வாழ்க்கை ஒரு திருநாள்
ஆண்டு முழுவதும் பாடுபடும் பாட்டாளி மக்களுக்கும், ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை திருவிழாக்கள் வருவது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.


ஆண்டு முழுவதும் பாடுபடும் பாட்டாளி மக்களுக்கும், ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை திருவிழாக்கள் வருவது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்நாள் முழுவதும் வந்து போகும் துயரங்களை மறக்கவும் இது உதவும். வேதனை தாங்காமல் விரக்தியின் ஓரத்தில் நிற்பவர்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் இத்திருவிழாக்கள் அளிக்கும்.
வாழ்க்கையில் திருவிழாக்கள் வரலாம்; வாழ்க்கையே திருவிழாவாக இருந்தால் எப்படி இருக்கும்? இதைத்தான் எமர்சன், "அறிஞர்களுக்கு வாழ்க்கை ஒரு திருநாள்' என்று கூறினார்.
பொங்கல் என்பது உழவர்களின் திருநாள். ஆண்டு முழுவதும் பாடுபட்ட உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் திருவிழா. இந்த உழவர்களுக்குத் துணையாக இருக்கும் கால்நடைகளுக்கும், சூரியன் முதலிய இயற்கைச் செல்வங்களுக்கும்கூட நன்றியைத் தெரிவிக்கும் விழாவாகும். இந்த நேரத்தில் அறிவுக்கும் ஒரு விழா ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது. அதுதான் புத்தகக் கண்காட்சியாகும்.
"அறிவுடையார் எல்லாம் உடையார்' என்றார் வள்ளுவர். அறிவு இல்லாதவர் வேறு எத்தனை பேறுகள் பெற்றிருந்தாலும் எதுவும் இல்லாதவரே ஆவர் என்பது அவர் கருத்து. அறிவு அத்தனை சிறப்புடையது. அதற்கு ஒரு திருவிழா அவசியம் வேண்டாமா?
அறிவைத் தேடுதல் என்பது ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் பயணமாகும். இந்தப் பயணத்துக்கு முடிவே இல்லை. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தொடங்கிய அறிவைத் தேடும் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
இமயம் முதல் குமரி வரை இந்தியா ஒரு நாடாக இல்லாத காலத்திலும்கூட அது ஞானபூமியாக இருந்தது. ஞானிகளும், முனிவர்களும், சித்தர்களும் உலகத்துக்கே ஒரு வழிகாட்டியாக விளங்கினர். உலகில் திகழும் அத்தனை சமயங்களின் வேர்களும் இந்தியாவில் விரிந்து பரந்திருந்தது. அவர்களின் மூச்சுக் காற்றே ஞான இசையின் நாதமாக இருந்தது.
சீனா முதலிய பல்வேறு தேசத்தினர் இந்த நாட்டில் சுற்றுப்பயணம் செய்ததும், படையெடுத்ததும் வெறும் பொருள் செல்வத்துக்காக மட்டுமல்ல, அறிவுச் செல்வங்களை அள்ளிச் செல்லவும்தான் என்பதை வரலாறு கணித்து வைத்திருக்கிறது.
யுவான் சுவாங் என்ற சீனப் பயணி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவின் வடபகுதியிலிருந்து தெற்கே காஞ்சிபுரம்வரை 16 ஆண்டுகள் பயணம் செய்துள்ளார். மீண்டும் அவர் தனது நாட்டுக்குத் திரும்பியபோது கொண்டு வந்ததை 30 குதிரைகளில் ஏற்றினார்கள். அந்நாட்டு எல்லையில் மன்னர், அமைச்சர்கள், நகர மக்கள் அனைவரும் அவரை மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.
