காங்கிரஸ் கற்றுக்கொண்ட பாடம்
காங்கிரஸ் தோற்றுவிட்டது. 129 ஆண்டு கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட காங்கிரஸ், வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்திருக்கிறது.


காங்கிரஸ் தோற்றுவிட்டது. 129 ஆண்டு கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட காங்கிரஸ், வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்திருக்கிறது. 1952இல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் 489 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்கள்: 364. 2014 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள்: 58 மட்டுமே. தோல்வி அடைந்த இடங்கள்: 485. தோல்வியின் அளவு சுமார் 89 சதவீதம்.
ஏன் இந்தத் தோல்வி? எப்படி நேர்ந்தது இந்த வீழ்ச்சி? எதிர்த்து வாக்களித்தவர்கள்கூட, இப்படி நேரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லையே எனத் திகைத்துப் போய் நிற்கிறார்கள்!
வெற்றியும் தோல்வியும் இயற்கை விதி தானே! விழுவதும் எழுவதும் இயல்பு தானே! இயற்கை விதி எல்லோருக்கும் பொருந்தலாம்! ஆனால் திலகரும் காந்தியும் நீரூற்றி வளர்த்த காங்கிரஸூக்கு, நேருவும், படேலும், அபுல் கலாம் ஆசாத்தும், ராஜாஜியும் காமராஜரும் உரம் போட்டு வளர்த்த கற்பத் தருவாம் காங்கிரஸூக்கும் இந்த விதி பொருந்த வேண்டுமா? பொது விதி பொருந்தும் என்பதே பொதுத் தேர்தல் தந்த தீர்ப்பு.
அண்ணல் காந்தி தேசத்திற்கு அரசியல் விடுதலை பெற்றுத் தந்தார். பண்டித நேரு பொருளாதார விடுதலைக்கு அடித்தளம் அமைத்தார். அன்னை இந்திரா காந்தி, வங்கிகள் தேசிய மயம், மன்னர் மானியம் ஒழிப்பு, வறுமை ஒழிப்பு போன்ற புரட்சிகரமான திட்டங்களை நிறைவேற்றியதோடு, வங்கதேசத்தை உருவாக்கி, இந்தியாவை உலகின் வலிமையான நாடாக நிலைநாட்டினார். ராஜீவ் காந்தி, இந்தியாவை கணினி மயமாக்கி, அதனை 21ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்லத் தடம் அமைத்தார்.
இவர்களின் சாதனைகளுக்கு, கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகள் குறைந்ததல்ல.
கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களும், அதன் தொடர்பான திட்டங்களையும் பாருங்கள்:
81 கோடி மக்கள் மானிய விலையில் உணவுப் பொருள்கள் பெறுவதற்காக உணவுக்கு உத்தரவாதச் சட்டம்.
4.8 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம்.
19 கோடி குழந்தைகள் பயன்பெறும் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம்.
ஒளிவுமறைவு இல்லாத வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
நில உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நியாயமான இழப்பீடு வழங்கும் நில எடுப்புச் சட்டம்.
மலைவாசிகள் பயன்படுத்தும் நிலங்களை அவர்களுக்கே பட்டா வழங்கும் நில உரிமைச் சட்டம்.
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் பணிக்குத் தடைச் சட்டம்.
12.5 கோடி குழந்தைகள் பயன்பெறும் வகையில் மதிய உணவுத் திட்டம்.
எல்லோருக்கும் தரமான, இலவச மருத்துவ வசதி வழங்கும் தேசிய நகர்ப்புற மற்றும் கிராமப்புற சுகாதாரத் திட்டம்.
நகரங்களைப்போல், கிராமங்களும் அனைத்து வசதிகளும் பெறுவதற்கான பாரத் நிர்மாண் திட்டம்.
விவசாயிகளுக்கு வங்கிக் கடன் தள்ளுபடி.
மாணவர்களுக்கு கல்விக் கடன்.
மகளிர், சிறுபான்மையினர், தலித் மக்கள் நலனுக்கான சிறப்புத் திட்டங்கள்.
இவ்வாறு சாதி, மத, பிராந்திய எல்லைகளைத் தாண்டி அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் - எல்லோருக்கும் உணவு, எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலைவாய்ப்பு, எல்லோருக்கும் மருத்துவ வசதி என்ற உயர் லட்சிய அடிப்படையில் செயல்பட்டது மத்திய காங்கிரஸ் அரசு!
ஆனாலும் தோற்றது காங்கிரஸ். காரணம், தன் சாதனைகளில் ஒன்றைக்கூட ஒழுங்காக மக்களிடம் எடுத்துச் சொல்லவில்லை! இதுதான் காங்கிரஸின் தோல்விக்கு முதல் காரணம்.
