அறிவு விளக்கை அணையாமல் காப்போம்!
அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனரான ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் பிரிட்டனுக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு ஆகிய பல்கலைக்கழகங்களைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றார்.


அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனரான ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் பிரிட்டனுக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு ஆகிய பல்கலைக்கழகங்களைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றார். அப்போதே அவர் மனதில் இப்பல்கலைக்கழகங்களைப் போன்ற தரமான பல்கலைக்கழகம் ஒன்றை, தமிழ்நாட்டில் நிறுவி, கல்வித் தொண்டு புரிய வேண்டும் என்ற எண்ணம் உருவாயிற்று.
அதற்கிணங்க அவர் 24-06-1920 அன்று சிதம்பரத்தில் மீனாட்சி கல்லூரியைத் தொடங்கினார். 1927-ஆம் ஆண்டில் தமிழ்க் கல்லூரியையும் வடமொழிக் கல்லூரியையும் தொடங்கினார். 1929-இல் இசைக் கல்லூரியைத் தொடங்கினார்.
சங்க இலக்கியங்களைத் தேடித்தேடி கண்டுபிடித்துப் பதிப்பித்த உ.வே. சாமிநாதய்யரை தமிழ்க் கல்லூரியின் தலைவராக நியமித்தார். இதைப்போன்றே அவர் அமைத்த ஒவ்வொரு கல்லூரிக்கும் புகழ் பெற்றவர்களையே தலைமைப் பொறுப்புக்கு நியமித்தார்.
அனைத்துக் கல்லூரிகளையும் இணைத்து ஒரு பல்கலைக்கழகத்தைத் தோற்றுவிக்க முன்வந்தார். அதற்காக 1,000 ஏக்கர் நிலமும், ரூபாய் 20 இலட்சமும் வழங்கினார்.
அண்ணாமலைச் செட்டியாரின் நோக்கம் நிறைவேறுவதற்கு பி.டி. இராசன், பெரியார் ஈ.வே. இராமசாமி போன்ற பலரும் துணை நின்று அன்றைய ஆங்கிலேய ஆளுநரைச் சந்தித்து 1928-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் கொண்டுவர வழி வகுத்தார்கள். அந்தப் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறைக்கும் பேராசிரியர்களைத் தேடித்தேடித் தேர்ந்தெடுத்துக் கொண்டுவந்தார் அண்ணாமலைச் செட்டியார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பது அவருடைய முக்கியக் குறிக்கோளாக அமைந்தது. குறிப்பாக, தமிழ் வளர்ச்சிக்கும், தமிழிசையைப் பரப்புவதிலும் அப்பல்கலைக் கழகம் முதன்மை வகித்தது.
இன்றைய கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அண்ணாலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயின்றார்கள்.
அந்த நாளில் மேற்கண்ட மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு கல்லூரிகளுக்கு மேல் கிடையாது. எனவே, மேற்படிப்புக்கான வழியின்றி மாணவர்கள் பள்ளிக்கல்வியோடு தங்கள் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை இருந்தது.
அந்த நாளில் பட்ட மேற்படிப்பு படிக்க வேண்டுமானால், சென்னையில் உள்ள சில கல்லூரிகளில் மட்டுமே சேர வேண்டும். தமிழ்நாட்டின் வேறு எந்தப்பகுதியிலும் பட்ட மேற்படிப்பு வசதி கிடையாது. எனவே, தமிழ்நாடெங்கிலுமிருந்து மாணவர்கள் பட்டமேற்படிப்புக்காக அங்கு வந்து சேர்ந்தார்கள்.
பல்கலைக்கழகம் நாளுக்கு நாள் வளர்ந்தது. 50 துறைகளில் 390 படிப்புகள் கற்பிக்கப்பட்டன.
