நடப்பதென்பது நடக்குமா?
பிளாட்பாரங்கள் என்று குறிப்பிடப்படுகின்ற நகரங்களின் நடைபாதைகள் பற்றிய பார்வையிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலும் அனைத்துத் தரப்பினருமே தெளிவற்று இருக்கிறார்கள்.


பிளாட்பாரங்கள் என்று குறிப்பிடப்படுகின்ற நகரங்களின் நடைபாதைகள் பற்றிய பார்வையிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலும் அனைத்துத் தரப்பினருமே தெளிவற்று இருக்கிறார்கள். நடைபாதைகள் என்பவை, நகரங்களின் ரத்த ஓட்டப் பாதைகளைப் போன்றவை, வாகனப் போக்குவரத்து சீராகவும் முறையாகவும் நிகழ வேண்டும் என்றால், நடைபாதைகள் மிகச் சரியாக இருக்கவேண்டும்.
எல்லாருமே கார்களில் பயணிக்கிற மேலைநாடுகளில் நடைபாதைகள் அனைத்தும் அகலமாகவும், அழகாகவும், தூய்மையாகவும் இருக்கின்றன. பெரும்பான்மை மக்கள் நடந்தாக வேண்டியிருக்கின்ற நமது நாட்டின் நடைபாதைகளோ நெடுக ஆக்கிரமிக்கப்பட்டும், அசிங்கப்படுத்தப்பட்டும், அலங்கோலப்படுத்தப்பட்டும், மறிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் காணப்படுகின்றன.
நடைபாதைகளை யார் வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் கருத்து நமது மக்களின் பொதுப்புத்தியில் நெடுங்காலமாக அழுந்தப் பதிந்திருக்கிறது.
தங்களது வீட்டு மனைகளின் கடைசி அங்குலம் வரை அளந்து சுவர் எழுப்பிக் கொள்கிற வீட்டு உரிமையாளர்கள், வீடுகளுக்குள் தங்களது வாகனங்களை ஏற்றவும் இறக்கவும் வசதியாக உறுதியான சிமெண்ட் சாய்வுப் பாதைகளை நடைபாதைகளின் குறுக்கே கொஞ்சமும் அச்சமோ கூச்சமோ இன்றி அமைத்து அவற்றை நிரந்தரமாக மறிக்கிறார்கள்.
இப்படியான நடைபாதை இடைமறிப்புகள் நமது நகரங்களில் பல லட்சக்கணக்கில் இப்போதும் உள்ளன. கடைவீதிகள் நெடுகிலும், இருபுறங்களிலும் அமைந்துள்ள கடைகளுக்கு முன்பாக நிற்க வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்கள் நடைபாதைகளைத்தான் மறித்துக் கொண்டு கம்பீரமாக நிற்கின்றன. மக்கள் ஒதுங்கி ஒதுங்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
தங்களது வீடுகள், கடைகளுக்கு முன் அமைந்திருக்கும் நடைபாதைகளை ஆக்கிரமித்து அழகழகாகப் பூச்செடிகளை வளர்ப்போரும் நம்மிடையே உண்டு. இதுவும் நுட்பமான ஓர் ஆக்கிரமிப்புதான். அப்படியானவர்களின் நோக்கம் பூக்கள் அல்ல, தங்களது வீடுகள் மற்றும் கடைகளுக்கு முன்பாக இருக்கும் அரசு நிலத்தை நடப்போரும் மற்றவர்களும் பயன்படுத்திவிடக்கூடாது என்பதுதான்.
தங்களுக்கெனச் சொந்தமாகக் கடைகள் இல்லாதவர்கள், தங்களது கடைகளை நடைபாதைகளில்தான் விரிக்கிறார்கள். தங்களுக்கென சொந்தமாக வீடுகள் இல்லாதவர்கள், தங்களுடைய வாழ்க்கையை நடைபாதைகளில் கழிக்கிறார்கள். தங்களுக்கான உணவை நடைபாதைகளில்தான் சமைக்கிறார்கள். பல இடங்களில் குளிப்பதும், துவைப்பதும் கூட நடைபாதைகளில்தான் நடக்கின்றன.
