வேளாண் வளர்ச்சி; நாட்டின் வளர்ச்சி
ஒரு நாடு எல்லா துறைகளிலும் வளர்ச்சி அடைந்தாலும், உணவுக்காக அன்னிய நாட்டிடம் கையேந்தி நின்றால் அது நாட்டின்


ஒரு நாடு எல்லா துறைகளிலும் வளர்ச்சி அடைந்தாலும், உணவுக்காக அன்னிய நாட்டிடம் கையேந்தி நின்றால் அது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகாது. பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப வேளாண் உற்பத்தியின் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை.
அப்படியானால், அதற்குத் தேவையான தண்ணீரை முறையாக அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகிக்க வேண்டுமல்லவா? ஆனால், இங்கு நிலைமை எப்படி?
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 2 தடுப்பு அணைகளைக் கட்டி 48 டி.எம்.சி. தண்ணீரைச் சேமிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
இதேபோல அமராவதி நதியின் கிளை நதியான பாம்பாற்றின் குறுக்கே பட்டிசேரி என்ற இடத்தில் 2 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை கட்டவுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகமும், கேரளமும் மேற்கொள்ளும் இம்முயற்சியால் தமிழகத்துக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தண்ணீர் தடுக்கப்படுகிறது.
மாநில எல்லைகளில் பிரச்னை இதுவென்றால், இந்தியாவின் எல்லையில் சீனா வடிவில் உருவாகிறது பிரச்னை. பிரம்மபுத்திரா நதியில் சீனா கட்டத்தொடங்கியுள்ள அணைதான் அதற்குக் காரணம்.
இந்த அணை கட்டப்பட்டு நீரோட்டம் திருப்பிவிடப்பட்டால், பருவமழை இல்லாதபோது பிரம்மபுத்திரா நதிநீரை நம்பியே விவசாயம் செய்துவரும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும்.
ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதி அமைப்பு அறிக்கையின் படி, 2050-ஆம் ஆண்டு சீனாவின் மக்கள்தொகை 141 கோடியாகவும், இந்தியாவின் மக்கள் தொகை 161 கோடியாகவும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டியதைக் கருத்தில்கொண்டே பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே சீனா அணை கட்டி வருகிறது.
இந்தியாவில் பாயும் ஜீவநதிகளில் ஒன்றான பிரம்மபுத்திரா ஆறு இமயமலையில் உற்பத்தியாகி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் வழியாக இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பாய்ந்து கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் சீனா ரூ.9 ஆயிரம் கோடி செலவில் மிகப்பெரிய அணையைக் கட்டுகிறது.
இதன்மூலம் இங்கு 2 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள நீர்மின் நிலையம் அமைக்கவுள்ளதாகவும், இதனால் இந்தியாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் சீனா கூறி வருகிறது.
ஆனால், மின் உற்பத்திக்குப் பின்னர் அணையிலிருந்து வெளியேறி ஆற்றில் வரும் நீரோட்டத்தை சீனா தன் நாட்டின் உள்ளேயே பாயும் வகையில் மாற்றுப்பாதையில் திருப்பிவிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மேலும், இவ்வாறு திருப்பிவிடப்பட்டுள்ள நீரை சீனாவின் கோபி பாலைவனம் உள்பட வடமேற்கில் உள்ள பகுதிகளுக்கு கொண்டுசென்று, அங்குள்ள வறண்ட பகுதிகளை விளைநிலங்களாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஆக, பாலைவனத்தையே சோலைவனமாக்கி உற்பத்தியை அதிகரிக்க முயற்சி எடுத்து வரும் சீனாவிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நமது நாட்டு விவசாயிகளுக்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழில். கடந்த 50 ஆண்டுகளில் வேளாண் இடுபொருள்களின் விலை 100 சதவீதம் அதிகமாகி
யுள்ளது.
ஆனால், உற்பத்தி செய்யும் வேளாண் பொருள்களின் விலை 10 மடங்குதான் அதிகமாகியுள்ளது. எனவே, விவசாயத்தில் போதிய வருவாய் இல்லாமை, இயற்கைச் சீற்றம் போன்றவற்றால் விவசாயிகள் வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள்.
9-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1997-2002) வேளாண் வளர்ச்சி விகிதம் 2.50 சதவீதமாக இருந்தது.
இது 10-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (2002-2007) 2.47 சதவீதமாகவும், 11-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (2007-2012) 2.20 சதவீதமாகவும் குறைந்துள்ளது. 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 4 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாட்டின் வேளாண் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டிய கட்டத்தில் நாம் உள்ளோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...