ஸ்காட்லாந்து மக்களின் தீர்ப்பு
பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி நாடாவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்காட்லாந்து மக்கள் அளித்துள்ள தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்று.


பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி நாடாவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்காட்லாந்து மக்கள் அளித்துள்ள தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்று.
"பிரிட்டன் உடைவதைப் பார்க்க நேர்ந்தால் என் இதயமே உடைந்திருக்கும்' என்ற பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனின் வார்த்தைகளில் இருந்து அதன் முக்கியத்துவத்தை உணரலாம்.
சுமார் 307 ஆண்டுகளாக பிரிட்டனின் ஒரு பகுதியாக இருந்து வந்த ஸ்காட்லாந்து, சுதந்திர நாடாக உருவாக வேண்டுமா, வேண்டாமா என்ற கருத்து வாக்கெடுப்பை உலகமே உற்று கவனித்தது.
இரு ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆதரவு, எதிர்ப்பு பிரசாரங்களுக்குப் பின்னர் நடந்த கருத்து வாக்கெடுப்பில் பதிவான 85 சதவீத வாக்குகளில், தனி நாடு கோரிக்கைக்கு எதிர்ப்பாக 55 சதவீத வாக்குகளும், ஆதரவாக 45 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
ஒரு பிரிவினையைத் தடுத்து நிறுத்திய ஸ்காட்லாந்து மக்கள், உணர்ச்சிகளுக்கு இடம் தராமல், எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில்கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஸ்காட்லாந்துக்கு இப்போதே சில தன்னாட்சி அதிகாரங்கள் உள்ளன. ஆனாலும், தனி நாடாகப் பிரிந்தால், பொருளாதாரம், பாதுகாப்பு என அது எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் பல.
ஸ்காட்லாந்து தனி நாடாக உருவாக வேண்டும் என வாக்களித்த 45 சதவீத மக்களின் குரலுக்கு மதிப்பில்லையா எனக் கேள்வி எழலாம்.
"ஸ்காட்லாந்து மக்கள் அளித்த தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்; இந்த ஜனநாயகத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும்படி ஸ்காட்லாந்து மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வேன்' என அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கிறார் ஸ்காட்லாந்தின் முதல்-அமைச்சர் அலெக்ஸ் சல்மான்ட். இவர் ஸ்காட்லாந்து தனி நாடு இயக்கத்துக்குத் தலைமை வகித்தவர்.
பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து பிரியக்கூடாது என்பதைப்போல, ஸ்காட்லாந்தை பிரிட்டன் ஏன் இழக்கக் கூடாது என்பதற்கும் பல காரணங்கள் உள்ளன.
பிரிட்டனின் மக்கள்தொகையில் எட்டு சதவீதம் உள்ள ஸ்காட்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 235 மில்லியன் டாலர். மேலும், பிரிட்டனின் அணு ஆயுதத்தைத் தாங்கிச் செல்லும் ஏராளமான ஏவுகணைகளும், அவற்றை தாங்கி நிற்கும் நான்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களும் ஸ்காட்லாந்து கடல் பகுதியில்தான் இருக்கின்றன.
ஸ்காட்லாந்து தனி நாடானால், இந்த ஏவுகணைகளும், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களும் அங்கிருந்து அகற்றப்படும் என, ஸ்காட்லாந்தின் முதல்-அமைச்சர் அலெக்ஸ் சல்மான்ட் தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்தின் பிற துறைமுகங்களில் இத்தனை ஏவுகணைகளையும், நீர்மூழ்கிக் கப்பல்களையும் நிறுத்தும் வசதி இல்லாததால் - ஸ்காட்லாந்து பிரிந்தால் - பிரிட்டனின் தன்னிச்சையான அணுஆயுத வல்லமையே கேள்விக்குறியாகிவிடும்.
மேலும், "ஸ்காட்லாந்து தனி நாடானால், ஐ.நா.வின் நிரந்தர ஐந்து உறுப்பு நாடுகளுள் ஒன்றாக பிரிட்டன் இருப்பது சாத்தியமல்ல' என பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் ஜான் மேஜர் எச்சரித்திருந்தார்.
ஜி 7 நாடுகள் கூட்டமைப்பில் இருந்தும் பிரிட்டன் அதன் இடத்தை இழக்க நேர்ந்திருக்கும். உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடான பிரிட்டன், ஸ்காட்லாந்து இல்லாமல் - அந்த இடத்தை பிரேசிலிடம் பறிகொடுக்க வேண்டியிருக்கும் என்றெல்லாம் பல சர்வதேச நெருக்கடிகளும் இருந்தன.
நெருக்கடிகளில் இருந்து பிரிட்டன் மீண்டுவிட்டாலும், ஸ்காட்லாந்துக்காக அது என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கருத்து வாக்கெடுப்புக்கு முன்னர் பிரிவினைப் பிரசாரத்தின் வேகத்தைப் பார்த்து திகைத்த பிரிட்டனின் சுதந்திர ஜனநாயகக் கட்சி, தொழிலாளர் கட்சித் தலைவர்கள், ஸ்காட்லாந்து பிரிட்டனுடன் இணைந்திருந்தால் அதற்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரமும், வளர்ச்சித் திட்டங்களும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர்.
அதை எவ்வாறு நிறைவேற்றப் போகிறார்கள் என்பதில்தான், கிரேட் பிரிட்டனின் இப்போதையப் பெருமிதம் அடங்கியிருக்கிறது.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய பிரிட்டனின் நான்கு பகுதிகளுக்குமான புதிய சட்டங்கள் ஜனவரியில் அமல்படுத்தப்படும் என பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் வாக்குறுதி அளித்திருக்கிறார்.
தனி நாடு கோருவோர் படிக்க வேண்டிய பாடத்தைப்போல, ஆட்சியாளர்கள் படிக்க வேண்டிய பாடத்தையும், ஆம் அல்லது வேண்டாம் என்ற ஒற்றை வார்த்தையில் சொல்லியிருக்கிறார்கள் ஸ்காட்லாந்து மக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...