/

பாரம்பரிய முறைக்கு மாறுவோம்!

தோல் தொழிற்சாலைகள் மற்றும் சாயப்பட்டறைகள் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:42 am

அா்ஜுன் சம்பத்

தோல் தொழிற்சாலைகள் மற்றும் சாயப்பட்டறைகள் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை சிட்கோ தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலையக் கழிவு நீர்த்தொட்டி உடைந்து 10 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் சாய ஆலை கழிவு நீர்த்தொட்டி குழாயில் பழுது நேரிட்டு, அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட ஏழு தொழிலாளர்கள் நச்சு வாயுக் கசிவால் உயிரிழந்தனர்.

கடந்த பத்து ஆண்டுகளில் தோல் தொழிற்சாலைகள் மற்றும் சாய ஆலைகளில் ஏற்பட்ட விபத்து காரணமாக சுமார் 100 பேர் பலியாகி உள்ளனர். இத்தகைய உயிரிழப்புகள் நேரிடும் போது, பலியானோர் குடும்பங்களுக்கு சில லட்சங்களை கொடுத்து நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டதாக தொழிற்சாலை நிர்வாகமும், அரசும் அறிவிப்பு செய்கின்றன.

உயிர் பலிகள் நேரிடும் போது மட்டும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஏனைய சமயங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்ற ஒன்று செயல்படுகிறதா என்கிற சந்தேகம் எழுகிறது.

வேலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தோல் தொழிற்சாலைகளை மூடி விட நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. அதேபோல திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சாய ஆலைகளை மூட வேண்டும் என்கிற நீதிமன்றத் தீர்ப்பும் தெளிவாக உள்ளது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இத்தகைய ஆலைகள் இயங்கக்கூடாது என்பதே நீதிமன்றங்களின் உத்தரவு ஆகும். இருந்த போதிலும், இத்தகைய ஆலைகள் தொடர்ந்து திருட்டுத்தனமாக இயங்கிக் கொண்டுதான் உள்ளன. தோல் தொழிற்சாலை கழிவுகளால் வேலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது. மக்கள் இத்தண்ணீரை குடித்து வருவதால் சிறுநீரக பாதிப்பு, முடி உதிர்தல் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து உள்ளன.

தோல் தொழிற்சாலைகளில் தோலை பதனிட வேதியல் பொருள்களை பயன்படுத்துவதால், குறிப்பாக, சோடியம் குளோரைடு, சுண்ணாம்பு, குரோமியம் போல சில வகை அமிலங்களைப் பயன்படுத்துவதாலும் ஏராளமான தண்ணீரை உபயோகிப்பதாலும் வெளியேற்றப்படும் கழிவு நீரால் மண்ணும் நீரும் முழுமையாக இப்பகுதியில் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது.

கழிவுகள் சுத்திகரித்து வெளியேற்றப்பட வேண்டும் என்கிற விதியை பின்பற்றுவது போல் பாசாங்கு செய்கிறார்களே தவிர, உண்மையில் உள்ளூர் அரசு அதிகாரிகளின் உதவியோடு சுத்தம் செய்யாமலே கழிவு நீரை வெளியேற்றுகின்றனர்.

திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட சாய ஆலைகளின் கழிவுகளால் காவிரியின் உப நதியான நொய்யல் ஆறு "செத்த ஆறு' என்று சொல்லும் அளவிற்குப் பாழ்பட்டு விட்டது.

ஒரத்துப்பாளையம் அணைக்கட்டில் தேங்கி நிற்கும் நீர் முழுக்க திருப்பூர் சாய ஆலைக் கழிவுகளால் நிரம்பி உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் பாசனமான காளிங்கராயன் கால்வாயின் நிலையும் இதுதான்.

ஜீரோ டிகிரி வரை சுத்தம் செய்த பிறகுதான் கழிவு நீர் வெளியேற்றப்பட வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு. ஆனால், விஷத்தன்மை கொண்ட உப்புகள் முழுமையாக நீக்கப்படுவது என்பது, அதாவது ஜிரோ டிகிரி என்பது சாத்தியமே இல்லை என்பதுதான் உண்மை.