தேசிய அளவில் திட்டங்கள் தீட்டியது மத்திய அரசு; அவற்றைச் செயல்படுத்துவதோ, தன் பங்களிப்பையும் சேர்த்து மாநில அரசுகளே! திட்டங்களின் பெருமைகளைத் தட்டிக் கொண்டு போனது மாநில அரசுகள்! தன்னடக்கத்தால் மெüனம் காத்தது மத்திய அரசு! மெüனமே தோல்விக்கான இரண்டாவது காரணம் ஆனது.
2004 மற்றும் 2009 பொதுத் தேர்தலில் காங்கிரஸூக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை; அறுதிப் பெரும்பான்மை கிடைக்காதபோது, அடுத்தவர் துணையோடு ஆட்சி அமைக்க விரும்புவானேன்!
1989இல் காங்கிரஸூக்கு பெரும்பான்மை பலம் கிட்டவில்லை. குடியரசுத் தலைவர் அழைத்தும், அதனை ஏற்க மறுத்து, ஒதுங்கி நின்றார் ராஜீவ் காந்தி! அமைந்த கூட்டணி ஆட்சிகள் - வி.பி. சிங் அடுத்து சந்திரசேகர் தலைமையில் - 2 ஆண்டுகள் கூட நீடிக்கவில்லையே!
மாநிலக் கட்சிகளே மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கத் தயாரில்லை. காரணம், அவர்கள் புத்திசாலிகள். அப்பாடத்தை காங்கிரஸூம் கற்றிருக்க வேண்டும். கூட்டணி ஆட்சிக்குத் தயாரானது ஒரு சறுக்கல். அதுவே காங்கிரஸின் வீழ்ச்சிக்கு மூன்றாவது காரணம் ஆனது.
"கூட்டணி தர்மம்' என்ற புதிய நெறி உருவானது! அதனைக் காங்கிரஸ் தயக்கத்துடன் ஏற்றது. விளைவு? கொள்கை, குறிக்கோளில் சமரசம்; அணுகுமுறையில் சமரசம்; நேர்மையில், நிர்வாகத்தில் சமரசம். இறுதியில் சமரசமே கொள்கை ஆனது! மக்களோ, அதனை ஏற்கவில்லை.
சமரசக் கொள்கையை ஏற்ற காங்கிரûஸ மக்கள் தள்ளி வைத்தனர்; சர்ச்சைக்குரிய கொள்கைகளைக் கொண்ட பா.ஜ.க.வைத் தேர்ந்தெடுத்தனர். காங்கிரஸ் சறுக்கியதற்கான நான்காவது காரணம் இதுவே.
பல வருடங்களுக்கு முன் "முந்த்ரா பங்கு விற்பனையில் ஊழல் நடைபெற்றுள்ளது. அதில் நிதி அமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரிக்கும் தொடர்பு இருக்கிறது' என்ற குற்றச்சாட்டு எழுந்தது. நம்ப மறுத்தார் நேரு. ஆனாலும் டி.டி. கிருஷ்ணமாச்சாரியை பதவி விலகச் செய்தார்.
தனக்கு அன்பு நண்பனாகவும், ஆலோசகராகவும், உலக அரங்கில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை உயர்த்திப் பிடிப்பவராக விளங்கிய பாதுகாப்பு அமைச்சர் வி.கே. கிருஷ்ணமேனன் மீது புகார் எழுந்தபோது, அவரையும் பதவி விலக அனுமதித்தார் பிரதமர் நேரு.
அதே பாணியில் 2ஜி போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, சம்பந்தப்பட்ட அமைச்சரை உடனடியாகப் பதவி விலகச் செய்திருக்க வேண்டும். மாறாக முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டியதும், எடுத்த முடிவை நியாயப்படுத்தி சக அமைச்சர்கள் பேசியதும், காங்கிரஸூக்கும் இத்தகைய ஊழல்களில் பங்கு உண்டோ என்ற ஐயத்தைக் கிளப்பியது. இத்தகைய ஐயங்கள் காங்கிரஸின் தோல்விக்கு ஐந்தாவது காரணமாக அமைந்தது.
1977 பொதுத் தேர்தலில், நெருக்கடி நிலையை முன்வைத்து, அனைத்து எதிர்க்கட்சிகளும் அணி திரண்டு காங்கிரûஸ எதிர்த்தன. காங்கிரஸ் தோற்றது.
1989இல் போஃபர்ஸ் ஆயுத பேர ஊழலை முன்னிறுத்தி அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து காங்கிரûஸ எதிர்த்தன. காங்கிரஸ் தோற்றது.
