அமைதி தருமா ஒப்பந்தம்?
தெற்கு சூடானில் அரசுக்கும், அரசு எதிர்ப்புக் குழுவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஒருவழியாகக் கையெழுத்தாகியுள்ளது


தெற்கு சூடானில் அரசுக்கும், அரசு எதிர்ப்புக் குழுவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஒருவழியாகக் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் அங்கு உடனடியாக நிரந்தர அமைதி திரும்பும் என்று சொல்வதற்கில்லை என்றாலும், கடந்த 20 மாதங்களாக நடந்து வந்த கொடூரமான உள்நாட்டுச் சண்டைக்குத் தாற்காலிகமாக ஒரு முடிவு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
சூடானில் இருந்து 2011-இல் பிரிந்த தெற்கு சூடானில் அன்று முதல் சல்வா கிர் அதிபராக இருந்து வருகிறார். துணை அதிபராக இருந்த ரியெக் மச்சார், அரசுக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபடத் திட்டமிடுகிறார் எனக் குற்றஞ்சாட்டி 2013 டிசம்பரில் அவரைப் பதவியில் இருந்து அதிபர் நீக்கியதில் ஆரம்பித்தது பிரச்னை.
அன்று முதல் அரசுப் படைக்கும், ரியெக் மச்சார் தலைமையிலான எதிர்ப்புப் படைக்கும் சண்டை மூண்டு அமைதியை இழந்தது நாடு.
1.10 கோடி மக்கள்தொகை கொண்ட தெற்கு சூடானில், இந்தச் சண்டை காரணமாக கடந்த 20 மாதங்களில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். 10 லட்சம் பேர் உள்நாட்டிலேயே வீடு, உடைமைகளை இழக்க நேரிட்டது. 4 லட்சம் பேர் அண்டை நாடுகளான கென்யா, சூடான், உகாண்டாவில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.
பாலியல் பலாத்காரம், சிறுவர்களைப் படையில் சேர்ப்பது, பட்டினிச் சாவு என நாட்டின் நிலைமை மோசமான நிலைக்குச் சென்றது.
இந்தச் சூழ்நிலையில்தான் தற்போது இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எத்தியோப்பியா, உகாண்டா, கென்யா உள்ளிட்ட எட்டு நாடுகள் அடங்கிய பிராந்திய அமைப்பு, ஐ.நா. சபை, ஆப்பிரிக்க யூனியன், அமெரிக்கா, சீனா, பிரிட்டன், நார்வே ஆகிய நாடுகளின் முயற்சியால் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதியே இந்த அமைதி ஒப்பந்தத்தில் அரசு எதிர்ப்புப் படைத் தலைவர் ரியெக் மச்சார் கையெழுத்திட்டாலும், அதிபர் சல்வா கிர் காலம்தாழ்த்தி வந்தார்.
ஆனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், பொருளாதாரத் தடைகளைச் சந்திக்க நேரிடும் என ஐ.நா. எச்சரித்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 26-ஆம் தேதி அவரும் கையெழுத்திட்டார்.
ஆனால், அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் எவரும் வெளிப்படுத்தும் முன்னரே, நிகழ்ச்சி நடைபெற்ற மேடையிலேயே, ஒப்பந்தத்தில் உள்ள பல விஷயங்களை ஏற்க முடியாது என்ற தனது அதிருப்தியை வெளிப்படுத்தி கடிதம் ஒன்றையும் கூட்டணி நாடுகளின் தலைவர்களிடம் கொடுத்தார் அதிபர்.
புதிய ஒப்பந்தத்தின்படி, முன்பு துணை அதிபராக இருந்த ரியெக் மச்சார் மீண்டும் துணை அதிபராகப் பதவியேற்பார்.
இந்நிலையில், தலைநகர் ஜூபாவில் இருந்து ராணுவத்தை வெளியேற்ற வேண்டும், எந்தவொரு கொள்கை விஷயமாக இருந்தாலும் துணை அதிபருடன் ஆலோசிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய அம்சங்களை ஏற்றுக் கொள்ள அதிபர் யோசிக்கிறார்.
