டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தீவுகளும் வாழட்டும்!

ஐக்கிய நாடுகள் சபை சார்பில், பாரீஸில் நடைபெற்று முடிந்த பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தால்

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:51 am

எஸ். ராஜாராம்

ஐக்கிய நாடுகள் சபை சார்பில், பாரீஸில் நடைபெற்று முடிந்த பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தால் யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி என்பதை, ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் தீவிரமும் காலமும்தான் முடிவு செய்யும்.
 இருப்பினும், மார்ஷல் தீவுகள், துவாளு, மாலத்தீவுகள் போன்ற சிறிய தீவுகளுக்கு இந்த ஒப்பந்தம் ஓரளவு வெற்றியைத் தந்திருக்கிறது என்பதை மறுக்க இயலாது. புவி வெப்பமயமாதல் அதிகரிப்பை 2 டிகிரி செல்ஷியஸுக்குள்ளாக குறைக்க வேண்டும் என உலக நாடுகள் ஒருமனதாக ஒப்புக்கொண்டிருப்பது இந்தத் தீவுகளை இப்போதைக்கு நிம்மதிப் பெருமூச்சுவிடச் செய்திருக்கிறது.
 புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்ஷியஸுக்கு குறைக்க வேண்டும் என்ற முந்தைய வரைவுத் தீர்மானத்தை மாற்றி, 2 டிகிரி செல்ஷியஸ் வரை உயர்த்தியதில் இந்தியா, சீனாவுக்கு எந்த அளவுக்குப் பங்கு இருந்ததோ, அதேபோல தீர்மானத்தில், வெப்பமயமாதல் இலக்கை 2 டிகிரி செல்ஷியஸுக்கு அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டதில் இந்தச் சிறிய தீவு நாடுகளுக்கு, குறிப்பாக மார்ஷல் தீவுகளுக்குப் பெரும் பங்கு உண்டு.
 பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள மைக்ரோனேசியா தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதி மார்ஷல் தீவுகள். 72,000 பேர் வசிக்கும் இத்தீவின் தலைநகரம் மஜுரோ. 29 பவளத் தீவுகளை உள்ளடக்கிய மார்ஷல் தீவுகளை கடல் சிறிது சிறிதாக விழுங்கி வருவது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.
 "1900-இல் இருந்து இப்போதுவரை கடல்மட்டமானது 20 செ.மீ. உயரம் அதிகரித்திருக்கிறது. 2100-க்குள் இது 74 செ.மீட்டராக அதிகரிக்கக் கூடும்' என அண்மையில் வெளியிடப்பட்ட ஐ.நா. பருவநிலை அறிவியல் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பார்த்தால், சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 3 அடி முதல் 6 அடி உயரமே உள்ள மார்ஷல் தீவுகளின் ஒரு பகுதி 2100-இல் கடலில் மூழ்கிவிடும் என நிபுணர்களும் கணித்துள்ளனர்.
 அதை உறுதி செய்யும் வகையில் அடிக்கடி பேரலைகள் எழுந்து மார்ஷல் தீவுக்குள் புகுந்து பேரழிவை ஏற்படுத்துவது வழக்கமாகியிருக்கிறது. பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை நேரடியாக, தினந்தோறும் எதிர்கொள்ளும் ஒரு நாடு மார்ஷல் தீவுகள் என்றால் அது மிகையன்று.
 2008-ஆம் ஆண்டு ராட்சத அலைகள் எழும்பி கடல்நீர் ஊருக்குள் புகுந்ததில் வீடுகள், வணிகக் கட்டடங்கள் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டது. பருவநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக, 2013-இல் மார்ஷல் தீவுகளின் வடபகுதி பவளத்தீவுகள் பெரும் வறட்சியை சந்தித்தன.