அதேபோல் இன்று விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார மந்த நிலை, நிர்வாகத்தில் ஊழல் - என்ற குறைகளை ஊதிப் பெரிதாக்கினார்கள் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து.
மக்களின் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் காங்கிரúஸ. மின்வெட்டா, மீனவர் பிரச்னையா, வானம் பொய்த்ததா, வறட்சி ஏற்பட்டதா எல்லாவற்றுக்கும் மத்திய அரசே காரணம் என்று எல்லோரும் சேர்ந்தே சொன்னார்கள்.
தனி நபர் வருமானம் உயர்ந்திருக்கிறது. கல்வி, சாலை, மருத்துவம், போக்குவரத்து - கூடியிருக்கிறது. இந்தியாவில் சேமிப்பும் முதலீடும் கூடியிருக்கிறது.
இத்தனை வளர்ச்சிகளையும் மக்கள் உணர்ந்தார்கள்; ஆனாலும் எதிர்க்கட்சிகளின் ஒன்றுபட்ட வாதம், ஒருங்கிணைந்த குற்றச்சாட்டு மக்கள் மனதை மாற்றியது; காங்கிரஸூக்கு எதிராக வாக்களித்தார்கள். அது பா.ஜ.க.வுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. இதுவே காங்கிரஸின் தோல்விக்கான ஆறாவது காரணம் ஆகும்.
1942இல் மும்பையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு' என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவர் மகாத்மா காந்தி. மறுநாள் காலை பொழுது விடியும் முன்பு, அவர் காவலர்களால் கைது செய்யப்பட்டபோது, அவர் இந்திய மக்களுக்கு விடுத்த செய்தி, "செய் அல்லது செத்து மடி' என்பதுதான். இதன்மூலம் உறங்கிக் கிடந்த இந்திய மக்களின் ஆன்மாவைத் தட்டி எழுப்பினார் அண்ணல் காந்தி.
1952 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் பிரசாரத்தை தானே முன்னின்று தலைமை தாங்கி நடத்தினார் பண்டித நேரு. "அவர் விமானத்திலும், ரயிலிலும், காரிலும், படகிலும் பயணம் செய்தார்; 25,000 மைல்கள் பயணித்தார்; 300 பொதுக்கூட்டங்களில் பேசினார்; 2 கோடி மக்களிடம் நேரடியாகப் பேசினார்.
நேரு என்ற மாமனிதரின் செல்வாக்கும், மக்கள் தொடர்பும், தீவிரப் பிரசாரமும் காங்கிரஸின் வெற்றிக்கு அன்று காரணமாக அமைந்தன.
ஆனால் இன்று, சில மாநிலங்களில் தலைமைக்கும், தொண்டர்களுக்கும் தொடர்பே இல்லை; பல இடங்களில் கிராமங்களில் கட்சி அமைப்புகள் வேரூன்றவை இல்லை; அமைப்பே வேர் பிடிக்காத இடங்களில் தேர்தலைச் சந்திப்பது சாத்தியமில்லையே!
1975ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தியும், காமராஜரும் சந்தித்தார்கள். அப்பொழுது இந்திராஜி, காமராஜரிடம் "ஸ்தாபன காங்கிரஸூம், இந்திரா காங்கிரஸூம் தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் இணைந்து ஒன்றாக வேண்டும்' என்றார். அதற்கு காமராஜர், "எனக்கு அதில் ஆட்சேபனை இல்லை; ஆனால் ஒரே நிபந்தனை, மாநில காங்கிரஸ் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்' என்றார்.
காமராஜர் கருத்துப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் தொண்டர் பலமும், மக்கள் செல்வாக்கும் படைத்த தலைவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். நகர, கிராம, மாவட்ட அளவில் அமைப்புக்கள் உருவாக்க வேண்டும்.
தேசப் பற்றையும், தேசியச் சிந்தனையையும் மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்; மக்களின் பிரச்னைகளைத் தன் பிரச்னையாகக் கருதி, அதனைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். "ஏழைக்கு உதவுபவன் காங்கிரஸ்காரன்; எல்லோரையும் அரவணைத்துச் செல்பவன் காங்கிரஸ்காரன். மக்கள் சேவகனே காங்கிரஸ்காரன்' என்று ஒவ்வொரு காங்கிரஸ்காரனும் மறுபிறவி எடுக்க வேண்டும்.
எப்பொழுதுமே சொந்தக் காலில் நிற்கப் பழக வேண்டும். அப்பொழுதுதான் மானம், மரியாதை காக்கப்படும். விலகிப்போன வெற்றி காங்கிரûஸத் தேடி வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...