டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பேச்சு என்னுமொரு ஆயுதம்

பதினாறாவது மக்களவைத் தேர்தலின்போது அரசியல் கட்சித் தலைவர்கள் விமானத்திலும், ஹெலிகாப்டரிலும் பறந்து பறந்து சென்று மக்களிடம் பேசினார்கள். வேட்பாளர்கள் வேனில் ஏறி நின்று கொண்டு தொகுதியைச் சுற்றிச் சுற்றி வந்து பேசினார்கள்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:09 am

சா.கந்தசாமி

பதினாறாவது மக்களவைத் தேர்தலின்போது அரசியல் கட்சித் தலைவர்கள் விமானத்திலும், ஹெலிகாப்டரிலும் பறந்து பறந்து சென்று மக்களிடம் பேசினார்கள். வேட்பாளர்கள் வேனில் ஏறி நின்று கொண்டு தொகுதியைச் சுற்றிச் சுற்றி வந்து பேசினார்கள். நட்சத்திர பேச்சாளர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், எதிர்க்கட்சி வேட்பாளர்களைச் சாடியும் தெருமுனைகளில் பேசினார்கள். எங்கு திரும்பினாலும் பேச்சாகவே இருந்தது.

பேச்சாளர்கள், தாங்கள் சார்ந்த கட்சித் தலைவர்களை போற்றிப் புகழ்ந்தார்கள். மாற்றுக்கட்சித் தலைவர்களை பழித்து தூற்றினார்கள். தேர்தல் ஆணையம் கண்ணியமாகப் பேச வேண்டும் என்று கூறியது. காலம் காலமாகப் பேசி வரும் தலைவர்கள் சீறினார்கள். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்தது. அதன்பின் வேறு வழியின்றி தலைவர்கள் பேச்சின் வீரியம் குறைந்தது.

பேச்சு என்பது மொழியிலானது. 1962ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1,652 தாய்மொழிகள் பேசப்படுகின்றன என்பது தெரிய வந்தது. ஆனால் அரசியல் சாசனப்படி இந்தி மொழி ஒன்றுதான் இந்தியாவின் ஆட்சிமொழி.

இந்தியாவின் கலாசார மொழியான சமஸ்கிருதம், புத்தர் போதனைகள் எழுதப்பட்டிருக்கும் பாலி மொழி, சொந்த மாநிலம் எதுவும் இல்லாமல் இந்திய மொழியாக இருக்கும் சிந்தி மொழி, மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் இருக்கும் தமிழ்மொழி எல்லாம் ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்திய மொழிகளில் அடக்கம்.

மக்களவைத் தேர்தல் பற்றிய விவாதங்கள், கருத்துக் கணிப்புகள், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களின் நேர்காணல்கள் எல்லாம் ஆங்கிலத்தில்தான் நடைபெற்றன. அதில் ஊடகவியலாளர்கள், வழக்குரைஞர்கள், அரசியல் தலைவர்கள், பெண்கள், சமூக சேவகர்கள், எழுத்தாளர்கள், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் எல்லாரும் கலந்து கொண்டு பேசினார்கள். பல குரல்களில் வித்தியாசமாகப் பேசினாலும் ஒலி மாசுபாட்டில் ஊர்கள் சிக்கிக் கொண்டன.

நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய விவாதங்கள் மாநில மொழிகளில் ஒரு குறுகிய வட்டத்தில் - ஒரு மாநிலம் சார்ந்துதான் நடைபெற்றது. ஆட்சிமொழி என்பதை முன்னிறுத்தி பரந்த அளவில் அது நடைபெறவே இல்லை. ஆனால் தேர்தல் களத்தில் எப்போதும் பேச்சு முதன்மையாக இருந்தது. மனிதர்கள் தங்களை மொழிவழியாகவே நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் மனிதர்களின் கண்டுபிடிப்புகளில், பேசுகின்ற மொழியும் எழுதுகின்ற எழுத்தம் முன்னே இருக்கின்றன.

தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் தங்களின் கொள்கைகள், கட்சி நிறைவேற்றியுள்ள திட்டங்கள், மக்களுக்கு அளிக்கவுள்ள சமூக நலன்கள் பற்றியெல்லாம் பேசி விவாதித்ததோடு, அவற்றைத் தேர்தல் அறிக்கையாகவும் வெளியிட்டார்கள். மக்களவைத் தேர்தல் என்பதே தேர்தல் அறிக்கைமூலம்தான் முன்னெடுத்து செல்லப்பட்டது. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதை எல்லாம் மக்களிடம் விளக்கிச் சொல்ல பெரிய அளவில் கூட்டங்கள் போட்டார்கள்.

