திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தமிழ்க் கோயிலை தகர்க்க விடலாமா?

தமிழின் செம்மொழி இலக்கியங்களாகிய சங்க இலக்கியங்களைத் திரட்டித் தந்த டாக்டர் உ.வே. சாமிநாதையர் "தமிழ்த் தாத்தா' என்று போற்றப்படுகிறார். அவர் வாழ்ந்த இல்லம் சென்னை திருவல்லிக்கேணியில் இருந்தது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:19 am

உதயை மு. வீரையன்

தமிழின் செம்மொழி இலக்கியங்களாகிய சங்க இலக்கியங்களைத் திரட்டித் தந்த டாக்டர் உ.வே. சாமிநாதையர் "தமிழ்த் தாத்தா' என்று போற்றப்படுகிறார். அவர் வாழ்ந்த இல்லம் சென்னை திருவல்லிக்கேணியில் இருந்தது.

அந்த இல்லம் இடிக்கப்படுகிறது என்ற செய்தியறிந்து போய்ப் பார்த்தபோது வேதனையாக இருந்தது. தமிழ் உணர்வு, தமிழ்ப் பண்பாடு எல்லாமே சேர்ந்து தகர்ந்து போய்விட்டது போல இருந்தது.

காலமெல்லாம் கால்கள் தேயத்தேய தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் நடந்து சென்று ஓலைச் சுவடிகளை கரையான்களிடமிருந்து காப்பாற்றியவர் அவர். "ஆடிப்பெருக்கின்போது ஆற்றில் விடுவதை அடியேனிடம் தாருங்கள்' என்று ஓலைச்சுவடிகளைக் கேட்டுப் பெற்று அவற்றுக்கு வாழ்வளித்தவர்.

அந்தச் சுவடிகள் இல்லையென்றால் தமிழ்ச் செம்மொழி என்று நிலைநாட்டுவதற்கு ஆதாரம் இல்லாமல் போயிருக்கும்.

மண்ணுக்குப் பெருமை மலைகளும், நதிகளும் மட்டுமல்ல, மதிப்புமிகு மனிதர்களும்தான்.

"நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை, வாழிய நிலனே'

என்று புறநானூற்றில் ஒளவையார் பாடுவதும் இதனைத்தான்.

தமிழறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளை கூறுவதைக் கேளுங்கள்:

"ஐயரவர்கள் சுமார் 60 ஆண்டுகளாகத் தமிழையே சிந்தித்து வந்தார்கள். தமிழ் நூல்களையே ஓதி வந்தார்கள். தமிழ் நூல்களையே போதித்து வந்தார்கள். தமிழ் நூலாராய்ச்சிகளையே செய்து வந்தார்கள். தமிழ் நூல்களையே பதிப்பித்து வந்தார்கள். தமிழ் நூல்களையே தேடிப் பெற்றுத் தொகுத்து வந்தார்கள். இவர்கள் இல்லத்தைத் தமிழ் தெய்வத்தின் திருக்கோயில் என்றுதான் சொல்ல வேண்டும்...' என்று கூறுகிறார். அந்தத் திருக்கோயில் இடிக்கப்படலாமா?

1855-ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த உத்தமதானபுரத்தில் பிறந்த சாமிநாதையர் தம் தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரிலிருந்த ஆசிரியரிடம் பயின்றார். பின்னர் தம் 17-ஆம் அகவை முதல் திருவாவடுதுறை ஆதீனப் புலவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் முறையாகத் தமிழ் கற்றார்.

"பல காலமாக தவம் புரிந்து ஒரு தெய்வ தரிசனத்துக்காகக் காத்திருக்கும் உபாசகனைப்போல நான் இருந்தேன். அவனுக்குக் காட்சியளிக்கும் தெய்வம் போல அவர் (மீனாட்சிசுந்தரம் பிள்ளை) வந்தார்...' என்று உ.வே.சா. தம் ஆசிரியரைப் பற்றிப் பெருமையோடு குறிப்பிடுகிறார்.

"ஐயரது 17-ஆம் அகவையில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் சேர்ந்து, 1876-இல் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சிவபதம் அடையும்வரை அவரிடம் கல்வி கற்று வந்தார்' என்று பேரா. வையாபுரிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.

