பிரதமர் அலுவலகம் - ஒரு பார்வை!
பிரமதரின் அலுவலகத்தில் (Prime Ministers Office), பிரதமரின் முதன்மைச் செயலாளராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.


பிரமதரின் அலுவலகத்தில் (Prime Ministers Office), பிரதமரின் முதன்மைச் செயலாளராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரது திறமையை அனைவரும் போற்றுகிறார்கள். ஆனால் விதியைத் தளர்த்தி ஒரு அவசரச் சட்டத்தின் மூலம், அவர் நியமிக்கப்பட்டிருக்கும் விதம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
சுதந்திர இந்தியாவின் பிரதமராக பண்டித நேரு பொறுப்பேற்றபோது, அவரது அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் 13 பேர் மட்டுமே. அன்று இருந்த துறைச் செயலாளர்கள் எண்ணிக்கை 20ஐத் தாண்டவில்லை.
அப்பொழுது அவருக்கு முதன்மைச் செயலாளராக இருந்தவர் தர்லோக் சிங் என்ற ஐ.சி.எஸ். அலுவலர். அவருடன் நேர்முக உதவியாளர்கள் நால்வர் மட்டுமே இருந்தனர். அவர்கள் அனைவரும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திலிருந்து எடுக்கப்பட்டவர்கள்.
பிரதமர் அலுவலகம் என்பது இப்படி ஒரு சிறிய பிரிவாகத்தான் தொடங்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் பண்டித நேரு இரண்டு புதிய அமைப்புகளை உருவாக்கினார். ஒன்று மத்திய திட்டக்குழு. அடுத்தது பிரதமர் அலுவலகம்.
"திட்டக்குழு உருவானால், அது அமைச்சரவையை ஆட்டிப்படைக்கும் ஒரு சூப்பர் அமைச்சரவையாக மாறும் அபாயம் உள்ளது. அதனை நான் ஏற்க மாட்டேன்' என்றார் அன்றைய நிதி அமைச்சர் ஜான் மத்தாய்.
அது கேட்ட நேருஜி, "திட்டக்குழுவின் தலைவராக பிரதமரே இருப்பார். அமைச்சரவைச் செயலாளர்தான் திட்டக்குழுவின் செயலாளராகவும் செயல்படுவார். ஆகவே உங்கள் அச்சம் அர்த்தமற்றது' என்றார்.
திருப்தி அடையாத மத்தாய், மத்திய நிதி அமைச்சர் பதவியையே துறந்தார். அதன்பின்பு திட்டக்குழு, மத்திய அரசின் ஒரு பிரிக்கப்பட முடியாத அங்கமே என ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு சுமார் 20 ஆண்டுகள் பிடித்தது.
பிரதமர் நேருவின் முதன்மைச் செயலாளராக தர்லோக் சிங், லால்பகதூர் சாஸ்திரியிடம் எல்.கே. ஜா, இந்திரா காந்தியிடம் பி.என். ஹக்சர், பேராசிரியர் பி.என். தார் மற்றும் பி.சி. அலெக்சாண்டர், மொரார்ஜி தேசாயிடம் வி. சங்கர், பி.வி. நரசிம்மராவ் காலத்தில் ஏ.என். வர்மா, வி.பி. சிங் காலத்தில் வினோத் பாண்டே ஆகியோர் பணியாற்றினார்கள்.
1947இல் பண்டித நேருவின் அலுவலகத்தில் ஐந்து அதிகாரிகள் மட்டுமே பணிபுரிந்த நிலை வளர்ந்து, 1977இல் பிரதமர் இந்திரா காந்தியின் அலுவலகத்தில் அலுவலர் மற்றும் பணியாளர் எண்ணிக்கை 224ஆக உயர்ந்தது. அவரைத் தொடர்ந்து பிரதமர் பதவி ஏற்ற மொரார்ஜி தேசாய் அலுவலர் எண்ணிக்கையை குறைப்பேன் என அறிவித்தார். ஆனால் அவரால் எண்ணிக்கையை 211ஆகத்தான் குறைக்க முடிந்தது.
பிரதமரின் செயலாளர், சில நேரங்களில் சில முக்கியமான ரகசியமான காரியங்களையும் ஆற்ற வேண்டிய நிலை ஏற்படும். நரசிம்மராவ் பிரதமராகப் பொறுப்பேற்கும்போது, மன்மோகன் சிங் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என நரசிம்மராவ் விரும்பினார். அவ்விருப்பத்தை, ரகசியமாக எடுத்துச் சென்று, மன்மோகன் சிங் விருப்பத்தைப் பெற தூதுவராக அனுப்பப்பட்டவர் பிரதமரின் செயலாளரே!
பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத சில பணிகளையும், செயலாளர் ஆற்ற வேண்டியிருக்கும். ஒருமுறை பிரதமர் சரண்சிங், தனது செயலாளரிடம், ஒரு வார்த்தையைச் சொல்லி, இது ஒரு தலைவரின் பெயரா அல்லது நாட்டின் பெயரா என விளக்கும்படி கேட்டாராம். இவ்வாறு பிரதமருக்கு சில நேரங்களில் பால பாடம் கற்பிக்கும் நேரங்கள்கூட வருவதுண்டு, பிரதமரின் செயலாளருக்கு!
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரதமரின் தூதுவராகச் சென்று உயர் அதிகாரிகள் அல்லது அதிபர்களுடன் கலந்துரையாடி, சிக்கலான பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட நிகழ்வுகளும் பல உண்டு.
பிரதமர் அலுவலகத்தின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டதும் உண்டு. 1977இல் உணவுப் பொருள்களின் மொத்த வர்த்தகத்தை தேசிய மயமாக்க வேண்டும் என்பது திட்டக்குழுவின் பரிந்துரை.
ஆனால் பிரதமர் அலுவலகமோ அதனைக் கடுமையாக எதிர்த்தது. வேண்டாம் என வேண்டியது. பிரதமர் அலுவலக ஆலோசனையை இந்திரா காந்தி நிராகரித்தார். அதேபோல் அவசர நிலைப் பிரகடன அறிவிப்பு வெளியாகும் வரை, பிரதமர் அலுவலகத்திற்கே தெரியாது என்ற தகவலும் உண்டு.
பொதுவாகவே ஐ.சி.எஸ். அல்லது ஐ.ஏ.எஸ். அலுவலர்கள்தான் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் இரண்டு முறை ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.சி.எஸ். அல்லாதவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
பிரதமரின் செயலாளராக இப்பொழுது நியமிக்கப்பட்டிருக்கும் மிஸ்ரா வடமாநிலத்தைச் சேர்ந்தவர். நாட்டின் பிரச்னைகளை தேசியக் கண்ணோட்டத்தில் பார்ப்பார் என எதிர்பார்க்கலாம். என்றாலும் பிரதமர் அலுவலகத்தில் சில மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் பணிபுரிகிறார்கள். அவ்விடங்களில் தென் மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளை நியமனம் செய்வது நல்லது. அது தென் மாநில மக்களுக்கு நம்பிக்கை தருவதாக அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...