ஆனால், அமைதி ஒப்பந்தத்தை வரவேற்றுள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, அதிபரின் கவலைகளையெல்லாம் பொருள்படுத்துவதாக இல்லை. செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் ஒப்பந்தத்தில் உள்ள விஷயங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் அல்லது பொருளாதாரத் தடைகளைச் சந்திக்க வேண்டும் என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
அமைதி ஒப்பந்தத்துக்கு முரணாக யார் செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு எதிராக ஆயுதத் தடை, பொருளாதாரத் தடைகளை விதிப்பது தொடர்பான வரைவுத் தீர்மானத்தை தயார் செய்துவிட்டு அமெரிக்காவும் காத்திருக்கிறது.
அரசுக்கும், அரசு எதிர்ப்புப் படைக்கும் இடையே இதற்கு முன்னர் ஏழு முறை சண்டை நிறுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆனால், அவை சில நாள்களிலேயோ, சில மணி நேரங்களிலேயோ முறிந்தும் போயிருக்கின்றன. ஆதலால், அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாவதைவிட, அது அமல்படுத்தப்படுவதில்தான் அதன் வெற்றி அடங்கியிருக்கிறது.
ஆனால், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பொருளாதாரத் தடை எச்சரிக்கைக்கு பணிந்து மட்டுமே ஒப்பந்தத்தில் அதிபர் கையெழுத்திட்டிருப்பதும், அதை அமல்படுத்துவதற்கான எண்ணம் அவருக்கு இல்லை என்பதையும் அவரே மறைமுகமாக ஒப்புக் கொண்டிருப்பதும் சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை என்பதை உணர்த்துகின்றன.
பிரிட்டன் - எகிப்திய கூட்டாட்சியில் இருந்து 1956-இல் சுதந்திரம் பெற்றது சூடான். ஆனால், அதன் தெற்குப் பகுதி ராணுவ அதிகாரிகளின் முனைப்பில், தெற்கு சூடான் தன்னாட்சி அதிகாரம் கோரி போராடத் தொடங்கியது. 1972-இல் தெற்கு சூடானுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைத்த பிறகே அந்தப் போராட்டம் ஓய்ந்தது.
ஆனால், 1983-இல் சூடான் அரசு அந்த தன்னாட்சி அதிகாரத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து, தெற்கு சூடானில் சூடான் மக்கள் விடுதலை இயக்கம், அதன் ஆயுத அமைப்பான சூடான் மக்கள் விடுதலை ராணுவம் தலைமையில் மீண்டும் போராட்டம் தொடங்கியது.
ஒரு வழியாக 2011-இல் ஐ.நா. சபை ஏற்பாட்டில், பொது வாக்கெடுப்புத் தீர்மானப்படி தெற்கு சூடான் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது.
இடைப்பட்ட அந்த 20 ஆண்டுகளில் தெற்கு சூடானின் சுதந்திரப் போராட்டத்தில் சுமார் 15 லட்சம் பேர் உயிரிழந்தனர். அவ்வாறு லட்சக்கணக்கான உயிர்களை இழந்து சுதந்திரம் பெற்ற தெற்கு சூடான், இன்று இருவரின் அதிகாரப் போட்டியில் மீண்டும் போர்க்களமாக மாறி வருகிறது.
ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டத் துடிக்கும் தங்களது நாட்டின் தலைவர்கள், வெறும் வார்த்தைகளைவிடவும் மேலாக எதையாவது செய்ய வேண்டும் என தெற்கு சூடான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். வெறுமனே சண்டையிட்டு அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்து, மீதம் இருப்பவர்களையும் நாட்டைவிட்டு வெளியேறச் செய்துவிட்டு யாரை ஆளப் போகிறீர்கள்? இதுவும் அந்நாட்டு மக்கள் எழுப்பும் கேள்விதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...