நடைபாதைகளில் வாழ்ந்து, இரவில் அங்கேயே உறங்குவோரின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை. கடந்த 2007-ஆம் ஆண்டு சென்னை கீழ்பாக்கத்தில் பணக்காரச் சிறுவன் ஓட்டி வந்த கார் நடைபாதையில் படுத்திருந்த 11 பேர் மீது ஏறிக் காயப்படுத்தி அவர்களில் இருவரைக் கொன்றது.
கடந்த ஆண்டு எழும்பூரில் இன்னொரு பணக்கார இளைஞன் மதுபோதையில் ஓட்டி வந்த கார் நடைபாதையில் படுத்திருந்த ஐந்து பேர்களைக் காயப்படுத்தி ஒரு சிறுவனை படுகாயப்படுத்தியது.
கடந்த ஜூன் மாதம் 2014-ஆம் ஆண்டு சென்னை சூளை பகுதியில் வேகமாகச் சீறிவந்த ஒரு கார் நடைபாதையில் தன் தாயிடம் சோறு சாப்பிட்டுக்கொண்டிருந்த குழந்தைமீது ஏற, அக்குழந்தையின் இரண்டு கால்களும் துண்டாகி அவன் நிரந்தர மாற்றுத்திறனாளியானான். அவனது தாயும் படுகாயமடைந்தார்.
2002-ஆம் ஆண்டு மும்பையில் நடிகர் ஒருவர் மதுபோதையில் ஓட்டிச்சென்ற கார் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து பேர் மீது ஏறியதில் ஒருவர் இறந்து போனார்.
இவைபோன்ற சான்றுகள் நகரங்களின் அனைத்து நடைபாதைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இத்தகைய விபத்துகள் பெரும்பாலும் வழக்குகளாக மாறி நீதிமன்றங்களின் தீர்ப்பைப் பெறாமல் பணக்கட்டுப் பரிவர்த்தனைகள் வாயிலாகவே சரி செய்யப்படுகின்றன.
நமது நாட்டில் மது வெள்ளம் மட்டுமீறிய பிறகு பல வாகனங்கள் நடைபாதைகளின் மீதேறி, யாரையேனும் காயப்படுத்தி, யாரையேனும் கொன்று அல்லது எதையேனும் சிதைத்து அதன்பிறகே நிற்கின்றன.
தனியார் மட்டுமல்ல, அரசுகளும் தங்களது பங்கிற்கு நடைபாதைகளை நிறையவே ஆக்கிரமிப்பு செய்கின்றன. மின் விநியோகப் பெட்டிகள், தொலைபேசி இணைப்புப் பெட்டிகள், மின் விளக்குக் கம்பங்கள், பேருந்து நிழற்குடைகள் போன்றவை நடைபாதைகளில் நின்றுதான் தங்களது சேவைகளை மக்களுக்கு வழங்குகின்றன.
மேலும் மின் கம்பி, தொலைபேசி, இணையம் போன்றவற்றின் மிகச்சிக்கலான, நீண்ட வடங்கள் அனைத்துப் பகுதிகளிலும் நடைபாதைகளுக்குக் கீழே புதைக்கப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாடுகளில் தடங்கல் ஏற்படும்போது குதறிப்போடப்படுவது நடைபாதைகள்தான்.
பல இடங்களில், பல காரணங்களால், குதறியது குதறியபடியே மாதக்கணக்கில் கிடப்பதுண்டு. அவ்வாறான பள்ளங்களில் தேங்கும் மழைநீரில் விழுந்தும், அந்த நீரில் பாய்ந்திருக்கும் மின்சாரம் தாக்கியும் பலர் இறந்துள்ளனர்.
அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து வகையான அமைப்புகளின் விளம்பரங்களும் நடைபாதைகளை நம்பியே தயாரிக்கப்படுகின்றன. நடைபாதைகளில் வைத்துதான் அவை மக்களின் பார்வைக்குப் பரிமாறப்படுகின்றன. அதிலும், "பிளக்ஸ் பேனர்' எனப்படும் விளம்பரத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தபிறகு நடைபாதைகளை உரிமையோடு மறிக்கலாம் என்ற நிலை வந்துவிட்டது.
சாலைகளை விரிவுபடுத்தி வாகனப் போக்குவரத்து இயக்கத்தைச் சீராக்கும் பணிகளின் விளைவாக, நமது நகரங்களில் இப்போது பெரும்பாலும் நடைபாதைகளே இல்லை. புகழ்பெற்ற தலைவர்களின் சிலைகளும், பல்வேறு வகையான மதங்கள் சார்ந்த கடவுள்களும் நடைபாதைகளில் நிறுவப்படுவது இன்றளவும் தொடர்கிறது.
