டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

காலத்தின் கட்டாயம்

இரு நாடுகள் இடையிலான 50 ஆண்டு கால பிரச்னை ஒரே ஒரு சந்திப்பில், கை குலுக்கலில் தீர்ந்துவிடாது; ஆனால், அந்தச் சந்திப்புக்காக, கை குலுக்கலுக்காக 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது என்பதில்தான் அதன் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:11 am

எஸ். ராஜாராம்

இரு நாடுகள் இடையிலான 50 ஆண்டு கால பிரச்னை ஒரே ஒரு சந்திப்பில், கை குலுக்கலில் தீர்ந்துவிடாது; ஆனால், அந்தச் சந்திப்புக்காக, கை குலுக்கலுக்காக 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது என்பதில்தான் அதன் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபா அதிபர் ரௌல் காஸ்ட்ரோவும் பனாமா சிட்டியில் ஒரு மணி நேரம் பேசியது, அந்தக் கை குலுக்கல் தொடரும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

"அமெரிக்காவும், கியூபாவும் தூதரக உறவு உள்ளிட்ட பல்வேறு வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தை மூலம் களைந்து, தமது உறவைப் புதுப்பிக்கும்' என இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாகக் கடந்த டிசம்பரில் அறிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடுத்தகட்டமாகத்தான் இந்தச் சந்திப்பு.

அமெரிக்கா, கியூபா இடையிலான பகை, 1959-இல் கியூபா புரட்சியைத் தொடர்ந்து ஆரம்பித்தது. 1952 முதல் 1959 வரை நடந்த புரட்சியால், கியூபா அதிபரும் அமெரிக்க ஆதரவாளருமான பாடிஸ்டா, ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்தது.

ஆரம்பத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான புரட்சியை அமெரிக்கா ஆதரிக்கவே செய்தது. அந்தப் புரட்சியை லத்தீன் அமெரிக்காவில் ஜனநாயகத்தை மலரச் செய்யும் இயக்கத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா பார்த்தது.

ஆனால், காஸ்ட்ரோவின் விவசாய சீர்திருத்த சட்டம், அப்போதைய சோவியத் ரஷியாவுடனான உறவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் 1960-இல் கியூபாவுடனான தனது தூதரக, வர்த்தக உறவை அமெரிக்கா துண்டித்தது.

காஸ்ட்ரோ அரசை அகற்றுவதற்காக, கியூபா அரசின் எதிர்ப்பாளர்களைக் கையிலெடுத்து, சிஐஏ உதவியுடன் அவர்களுக்கு ராணுவப் பயிற்சி அளித்து, கியூபாவுக்குள் அமெரிக்கா ஊடுருவச் செய்தது. அந்த ஊடுருவலை கியூபா அரசுப் படைகள் முறியடித்து, கியூபாவை கம்யூனிஸ்ட் நாடு என ஃபிடல் காஸ்ட்ரோ அறிவித்தார்.

மேலும், அமெரிக்க ஊடுருவலை சமாளிப்பதற்காக, சோவியத் யூனியனின் அணு ஆயுத ஏவுகணைகளை கியூபாவில் நிறுத்திவைக்கவும் ஒப்புதல் அளித்தார்.

அதன்பிறகு கியூபாவுக்கு எதிரான அமெரிக்க ரகசிய சதி நடவடிக்கைகள், வர்த்தக, பொருளாதாரத் தடைகள் என இரு நாடுகள் இடையிலான உறவு சீர்குலைந்தது.

கடந்த 50 ஆண்டுகளில் எத்தனையோ அதிபர்கள் மாறிய பிறகும் மலராத உறவு, இப்போது ஒபாமா ஆட்சியில் மலரத் தொடங்கியிருக்கிறது. "பனிப்போர் காலத்தில் நான் பிறந்தே இருக்கவில்லை. அதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைவிட, எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் கவனத்தில் கொள்ள வேண்டும்' என ஒபாமா கூறியிருக்கிறார்.

ஆனால், பழசை மறக்க ரௌல் காஸ்ட்ரோ தயாராக இல்லை என்றாலும், "கடந்த காலங்களில் நடந்ததற்கு ஒபாமா பொறுப்பு இல்லை' எனச் சொல்லி

யிருக்கிறார்.

