திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சுதந்திரம்: மாற்றத்துக்கான அடையாளம்

எல்லா மனிதர்களும் சுதந்திரத்தோடும், சகல உரிமைகளோடும்தான் பிறக்கிறார்கள். ஆனால், மனிதன் வாழத் தொடங்கிய பிறகு அவனையறியாமல்

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:33 am

உதயை மு. வீரையன்

எல்லா மனிதர்களும் சுதந்திரத்தோடும், சகல உரிமைகளோடும்தான் பிறக்கிறார்கள். ஆனால், மனிதன் வாழத் தொடங்கிய பிறகு அவனையறியாமல் அடிமைத்தளைகளால் பிணிக்கப்படுகிறான். அதற்குப் பிறகு ஒரு விடுதலைப் போர் அவனுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தருகிறது.
 இந்திய நாடு 200 ஆண்டு காலம் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது. அதற்கு முன்னர் இஸ்லாமியர்கள், தில்லி சுல்தான்கள், தக்காணத்து சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு, முகலாயப் பேரரசு, மகாராஷ்டிரப் பேரரசு, துர்ரானியப் பேரரசு, சீக்கியப் பேரரசு எனப் பலரும் தம் நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்தி, செல்வங்களையும், செல்வாக்குகளையும் குவிப்பதிலேயே கவனமாக இருந்தனர்.
 இந்தியா முதலில் தனித்தனி அரசர்களின் நாடுகளாகவே இருந்தது. ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பிறகே பல மாநிலங்கள் ஒன்றிணைந்து ஒரே நாடாக உருவானது. பல்வேறு சாதி, சமய, மொழி, இன வேறுபாடுகளும், பண்பாடுகளும், நாகரிகங்களும் சேர்ந்திருப்பதாலேயே வேற்றுமையுள் ஒற்றுமை என்று கூறப்படுகிறது.
 நாட்டின் 69-வது சுதந்திர தின விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டது. அரசாங்கமும், அரசுத் துறைகளும் மட்டும் கொண்டாடுவது சுதந்திரமாகி விடாது. நாட்டு மக்கள் தாங்களாகவே முன்வந்து கொண்டாடும் போதுதான் அது உண்மையான விடுதலை நாளாகிறது.
 ராணுவப் பாதுகாப்பினாலும், காவல் துறையினரின் கட்டாயத்தினாலும் உரிமை உணர்வை உண்டாக்கிவிட முடியாது. குண்டு துளைக்காத காரில் வந்து, குண்டு துளைக்காத கூண்டுக்குள்ளிருந்து கொடி ஏற்றுவது இப்போது வழக்கமாகிவிட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாதமும், இங்கே தொடரும் வன்முறைகளும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
 "நாட்டின் வளர்ச்சிக்கு சமூக நல்லிணக்கமும், அமைதியும் மிகவும் அவசியம். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் பெருந்தன்மையை இந்த உலகமே போற்றுகிறது. இதைப் போலவே எளிமையும், ஒற்றுமையும் நமது மூலதனம் ஆகும்.
 இவை பல நூற்றாண்டு காலமாக நாட்டில் பேணப்பட்டு வருகின்றன. இந்த மூலதனம் தொடர்ந்து பாதுகாக்கப்படும்...' என்று பிரதமர் மோடி தமது சுதந்திர தின உரையில் கூறியுள்ளார்.
 மத வெறிக்கோ, சாதி வெறிக்கோ நாட்டில் இடம் கிடையாது. அதை எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம். வளர்ச்சி என்னும் அமிர்தம் மூலம் இந்த நோய்கள் ஒழித்துக் கட்டப்படும். நாட்டில் ஒற்றுமையில்லாவிட்டால், வளர்ச்சி காண வேண்டும் என்ற மக்களின் கனவு தகர்ந்து போய் விடும் என்றும் பேசியுள்ளார்.
 அரசியலிலும், ஆட்சி அதிகாரங்களிலும் இருப்பவர்கள் பேச்சுக்கும், செயலுக்கும் மிகப் பெரிய இடைவெளி இருப்பதையே கடந்த கால வரலாறுகள் வெளிப்படுத்தி வருகின்றன. மக்களை எப்படியாவது நம்ப வைத்து அவர்களிடமிருந்து வாக்குகளை வாங்கி விட வேண்டும். பிறகு, அடுத்த ஐந்தாண்டுகளுக்குக் கவலை இல்லையல்லவா!
 மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் ஆட்சி என்பதுதானே! மக்களுக்கு எதிரான கொள்கை முடிவுகளும், திட்டங்களும், செயல்பாடுகளும் மக்களுக்கே பிடிக்கவில்லையென்றால், அந்த ஆட்சியை மாற்றி புதிய ஆட்சியை நிறுவ முடியும். புதிய ஆட்சியும் பழைய பாதையிலேயே போகுமானால் என்ன செய்வது?
 முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி செய்த தவறுகளின் காரணமாக அந்த ஆட்சி தூக்கி எறியப்பட்டது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தூக்கி அமர்த்தப்பட்டது.
 தமிழக மீனவர்களின் துயரத்தை எடுத்துக் கொள்வோம். புதிய ஆட்சியில் புதிய வாழ்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். தினமும் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதும், மீன்பிடி வலைகளும், படகுகளும் சேதப்படுத்தப்படுவதும், பிடித்த மீன்கள் கொள்ளையடிக்கப்படுவதும் தொடர்கிறது.
 கடல் எல்லைகள் மீறப்படுவதாக இலங்கை அரசு கூறுவதையே இந்திய அரசும் கூறுகிறது; நீதிமன்றத்திலும் பதில் மனுவாகச் சமர்ப்பிக்கிறது. தேர்தலுக்கு முன் தமிழ்நாடு வந்த பா.ஜ.க. தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று? ஆட்சி மாற்றத்தால் அவர்கள் அடைந்த பயன் என்ன? இரு நாட்டு மீனவர்களும் பேசி சமரசம் காண வேண்டுமாம்; இரு நாடுகளிலும் அரசுகள் இல்லையா?