மேலும், மாணவர்கள் அங்கேயே தங்கிப் படிக்க வேண்டிய ஒரே பல்கலைக்கழகமாக அப்பல்கலைக்கழகம் அந்த நாளில் திகழ்ந்தது. புகழ்பெற்ற அறிஞர்கள் பலர் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களாகவும் பேராசிரியர்களாகவும் பணியாற்றி சிறந்த மாணவர்களை உருவாக்கினார்கள்.
தமிழகத்தில் சிறந்து விளங்கும் பல தலைவர்கள், துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் போன்ற பலரும் அங்கு படித்தவர்களே.
80 ஆண்டுகள் கடந்த இப்பல்கலைக்கழகம் அண்மைக் காலமாகச் சீரழிவிற்கு ஆளாயிற்று. மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் போராட்டங்களை நடத்தினர். அவற்றின் விளைவாக, தமிழக அரசு தலையிட்டு அப்பல்கலைக்கழகத்தை அரசே ஏற்கும் சட்டத்திருத்தத்தை 2013-ஆம் ஆண்டு ஏப்ரலில் சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றியது.
முறைகேடுகளுக்குக் காரணமாக இருந்ததாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நீக்கப்பட்டார். பதிவாளர் தாமாகவே பதவி விலகினார். பல்கலைக் கழகத்தின் சிறப்பு அதிகாரியாக ஒருவரை அரசு நியமித்தது. அவருக்கு உதவியாக மேலும் சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள்.
அரசு, இப்பல்கலைக்கழகத்தை ஏற்று ஓராண்டு காலம் ஆனபோதிலும், நிலைமை சீர்திருந்தவில்லை. மீண்டும் போராட்டங்கள் வெடித்தன.
அரசு இதை ஏற்றபோது, அண்ணாமலை நகரைச் சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வியை அளிக்க வேண்டும் என்பதை உறுதிசெய்யும் வகையில் தற்போதைய அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என கல்வியமைச்சர் அறிவித்தார். ஆனால், இந்த நோக்கம் எந்த அளவிற்கு நிறைவேறியிருக்கிறது என்றுப் பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
அரசு இப்பல்கலைக்கழக நிர்வாகத்தை ஏற்றுக்கொண்ட பிறகும், மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் பிற அரசுக் கல்லூரிகளில் உள்ளவாறு குறைக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, பொறியியல் படிப்பிற்கு அரசுக் கல்லூரியில் ஆண்டிற்கு ரூ.12 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை உள்ளது. ஆனால், இங்கு ரூ.75 ஆயிரம் முதல் 85 ஆயிரம் வரை உள்ளது. மருத்துவப் படிப்பிற்கு அரசுக் கல்லூரிகளில் ரூ.15 ஆயிரம் கட்டணம்.
ஆனால், இங்கு ரூ.5.5 இலட்சம் வசூலிக்கப்படுகிறது. கலை - அறிவியல் படிப்புகளுக்கும் கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது.
விடுதிகளில் அறைக்கு 10 முதல் 12 பேர் வரை மாணவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். உணவு வழங்குவது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அறைக்கும் உணவுக்கும் மாணவர்கள் ரூ.5 ஆயிரம் வரை மாதந்தோறும் கொடுக்கவேண்டியுள்ளது.
அரசாணை (நிலை) எண்.6, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை: 9-1-2012 தேதியிட்ட அரசாணையின்படி, சிறுபான்மையினர் நிறுவனங்கள் உள்பட சுயநிதிக் கல்லூரி நிறுவனங்களில் அனைத்துவிதமான படிப்புகளிலும் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மாணவ - மாணவியருக்கான கட்டணங்களை அரசே தருகிறது.