தொலைதூரத்தில் இருந்து லாரிகளிலும் வேன்களிலும் ஆள்களை அழைத்து வந்து உண்ண உணவும், செலவுக்குப் பணமும் கொடுத்து தங்கள் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்றும், அதனால் வாழ்க்கை மலரும் என்றும், எதிர்க்கட்சிகள் எல்லாம் ஏமாற்றுக் கட்சிகள் என்றும், ஊழல் கட்சிகள் என்றும் பெருங்குரலில் சப்தமிட்டுக் கத்தினார்கள். அதில் பெண் பேச்சு, ஆண் பேச்சு என்பதெல்லாம் கிடையாது. எல்லா பேச்சும் ஒரே இரைச்சல்தான்; சப்தம்தான்.

பேச்சு என்பதே சப்தம். கத்தவும், கூவவும் கூடியது. மேலும் அது ஒரு ஆயுதம். இருக்கும் இடம் சார்ந்தது. மன்மதனிடம் இருக்கும்போது ஆயுதம் காதல் கணையாகும். அதே ஆயுதம் பேராளியிடம் இருக்கும்போது வெட்டும்; தீயினால் சுட்டால் அது ஆறாத வடுவை உண்டாக்குவது போல சொல்லும் உண்டாக்கும். எனவேதான் திருவள்ளுவர் நாவினால், அதாவது பேச்சால் உண்டான வடு ஆறாது என்று கூறியிருக்கிறார். அது சொல்லின் வலிமை எத்தகையது என்று புரிவதற்காகக் கூறியதுதான்.

சில அரசியல் தலைவர்கள் பணிவது மாதிரியான ஒரு மாய தோற்றத்தை உண்டாக்கும் சொற்களால் பேசி வாக்குக் கேட்டார்கள். வேறு பல தலைவர்கள் எங்கள் கட்சிக்கு, எங்கள் வேட்பாளருக்கு வாக்களிக்காவிட்டால் உங்களுக்குக் குடிக்கத் தண்ணீர்கூடக் கிடைக்காது; வேலை கிடைக்காது என்று பேசி பயமுறுத்தினார்கள்.

உலகத்தில் மனிதர்களை மன ரீதியில் அதிகமாகப் பயமுறுத்துவது என்றால் அது பேச்சு, எழுத்து ஆகிய ஆயுதங்கள்தான். இதில் பெரிய ஆயுதம், சிறிய ஆயுதம் என்பதெல்லாம் கிடையாது. எல்லா மொழியிலும் மனத்தை உருக்கி நெகிழ வைக்கும் சொற்கள் இருப்பது போல, நடுங்க வைக்கும், நிலைகுலைய வைக்கும் சொற்களும் இருக்கின்றன. தேர்தல் நேரத்தில் தலைவர்கள், தொண்டர்கள், பேச்சாளர்கள் சமயத்திற்கு ஏற்ப, இடத்திற்கு ஏற்ப பேசுகிறார்கள். காதைக் கிழிக்கும் சப்தம். இரைச்சல் மொழியாகியது. அதில் இனிமை பறிபோய் விட்டது.

மனிதர்கள் கண்டுபிடித்த பேச்சு என்பது எத்தனைதான் சிறந்ததாக இருந்தாலும், அறிவைப் பரப்பக் கூடியதாக இருந்தாலும், அன்பைப் பொழிவதாக இருந்தாலும் பல நேரத்தில் அதுவே சகிக்க முடியாததாகவும் இருக்கிறது. இது இன்று நேற்று என்பது இல்லை. நெடுங்காலமாக இருக்கிறது.

ஏசுநாதர் பிறப்பதற்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சுமேரியாவில் யூர்க் மன்னனின் பரம்பரை ஆட்சி புரிந்து வந்தது. அக்காலத்தில் கடவுள்களும் மனிதர்களும் சேர்ந்தே வாழ்ந்து வந்தார்கள். பேசுவதற்குக் கற்றுக்கொண்டு இருந்த மனிதர்கள் எப்பொழுதும் பேசிக்கொண்டே இருந்தார்கள். அவர்களின் பேச்சரவத்தால் கடவுள்களால் அமைதியாக தியானம் செய்ய முடியவில்லை; தூங்க முடியவில்லை.