இவ்வகையான ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்படும்போது, அது மக்களின் உணர்வு சார்ந்த பிரச்னையாகத் திரிக்கப்பட்டு அடிதடிக் கலவரமாக மாறுகிறது.
கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது, அவர் நலம்பெற வேண்டும் என்பதற்காக, சென்னை உயர்நீதிமன்ற வாயிலின் நடைபாதையில் கட்டப்பட்டு "நீதி கருமாரி அம்மன் கோயில்' என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு கோயில், பெரும் சிரமங்களுக்கும், போராட்டங்களுக்கும், நீதிமன்ற உத்தரவுகளுக்கும் பிறகு அண்மையில் 6-12-2014-ஆம் நாள் அப்புறப்படுத்தப்பட்டது.
இந்தக் கோயிலை அப்புறப்படுத்த வேண்டும் எனும் நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யவேண்டும் என்று மாநகராட்சியின் சார்பிலேயே நீதிமன்றத்தில் முறையிடப்பட்ட நகைச்சுவையும் நடந்தது.
ஓர் ஆண்டுக்கு 16 லட்சம் புதிய வாகனங்கள் தமிழகத்தின் சாலைகளில் இறங்குகின்றன. இவற்றில் எத்தனை விழுக்காடு வாகனங்களுக்குச் சொந்தமாக நிறுத்துமிடங்கள் உள்ளன? சொந்தமாக நிறுத்துமிடங்கள் உள்ளவர்களுக்கு மட்டுமே வாகனங்கள் விற்கப்படும் எனும் நிலை ஏற்படுத்தப்பட்டால், விளைவுகள் எப்படியிருக்கும்?
பொதுமக்கள் நெருக்கடியில்லாமல் நடந்து செல்ல தரமான நடைபாதைகள் அமைக்கப்பட்டால், வாகனப் போக்குவரத்து நெரிசல் குறையும். அலுவலகப் பணி முடிந்து காலார கொஞ்ச தூரம் நடந்து செல்லவே பலர் விரும்புகின்றனர்.
ஆனால், அத்தகையோருக்கான வசதியான நடைபாதைகள் இன்று நமது நகரங்களில் இல்லை. சென்னையில் நாம் காலார நடக்கவேண்டுமெனில், கடற்கரைச் சாலையின் நடைபாதைகள் மட்டுமே அதற்கு உகந்தவையாக உள்ளன.
பெருநகரங்களில் பங்களாக்கள் மிகுந்திருக்கும் சில பகுதிகளில் நடைபாதைகள் தரமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அங்கெல்லாம் பொதுமக்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
பெருநகரங்களின் மிக முக்கியமான வாகனப் போக்குவரத்து சாலைகளின் இருபுறங்களிலும் நடைபாதைகள் அகலமாகவும், தரமாகவும், சமமாகவும், மக்கள் நடப்பதைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தப்படாத, பயன்படுத்தவும் கூடாத, தீவிரமான கண்காணிப்பில் இருக்கும் பட்சத்தில், தாங்கள் போக வேண்டிய இடங்களுக்கு நடைபாதையைத் தேர்ந்தெடுப்போரின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் பெருகும்.
நகரவாசிகளின் உடல் நலம் பெறுவதற்கும், வாகனங்களின் ஒலி, புகை, நெரிசல், விபத்து போன்ற நலக் கேடுகள் குறைவதற்கும் தரமான நடைபாதைகளே காரணமாக அமையும். பெருநகரங்களில் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் அனைத்து நடைபாதைகளும் முழுமையாக மீட்கப்பட வேண்டும். விரிவுபடுத்தப்பட வேண்டும். தரமாக அமைக்கப்படவேண்டும்.
இவற்றுக்கெல்லாம் மேலாக அவற்றுக்கென்றே அமைக்கப்பட்ட, தனித்த அதிகாரங்களைக் கொண்ட ஓர் அமைப்பினால் அவை கண்காணிக்கப்பட வேண்டும்.
நடப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிற நடைபாதைகள்தான் பெருநகரங்களின் நிர்வாகச் சிறப்பிற்கான சிறந்த சான்றாகும்.
கட்டுரையாளர்: எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...