திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அகதிகளை அனுப்பலாமா?

இந்தியாவில் - குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதிகளை அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது பற்றிய பிரச்னை எழுந்துள்ளது. இதுபற்றி இரு நாட்டு உயர் அதிகாரிகள் ஜனவரி 30 அன்று தில்லியில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:44 am

உதயை மு. வீரையன்

இந்தியாவில் - குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதிகளை அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது பற்றிய பிரச்னை எழுந்துள்ளது. இதுபற்றி இரு நாட்டு உயர் அதிகாரிகள் ஜனவரி 30 அன்று தில்லியில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ஒரு நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளை அவர்களின் தாயகத்துக்குத் திரும்பிப் போகும்படிக் கட்டாயப்படுத்த முடியாது. எனினும், சுய விருப்பத்துடன் தாயகம் திரும்பும் அகதிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய மத்திய - மாநில அரசுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதுபற்றி இந்திய - இலங்கை அரசுகள் சார்பில் விவாதிக்கப்பட உள்ளதாகவும், இதில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க பிரதிநிதிகளை அனுப்புமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதனைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரியது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இப்போது இருக்கும் சூழ்நிலைகளை நோக்கும்போது, அவை அகதிகளை அங்கு அனுப்புவதற்கு உகந்ததாக இல்லை.

இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், அதனை உறுதி செய்யும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் இருந்த இலங்கை அகதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் 1987-89, 1992-95-ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக தாயகம் திரும்பினர். மேலும், சுமார் ஒரு லட்சம் பேர் தங்கள் சொந்த முயற்சியில் ஐரோப்பிய நாடுகள் உள்பட வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறினர்.

இந்நிலையில், 2009-இல் உள்நாட்டுப் போர் முடிந்ததும் பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 6,500 பேர் மட்டுமே தாயகம் திரும்பினர்.

தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலை நிலவினாலும், அவர்களில் ஒரு பிரிவினர் காவல் துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன் விளைவாக மேற்கொள்ளப்படும் காவல் துறையினரின் கெடுபிடிகளால் அகதிகளில் ஒரு பிரிவினர் அதிருப்தி நிலையில் இருந்து வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதிகளை அவர்களது தாயகத்துக்குத் திருப்பி அனுப்புவது பற்றி மத்திய உள்துறை முடிவெடுக்க வேண்டும் என்று 2013-இல் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்திருந்தது.

இதையடுத்து, இலங்கை அகதிகளின் கருத்தை அறிவதற்காக அகதிகள் முகாமுக்குச் சென்று பார்வையிட ஏற்பாடு செய்யும்படி தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரத்துக்கு, இலங்கையின் புதிய அரசு புத்துயிர் கொடுத்துள்ளது. இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற மனித வளத்தின் தேவை அதிகம் உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டே வெளிநாடுகளில் வாழும் அகதிகளைத் திரும்ப அழைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளதாகத் தெரிகிறது.

இதனை தமிழக அரசும், தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளும் மறுக்கின்றனர். இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், இலங்கைத் தமிழர்கள் இடையே புதிய நம்பிக்கையையும், புதிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தாலும் அவை போதுமானவையாக இல்லை என்பதே உண்மை.

தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் இன்னும் ராணுவம் விலக்கிக் கொள்ளப்படவில்லை. அந்தப் பகுதிகளில் இலங்கை ராணுவம் இருப்பதால் தமிழ் மக்களிடம் அச்சம் நிலவுகிறது. உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்னும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மறு குடியமர்த்தல் தொடர்பாக அவர்களுக்குச் சாதகமான எந்த நடவடிக்கையும் புதிய அரசினால் எடுக்கப்படவில்லை. அப்படி மேற்கொண்டால் மட்டுமே வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். ஆனால், புதிய அரசும், புதிய அதிபரும் வெளியிடும் அறிவிப்புகள் ஏமாற்றங்களையே ஏற்படுத்துகின்றன.

இலங்கை அதிபர் தேர்தலில் மகேந்திர ராஜபட்ச தோற்கடிக்கப்பட்டு, சிறீசேனா புதிய அதிபராக வெற்றி பெற்றவுடன் தமிழர்களுக்கு எதிரான கெடுபிடிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அதிபர் சிறீசேனா சார்பாக வெளியிடப்பட்ட அறிவிக்கையில், "பொது அமைதியை நிலைநாட்டும் பொருட்டு பாதுகாப்புப் பணியை ராணுவம் தொடர வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஒரு மாத காலம் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவம் இப்போதைக்குக் குறைக்கப்பட மாட்டாது என்பது உறுதியாகிவிட்டது.

