டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஃபாசிசமும் ஊழலும் இரட்டைப் பிறவிகள்

நாடாளுமன்ற ஜனநாயக நாடுகளின் பேரவையின் 131-ஆவது கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரமான ஜெனீவாவில் நடைபெற்றபோது இந்தியாவின் சார்பில் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுதீப் பந்தோபாத்யாயா, தீவிரவாதத்தால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:02 am

பழ. நெடுமாறன்

நாடாளுமன்ற ஜனநாயக நாடுகளின் பேரவையின் 131-ஆவது கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரமான ஜெனீவாவில் நடைபெற்றபோது இந்தியாவின் சார்பில் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுதீப் பந்தோபாத்யாயா, தீவிரவாதத்தால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக தீவிரவாதம் விளங்குகிறது எனக் கூறுவது உண்மையைத் திரித்துக் கூறுவதாகும்.

உள்கட்சி ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்துள்ள கட்சிகளும், அக்கட்சிகளின் சர்வாதிகாரத் தலைவர்களுமே நாட்டின் ஜனநாயகத்திற்கு அறைகூவலாக விளங்குகிறார்கள்.

நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்கு பெரு முயற்சி செய்தார். தனது கட்சியிலும் அரசியலிலும் ஜனநாயகம் வளர்ந்தோங்க வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

நேருவின் காலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் கீழிருந்து மேல்வரை முறையான தேர்தல்கள் நடைபெற்றன. நேருவின் ஆதரவுபெற்ற கிருபளானியை எதிர்த்து புருசோத்தமதாஸ் தாண்டன் வெற்றி பெற்றார் என்பது வரலாறு.

ஜனநாயகத்தின் மீது நேருவுக்கு அளவுகடந்த நம்பிக்கை இருந்தது. அதனால்தான் தனக்குப் பின்னால் யார் தலைமை தாங்குவார் என்பது குறித்து அவர் இறுதிவரை எதுவும் சொல்லவில்லை. சாடையாகக்கூட குறிப்பிடவில்லை. நாட்டில் உள்ள ஜனநாயக அமைப்புகளை கட்டி வளர்த்ததில் அவருடைய பங்கு மகத்தானது.

தனது மறைவுக்குப் பின் சரியான தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சி தவறுமானால் அதற்கு வழிகாட்டியாக இருந்த தானே பொறுப்பாக நேரிடும் என்பதை உணர்ந்து மிகக் கவனமாகச் செயல்பட்டார். அவரின் இந்த எச்சரிக்கை உணர்வு காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகப் பண்புகளை வளர்த்தது.

மத்திய காங்கிரஸ் தலைமை எவ்வளவு செல்வாக்கோடும் திறமையோடும் இருந்தாலும் அக்கட்சியை உயிர்ப்புடன் வைப்பதற்கு அது உதவாது எனக் கருதினார். எனவே, காங்கிரஸ் கட்சிக்கும் மக்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாக மாநிலங்களில் பல தலைவர்கள் பரவலாக உருவாக வேண்டும் என அவர் கருதினார்.

தனக்குப்பின் எதிர்காலத்தில் ஒரு கூட்டுத் தலைமை நாட்டிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் வழிகாட்ட வேண்டும் என அவர் விரும்பினார். தனது காலத்திலேயே காங்கிரஸ் தலைவராக காமராசரைத் தேர்ந்தெடுக்கச் செய்தார். நேருவின் விருப்பத்தை காமராசர் நிறைவேற்றினார்.

நேருவின் மறைவிற்குப் பிறகு பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியையும், அவரின் மறைவிற்குப் பிறகு பிரதமராக இந்திரா காந்தியையும் ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்க காமராசருக்கு துணை நின்றது மாநில முதல்வர்களும் மாநில காங்கிரஸ் தலைவர்களுமே.

"நேரு போன்ற மாபெரும் தலைவரின் இடத்தை வேறு யாரும் நிறைவு செய்ய முடியாது. கூட்டுத் தலைமைதான் அதை நிறைவு செய்யும். இதை மனதில் வைத்துக்கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும்' என காமராசர் காங்கிரஸ்காரர்களை வேண்டிக் கொண்டார்.