இரு நாடுகள் இடையிலான உறவில் உடனடி முன்னேற்றம் என்றால், இரு நாடுகளும் பரஸ்பரம் தங்களது தூதரகங்களை மீண்டும் திறப்பதுதான். ஆனால், அதற்கு "பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள்' என்ற அமெரிக்காவின் பட்டியலில் இருந்து தமது நாட்டை நீக்க வேண்டும் என்பது கியூபாவின் கோரிக்கை.

இந்தப் பட்டியலில் சிரியா, ஈரான், சூடான் ஆகிய நாடுகள் உள்ளன. 1982-இல் கியூபா இதில் சேர்க்கப்பட்டது.

ஸ்பெயின், பிரான்ஸில் செயல்பட்டுவரும் "பாஸ்க்யூ' என்ற பிரிவினைவாதக் குழு, அமெரிக்காவில் கொலம்பியா மாகாணத்தில் செயல்பட்டுவரும் "ஃபார்க் கொரில்லா குழு' ஆகியவற்றுக்கு கியூபா அடைக்கலம் அளித்துவருவதாக அமெரிக்கா நீண்டகாலமாக நம்பி வந்தது.

ஆனால், "கடந்த 6 மாதங்களாக எந்த ஒரு சர்வதேச பயங்கரவாத இயக்கத்துக்கும் கியூபா ஆதரவு அளிக்கவில்லை; எதிர்காலத்தில் ஆதரவு அளிக்க மாட்டோம் என உறுதியும் கூறியிருக்கிறது' என ஒபாமாவே தெரிவித்துள்ளார்.

ஆதலால், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் பட்டியலில் இருந்து கியூபாவை அமெரிக்கா விரைவில் நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவுக்கு முக்கியத் தடையாக இருப்பதாகக் கருதப்படும் இந்தத் தடை மட்டும் நீக்கப்பட்டால், ஒபாமா கூறியதுபோல உறவில் புதிய அத்தியாயம் எழுதப்படும். அதேவேளையில், இது மட்டுமே போதாது.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தூதரகங்கள் திறக்கப்பட்டாலும், இரு நாடுகள் இடையிலான வர்த்தக, பொருளாதாரத் தடைகள் சிறிது காலத்துக்கு நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள குவான்டனாமோ விரிகுடாவைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற கியூபாவின் பல்வேறு கோரிக்கைகளும் தொடரும்.

அதிபர் ஒபாமாவின் பதவிக் காலம் 2017 ஜனவரியில் நிறைவடைகிறது. அதற்கு முன்னதாக இந்தக் கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பில்லை. அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் வேண்டும்.

ஆனால், நாடாளுமன்றத்தில் வலிமையாக உள்ள குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் கியூபாவுடனான உறவைப் புதுப்பிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இவற்றையெல்லாம் கடந்து இந்த உறவால் கியூபாவின் சாமானிய மக்களுக்கு என்னதான் நன்மை கிடைக்கும்? கியூபாவில் அமெரிக்கர்கள், அமெரிக்க நிறுவனங்கள் எளிதாக வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வழிபிறக்கும்.

இந்தப் பொருளாதார நடவடிக்கைகளால் கியூபாவில் சுற்றுலா நடவடிக்கைகள் பெருகி, சாமானியர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கெல்லாம் சிறிது காலம் ஆகலாம்.

ஒபாமா, காஸ்ட்ரோ சந்திப்பின்போது, பின்னணியில் இரு நாட்டுக் கொடிகளும் இடம்பெறவில்லை. ஆனால், இப்போதே கியூபாவின் கடைத் தெருக்களில் அமெரிக்கக் கொடிகள் கியூபா நாட்டினரின் உடைகளிலும், கடைகளிலும் தென்படத் தொடங்கியுள்ளன. அமெரிக்க உறவை கியூபா மக்கள் விரும்புகிறார்கள் என்பதே அதற்கு அடையாளம்.

கம்யூனிஸ தேசம் எனத் தன்னை பிரகடனம் செய்துகொண்டதற்காகத்தான் கியூபாவை முதலில் ஒதுக்கியது அமெரிக்கா.

இப்போதும் கியூபா கம்யூனிஸ தேசம்தான். ஆனால், அதனுடனான உறவை ஒபாமா புதுப்பிக்க நினைப்பது காலத்தின் கட்டாயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.