 விவசாயிகள் நாடு முழுவதும் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம் தெரியாதா? இது ஆளுவோருக்குத் தெரியாமல் போனது எப்படி? அவர்கள் புதிய புதிய காரணங்களைக் கூறி தாங்கள் தப்பித்துக் கொள்வதற்கு விவசாயிகளைக் கேவலப்படுத்தலாமா?
 மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார்; விவசாயிகளின் தற்கொலைகளுக்குப் பெரிதும் காரணம் காதல் தோல்வி, வரதட்சணைக் கொடுமை, குழந்தையின்மை உள்ளிட்ட பிரச்னைகளே என்று கூறியுள்ளார். இதனால், சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அவரது கருத்துக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆதரவு தெரிவித்துள்ளார்.
 காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சியில், "விவசாயிகளின் தற்கொலைக்குக் காதல் தோல்வியே காரணம்' என நாடாளுமன்றத்தில் அப்போதைய அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்களை ஜேட்லி தனது சுட்டுரைப் பக்கத்தில் இணைத்து வெளியிட்டுள்ளார்.
 கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசிய மத்திய வேளாண் துறை இணையமைச்சர் சரண் தாஸ் மஹந்த், விவசாயிகள் தற்கொலைக்குக் காதல் விவகாரங்களே காரணம் எனப் பட்டியல் இட்டிருந்தார்.
 கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் நாள் மக்களவையில் பேசிய அப்போதைய வேளாண் துறை அமைச்சர் சரத் பவாரும் விவசாயிகளின் தற்கொலைகளுக்குக் காதல் விவகாரங்களே காரணம் என்று கூறியிருந்தார்.
 இதுதவிர, வேலையின்மை, சொத்துத் தகராறு, ஏழ்மை, தொழில் பிரச்னை, குழந்தையின்மை, வரதட்சணைப் பிரச்னை ஆகியவையும் தற்கொலைகளுக்குக் காரணங்கள் என்று அவர் பட்டியல் இட்டிருந்தார் என்றும் ஜேட்லி கூறியுள்ளார்.
 இவரது பதில் காங்கிரஸ் கட்சியின் வாயடைக்கப் பயன்படுமே தவிர, நாட்டு மக்களுக்கான நல்ல பதிலாக ஏற்றுக் கொள்ள முடியுமா? இப்படியெல்லாம் பேசி விவசாயிகளைப் பகைத்துக் கொண்டதால்தான் அவர்கள் ஆட்சியை இழந்து அனாதையாகிப் போனார்கள். இந்த நிலை இவர்களுக்கும் வர வேண்டுமா?
 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முந்தைய அரசு எடுத்த கொள்கை முடிவையே புதிய அரசும் பின்பற்றுகிறது.
 ராஜீவ் காந்தி கொலை வழக்குக் குற்றவாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த 2015 ஜூலை 29 அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டள்ளது.
 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ப. சதாசிவம் இருந்தபோது, அவரது தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ராஜீவ் காந்தி கொலை வழக்குக் குற்றவாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது 11 ஆண்டுகளாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதால் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து 2014 பிப்ரவரி 18-இல் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பு சரியானதுதான் என்று இப்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு உறுதி செய்துள்ளது.
 "நெற்களஞ்சியம்' என்று கூறப்படும் காவிரிப் படுகை மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் "மீத்தேன்' என்னும் எரிவாயு எடுப்பதன் காரணமாக அப்பகுதியையே பாலைவனமாக மாற்றும் திட்டம் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இப்போது இந்த ஆட்சியும் அதனையே தொடர்கிறது.
 இவ்வாறு மக்கள் பிரச்னைகளில் தனக்கென ஒரு கொள்கையை வகுத்துக் கொள்ளாமல் கடந்த ஆட்சியின் நிலையையே புதிய அரசு கடைபிடித்து வருகிறது. இதனால், மாற்றத்தை எப்படி ஏற்படுத்த முடியும்? சுதந்திரம் என்பதே மாற்றத்துக்கான அடையாளம் இல்லையா?
 "இந்த நாள் சாதாரண நாள் அல்ல. இந்தியர்களின் கனவுகளை நனவாக்கச் சபதம் ஏற்கும் நாள். நமது நாட்டை அடித்தளத்திலிருந்து வலுவாகக் கட்டி எழுப்ப வேண்டும்; அப்போதுதான் நமது கனவுகளும் சாத்தியமாகும்...' என்பது பிரதமரின் சுதந்திர தின உரைதான். விடுதலைக்காக இன்னுயிர் நீத்த தியாகிகளின் கனவும் அதுதான்.
 "இந்த நாள் சாதாரண நாள் அல்ல. இந்தியர்களின் கனவுகளை நனவாக்கச் சபதம் ஏற்கும் நாள். நமது நாட்டை அடித்தளத்திலிருந்து வலுவாகக் கட்டி எழுப்ப வேண்டும்; அப்போதுதான் நமது கனவுகளும்
 சாத்தியமாகும்...' என்பது பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை. விடுதலைக்காக இன்னுயிர் நீத்த தியாகிகளின் கனவும் அதுதான்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.