அவர் கொண்டு வந்ததைப் பார்க்க அங்கே அனைவரும் ஆவலோடு காத்திருந்தனர். விலையுயர்ந்த செல்வங்களை அவர் திரட்டி வந்திருக்க வேண்டும் என்று கருதினர். ஆனால், யுவான் சுவாங் இந்தியாவிலிருந்து சீன நாட்டுக்குக் கொண்டு போனது பொன்னோ, பொருளோ, அணிகலன்களோ இல்லை. மொத்தம் 657 பௌத்த மூல நூல்களான அறிவுக் கருவூலங்கள் என்று அறிந்து அவர்கள் வியப்படைந்தனர்; நாமும் வியப்படைகிறோம்.
சங்க இலக்கியங்கள் தமிழர் நாகரிகத்தின் வெளிப்பாடுகளாகும். சங்க காலத்தில் தமிழர்கள் கல்வியறிவின் மேல் மிகுந்த மதிப்பு வைத்திருந்தனர் என்பதை "ஓதற் பிரிவு' முதலிய வாழ்வியல் நெறிமுறைகளால் அறியலாம். "ஓதற் பிரிவு' ஒரு மூன்று ஆண்டே' என்று தொல்காப்பியம் அக்காலக் கல்வி கற்றலை வரையறுத்துக் கூறுகிறது.
"ஒரு குடும்பத்தில் பிறந்த பலருள்ளும் மூத்தோனை வருக என்று அழைக்காமல் அவர்களுள் இளையவன் ஆயினும், அறிவுடையவனாயின் அவன் வழியையே அரசும் ஏற்கும்' என்று புறநானூறு (183) கூறுகிறது. இதே கருத்தைதான்,
"ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்'
என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும் பாடியுள்ளார்.
சங்க இலக்கியம் 2,279 செய்யுள்களைக் கொண்டது. இவற்றை 473 புலவர்கள் பாடியுள்ளனர். சங்க காலத்தில் மகளிரும் புலமை பெற்று அறிவில் சிறந்து விளங்கினர். இவர்களின் எண்ணிக்கை ஐம்பது. இவர்கள் தவிர 102 பெயர் தெரியாத புலவர்களும் பாடல்கள் இயற்றியுள்ளனர்.
சங்க காலத்தில் இருந்த அறிவுடைமை, அடுத்து வந்த சங்கம் மருவிய காலத்திலும் தொடர்ந்தது. இதனை திருக்குறள் மூலம் அறியலாம். கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை ஆகிய நான்கு அதிகாரங்களும் அறிவைப் பற்றியே பேசுகின்றன.
அக்காலத்தில் சமண, பௌத்த வரவும், உறவும் இதனை விளங்க வைக்கிறது. சமண முனிவர்கள் தனித்து தங்கியிருந்த இடங்களே "பள்ளிகள்' என்று அழைக்கப்பட்டன. இப்பள்ளிகளில் இருந்துகொண்டு சமணத்துறவியர் ஊர்ப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தனர். இப்போதும் மாணவர் கற்கும் இடம் "பள்ளிக்கூடம்' என்று அழைக்கும் வழக்கம் இவ்வாறு வந்ததுதான்.
கிரேக்கர்கள் அறிவின் மேல் அளப்பரிய தாகம் கொண்டவர்கள். அவர்கள் ஐரோப்பாவில் மட்டுமின்றி கடல் கடந்த நாடுகளிலும் சென்று வாழ்ந்தனர். அவர்களது கடல் கடந்த உறவில் இந்தியா முக்கிய இடம் பெற்று விளங்கியது.
வரலாற்றில் தந்தை என்று போற்றப்படும் ஹெரோடட்டஸ் என்னும் கிரேக்க அறிஞர் கி.மு. 484 முதல் 408 வரை 76 ஆண்டுகள் வாழ்ந்தவர். அவர் இந்தியாவுக்கு வந்து நேரில் கண்டு எழுதிய செய்திகள் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை. அவருக்கு நிகரான இந்திய அறிஞராக ராகுல சாங்க்ருத்யாயனைக் கூறலாம்.