இப்பகுதிகளிலும் விவசாயம் பாதிக்கப்பட்டு கால்நடைகள் இறந்து போகின்றன. வெளிநாடுகளில் இத்தகைய சாயப்பட்டரைகளும், தோல் தொழிற்சாலைகளும் தடைசெய்யப்பட்டு சிவப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் முன்னேறிய நாடுகளில் இத்தகைய தொழிற்சாலைகள் துவங்க அனுமதிப்பது இல்லை.

ஜவுளி வகைகள், தோல் பொருள்கள் ஆகியவற்றை உள்நாட்டுத் தேவைக்கு உற்பத்தி செய்தல் எனும் நிலை மாறி, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக எனும் கொள்கை நடைமுறையில் உள்ளது.

இத்தகைய தொழிற்சாலைகள் தொழில் துறை வளர்ச்சியோடும், வேலைவாய்ப்புகளோடும், அன்னிய செலாவணியோடும் அடையாளப்படுத்தப்படுகிறது. உண்மையில் இத்தகைய தொழில்களின் வளர்ச்சியால் நமது மண் வளமும், நீர் வளமும் முழுமையாக கெட்டுப்போய் மக்களின் அழிவுக்குத்தான் அவை வழிவகுக்கின்றன.

உண்மையில் தோல் பதனிடுதல், துணிகளுக்கு சாயமேற்றுதல் ஆகிய தொழில்களுக்கு நமது பாரத நாட்டில் ஐயாயிரம் ஆண்டு கால பாரம்பரியம் உண்டு. ஆங்கிலேயர் வியாபார நிமித்தமாக இங்கே வந்து ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றிக்கொண்ட பிறகு, தங்கள் தேவைகளுக்காக தோல் பதனிடும் தொழிற்சாலைகளைத் துவக்கினர்.

தங்கள் உணவுத் தேவை மற்றும் தோல் பொருள்கள் தேவைகளுக்காக ராபர்ட் கிளைவ் ஏராளமான மாடு வதை கூடங்களை அமைத்தார். காலணிகள், தோல் பைகள் ஆகியவற்றை தயாரிக்க கர்நாடக நவாபின் துணையோடு வேலூர் பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் 19-ஆம் நூற்றாண்டின் துவக்கப்பட்டன.

வேலூர், திண்டுக்கல் பகுதிகளில் குறைவான கூலிக்கு வேலையாள்கள் கிடைத்தனர். 1980 வரை தோல் பதனிடுவதற்கு நமது பண்டையத் தொழில்நுட்பமான சுண்ணாம்பு, கடுக்காய் ஆவாரங்கொட்டை, பெருநெல்லி போன்ற இயற்கை பொருள்கள் பயன்படுத்தப்பட்டன.

இம்முறையில், சுமார் நாற்பது நாள்கள் தோலை ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு தோல் பதத்தன்மை அடையும். ஆனால், தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் தோல்கள் இங்கு பதனிடப்படுகின்றன. மூன்று நாள்களில் தோல் பதனிடப்பட வேண்டும்.

விரைவாக வேலையை முடித்து கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்கிற சுயநலத்தின் காரணமாக நமது பண்டைய இயற்கை தொழில்நுட்பங்களைப் புறக்கணித்து வெளிநாட்டுத் தேவைகளுக்காக குரோமியம், அமிலம், உப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி தோலை பதப்படுத்துகின்றனர். இதன் காரணமாக நச்சுக் கழிவுகள் வெளியேறுகின்றன.

ராணிப்பேட்டை பொது சுத்திகரிப்பு ஆலைகளில் மட்டும் 1.40 லட்சம் டன் குரோமியக் கழிவுகள் உள்ளதாக கூறுகின்றனர். தோல், சாய ஆலைக் கழிவுகளை சுத்திகரிக்கும்போது நீக்கப்படும் திடக் கழிவுகளை கடலில் கொண்டு போய் சேர்க்கலாம் என்று திட்டமிடுகின்றனர். கடல் என்ன குப்பை கொட்டும் இடமா?

