகுதியற்ற வாகனங்கள் சாலையில் செல்வது தவிர்க்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும்.
தகுதியற்ற வாகனங்களுக்கு (அரசு வாகனமாகவே இருந்தாலும்) தகுதிச் சான்று அளிப்பதை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அடியோடு நிறுத்த வேண்டும்.
அரசுப் பேருந்துகள் சில சமயம் பெயின்ட் மட்டும் அடிக்கப்பட்டு, தகுதிச் சான்று பெற்று இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது உண்மையெனில் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் வழங்குதல், ஆர்.சி. புத்தகத்தில் பெயர் மாற்றம் செய்தல் ஆகியவற்றில் எந்தப் பாகுபாடும் காட்டப்படக்கூடாது.
சாலை வரி, பசுமை வரி ஆகியவற்றை வசூலிக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், அதன் மூலம் கிடைக்கும் தொகையை அந்தந்தப் பகுதியின் சாலைப் பாதுகாப்புக்குத் தேவையான சாலைத் தடுப்புகள் அமைத்தல், போக்குவரத்து சிக்னல் அமைத்தல், எச்சரிக்கைப் பலகை அமைத்தல் போன்ற பணிகளுக்குச் செலவிட வேண்டும்.
ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் முழு அளவில் தகுதியான பயிற்சியாளர்களை மட்டுமே பணியமர்த்தி பயில வருபவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.
பயிற்சி பெறுவோர் முழுமையாகப் பயிற்சி பெற்ற பின்னரே அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வாங்கிக் கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அவசரம் கூடாது.
வாகன உரிமையாளர்கள் வாகனங்களுக்கு சாலை வரி, காப்பீடு உள்ளிட்டவற்றை முறையாக செலுத்துவதோடு, போக்குவரத்தின்போது ஆவணங்களை சரியாக, தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஓட்டுநர்கள் விதிமுறைகளை மீறாமல் வாகனங்களை ஓட்ட வேண்டும். வாகனங்கள் பழுதானால் சாலையில் அப்படியே நிறுத்திவிட்டு செல்வதென்பது கூடாது.
செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டுதல், மது அருந்திவிட்டு ஓட்டுதல், தூக்கமின்றி ஓட்டுதல், மன அழுத்தத்தில் ஓட்டுதல், அதிக பாரங்களை ஏற்றிச் செல்லுதல், அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையைவிட கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்லுதல் போன்றவற்றை அடியோடு நிறுத்த வேண்டும்.
இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டும்.
பாதசாரிகள் சாலையில் நடக்கும்போதும், சாலையைக் கடக்கும்போதும் இருபுறங்களிலும் கவனித்துச் செல்ல வேண்டும்.
பாத யாத்திரை செல்பவர்கள் வாகன விளக்குகளின் வெளிச்சத்தில் ஒளிரும் தன்மை கொண்ட ஆடைகள் அணிந்து செல்வது பாதுகாப்பானது.
இது போன்று அனைத்துத் தரப்பினரின் பங்களிப்புடன், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாலை விதிகளை கடைப்பிடிக்கச்செய்ய சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து முயற்சிகள் மேற்கொண்டால் சாலைப் பாதுகாப்பு நிச்சயம் சாத்தியமாகும்.
ஆட்சியாளர்கள் முதல் அடித்தட்டு மக்கள் வரை சாலைப் பாதுகாப்புகுறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