கி.மு. 31இல் எகிப்து உரோமர்களால் வெல்லப்படுவதற்கு முன் அந்நாட்டை அலெக்சாந்தர் வெற்றி கொண்டார். அவர் பெயரில் "அலெக்சாந்திரியா' என்ற தலைநகரம் உருவாக்கப்பட்டது. டாலமி என்ற கிரேக்க அரச குடும்பம் அலெக்சாந்திரியாவை மையமாக வைத்து எகிப்தை ஆண்டு வந்தது. கிரேக்க அறிஞர்கள் பலர் அங்கே வாழ்ந்து வந்தனர்.
அந்த அலெக்சாந்திரியா நகருக்குப் பெருமை சேர்த்தது ஏழு லட்சம் நூல்களுடன் செயல்பட்டு வந்த ஒரு பெரிய நூலகமாகும். கிரேக்க நாகரிகத்துக்குப் பெருமை சேர்த்தது சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் போன்றோரது சிந்தனைகளே. அத்துடன் உலகக் கவிஞர் ஹோமரின் "ஒடிசி', "இலியட்' போன்ற அழியாத காவியங்கள் அந்நாட்டு வரலாற்றை அழியாமல் காத்துக் கொண்டிருக்கின்றன. அந்நாட்டின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
மிகச் சிறந்த நாகரிகமாகப் போற்றப்படும் சுமேரிய நாகரிகத்துக்குப் பெருமை அது முதல் இலக்கியம் கண்டதுதான். சுமேரியாவில் கி.மு. 2700ஆம் ஆண்டிலேயே நூலகங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஒரு நூலகத்தில் 30 ஆயிரம் மண் பலகைகள் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் கவிதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், புராணங்கள் முதலியவை எழுதப்பட்டுள்ளன என்று ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன.
ஒரு நாட்டின் மீது படையெடுக்கும் போது, அந்நாட்டு நூல் நிலையங்களைச் சிதைப்பதையும் எரிப்பதையும்
வழக்கமாகக் கொண்டதன் காரணம்,
ஓர் இனத்தின் அடையாளம் மொழி,
அம்மொழியின் அடையாளம் நூல்கள் என்பதால்தான். அதன் மூலம் அந்த இனத்தின் நாகரிகம், பண்பாடு, வரலாறு ஆகியவையும் சேர்த்து அழிக்கப்படுகின்றன.
இலங்கை யாழ்ப்பாணத்தில் பழம்பெரும் அறிவுக் கருவூலமான யாழ்ப்பாணம் நூலகம் 1981 இல் எரிக்கப்பட்டதும் இதனால்தான்.
மனிதன் எப்படிப் படிப்படியாக வளர்ச்சியடைந்தான் என்பதை கண்டுபிடித்தவர் டார்வின். மானிட சாதியின் சரித்திரம் எப்படி படிப்படியாய் வளர்ச்சியடைந்தது என்பதை கண்டுபிடித்தவர் கார்ல் மார்க்ஸ் என்பது வரலாறு. கார்ல் மார்க்ஸ் இறந்தபோது "மார்கஸ் சிந்திப்பதை நிறுத்தி விட்டார்' என்று அவருடைய தோழர் ஏங்கெல்ஸ் கூறினார். எனவே மனித வாழ்க்கை என்பதே சிந்திப்பதுதான். சிந்திப்பதை நிறுத்துகிறபோது அவன் இறந்தவன் ஆகிறான். சிந்தனையைத் தூண்டுவதே சிறந்த புத்தகங்களின் பணியாகும்.
"நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்' என்றார் பாரதியார். இமைப் பொழுதும் சோர்வு அடையாமல் நாட்டுக்கு உழைப்பதற்கு நம்மை ஊக்கப்படுத்துவன இலக்கியப் படைப்புகளாகும்.
ஒரு சமுதாயம் உயிருள்ள சமுதாயமாக இருக்க வேண்டுமானால் யோசிப்பதையும், நேசிப்பதையும், வாசிப்பதையும் வழக்கமாக மட்டுமல்ல, வாழ்க்கையாகவே கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...