இரைச்சலின் பாதிப்பு
ஒலியின் அளவு டெசிபல் என்ற அளவீடால் அளக்கப்படுகிறது. பொதுவாக மனிதனின் செவிப்பறை 120 டெசிபல் வரையிலான ஒலியை ஏற்கும் சக்தி கொண்டது.


ஒலியின் அளவு டெசிபல் என்ற அளவீடால் அளக்கப்படுகிறது. பொதுவாக மனிதனின் செவிப்பறை 120 டெசிபல் வரையிலான ஒலியை ஏற்கும் சக்தி கொண்டது. அதற்கு மேல் ஏற்படும் ஒலியானது பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அந்த ஒலியானது மிகக் கடுமையாகவோ, இரைச்சலாகவோ போனால் அவை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
பண்டிகை மற்றும் விழாக்களின்போது நிகழும் வாண வேடிக்கைகள் மற்றும் பட்டாசுகளால் ஏற்படும் சத்தம், திடீரென ஏற்படும் ஒரு பலத்த சச்தம், கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி சத்தம், சில வாகனங்களில் பயன்படுத்தப்படும் காற்று ஒலிப்பான்களின் (ஏர் ஹாரன்) சத்தம், கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்படும் ஆழ்துளை இயந்திரங்களின் சத்தம் போன்றவற்றால் உண்டாகும் பாதிப்புகள் மிகவும் அதிகம். நெரிசல் மிகுந்த சந்தைகள், போக்குவரத்து நிறைந்த சாலைகள் போன்றவற்றாலும் அதிக இரைச்சல் ஏற்படுகிறது.
பொதுவாகவே இரைச்சலுக்கு மனநிலையை பாதிக்கச் செய்யும் தன்மை உண்டு. வாகன இரைச்சல் காரணமாக போக்குவரத்து காவலர்கள் பலர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஒலி மாசு ஏற்படும் இடங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் அதிகம் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளின் அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் ஓரளவுக்கு பாதிப்பு இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மனிதனின் காதுகளானது 120 டெசிபல் வரையிலான ஒலியைத் தாங்கும் சக்தி கொண்டவைதான் என்றாலும் 50 முதல் 75 டெசிபல் வரையிலான ஒலியே மனித செவிகளுக்கு ஏற்ற சரியான அளவுஎனலாம்.
ஒலி மாசு காரணமாக பல்வேறு உடல் நல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. காதுகள் மட்டுமன்றி, இதய பாதிப்புகள், நரம்புக் கோளாறுகள் போன்ற பாதிப்புகளும் ஏற்படும். இரைச்சல் காரணமாக காதுகளின் கேட்கும் திறன் குறைவது, கேட்கும் தன்மையை முழுதாக இழப்பது போன்ற நிலை ஏற்படும்.
இதய நோய் வருவதற்கு மது, புகைப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, உயர் ரத்த அழுத்தம் என பல்வேறு காரணங்களைக் கூறுவர். இப்பட்டியலில் இரைச்சலையும் சேர்த்துள்ளனர் கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.
ஒலி மாசினால் மனித இனம் மட்டுமின்றி, இயற்கை மற்றும் அதனைச்சார்ந்து வாழும் உயிரினங்களும், கடல்வாழ் உயிரினங்களும்கூட பாதிப்படைகின்றன. கடலில் அதிகரித்துக் காணப்படும் கப்பல் போக்குவரத்தால் ஏற்படும் ஒலிமாசால், கடல்வாழ் உயிரினங்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழக்கின்றன. தங்களுக்குள்ளான தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியாமல் அவை இன்னல்களுடன் வாழும் நிலை ஏற்படுகிறது.
ஒலிமாசால் பறவை இனமும் பாதிக்கப்படுகிறது. அவை அமைதியான சூழலிலேயே வாழ விரும்புகின்றன. பண்டிகைகள், விழாக்கள் போன்ற சமயங்களில் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. அப்போது பறவைகளைக் காண்பது மிகவும் அரிது. பெரும் சத்தங்களுக்கு அஞ்சி அவை பாதுகாப்பான இடங்களைத் தேடிச்சென்று விடுகின்றன. அமைதியான சூழலில் வாழ விரும்பும் வன விலங்குகளும், மனிதர்களால் ஏற்படுத்தப்படும் ஒலிமாசால் நிம்மதியை இழக்கின்றன.
ஒலி மாசின் காரணமாக பெருமளவு பாதிப்புகள் ஏற்படும் நிலையில், அவற்றை முழுமையாக கட்டுப்படுத்துவது சவாலான ஒன்றுதான். ஆனால் முடிந்த வரை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். வாகனங்களில் பயன்படுத்த தடை செய்யப்பட்ட காற்று ஒலிப்பான்களானது விதிமுறைகளை மீறி பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாகன சோதனையில் ஈடுபட்டு அவற்றைப் பறிமுதல் செய்வதை அதிகாரிகள் தொடராவிட்டால் அவற்றின் பயன்பாடு தொடர்ந்த வண்ணமே இருக்கும்.
அதுபோல் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளும் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் பல்வேறு வழிபாட்டுத் தலங்கள், அரசியல் கூட்டங்கள் போன்றவற்றில் விதிமுறைகளை மீறி அவை தொடர்ந்து பயன்படுத்தப்படும் வண்ணமே உள்ளன.
மேலும் சிலர், தங்கள் வாகனங்களில் அபாய ஒலி, அலறல் சத்தம் போன்ற ஒலிகளில் ஹாரன்களை பொருத்திக் கொண்டு, அவற்றை இயக்கி சாலைகளில் செல்வோரை பீதியடையச் செய்து மகிழ்கின்றனர்.
இதுபோன்று பல்வேறு விநோதமான ஒலிகளை ஹாரன்களில் பொருத்துவதற்கும் தடை விதிக்க வேண்டும். இதுபோன்றவர்களால் முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிகள், நோயாளிகள் போன்றவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் ஒலி மாசு என்பது ஒரு பொதுபிரச்னை என்பதால் அதனைக் கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...