நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வெள்ளை மாளிகையின் படிக்கட்டுகளில் ஏற...

பல்வேறு சறுக்கல்கள் இருந்தாலும் உலகிலேயே ஆயுதம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியாக வல்லரசாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் நாடு அமெரிக்கா

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:55 am

சு. வெங்கடேஸ்வரன்

பல்வேறு சறுக்கல்கள் இருந்தாலும் உலகிலேயே ஆயுதம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியாக வல்லரசாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் நாடு அமெரிக்கா. அந்த நாட்டின் அதிபராக இருப்பவர்தான் உலகின் வலிமை மிகுந்த தலைவர்களில் முன்னிலையில் இருந்து வருகிறார் என்பதிலும் சந்தேகம் இல்லை.
 சர்வ அதிகாரமும் பொருந்திய அப்பதவிக்கான தேர்தலும் கடும் போட்டியும், சுவாரசியங்களையும் உள்ளடக்கியதாகும். அமெரிக்க அதிபர் பதவிக்கான கடந்த தேர்தல்களில் உள்நாட்டுப் பொருளாதார சிக்கல்கள், வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்டவை முக்கியப் பிரச்னைகளாக இடம் பிடித்திருந்தன.
 ஆனால், இம்முறை சர்வதேசப் பிரச்னைகள், முக்கியமாக அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அமெரிக்க தேர்தலில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா, உள்கட்சி ஜனநாயகத்தில் பிரசித்தி பெற்றது. அதிபர் தேர்தல் வேட்பாளரைத் தேர்வு செய்ய இருபெரும் முக்கியக் கட்சிகளான ஜனநாயகக் கட்சிக்குள்ளும், குடியரசுக் கட்சிக்குள்ளும் தேர்தல்தோறும் கடும் போட்டி நிலவுவது வழக்கம்.
 அமெரிக்காவில் பல்வேறு சிறிய கட்சிகள் இருந்தாலும், ஜனநாயக, குடியரசுக் கட்சியினர்தான் மாறிமாறி அதிபர் பதவியை அலங்கரித்து வருகின்றனர். ஒவ்வொரு லீப் ஆண்டிலும் நவம்பர் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்த நாளில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது.
 அதன்படி, அடுத்த அதிபர் தேர்தலுக்கு சுமார் ஓராண்டு காலம் உள்ளது. ஆனாலும், தேர்தலுக்கான பரபரப்பு ஏற்கெனவே தொடங்கி விட்டது.
 நமது நாட்டில் தேர்தலுக்கு சில காலம் முன்புதான் அதற்கான பரபரப்பும், விறுவிறுப்பும் அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்படும். ஆனால் அமெரிக்காவில் உள்கட்சித் தேர்தலின்போதே தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிடும்.
 அமெரிக்க அதிபர் எடுக்கும் முடிவுகள் அந்நாட்டையும் தாண்டி பல்வேறு நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் உலக நாடுகள் அனைத்துமே அமெரிக்கத் தேர்தல் நடவடிக்கைகளை ஆவலுடன் கவனிப்பது வழக்கம்.
 அடுத்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியில் உள்ளவர்களில் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி கிளிண்டன் பிரபலமானவர்.
 அதேபோல, குடியரசுக் கட்சியில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யு.எச்.புஷ்ஷின் (சீனியர்) மகனும், முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தம்பியுமான ஜெப் புஷ் வேட்பாளருக்கான போட்டியில் உள்ளவர்களில் முக்கியமானவர்.
 இப்போது அமெரிக்க துணை அதிபராக உள்ள ஜோ பிடன், அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார். இது ஹிலாரி கிளிண்டனுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
 இரு கட்சிகள் சார்பிலும் யார் அதிபர் வேட்பாளராக வாய்ப்புள்ளது என்று நடத்தப்பட்ட கணிப்பில் ஜனநாயகக் கட்சியில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலையில் உள்ளார். மேரிலாண்ட் மாகாண கவர்னர் மார்டின் ஓ மெல்லே, செனட் அவை உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் ஆகியோரும் ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளருக்கான போட்டியில் உள்ளனர்.
 எனினும், இவர்கள் ஹிலாரியை முந்தும் அளவுக்கு கட்சிக்குள் செல்வாக்கு பெறுவார்களா என்பதில் சந்தேகம் உள்ளது. மேலும், ஹிலாரி கிளிண்டனுக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்தால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார். அதே நேரத்தில், குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வில் ஜெப் புஷ்ஷுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
 முஸ்லிம்கள் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சால் பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர் டொனால்ட் டிரம்ப், கருப்பினத்தைச் சேர்ந்த பிரபல நரம்பியல் மருத்துவ நிபுணர் பென் கார்ஸன் உள்ளிட்ட 13 பேர் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளருக்கான போட்டியில் களமிறங்குகின்றனர்.
 கடந்த இரு தேர்தல்களிலும் ஜனநாயகக் கட்சிûயைச் சேர்ந்த பராக் ஓபாமாவே அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே, இம்முறை குடியரசுக் கட்சிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுவதும் அக்கட்சியில் இருந்து அதிகம் பேர் அதிபர் பதவி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு முக்கியக் காரணமாகும்.
 நம் நாட்டில் இருப்பதுபோல அமெரிக்காவில் கட்சித் தலைமை தன்னிச்சையாக வேட்பாளரைத் தேர்வு செய்ய முடியாது. வேட்பாளர் தேர்வில் கட்சி உறுப்பினர்களே முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர்.
 வேட்பாளரைத் தேர்வு செய்ய கட்சியின் மாநிலப் பிரிவுகள் உள்கட்சித் தேர்தலை நடத்துகின்றன. வேட்பாளர் தேர்தலில் கட்சி உறுப்பினர்கள் அளிக்கும் வாக்கு அடிப்படையில்தான் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஆதரவு அதிகரிக்கும்.
 அனைத்து மாகாணங்களிலும் வேட்பாளர் தேர்தல் முடிந்த பிறகு நடைபெறும் கட்சிகளின் தேசியக் கூட்டத்தில் அதிபர் வேட்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவார். அதன் பிறகு, முக்கிய நிகழ்வாக இரு கட்சிகளின் அதிபர் வேட்பாளர்களும் குறைந்தது இரு முறையாவது ஒரே மேடையில் தோன்றி விவாதம் நடத்துவார்கள். இதுதான் மக்கள் மத்தியில் ஒரு வேட்பாளருக்கு அதிகபட்ச ஆதரவைப் பெற்றுத்தரும் முக்கிய நிகழ்வாகும்.
 இதைத் தொடர்ந்து நடைபெறும் அதிபர் தேர்தலில் நேரடியாக பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றால் மட்டும் அதிபராகி விட முடியாது. மக்கள் ஆதரவு சற்று குறைந்தாலும், மாகாண அளவில் தேர்வாளர் குழு (எலக்டோரல் காலேஜ்) வாக்குகளை அதிகம் பெறுபவர்தான் அதிபராக முடியும். அதிபர் தேர்தலுடன் சேர்ந்து நடைபெறும் துணை அதிபர் தேர்தலிலும் இதே முறைதான் பின்பற்றப்படுகிறது.
 வெள்ளை மாளிகையின் படிக்கட்டுகளில் ஏற இத்தனை சவால்கள் உள்ளன. இந்த முறை அமெரிக்க அதிபர் மாளிகை வாயில் யாருக்காகத் திறக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.