அரசு மானியம் கொடுத்து பொது சுத்திகரிப்பு ஆலைகளை அமைத்துள்ளது. இத்தகைய தொழிற்சாலைகள் கூட்டாக இணைந்து பொது சுத்திகரிப்பு ஆலைகளை அமைத்துள்ளன. தொழிற்சாலை வளாகங்களுக்குள்ளே சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவின் காரணமாகவும் சில அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாகவும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், சட்டத்தின் கண்ணில் மண்னைத்தூவி நச்சுக் கழிவுகளை அப்படியே வெளியேற்றுகின்றனர்.

மேலை நாடுகளில் வேதியல் முறையில் சாயமேற்றிய துணிகளால் ஒவ்வாமை வருகிறது என்கிற காரணத்தினால் இயற்கைச் சாயமேற்றப்பட்ட துணிகளையே விரும்புகின்றனர். அதிக விலை கொடுத்தும் இயற்கைச் சாயமிட்ட துணிகளை வாங்கத் தயாராக உள்ளனர்.

மேலும் சில நாடுகளில் வேதியல் சாயமேற்றப்பட்ட துணிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதேபோல, விலங்குகளின் தோல் பொருள்களாலான காலணிகள், கைப்பைகள், உடைகள் ஆகியவற்றைக்கூட மேலை நாடுகளில் தற்போது தடைசெய்யத் துவங்கியுள்ளனர்.

அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் அவர்கள் நாட்டில் இத்தகைய பொருள்களின் உற்பத்தி செய்ய அதிக செலவு, குறைந்த கூலியில் வேலையாள்கள் கிடைக்காமை, சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகிய காரணங்களாலும் அவர்கள் நாட்டில் இத்தகைய தொழிற்சாலைகளை சிவப்பு பட்டியலில் வைத்துள்ளதாலும், நமது நாட்டில் தொழில் வளர்ச்சி, புதிய தொழில் நுட்பம் எனும் பெயரில் இத்தகைய தொழில்களை துவங்கி நமது நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கின்றனர்.

நமது நாட்டின் பாரம்பரியத் தொழில்களான தோல் பதனிடுதல் ஜவுளித் தொழில் ஆகியவற்றில் நமது பண்டைய தொழில்நுட்பங்கள் மூலம் தோல் பதனிடுதல் மற்றும் சாயமேற்றுதல் நடைபெற்றால் வேலைவாய்ப்புகள் பெருகும். இதன் கழிவுகள் விவசாயத்திற்கு உரமாகும். சுற்றுச்சூழல் மாசுபடாது.

எனவே, மத்திய-மாநில அரசுகள் இத்தகைய தொழிற்சாலைகளை உடனடியாக தடை செய்து நமது பாரம்பரிய முறையிலான தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

இயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட தோல்களுக்கும் இயற்கை சாயமேற்றப்பட்ட துணிகளுக்கும் உலகம் முழுவதும் அதிக தேவையும் உள்ளது, நல்ல விலையும் கிடைக்கிறது. ஆனால், நம் நாட்டில் சுற்றுச்சூழல் மாசடைவது பற்றி கவலைப்படாமல் அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் சில பேராசைக்காரர்கள் செயல்படுகின்றனர்.

இத்தகைய தொழிற்சாலைகள் மூடப்படுவதன் மூலம் வேலைவாய்ப்புகள் பறிபோகும், வருமானம் குறையும் என்பதெல்லாம் சுவெற்றுச் கூச்சல்.

உண்மையில், நமது பாரம்பரிய தொழில்களான தோல் பதனிடுதல், சாயமேற்றுதல் ஆகியவற்றில் நமது பண்டைய இயற்கை தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் வேலை வாய்ப்புகளும், வருமானமும் பலமடங்கு அதிகரிக்கும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

இதற்குரிய நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் மேற்கொள்ளவேண்டும்.

கட்டுரையாளர்: தலைவர், இந்து மக்கள் கட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.