அதனால் சதா சர்வகாலமும் பேசி கொண்டே இருக்கும் மனிதர்கள் மீது கடவுள்கள் கடுங்கோபம் கொண்டார்கள். பேசிக் கொண்டே இருக்கும் மனித இனத்தை அடியோடு அழிப்பதென்று முடிவு கட்டினார்கள். அதற்காக ஒரு கடவுள் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தினார். கடல் பொங்கி பெரு வெள்ளம் ஏற்பட்டது. அதுதான் பைபிளில் விவரிக்கப்படும் நோவாவிற்கு முந்திய பிரளயம். அது "கில்காமெஷ்' என்ற அக்காட்டன் மொழியில் எழுதப்பட்ட ஆதிகாப்பியத்தில் சொல்லப்படுகிறது.

இரவு பத்து மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கட்டளையிட்டது. அதனால் மக்கள் நிம்மதியாகத் தூங்க முடிந்தது. இல்லாவிட்டால் மக்கள் பேச்சாளர்களை சபித்திருப்பார்கள். மக்களவைத் தேர்தலின்போது அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சியின் அதிகாரபூர்வமான பேச்சாளர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் பேசிய பேச்சின் சப்தம் மட்டும் மக்களை பதற வைக்கவில்லை; அவர்கள் சொன்ன கருத்துக்கள், பகர்ந்த கதைகள், பாடிய பாட்டுகள் எல்லாம் மக்களைக் கடுங்கோபம் கொள்ள வைத்தது.

பேசியே மக்களிடம் வாக்குகளை வாங்கி விடலாம் என்று கட்சிகள் நம்புகின்றன. அது இந்தியத் தலைவர்கள் கருத்துதான் என்பதில்லை. உலகம் முழுவதிலும் தேர்தல் நடக்கும்போது அப்படித்தான் கருதுகிறார்கள். தேர்தலும் பேச்சும் இரண்டற கலந்திருக்கிறது. தேர்தல் என்றால் பிரசாரம். பிரசாரம் என்றால் மக்கள் ஆதரவைப் பெறுதல். மெய்யை பொய் என்றார்கள்; பொய்யை மெய்யென்றார்கள்.

மக்கள் எத்தனைத்தான் படித்திருந்தாலும், என்ன வேலை பார்த்தாலும், எவ்வளவு அதிகமாகச் சம்பளம் வாங்கினாலும் பேசிப் பேசி அவர்களை ஏமாற்றிவிடலாம் என்றே தலைவர்கள் கருதுகிறார்கள்.

1920ஆம் ஆண்டுகளில் ஜெர்மனியில் ஹிட்லர் கிளர்ந்தெழுந்தபோது ஐரோப்பாவிலேயே ஜெர்மனிதான் படித்தவர்கள் அதிகமாக வாழும் நாடாக இருந்தது. ஹிட்லர் படித்த மக்களிடம் பொதுக்கூட்டங்களில் பேசிப்பேசி நாஜி கொள்கைகளைப் பரப்பினான். பொதுக்கூட்டங்களை எப்படி நடத்த வேண்டும். எப்படி மக்களை உணர்ச்சி வசப்படுத்தும் விதமாகப் பேச வேண்டும் என்பதைப் பற்றி தன் சுயசரித்திரத்தில் எழுதி வைத்திருக்கிறான். சிலர் அதனைப் படித்தும், பலர் அதனைப் படிக்காமலும் அவன் சொன்னதைப் போலவே பிரசாரம் செய்கிறார்கள்.

பேச்சு என்பது வசீகரம் மிகுந்தது. அது மனத்திற்குள் புகுந்து பல செயல்களைச் செய்யும். பொதுக்கூட்டத்தில் பேசும் தலைவர்கள், கூட்டத்திற்கு வந்திருக்கும் மக்களிடம் இருக்கின்ற வாக்குகளை எப்படியாவது பெற்றுவிடுவதற்காகவே பேசுகிறார்கள். தன்னுடைய அறிவு, சாதுர்யம் எல்லாவற்றையும் பயன்படுத்தி, மக்கள் தன் கட்சிக்கு, தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கும் விதமாகப் பேசுகிறார்கள்.

எல்லா மக்களும் பேசத் தெரிந்தவர்கள்தான். பேச்சு என்பதே அறிவு கிடையாது. பேச்சு என்பதின் வழியாக அறிவு வெளிப்படுகிறது என்பது போல அறிவின்மையும் தெரிகிறது.

இந்த மக்களவைத் தேர்தலின்போது பேசப்பட்ட பேச்சுகள், பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேசிக்கொண்டிருக்கும் மனிதர்கள் இன்னும் பேச்சில் போதிய முதிர்ச்சி பெறவில்லை என்பதையே காட்டுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.