அதிபரின் ஆணை பொதுவான பாதுகாப்பு நடைமுறைதான் என்று அரசின் முதன்மைச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான சுரேஷ் பிரேமசந்திரன் பேசியுள்ளார். "நாடு முழுவதும் அமைதி நிலவும் நிலையில், தமிழர் பகுதிகளில் மட்டும் ராணுவம் ஏன் நீடிக்க வேண்டும்?' என்று அவர் வினவியுள்ளார்.

"தமிழர்களின் பெருவாரியான ஆதரவால்தான் தாம் வெற்றி பெற்றோம் என்பதை அதிபர் சிறீசேனா மறந்துவிட்டார்' என்றும் அவர் கூறியுள்ளார். இது ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களின் கருத்தாகவே உள்ளது என்பதில் ஐயமில்லை.

ராஜபட்ச அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்த மைத்ரிபாலா சிறீசேனா, அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் சிறீசேனா 62,17,162 வாக்குகளும், ராஜபட்ச 57,68,090 வாக்குகளும் பெற்றனர். வெற்றி பெற்ற சிறீசேனா 51.2 விழுக்காடு வாக்குகளும், ராஜபட்ச 47.6 விழுக்காடு வாக்குகளும் பெற்றனர்.

இதனையடுத்து சிறீசேனா அந்நாட்டின் 6-ஆவது அதிபரானார். ரணில் விக்ரமசிங்க பிரதமர் ஆனார். இந்தத் தேர்தலில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகளே சிறீசேனாவின் வெற்றியை உறுதிப்படுத்தின.

இலங்கை மக்கள்தொகையில் 13 விழுக்காடாக இருக்கும் தமிழர்களின் வாக்குகளே அந்நாட்டின் ஆட்சி மாற்றத்தை தீர்மானித்தது எனலாம்.

இதன் காரணமாகவே, தமிழ் மக்கள் புதிய அரசிடம் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர். போரின்போது உறவுகளையும், உயிர்களையும் இழந்து, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அகதிகளாகிப் போன தமிழர்கள் புதிய வாழ்வுக்காகக் காத்திருக்கின்றனர்.

1983-ஆம் ஆண்டு முதல் 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 அகதிகள் நான்கு கட்டங்களாக தமிழகம் வந்தனர் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வந்தவர்களில் 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் அரசின் உதவியுடன் இலங்கைக்குத் திரும்பிவிட்டனர்.

இப்போது 34 ஆயிரத்து 524 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 55 அகதிகள் இங்கு உள்ளனர். இதில் 64,924 பேர் 107 அகதிகள் முகாம்களில் இருக்கின்றனர்.

"இலங்கை அகதிகள் தமிழகத்தில் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழ்கின்றனர்...' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனை மனித உரிமை இயக்கங்களும், தமிழ் அமைப்புகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களது இருப்பிடங்கள் போதிய சுகாதார வசதியற்றதாக உள்ளன. தரப்படும் உதவித்தொகை குடும்பம் நடத்திட போதுமானதாக இல்லை.

கூலி வேலைகளுக்கு வெளியில் செல்லவும் அனுமதி மறுக்கப்படுகிறது. அரசு அதிகாரிகளும், காவல் துறையும் செய்யும் கெடுபிடிகள் அகதிகளுக்கு மன உளைச்சளை ஏற்படுத்துகின்றன.

இவற்றை எதிர்த்து அகதிகள் முகாம்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர். இருப்பினும் அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கடுமையான அடக்குமுறைகளால் அவை ஒடுக்கப்பட்டன என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் திபேத்திய அகதிகளும், வங்கதேச அகதிகளும் சுதந்திரமாக நடமாட முடிகிறது. ஆனால், ஈழத் தமிழ் அகதிகள் அவர்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்லவும், உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்துப் பேசவும் அனுமதி மறுக்கப்படுகிறது.

பெண்களும், குழந்தைகளும்கூட தீவிரவாதிகள் போல கண்காணிக்கப்படுகின்றனர். உயிருக்குப் பயந்து ஓடி வந்தவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று மனித உரிமைப் பிரகடனத்தை எடுத்துக்காட்டி குரல் எழுப்புகின்றனர்.

எல்லா மனிதர்களும் உள்ளார்ந்த சுதந்திரத்தோடும், மாண்போடும், உரிமைகளோடும், சமத்துவத்தோடும் பிறக்கிறார்கள். அவர்கள் பகுத்தறிவும், மனசாட்சியும் வாய்க்கப் பெற்றவர்கள். எனவே, ஒருவரோடு ஒருவர் சகோதரத்துவ உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்' என்று ஐ.நா.வின் மனித உரிமைப் பிரகடனம் அறிவிக்கிறது.

தங்கள் சொந்த நாட்டில் தாங்கவியலாத கொடூரச் சூழலிலிருந்து தப்பித்து, பிற நாடுகளில் தஞ்சம் கோரிப் பெறுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. ஈழத் தமிழர்களுக்கு மட்டும் அது இல்லாமல் போகுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.