/

விவசாயத்துக்கு முன்னுரிமை அவசியம்

இந்தியா ஒரு விவசாய நாடு. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். ஒரு நாடு தன்னுடைய உணவுத்தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து கொள்ளும் வல்லமை இருந்தால் எப்படிப்பட்ட பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொள்ள முடியும்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:16 am

என்.எஸ். சுகுமார்

இந்தியா ஒரு விவசாய நாடு. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். ஒரு நாடு தன்னுடைய உணவுத்தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து கொள்ளும் வல்லமை இருந்தால் எப்படிப்பட்ட பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொள்ள முடியும். அவ்வகையில் இந்தியா விவசாயம் மூலம் தன்னிறைவு பெற்றிருந்தாலும், கடந்த சில காலங்களில் வேளாண்மைத்துறையில் வீழ்ச்சி கண்டு வருகிறது.

உலக மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. அதற்கேற்ப உணவுத்தேவையும் அதிகரித்து வருகிறது. அதாவது உலக மக்கள் தொகையில் 18 சதவீத மக்களுக்கு உணவளிக்க வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.

இந்நிலையில் உணவுத் தேவைக்கேற்ப வேளாண் உற்பத்தியும் அதிகரித்து இருக்க வேண்டும். ஆனால் வேளாண் பரப்பு குறைந்து, அவற்றின் உற்பத்தியும் கணிசமான அளவு குறைந்து வருகிறது.

முன்பெல்லாம் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படுவதற்கு வறட்சியும், வெள்ளமும், பூச்சித்தாக்குதலும்தான் காரணங்களாக இருந்தன.

ஆனால் தற்போது ஏராளமான விவசாய நிலங்கள் தொழிற்பேட்டைகள், தொழிற்சாலைகள், வீட்டு மனைகள், கல்லூரிகள், குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக விற்கப்பட்டும், கையகப்படுத்தப்பட்டும் வருகின்றன.

மேலும் பன்னாட்டு நிறுவனங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்றவற்றுக்காக கட்டாயப்படுத்தியும், சலுகைகள் போன்றவற்றை அளித்து ஊக்கப்படுத்தியும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இது ஒருபுறம் என்றால், அதிக விலைக்கு ஆசைப்பட்டு விவசாயிகளும் தங்கள் நிலங்களை விற்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இவ்வாறு வேளாண் விளைநிலங்களானது விலை நிலங்களாக மாறி வருகின்றன.

விவசாய நிலங்கள் விற்கப்படுவதால் விளைச்சல் பரப்பளவு கணிசமாகக் குறைந்து வருவது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் விவசாய நிலங்களுக்கு அருகிலுள்ள ரசாயனத் தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் முறையற்ற வகையில் வெளியேற்றப்படும் நச்சுக்கழிவு நீர் விவசாய நிலங்களை பாழ்படுத்துகின்றன. விவசாயப் பணிகளுக்கு பணியாள்கள் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களாலும் விவசாயப்பணிகள் பாதிக்கின்றன.

விவசாயம் மூலம் உணவு உற்பத்தியில் இந்தியா உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்தது போக பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து கணிசமான அந்நியச் செலாவணியை ஈட்டி வருகிறது.

இந்நிலையில் மக்கள் தொகை அதிகரிப்பும், விளைநிலங்களின் பரப்பளவு சுருங்கி வருவதும் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானதாக அமையும். வளர்ச்சிப்பணிகளை காரணம் காட்டி, விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல் விளைச்சலுக்கு உதவாத தரிசு நிலங்களில் தொழிற்சாலைகள் போன்றவற்றை நிறுவலாம்.

விவசாய நிலங்களை விற்க வேண்டுமானால் விவசாயப் பணிகளுக்காக மட்டுமே விற்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டினை கொண்டு வருவதே இதற்கு சரியான தீர்வாக அமையும்.

மேலும் விவசாய நிலங்களில் விவசாயப் பணிகள்தான் நடைபெறுகின்றனவா என்பதை வேளாண் அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். விவசாயப் பணிகளுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால் அரசு தலையிட்டு உதவ வேண்டும்.

உதாரணமாக, தென்னை நார்க்கழிவுகளைக் கூறலாம். தென்னை நார் மற்றும் தென்னை மட்டைக்கழிவுகள் பொடி செய்யப்பட்டு பின்னர் கட்டிகளாக ஆக்கப்பட்டு அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அங்கு செடிகள் வளர்க்க இவை வாங்கப்படுகின்றன. இவை காயர்பித் என்றழைக்கப்படுகின்றன.

விளைச்சலுக்கு உதவாத பாழடைந்த விவசாய நிலங்களிலும் இதுபோன்ற தென்னை நார்க் கழிவுகளைப் பரப்பி விளைச்சல் நிலங்களாக மாற்ற முடியுமா என்று ஆராய வேண்டும்.

இல்லாவிட்டால் விவசாய நாடாக இருந்த நிலை படிப்படியாக மாறி உணவுத் தேவைக்கு பிற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டு விடும்.

வேளாண் தொழிலில் ஈடுபட விவசாயிகளுக்கு அதிகளவில் சலுகைகளும், நிதியுதவிகளும், மானியங்களும் அளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் வேளாண்மைத் துறையில் வளர்ச்சியும், வேளாண் நிலப்பரப்பு அதிகரித்தும் உள்ளனவா என ஆய்வு செய்து மேலும் வளர்ச்சிக்கான வழிமுறைகளைக் கண்டறிந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்ற கூற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.