ஆனால், 1969-ஆம் ஆண்டிற்குப் பிறகு கூட்டுத் தலைமையை விரும்பாத பிரதமர் இந்திரா காந்தி காங்கிரசின் பிளவுக்குக் காரணமானார். அதன் விளைவாக காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்தது. அவர் தலைமையில் உருவான புதிய காங்கிரசில் சனநாயகத்திற்கு இடமில்லாமல் சர்வாதிகாரம் கொடிகட்டிப் பறந்தது. சர்வாதிகார நோய் மற்ற கட்சிகளுக்கும் பரவியது.

இன்று இந்தியாவில் அனேகமாக அனைத்துக் கட்சிகளிலும் உள்கட்சி ஜனநாயகம் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டது. அனைத்துக் கட்சிகளிலும் சர்வாதிகாரத் தலைவர்களின் கை ஓங்கியுள்ளது. இடதுசாரி மற்றும் முற்போக்குக் கட்சிகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

பயங்கரவாதத்தைவிட சர்வாதிகாரம் மிகமிக மோசமானது. வெறுக்கத்தக்கது. ஜனநாயகத்தின் ஆணிவேரையே அது அறுத்தெரிந்துவிடும்.

நாட்டில் ஜனநாயகம் வலிமையாக இல்லையென்றால் அதிகார வர்க்கத்தின் கை ஓங்கும். சர்வாதிகாரத் தலைமை அதிகாரவர்க்கத்தை நம்பியே செயல்படும். ஏனென்றால், தாங்கள் செய்யும் ஊழல் நடவடிக்கைகளுக்கு அதிகார வர்க்கத்தின் ஆதரவும், பாதுகாப்பும் தேவை. எனவே, மொத்தத்தில் நிருவாகமே ஊழல்மயமாக மாறும்.

அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். அதிகார வர்க்கம் தவறு செய்யுமானால் அதற்கு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் நாடாளுமன்ற மரபாகும்.

ஆனால், சர்வாதிகார ஆட்சியில் நாடாளுமன்றம் பொம்மை மன்றமாகவே விளங்கும். எனவே, அதிகார வர்க்கத்தின் கை மேலோங்கும்.

பிரதமரோ அல்லது முதலமைச்சரோ மக்கள் செல்வாக்கைப் பெற்றவராகவும் தனது கட்சியைக் கட்டுப்படுத்தும் வலிமை பெற்றவராகவும் இருந்து தனது அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கு ஊக்கம் கொடுத்தால், அதிகாரிகள் அமைச்சர்களுக்கு கட்டுப்படுவார்கள்.

ஆனால், நமது நாட்டில் இப்போது பல மாநிலங்களில் முதலமைச்சர்கள் அமைச்சர்களை ஒதுக்கிவிட்டு நேரடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி செயல்படுகிறார்கள். இந்த சர்வாதிகாரப்போக்கு அதிகாரவர்க்கத்தின் தான்தோன்றித்தனத்தை அதிகரித்துவிட்டது. இந்தத் தவறுகள் நாளுக்குநாள் பெருகுவதற்கு கட்சியிலும் ஆட்சியிலும் ஜனநாயகம் அழிக்கப்பட்டதுதான் காரணமாகும்.

காங்கிரஸ் கட்சிக்கு சோனியா முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்ல. தலைவராக தன்னையே அறிவித்துக் கொண்டவர். இப்போது தனது மகன் ராகுலை துணைத் தலைவராக்கி இருக்கிறார். பிரதமராக இருந்த மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் ஆட்சியிருந்த மாநிலங்களின் முதல்வர்கள் ஆகிய அனைவரையுமே சோனியா ஆட்டிப்படைத்தார் என்பது நாடறிந்த உண்மையாகும்.

