/

குரல்வளையை நெரித்த குற்றப்பரம்பரைச் சட்டம்

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வாக பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக் படுகொலை கருதப்படுகிறது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:24 am

ஜெயப்பாண்டி

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வாக பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக் படுகொலை கருதப்படுகிறது. அதற்கு இணையாக மதுரை மாவட்டம், பெருங்காமநல்லூர் துப்பாக்கிச் சூட்டை குறிப்பிடலாம்.

ஆங்கிலேயர் ஆட்சி, அதிகார மட்டத்தில் மட்டுமல்ல, கலை, பண்பாடு, குடும்ப உறவு என அனைத்து மட்டத்திலுமே நமது தனித் தன்மையை அகற்றி நம்மை நிரந்தர அடிமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

ஆனால், பாரதத்தின் பூர்வகுடிகள் தம் உரிமையை உயிரினும் மேலாகக் கருதியதால் ஆங்கிலேயரின் ஏமாற்றுத்தனத்தை எதிர்த்தன. வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது... உனக்கெதற்கு கொடுப்பது கிஸ்தி? என பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரன் வீரபாண்டிய கட்டபொம்மன் கேள்வி எழுப்பிய நிலையில், வட பகுதிகளிலும், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் பகுதியிலும் பூர்வகுடிகள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடின. பூர்வகுடிகளோ தனி நாடு, கலாசாரம், தனி நிர்வாகம், தனி நீதி என பாரதப் பண்பாட்டின் அடையாளங்களோடு சுயசார்புடன் இருந்தனர்.

"எல்லாரும் அடிமையான நிலையில், நீங்கள் மட்டும் அடிமையாகாமல் இருப்பது சரியா' என்ற கேள்வியுடன் சாம, தான, பேத தண்டங்களை அம் மக்கள் மீது ஆங்கிலேய அரசு பிரயோகித்தது. அதனால் பயனில்லை. இதனால் என்ன செய்வது என்று திகைத்த அரசுக்குத் தோன்றியதே குற்றப் பரம்பரைச் சட்டம்.

மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதியில் வாழ்ந்த குறிப்பிட்ட இன பூர்வகுடிகள் மீதே குற்றப் பரம்பரைச் சட்டத்தை ஆங்கிலேயர் 1911 முதல் பிரயோகித்தனர். அதன்படி சுமார் 532 சாதிகள் மீது இச் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கள்ளர், ஒட்டர், மலைவேடன், பளியர், காளாடி, வேப்பூர் பறையர் என சுமார் 79 இனத்தினர் மீது குற்றப்பரம்பரைச் சட்டத்தை பிரயோகித்து அடக்குமுறையைக் கையாண்டனர் ஆங்கிலேயர்.

தமிழகத்தில் மதுரை கீழக்குயில்குடி பகுதியில் முதன்முதலில் இச்சட்டத்தை 4.05.1914 இல் ஆங்கிலேய காவல்துறை அறிமுகப்படுத்தியது. அதன்படி 12 வயதை எட்டிய ஆண்கள் தினமும் காலையிலும் மாலையிலும் காவல் நிலையத்தில் தங்கள் கைரேகையைப் பதிவு செய்யவேண்டும்.

குற்றச் செயலில் ஈடுபடுவோர், நிரந்தரமாக குடியிருக்காதவர்கள், விவசாயம் செய்தோ, ஆடு, மாடு வைத்தோ பிழைக்காதவர்கள், நாடோடிகள், அரச மரபில் வந்தவர்கள் எனக் கூறி கலகம் விளைவிப்போர், ஜல்லிக்கட்டு போன்றவற்றை வீர விளையாட்டு என நடத்தி கலகம் விளைவிப்பவர்கள் என சட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யார் எவர் எனக் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், கீழக்குயில்குடி உள்ளிட்ட பகுதியிலிருந்த கள்ளர் உள்ளிட்டவர்கள் நிரந்தரமாகக் குடியிருந்தும், ஆடு, மாடுகள் வளர்த்து விவசாயம் செய்தும் தங்களுக்கென தனி கலாசார அடையாளத்துடன் வாழ்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்திய மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர் மக்கள் மீது ஆங்கிலேய அரசு 3.04.1920 இல் துப்பாக்கிச் சூடு நடத்தியது அதில் வீரமறத்தி மாயக்காள் உள்ளிட்ட 16 பேர் மரணம் அடைந்தனர். அப்போது அம்மக்களுக்காக சுதந்திரப் போராட்ட தியாகி வழக்குரைஞர் ஜார்ஜ் ஜோசப் முதன்முதலில் குரல் கொடுத்தார். அதனால் அவரை மக்கள் ரோசாப்பு துரை என்றழைத்தனர்.

பெருங்காமநல்லூரில் கைது செய்யப்பட்டவர்கள் மதுரை பசுமலைக்கு கொண்டுவரப்பட்டபோது, அங்குள்ள கிறிஸ்தவப் பள்ளியில் முத்துராமலிங்கத் தேவர் மாணவராக இருந்தார். அதன் தாக்கமே பின்னாளில் குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து அவரைப் போராடத் தூண்டியது.

1934இல் குற்றப் பரம்பரச் சட்டத்தை எதிர்த்து ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் டாக்டர் பி. வரதராஜுநாயுடு தலைமையில் முத்துராமலிங்கத் தேவர் மாநாடு நடத்தினார். அதன்படி ஐவர் குழு ஆங்கிலேய ஆளுநரைச் சந்தித்தது.

அதன்பின் அச்சட்டத்தின் செயல்பாடுகளின் தாக்கம் குறைக்கப்பட்டது. தொடர்ந்து முத்துராமலிங்கத் தேவர் நடத்திய போராட்டங்களால் உசிலம்பட்டி உள்ளிட்ட அனைத்துப் பகுதியிலும் 1948இல் அச்சட்டம் முழுமையாக நீக்கப்பட்டது.

அரசின் சட்டம் என்பது தனி மனிதனின் உரிமையை, நலனை, பாதுகாப்பை அச்சுறுத்துவதாக இருக்கக் கூடாது என்பதற்கு குற்றப்பரம்பரைச் சட்டமே சிறந்த  எடுத்துக்காட்டாகும்.

ஆனால், இன்றோ, நம்நாட்டில் சிறு வணிகர்கள், பரம்பரையாக சிறுதொழில் செய்வோர், இன உரிமைக்காக குரல் கொடுப்போர் என பலரையும் அடக்கும் வகையில் புதிய புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன. அதுவும் ஜனநாயக உறைவிடமான மக்களவையில்.

ஆம்... காலம் விசித்திரமானது. அதனால்தான் அது சட்டங்களை எப்போதும் சாமானியர்களை நோக்கியே பாய வைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.