நல்லதை நாடுவோம்
நம் அனைவருக்கும் தெரிந்த பழமொழி தான் "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது'. அதைப்போல இன்றைய மாணவர்கள் ஏட்டுச் சுரைக்காயாகத் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவித அனுபவ அறிவும் இருப்பதில்லை.


நம் அனைவருக்கும் தெரிந்த பழமொழி தான் "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது'. அதைப்போல இன்றைய மாணவர்கள் ஏட்டுச் சுரைக்காயாகத் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவித அனுபவ அறிவும் இருப்பதில்லை.
புத்தகத்தில் இருப்பதுதான் அவர்களுக்குத் தெரியும். அதிலும் பெரும்பாலான மாணவர்கள் புத்தகத்தில் இருப்பதைக் கூட சரியாக அறிந்து வைத்திருக்கவில்லை என்பதே உண்மை.
அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் செல்வச்செழிப்பு மிக்க கல்லூரி மாணவர்கள் மற்றும் ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை முறை குறித்த விவாதம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற இரு தரப்பு மாணவர்களும் நேரு மற்றும் அம்பேத்கர் குறித்து இரண்டு நிமிடங்கள் பேசுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்களைப் பற்றி பேசியவர்கள் நேரு, அம்பேத்கர் ஆகியோர் குறித்துப் பள்ளிப் பாட புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் பேசினர்.
"இப்படி பள்ளிக்கூட மாணவர்கள் கூட பேசுவார்கள். ஆகவே, பள்ளிக்கூடப் பாடத்தைக் கடந்து நேருவும், அம்பேத்கரும் இந்தியாவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்பது குறித்துப் பேசுங்கள்' என்று அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கூறினார். ஆனால் அவர்களால் பள்ளிக்கூடப் பாடத் தகவலைத் தாண்டி வேறு எதுவும் பேச முடியவில்லை.
அதேபோல அந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் தாங்கள் மருத்துவர், பொறியாளர், ஆசிரியர் ஆக வேண்டுமென விருப்பம் தெரிவித்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த விவாத நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற ஒருவர், "கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மாணவர்கள் என்னவாக வேண்டுமென விரும்பினார்களோ அதையேதான் தற்போதைய மாணவர்களும் தெரிவித்துள்ளனர். ஆகவே மாணவர்களிடையே மனமாற்றம் ஏற்படவில்லை.
தற்போது எத்தனையோ துறைகள் உள்ளன. அவற்றில் வேலைவாய்ப்பு வழங்கும் பல்வேறு படிப்புகள் உள்ளன. ஆனால் மருத்துவர், பொறியாளர், ஆசிரியர் என்ற இவற்றையே மாணவர்கள் சுற்றிச் சுற்றி வருகின்றனர்' என்று நடுவர் கூறினார்.
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகளில் இருந்து அவர்களை விடுவிக்க அம்பேத்கர் மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியது ஆகியவற்றைத் தாண்டி அவர் ஒரு பொருளாதார நிபுணர் என்பதும், பொருளாதாரத் துறையில் வெளிநாட்டில் முனைவர் பட்டம் முதல் இந்தியர் என்பதும், இந்திய ரிசர்வ் வங்கியை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர் என்பதும் பலருக்கும் தெரியாத தகவலாகும்.
அதே போல ஜவாஹர்லால் நேரு நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர், இந்தியாவின் முதல் பிரதமர் என்பதையும் தாண்டி அவர் பன்முகத் திறமைகளைக் கொண்டவர் என்பதும், நவீன இந்தியாவின் சிற்பி என்று கூறுமளவுக்கு அவர் பல்வேறுத் துறைகளில் மேற்கொண்ட சாதனைகள் குறித்தும், இந்தியாவின் பொருளாதாரம், விவசாயம், சமூகச் சீர்த்திருத்த மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை.
இவ்வாறு நாட்டின் முக்கியத் தலைவர்கள் குறித்து இன்றைய கல்லூரி மாணவர்கள் அறியாமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.
இன்றைய சூழ்நிலையில் பல்வேறு வலைதளத் தகவல் களஞ்சியங்கள் பல இருந்தும் அவற்றை இன்றைய இளைய சமுதாயத்தினர் நன்மைக்காக பயன்படுத்துவதே இல்லை. பேஸ்புக் போன்றவற்றின் வாயிலாக நண்பர்கள் வட்டத்தைப் பெருக்கிக் கொண்டு அதன்மூலம் நல்லவை அல்லாதவைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்கி வீணடித்துக் கொண்டிருக்கின்றனர்.
முக்கிய தலைவர்கள் குறித்து, பரவலாக வெளி உலகுக்குத் தெரிந்திராத பல செய்திகள் வலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன.
மழைக்காகக் கூட பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்கியது இல்லை என்றுக் கூறுவது போல இன்றைய இளைய சமுதாயம் நல்ல விஷயங்களை வலைதளத்தில் தேடுவதில்லை என்பது நிதர்சனமான உண்மையாகும்.
அதனால்தான் இன்றைய இளைய சமுதாயம் ஏட்டுச் சுரைக்காயாக இருந்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் புத்தகம் வாசிக்கும் பழக்கம் அவர்களிடத்தில் அறவே இல்லையென்பது அதைவிட வருத்தமானதாகும்.
எனவே இன்றைய இளைய சமுதாயத்தினர் ஏட்டு சுரைக்காயாக இல்லாமல் அறிவு, தகவல் களஞ்சியப் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இணைய தளங்களின் மூலம் தகவல் களஞ்சியங்களில் உள்ள சிறந்த தகவல்களைத் தெரிந்து தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள
வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...