/

போதும் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து என்பது இன்றியமையாததாகி விட்ட நிலையில், வாகனங்களின் பயன்பாடுகளும் அதிகரித்து

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:44 am

என்.எஸ். சுகுமார்

போக்குவரத்து என்பது இன்றியமையாததாகி விட்ட நிலையில், வாகனங்களின் பயன்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு பன்மடங்கு உயர்ந்துவிட்டது. அவற்றின் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அதேபோல், கார் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை மட்டுமன்றி பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களின் பயன்பாடுகளும் அதிகரித்து வருகின்றன.

இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது.

பள்ளி, கல்லூரி, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்லும் மாணவர்கள், அலுவலர்களால் இந்த நெரிசல் நாள்தோறும் ஏற்படுகிறது. 

போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டிய இடத்துக்கு காலதாமதமாகச் செல்லும் நிலை உள்ளது.

உதாரணமாக, ஒரு மணி நேரத்தில் சென்று விடக்கூடிய ஓர் இடத்துக்குச் சென்று சேர சுமார் இரண்டு மணி நேரம் வரை ஆகிறது.

முன்னர் பெருநகரங்களில் மட்டுமே இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் இருந்தது. தற்போது சிறிய நகரங்களிலும் கூட போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்டது.

நகருக்கு வெளியே தொழிற்பேட்டைகள், பள்ளி, கல்லூரிகள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகி விட்டது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்களின் தேவை அதிகரிக்கிறது. இதனால், எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. பெட்ரோலியப் பொருள்களுக்கு இறக்குமதியையே இந்தியா நம்பியுள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் சிறிய, பெரிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் எரிபொருள்களின் இழப்பானது, இறக்குமதியாகும் பெட்ரோலியப் பொருள்களில் கணிசமான அளவாகும். இதனால், இந்தியாவின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு மறைமுகமாகக் குறைகிறது.

போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் எரிபொருள் இழப்பு தனி நபரின் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இவை மட்டுமன்றி, வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையின் அளவும் அதிகரிக்கிறது. ஏற்கெனவே வாகனங்களின் எண்ணிக்கை உயர்வாலும், தொழிற்சாலைகளாலும் காற்று மண்டலம் பாதிக்கப்பட்டு புவி வெப்பமயமாகி வருகிறது.

இந்நிலையில், போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள்{ வெளியேற்றும் கரியமில வாயு சுற்றுச்சூழலை மேலும் மாசடையச் செய்கிறது.

இவ்வாறு கால விரயம், நாட்டின் பொருளாதாரம், தனி நபர் பொருளாதாரம் பாதிப்பு, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்டவற்றுக்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக உள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் என பல்வேறு வழிமுறைகள் செயல்படுத்தப்பட்டு விட்டன. ஆயினும் நெரிசல் குறையவில்லை.

ஏற்கெனவே ஏராளமான தனியார் நிலங்கள் சாலை விரிவாக்கத்துக்காகவும், மேம்பாலப் பணிகளுக்காகவும் கையகப்படுத்தப்பட்டு விட்டன.

இனியும் சாலை விரிவாக்கப் பணிகளை சிறந்த வழியாகக் கருத முடியாது. எனவே, உரிய மாற்று வழியைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்.

பள்ளி, கல்லூரி, அலுவலகப் பணிகளுக்குச் செல்வோர் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், பேருந்து அல்லது ரயிலில் பயணிக்கலாம்.

அதேபோல, குறிப்பிட்ட ஒரு பகுதியில் பணி புரியும் இருவர் தனித் தனியாக வாகனத்தைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் ஒரே வாகனத்தில் சேர்ந்து பயணிக்க முயற்சிக்கலாம்.

பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் சென்று வரக்கூடிய நேரங்களில் கூடுதல் பேருந்துகள், ரயில்களை இயக்க வேண்டியதும் அவசியம். மேலும், போக்குவரத்து நெரிசல் குறைய ஏதேனும் மாற்றுவழி உள்ளதா என்றும் கண்டறிய வேண்டும்.

உதாரணமாக, பள்ளி, கல்லூரி, அலுவலக நேரங்களையும், விடுமுறை நாள்களையும் மாற்றியமைக்க முயற்சிக்கலாம். பொதுவாக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பணி நேரமாக உள்ளது.

எனவே, காலை 8 மணியிலிருந்து முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.

திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று போக்குவரத்து குறைவாக இருக்கும்.

குறிப்பிட்ட ஒரே நேரத்தில் அனைத்து நிர்வாகங்களும் இயங்குவதால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதாவது, காலை 8 மணிக்கு முன்பு சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். இதுபோன்ற நேரங்களில் தங்களது பள்ளி, அலுவலக நேரங்களை அதுசார்ந்த நிர்வாகத்தினர் மாற்றியமைக்க முயற்சிக்கலாம்.

உதாரணமாக, காலை 6 மணி, 7 மணி, 8 மணி என தங்களது பணி நேரத்தை நிர்வாகத்தினர் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். இதனால் போக்குவரத்து ஓரளவு சீரடையும்.

அதேபோல, ஞாயிற்றுக்கிழமையை விடுமுறையாகக் கொள்ளாமல், வேறு ஒரு நாளை வார விடுமுறையாக அறிவித்து செயல்படுத்தலாம்.

திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை உள்ளிட்ட ஏதேனும் வார நாள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பள்ளி, கல்லூரி, அலுவலக நிர்வாகத்தினர் விடுமுறை தினமாக வைத்துக்கொள்ளலாம்.

அரசு சார்பிலும், நிறுவனங்களின் நிர்வாகத்தினரும் கல்வித் துறையினரும் கூடி ஆலோசித்து விரைவில் ஒரு நல்ல முடிவெடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.