1880-இல் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். அங்கு 23 ஆண்டுகளும், சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகளும் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவர் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்தபோது, சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன்பேட்டைக்கு நிரந்தரமாகக் குடியேறினார்.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் முதல் மாணவரான சி. தியாகராசன் செட்டியார் தாம் பணிபுரிந்த கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஐயரை ஆசிரியராக அமர்த்தினார். அந்த நன்றிப் பெருக்கினால் தமது இல்லத்துக்கு "தியாகராச விலாசம்' என்று பெயரிட்டார் ஐயர்.

ஐயரவர்கள் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றினார் என்பதைவிட அழிந்து கொண்டிருந்த தமிழ்ச் சுவடிகளை திரட்டித் தந்தார் என்பதில்தான் அவரது தனித்தன்மை காணப்படுகிறது.

சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் என 90க்கும் மேற்பட்ட பொக்கிஷங்களின் ஓலைச்சுவடிகளை அச்சிட்டுப் பதிப்பித்ததோடு, 3,000க்கும் மேற்பட்ட ஏட்டுச்சுவடிகளையும், கையெழுத்துப் பிரதிகளையும் சேகரித்து தமிழ் உலகத்தக்கு அளித்துள்ளார்.

அக்காலத்தில் தமிழ்ப்புலவர் பெருமக்கள் புதிய நூல்கள் இயற்றித் தம் ஆற்றலை வெளிப்படுத்தவே விரும்பின. ஆனால், இவர் அவர்களிடமிருந்து வேறுபட்டு பழைய நூல்களைத் தேடிப் பதிப்பித்துப் புதுப்பிக்கவே விரும்பினார். அதுவே இவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.

"தமிழ் நூல்களை நன்றாகப் பதிப்பிடுவதற்கெனப் பிறந்தவர் சாமிநாதையரே' என்று பேராசிரியர் இரா. இராகவையங்காரே குறிப்பிட்டிருப்பது இவரது தமிழ்ப்பணிக்குச் சிறந்த சான்றாகும்.

ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கில மோகம் பரவிக் கொண்டிருந்து காலத்தில் இவர் தமிழ் இலக்கியங்களை மீட்டெடுக்கும் பெரும்பணியில் ஈடுபட்டார். அக்காலத்தில் பனை ஓலைகளில் எழுதப்பட்ட ஏட்டுச் சுவடிகளாகிய இலக்கியச் செல்வங்களை ஊர் ஊராக, வீடு வீடாக, மாட்டு வண்டிகளிலும், கால்நடையாகவும் தேடி அலைந்து கண்டுபிடித்துத் தந்தவர் உ.வே.சா.

இது பற்றி "என் சரித்திரம்' என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூலில் வேதனையுடன் எழுதியுள்ளார். பாண்டி நாட்டு கரிவலம்வந்த நல்லூர் வரும் உ.வே.சா. சிலப்பதிகாரப் பிரதிகளைத் தேடி கோயிலுக்குப் போகிறார். கோயில் அறங்காவலரைச் சந்திக்கிறார். அந்த உரை

யாடல்:

நான்: வரகுண பாண்டியன் வைத்திருந்து ஏட்டுச் சுவடிகள் எல்லாம் ஆலயத்திலே இருக்

ன்றனவா?

அவர்: அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னவோ வைக்கோல் கூளம் மாதிரி கணக்குச் சுருளையோடு எவ்வளவோ பழைய ஏடுகள் இருந்தன.

நான்: அப்படியா? அவை இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்.

அவர்: வரகுண பாண்டியர் இறந்த பிறகு அவர் சொத்தெல்லாம் கோயிலைச் சேர்ந்து விட்டது. ஏட்டுச் சுவடிகளும் கோயிலுக்கு வந்து விட்டன.

நான்: அது தெரியும், இப்போது அவை எங்கே இருக்கின்றன?

அவர்: குப்பைக் கூளங்களாகக் கிடந்த சுவடிகளை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் கூளங்களை எல்லாம் என்ன செய்வது என்று யோசித்தார்கள். ஆகம சாஸ்திரத்தில் சொல்லியபடி செய்து விட்டார்கள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன செய்து விட்டார்கள்?' என்று பதற்றத்துடன் கேட்டேன்.

""பழைய ஏடுகளைக் கண்ட கண்ட இடங்களிலே போடக் கூடாதாம். அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்துவிட வேண்டுமாம். இங்கே அப்படித்தான் செய்தார்கள்.'

"ஹா' என்று என்னையும் மறந்து கத்தி விட்டேன்.

"குழி வெட்டி அக்னி வளர்த்து நெய்யில் தோய்த்து அந்தப் பழைய சுவடிகள் அவ்வளவையும் ஆகுதி செய்து விட்டார்கள்' என்று அவர் வருணித்தார்.

"இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? அப்படி சொல்லியிருந்தால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் ஆகுதி செய்ய வேண்டும்' என்று எனக்குக் கோபம் கோபமாக வந்தது.

இவ்வாறு எழுதுகிறார் உ.வே.சா. இவரது இந்தத் துடிப்பிலிருந்து நாம் அறிவது என்ன? அரிய கருவூலங்களை அழித்து விட்டனரே என்ற ஆதங்கம். இப்படியும் தமிழர்கள் அறியாமையில் இருக்கின்றனரே என்ற ஆத்திரம்.

உ.வே.சா. பழந்தமிழ் இலக்கியங்களை தேடிக் கண்டுபிடித்ததோடு, சமயக் காழ்ப்புணர்ச்சியில்லாமல் அவற்றைப் பதிப்பித்தார் என்பது அவருக்குக் கூடுதல் சிறப்பாகும். சமண சமய இலக்கியமாகிய சீவக சிந்தாமணியையும், பெளத்த மத நூலாகிய மணிமேகலையையும் மிகுந்த ஈடுபாட்டோடு பல பிரதிகளைச் சீர்தூக்கிப் பார்த்து அச்சு வடிவம் தந்துள்ளார்.

சமயத் தொண்டு வேறு, இலக்கியத் தொண்டு வேறு என்பதில் சரியாக இருந்தார் ஐயரவர்கள். ஆறுமுக நாவலர் சமயத் தொண்டில் ஈடுபட்டு, சமய நூல்களையே அச்சிட்டு வந்த காலத்தில், இவர் சமயங்களுக்கு அப்பாற்பட்டுத் தமிழ்த் தொண்டாற்றி வந்தார்.

சமண, பெளத்த நூல்களை அச்சிடும்போது அவற்றில் ஏற்படும் ஐயப்பாடுகளை அந்தந்த மத அறிஞர்களோடு கலந்து பேசி சீர் செய்துள்ளார். பிற சமய நூல்களை அச்சிடுவது பற்றிச் சிலர் நிந்தித்தபோதும், அதுபற்றிக் கவலைப்படாமல் தமது தமிழ்ப் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார்.

பெளத்த காப்பியமான குணடலகேசியும், அதற்கு மறுப்பாக எழுந்த நீலகேசியும் அக்காலத்தில் கண்டு கொள்ளப்படவில்லை. இதனால் குண்டலகேசி முற்றிலும் அகப்படாமல் அழிந்து போனது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றினை இழந்தது தமிழுக்குப் பேரிழப்பாகும்.

1906-ஆம் ஆண்டு சென்னை அரசு இவரது தமிழ்ப்பணியைப் பாராட்டி, "மகா மகோபாத்தியாயா' என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் "தமிழ் இலக்கிய அறிஞர்' என்ற விருதை வழங்கிச் சிறப்பித்தது.

1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் உ.வே.சா. வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உரை நிகழ்த்தியுள்ளார். அப்போது காந்திஜிக்கு இவர் மீது மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டுள்ளது.

"இந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்த வண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வ மிகுதிதான் என்னிடம் எழுகிறது...' என்று காந்திஜி பேசியுள்ளார்.

இவ்வாறு இடைவிடாது பணியாற்றி வந்த "தமிழ்த்தாத்தா' உ.வே. சாமிநாதையர், 1942 ஏப்ரல் 28 அன்று அவரது மறைவு காலம் வரை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டை வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார்.

எண்ணற்ற அறிஞர்களும், புலவர்களும், பேராசிரியர்களும் வந்து போன வணக்கத்துக்குரிய இடம் இது. மகாத்மா காந்தியடிகளும், வங்கக் கவிஞர் தாகூரும் இங்கு வந்து சென்றிருப்பது ஐயரின் பெருமைக்குத் தக்க சான்றுகளாகும்.

அப்படிப்பட்ட அறிவு இல்லத்தை நினைவிடமாக ஆக்க வேண்டும் என்ற தமிழ் அமைப்புகளின் கோரிக்கை நியாயமானதே.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் 14.15 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.23.74 கோடி செலவில் அமையப் போவதாகவும் அதற்கான கட்டடப் பணியை பொதுப்பணித் துறை தொடக்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தப் பணியோடு இந்தப் பணியும் நிறைவேற தமிழ்நாடு அரசு ஆவன செய்யும் என்று நம்புவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.