டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஒபாமாவின் உத்தி

எதிர்காலத்தில் உலக நாடுகளின் ஒரே எதிரி யார் தெரியுமா? பருவநிலை மாற்றம்தான். புவி வெப்பமயமாதல் காரணமாக,

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:23 am

எஸ். ராஜாராம்

எதிர்காலத்தில் உலக நாடுகளின் ஒரே எதிரி யார் தெரியுமா? பருவநிலை மாற்றம்தான். புவி வெப்பமயமாதல் காரணமாக, பனிமலைகள் உருகி கடல் நீர்மட்டம் அபாயகரமான அளவுக்கு உயருதல், கரியமில வாயு உள்ளிட்ட வாயுக்களின் வெளியேற்றம் காரணமாக ஏற்படும் காற்று மாசுபாடு இவை இரண்டும்தான் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகத் திகழப் போகின்றன.
 இதை அனைத்து நாடுகளும் உணர்ந்தே உள்ளன. அதனால்தான், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து எல்லா நாடுகளுமே செயல் திட்டங்களை வகுத்து வருகின்றன.
 உலகின் காற்று மண்டலத்தை மாசுபடுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் அமெரிக்காவும் இப்போது பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு எதையாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
 அதன் ஒரு பகுதியே, அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ள புதிய சுற்றுச்சூழல் திட்டம். நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் இப்போது வெளியேற்றும் கரியமில வாயுவின் அளவை 2030-க்குள் 32 சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய அம்சம்.
 அமெரிக்காவில் நிலக்கரி மின் நிலையங்கள் ஆண்டுக்கு 220 கோடி டன் கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன. அந்த நாட்டின் மொத்த கரியமில வாயு வெளியேற்றத்தில் இது 40 சதவீதம் ஆகும். ஏறக்குறைய பாதி மாசுபாட்டுக்கு இந்த நிலக்கரி மின் நிலையங்களே காரணம் என்பதால்தான், ஒபாமாவின் புதிய திட்டம் இதை இலக்காகக் கொண்டிருக்கிறது.
 பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து வெள்ளை மாளிகை ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 30 ஆண்டுகளில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களின் எண்ணிக்கை இருமடங்கு ஆகியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் மூச்சுத் திணறல், இருதயக் கோளாறுகளுடன் மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
 கலிஃபோர்னியா, பிற மேற்கு, தென்மேற்கு மாகாணங்களில் கடும் வறட்சி, காட்டுத் தீ ஏற்படுவது சமீபகாலமாக வழக்கமாகிவிட்டது. அதேநேரம் கடல் நீர்மட்டமும் உயர்ந்து, நாட்டின் அனைத்துக் கடலோரப் பகுதிகளிலுமே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
 இந்தச் சூழ்நிலையில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுமானால், மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் மாசினால் ஏற்படும் முன்கூட்டிய உயிரிழப்பு 2030-க்குள் 90 சதவீதம் குறையும்; குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பை ஏற்படுத்தும் மாசுபாட்டின் அளவு 70 சதவீதம் குறையும் என்கிற நன்மைகளையும் இத்திட்டம் முன்வைக்கிறது.
 ஆனால், பருவநிலை மாற்றத்தால் பாதிப்புகள் ஏற்படுகின்றனவா? பருவநிலை மாற்றத்துக்கு மனிதர்கள் காரணமா என எல்லா நாடுகளையும் போலவே அமெரிக்காவிலும் குழப்பம் உள்ளது. "பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நடவடிக்கை எடுப்பது அவசியம்' என போப் ஆண்டவர் பிரான்சிஸ் அண்மையில் ஒரு கருத்து தெரிவித்தார்.
 இதை மேற்கோள்காட்டி எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 65 சதவீதம் பேர் போப் கருத்தை ஆதரித்தும், 27 சதவீதம் பேர் அதில் உடன்பாடு இல்லை எனவும் தெரிவித்தனர்.
 பருவநிலை மாற்றம் தார்மிகப் பிரச்னையா என்ற கேள்விக்கு இல்லை என 49 சதவீதம் பேரும், ஆம் என 44 சதவீதம் பேரும் கூறினர். அது மனிதர்களின் நடவடிக்கையால் ஏற்படுகிறது என்ற கருத்துக்கு ஆதரவாக 68 சதவீதம் பேரும், எதிர்ப்பாக 27 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.
 இந்தக் கருத்துக் கணிப்புகள் மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தங்கள் தலைவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என அமெரிக்க மக்கள் எண்ணுவது ஓரளவுக்குத் தெளிவாகிறது.
 ஆனால், ஆளுங்கட்சி சொன்னால், எதிர்க்கட்சி எதிர்க்க வேண்டும் என்ற உலக அரசியல் விதிக்கு அமெரிக்கா மட்டும் விதிவிலக்கா என்ன? அதிபர் ஒபாமாவின் புதிய சுற்றுச்சூழல் திட்டத்துக்கு எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி எம்.பி.க்களில் பெரும்பாலானோர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்.
 அக்கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளருக்கானப் போட்டியில் உள்ள ஜெஃப் புஷ், மார்கோ ரூபியோ, டெட் கிரஷ் ஆகியோர், "ஒபாமாவின் புதிய திட்ட விதிகள் பொறுப்பற்றவை; இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மாகாண அரசுகள் கடும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும்; எண்ணற்ற மக்கள் வேலை இழப்பார்கள்; இது நாட்டின் மின் சக்தி கட்டமைப்பை ஆட்டம் காணச் செய்யும் முயற்சி' என எச்சரித்துள்ளனர்.
 ஆனால், "நமது காற்று, தண்ணீர், குழந்தைகளின் உடல்நலம் ஆகியவற்றுக்காகத் தரவிதிகளை ஒவ்வொரு முறை நாம் நிர்ணயிக்கும்போதும், இதேபோன்ற எதிர்க்கருத்தை எதிர்கொள்வது வழக்கம்தான்' என குடியரசுக் கட்சியின் எதிர்ப்பை ஒபாமா புறந்தள்ளியிருக்கிறார்.
 ஜனநாயகக் கட்சியின் அடுத்த அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் உள்ள ஹிலாரி கிளிண்டனும், ஒபாமா கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, தான் அதிபரானால் ஒபாமாவின் திட்டங்களை நிறைவேற்றுவேன் என உறுதி அளித்திருக்கிறார்.
 ஒபாமாவின் புதிய திட்டத்தால் பருவநிலையில் மாற்றம் ஏற்படுகிறதோ இல்லையோ, அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் இது ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருக்கக் கூடும் என்பது மட்டும் உறுதி.
 அதேவேளையில், வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறவுள்ள ஐ.நா. சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இத்திட்டத்தை ஒபாமா முன்வைத்து, இதேபோன்ற ஒரு வரையறையை பிற நாடுகளும் ஏற்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையையும் விதிக்கக் கூடும்.
 பருவநிலை மாற்றம் தொடர்பாக வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில், தன்னை யாரும் குறைசொல்ல முடியாது என்று காட்டிக் கொள்ள அமெரிக்கா வகுத்துள்ள உத்தியாகவும் இதைக் கருதலாம்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.