 அன்றுமுதல் பருவநிலை மாற்றம் தொடர்பாக சர்வதேச நாடுகளை ஈர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை மார்ஷல் தீவுகள் தீவிரப்படுத்தத் தொடங்கியது.
 பாரீஸ் மாநாட்டிலும் மார்ஷல் தீவுகளின் அதிபர் கிறிஸ்டோபர் லோயக், வெளியுறவு அமைச்சர் டோனி டி பிரம் ஆகியோர், "புவிவெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்ஷியஸாக குறைக்க வேண்டும்; இந்த அளவுக்கு நிர்ணயித்தால்தான் மார்ஷல் தீவுகள் போன்ற பாதிப்புக்குள்ளான நாடுகள் தொடர்ந்து உயிர்த்திருக்க முடியும்' என உலக நாடுகளை வலியுறுத்தினர்.
 இப்போது அந்த இலக்கு 2 டிகிரி செல்ஷியஸுக்குள்ளாக இருக்க வேண்டுமென்றும், 1.5 டிகிரி செல்ஷியஸ் என்பதை இயன்றவரை கடைப்பிடிக்க வேண்டுமென்றும் மாநாட்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பது மார்ஷல் தீவுகள் போன்ற தீவுகளுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாம். இந்த ஒப்பந்தத்துக்கு மார்ஷல் தீவுகள் மட்டுமன்றி, துவாளு உள்ளிட்ட சிறிய தீவுகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.
 மார்ஷல் தீவுகளின் சாதாரண குடிமக்கள் முதல் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் டோனி டி பிரம் வரை ஒவ்வொருவருமே தினம், தினம் தீவை விழுங்கி வரும் கடல் அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் டோனியின் வீட்டின் ஒரு பகுதிகூட கடல் அலையால் பாதிக்கப்பட்டுள்ளது.
 "மார்ஷல் தீவுகளின் தலைநகர் மஜுரோவில் இருக்கும் ஒற்றைச் சாலையில் நின்று கொண்டிருக்கிறேன். எனது இடது பக்கமும் கடல்; வலது பக்கமும் கடல். எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் இந்தக் கடல் எங்களை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறது.
 இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பாரீஸ் ஒப்பந்தம் எங்களுக்கு, நம் எல்லோருக்கும் திருப்புமுனையாக இருக்கட்டும்'-இது மார்ஷல் தீவுகளைச் சேர்ந்த 18 வயதே ஆன செலினா லீம் என்கிற இளம்பெண் உணர்ச்சிப்பெருக்குடன் ஐ.நா. சபைக்கு எழுதிய நன்றிக் கடிதம். பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை இக்கடிதம் அப்பட்டமாக உணர்த்துகிறது.
 மார்ஷல் தீவுகள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, 1946 முதல் 1958 வரை 67 அணுகுண்டு சோதனைகளை இத்தீவுப் பகுதியில் அமெரிக்கா நடத்தியது. இந்த ஒட்டுமொத்த அணுகுண்டு சக்தியையும் 12 ஆண்டுகளுக்கும் சரிசமமாகக் கணக்கிட்டால், ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைப் போல 1.6 மடங்கு அதிகமான அணுகுண்டை தினமும் இத்தீவுகளில் வீசியதற்குச் சமம் ஆகும்.
 பாரீஸ் மாநாட்டு ஒப்பந்தத்தின்படி, வளரும் நாடுகள் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வளர்ந்த நாடுகள் நிதியுதவி அளிக்க வேண்டும். ஒரு காலத்தில் அணுகுண்டால் மார்ஷல் தீவுகளைச் சிதைத்த அமெரிக்காவுக்கு, இப்போது மார்ஷல் தீவுகளைக் காக்கும் கடமையும் அதிகமாகவே உண்டு.
 வளர்ந்த நாடுகளுக்கு புவி வெப்பமயமாதலைக் குறைப்பது முக்கியம்; வளரும் நாடுகளுக்கு தொழில் வளர்ச்சி முக்கியம். இரண்டுக்கும் இடைப்பட்ட இதுபோன்ற தீவுகளுக்கு அங்கு வாழும் மக்களின் உயிர் முக்கியம்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.