அரசு நியமித்த சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டணக் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணங்களை மாணவர்களுக்கு வழங்க அரசு ஆணையிட்டது. ஆண்டுக்கு ரூபாய் 2 இலட்சத்திற்குக் குறைவான வருமானம் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு மட்டுமே இது வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் நல ஆணையர், கல்விஆண்டின் தொடக்கத்திலேயே கல்லூரிக் கல்வி இயக்ககத்திலிருந்து இத்தொகையைப் பெற்று, தனது நிர்வாகத்தில் உள்ள அனைத்து சுயநிதிக் கல்லூரிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதி திராவிட மாணவ - மாணவியரிடமிருந்து எந்தவிதமான கல்விக் கட்டணங்களையும் தொடர்புடைய சுயநிதி கல்வி நிறுவனங்கள் வசூலிக்கக் கூடாது.
அரசின் உத்தரவு இவ்வளவு தெளிவாக இருந்தும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இது பின்பற்றப்படுவது இல்லை. கல்வி உதவித் தொகை அந்தந்த ஆண்டு தரப்படாமல் கல்வி ஆண்டு முடிந்தபிறகு கொடுக்கப்படுகிறது.
அதுவரை மாணவர்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தாதவர்களுக்கு மிக அதிக தொகை அபராதமாக விதிக்கப்படுகிறது. கட்டணம் ஐந்தாயிரம் ரூபாய் என்றிருந்தால் அபாராதமும் ஐந்தாயிரம் ரூபாய் விதிக்கப்படுகிறது. இதைக் கட்டாதவர்கள் நீக்கப்படுகிறார்கள்.
இரண்டாண்டுகளாகப் பட்டமளிப்பு விழாவும், மாணவர்களின் வேலைக்கான வளாக நேர்காணலும் நடைபெறவில்லை. இந்தக் குறைகளை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மிகக்கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டார்கள்.
ஆசிரியர்கள், அலுவலர்கள் பிரச்னையும் தீராமல் உள்ளது. இங்கு 12,500 பேர் வேலை பார்க்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் வரைமுறையில்லாமல் ஏராளமான பேர் சேர்க்கப்பட்டார்கள்.
அண்மையில், இவ்வாறு சேர்க்கப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களில் 6 பேர் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருக்கிறார்கள் என்ற திடுக்கிடும் உண்மை வெளிவந்து அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதுபோல எத்தனைபேர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பது ஆராயப்பட வேண்டும். இதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையில் படித்து உரிய தகுதிகளைப் பெற்று வேலையில் சேர்ந்திருக்கிற பேராசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோர் குறித்துக் கவனமாக செயல்படவேண்டும். பல ஆண்டு காலம் வேலை பார்த்தவர்களுக்குப் பணிப் பாதுகாப்பு இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமானவர்கள் இருந்தால் அரசு கல்லூரிகளில் காலியாகும் இடங்களில் அவர்களை நியமிக்க வேண்டும்.
பல ஆண்டு காலமாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருபவர்கள் நிரந்தரம் செய்யப்படவேண்டும். புதிதாக ஆள்களை நியமிக்கக்கூடாது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தை அரசே ஏற்றுக்கொண்டதைப்போல, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அங்கு உள்ள மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை ஆகியவற்றையும் அரசு ஏற்க வேண்டும். அதற்கும் பல்கலைக்கழகத்திற்கும் தொடர்பில்லை என்று கூறுவது சரியல்ல.
சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழை மாணவர்கள் படிப்பதற்கும், ஏழை நோயாளிகள் உரிய மருத்துவ வசதி பெறுவதற்கும் உதவும் வகையில் இதைச் செய்ய வேண்டும்.
அரசு அதிகாரிகள் பொறுப்பில் இப்பல்கலைக்கழகம் ஒப்படைக்கப்பட்டிருப்பதற்கு காலவரை நிர்ணயிக்க வேண்டும். சிறந்த கல்வியாளர்கள் பொறுப்பில் இப்பல்கலைக்கழகம் கொண்டுவரப்பட வேண்டும்.
நெடிய வரலாறு கொண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொலிவும் பெருமையும் குன்றாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த அறிவு விளக்கு அணையாமல் காக்க வேண்டிய கடமை அரசுக்கும் மக்களுக்கும் உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...