2ஜி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல் ஆகியவற்றை விசாரணை செய்த முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத்ராய் இந்த ஊழல்கள் நடைபெறுவது அனைத்தும் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிற்கு நன்கு தெரியும். ஆனால், அவரால் அவற்றைத் தடுக்க முடியாத நிலையில் இருந்தார் என்று கூறியதன்

மூலம் பிரதமருக்கு மேலான அதிகார நிலையில் இருந்த சோனியாவை நோக்கித்தான் குற்றம்சாட்டும் விரல் நீளுகிறது.

தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத்பவார் தனது மகளை தனக்குப் பின் தலைவராக வளர்த்து வருகிறார். ஊழல் வழக்கில் சிறைசென்ற லாலு பிரசாத் தனது மனைவியையே முதலமைச்சராக்கினார்.

முலாயம் சிங் யாதவ் தனது மகன் அகிலேஷ் யாதவை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்க்கிறார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது மகன் ஸ்டாலினை வாரிசாக உருவாக்கி வைத்திருக்கிறார். அவரது மற்றொரு மகன் அழகிரியும் மகள் கனிமொழியும் அதிகாரப் போட்டியில் நிற்கிறார்கள்.

பஞ்சாப், ஹரியாணா, ஒடிசா போன்ற மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகள் எதிலும் ஜனநாயகம் இல்லை. சர்வாதிகாரமும், வாரிசு முறையும்தான் உள்ளன.

பயங்கரவாதத்தைவிட வாரிசு அரசியல் முறை, ஜனநாயகத்தை ஆழக் குழித்தோண்டிப் புதைக்கும். சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும். தங்கு தடையில்லாத சர்வாதிகாரம் ஃபாசிசமாக வடிவெடுக்கும்.

இட்லரும், முசோலினியும் இப்படித்தான் சர்வாதிகாரிகளாக உருவாகி ஃபாசிச ஆட்சி நடத்தினார்கள். இதன் விளைவாக உலகம் இரண்டாம் உலகப்போரை சந்திக்க நேர்ந்து பேரழிவிற்கு ஆளாகியது.

அதைப்போல இப்போதும் இந்தியாவில் சிறுசிறு ஃபாசிசத் தலைவர்கள் உருவாகி வருகிறார்கள். இவர்களின் ஆட்சியில் ஊழலும் இலஞ்சமும் தலைவிரித்தாடுகின்றன. மக்களின் ஜனநாயக உரிமைகள் அடியோடு பறிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியினரின் குரல்வளையை நெரிக்கும் முயற்சி நடைபெறுகிறது.

"ஜனநாயக உரிமைகளுக்கான சங்கம்' என்ற அமைப்பு இந்தியாவில் மத்திய அமைச்சர்களில் 27 சதவீதத்தினரும், மாநில அமைச்சர்களில் 23 சதவீதத்தினரும் கிரிமினல் வழக்குகளில் சிக்கியிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை வெளியிட்டிருக்கிறது.

நாட்டின் இயற்கை கனிமங்கள், வன வளங்கள் ஆகியவை சூறையாட அனுமதிக்கப்படுகின்றன. தங்களுக்குக் கிடைக்கும் கையூட்டுப் பணத்திற்காக மக்களின் சொத்துகள் கொள்ளையடிக்கப்படுவதற்கு அரசுகள் துணைநிற்கின்றன.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், பன்னாட்டுத் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்குத் தேவையான விளைநிலங்கள் விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்குப் பறிக்கப்பட்டு அன்னியப் பெருமுதலாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்குத் தங்கு தடையில்லாத மின்சாரம், தண்ணீர் ஆகியவை வழங்கப்படுகின்றன. இத்தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சங்கம் அமைக்கும் ஜனநாயக உரிமை இல்லை.

ஃபாசிசமும் ஊழலும் இரட்டைப் பிறவிகளாகும். இந்தியாவில் வளர்ந்து வரும் ஃபாசிசக் கட்சிகள் நாட்டின் ஜனநாயகத்தை அடியோடு ஒழித்துக்கட்டிவிடும் என்பதை எவ்வளவு விரைவாக நாம் உணர்கிறோமோ அவ்வளவு விரைவாக நாட்டின் ஜனநாயகம் காப்பாற்றப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.