ஊரு விட்டு ஊரு போய்...
காணி நிலம் இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக கழித்து விடலாம் என்பது பாரதி கணக்கு மட்டுமல்ல, அனைவரது எண்ணமும்கூட.


காணி நிலம் இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக கழித்து விடலாம் என்பது பாரதி கணக்கு மட்டுமல்ல, அனைவரது எண்ணமும்கூட. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்த தேசம் இது. ஆனால் அதெல்லாம் இப்போது பழங்கதை.
அப்போதெல்லாம் விவசாயம் செய்வது என்பது பெரும்பாலானவர்களின் கனவாக இருந்தது. தற்போது காலம் மாறிவிட்டது. விவசாயிகளாக இருப்பது எவ்வளவு கடினமானது என்பது விவசாயிகளுக்கு மட்டுமே தெரியும்.
டெல்டா மாவட்டங்களில் சில ஆண்டுகளாகவே விவசாய வேலை இல்லாத காரணத்தால் பல விவசாயிகள் திருப்பூர், கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களைப் பொருத்தவரை பிரதானமான தொழில் விவசாயம். இதை நம்பியே பல தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். சொந்த நிலம் இல்லா விட்டாலும் கோயில் நிலங்களில் குத்தகைக்கென விவசாயம் செய்பவர்கள் அறுவடை முடிந்த பிறகு கோயிலுக்கென்று குறிப்பிட்ட பகுதி நெல் அளந்து விட்டு மீதியை தனது பங்கு என வைத்து வாழ்க்கையை நடத்துபவர்கள் ஏராளம்.
குத்தகைக்கு நிலம் இல்லையென்றாலும் விவசாயத்தில் செய்யப்படும் நாற்று பறித்தல், நடவு நடுதல், களை எடுத்தல், அண்டை வெட்டுதல், உரம் இடுதல், அறுவடை செய்தல் போன்ற பணிகளை நம்பி இவர்கள் உள்ளனர்.
விவசாயம் நடைபெறும் காலங்களில் டெல்டா மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த வேலைகளில் ஈடுபடுவர்.
கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போனதாலும், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் குறித்த காலத்தில் திறந்து விடப்படாததாலும் டெல்டா தொழிலாளர்கள் பலர் திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று தாற்காலிக தினக்கூலியாக வேலைசெய்து வருகின்றனர்.
பெரும்பாலானோர் கல்வியறிவு குறைவாக இருப்பதால் நிரந்தர வேலைக்கு செல்ல முடியவில்லை. மேலும் குறுவை பொய்த்துப் போனாலும் "சம்பாவுக்கான பணிகள் நடக்கும்; அப்போது ஊர் திரும்பலாம்' என்ற நம்பிக்கையில் மாத வருமானம் தரக்கூடிய வேலையில் சேராமல் தினக்கூலியாகவே சேர்கின்றனர்.
டெல்டா தொழிலாளர்கள் கடும் உழைப்பாளர்கள் என்பதால் தினசரி 12 மணிநேரத்துக்கு மேல் வேலை தரப்படுவதாக கூறப்படுகிறது. ஊதியம் ரூ.150லிருந்து ரூ.250 வரை கொடுக்கப்படுகிறது.
அதேநேரம் விவசாய வேலைகளில் 8 மணி நேர வேலை. ரூ.400 வரை சம்பளம் கிடைக்கும். ஆள்பற்றாக்குறையாக இருந்தால் இது இன்னும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் காலையில் டீ, 11 மணிக்கு டீ, வடை அல்லது போண்டா இரண்டு இவையெல்லாம் கண்டிப்பாக தரப்பட வேண்டும்.
பெண்களுக்கு கூட ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்தால் தரப்படும் சம்பளம் ரூ.100 என வைத்துக்கொண்டாலும் விவசாயத்தில் குறைந்தபட்சம் ரூ.200 தரப்படுகிறது. எனவேதான் விவசாய நாள்களில் நூறு நாள் வேலைத்திட்டம் செயல்பட்டாலும் அதற்கு யாரும் செல்வதில்லை.
தொழிலாளர்களுக்கு இயந்திரப் பயன்பாடு காரணமாகவும் வேலை குறைந்துள்ளதாக கூறினாலும், தங்களது வேலை மிகவும் எளிமைப்படுத்தப்பட்டு விட்டதையும் ஒத்துக் கொள்கின்றனர்.
உதாரணமாக, அறுவடை என்பது பயிர் அறுவடை செய்யப்பட்டு, களத்துக்கு கொண்டு வந்து நெல்லை பிரித்து மூட்டையாக கட்டி, விவசாயியின் வீட்டுக்கு நெல் மூட்டைகள் சென்று சேர்க்கப்பட்ட பிறகே அதற்கான கூலி தொழிலாளிக்கு கிடைக்கும்.
ஆனால், தற்போது அறுவடைக்கு இயந்திரம், நெல் மூட்டை கொண்டு செல்ல மினி வண்டி என விவசாயம் நவீனத்துக்கு மாறிவிட்டது. நெல்லை தூற்றி மூட்டையாக கட்ட மட்டுமே தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
ஆனால், ஒருநாள் செய்யும் அளவுக்கு கூலி கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, டெல்டா வாசிகள் விவசாய வேலை செய்வதையே விரும்புகின்றனர்.
பொதுவாக ஆண்டுதோறும் கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் விவசாயப் பணிகள் இருக்காது என்பதால் அந்த நாள்களில் வெளியூர் வேலைக்கு செல்வர்.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும்பாலான மாதங்கள் வெளியூரிலேயே கழித்து வருகின்றனர். சொற்ப ஊதியம், கடுமையான வேலை காரணமாக தாங்கள் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
பருவமழை வருவதற்கான அறிகுறி இல்லாததாலும், ஆண்டுதோறும் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் காவிரி நீரும் கிடைப்பது உறுதி இல்லை என்ற நிலையில் நிகழாண்டும் வெளியூர் வாசம் தொடர்வதற்கான வாய்ப்பே அதிகமென டெல்டா தொழிலாளர்கள் ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...