வாழ்ந்திடத்தானே வாழ்க்கை?
அண்மைக் காலமாக பத்திரிகைகளில் கந்துவட்டிக் கொடுமையால் குடும்பமே தற்கொலை,காதலுக்கு எதிர்ப்பு இளைஞன் தற்கொலை, தேர்வில் தோல்வி மாணவி தற்கொலை, கடன் தொல்லை தாளாமல் விவசாயி தற்கொலை இவ்வாறு செய்திகள் வாராத நாள் உண்டா?


அண்மைக் காலமாக பத்திரிகைகளில் கந்துவட்டிக் கொடுமையால் குடும்பமே தற்கொலை,காதலுக்கு எதிர்ப்பு இளைஞன் தற்கொலை, தேர்வில் தோல்வி மாணவி தற்கொலை, கடன் தொல்லை தாளாமல் விவசாயி தற்கொலை இவ்வாறு செய்திகள் வாராத நாள் உண்டா?
தற்கொலை செய்து கொள்ளும் போக்கு படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடு இல்லாமல், நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் எங்கும் நடப்பது சர்வசாதாரணமாகிவிட்டது. இதனைப் பற்றி சமுதாயம் கவலைப்பட வேண்டாமா? இந்த நிலையை மாற்றியமைக்க வழியேதும் கிடையாதா?
"அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது" என்றார் ஒüவைப் பிராட்டி. அப்படிக் கிடைத்த அரிய வாழ்க்கையை உதறி எறியலாமா? ஒவ்வொருவரும் வாழ்ந்து காட்ட வேண்டாமா? நாமும் வாழ்ந்து மற்றவர்கள் வாழ உதவுவதுமே நல்வாழ்க்கை.
ஆனால் நம்மை நம்பியிருப்பவர்களை ஏமாற்றிவிட்டு நாம் நமது வாழ்க்கையை முடித்துக் கொள்வது கடைந்தெடுத்த சுயநலமாகும். எதிர்காலமே இல்லை என்று எண்ணி உயிரை மாய்த்துக் கொள்வது அறியாமையாகும். இது தெரிந்திருந்தும் அவசரமாகவும், ஆத்திரமாகவும் தற்கொலையை தேடிப்போகிறவர்களின் தொகை குறையவில்லையே?
கல்வி என்பது "படிப்பது" என்று பொருளாகும். படிப்பது என்பது புத்தகங்களைப் படிப்பது மட்டுமல்ல, வாழ்க்கையைப் படிப்பதும்தான். வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதே வெற்றிகரமான வாழ்க்கையாகும். இவ்வாறு வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்கள் சாதனைக்குரியவர்கள்: சமுதாயத்தின் நன்றிக்கு உரியவர்கள்; வாழ்த்துக்கும் உரியவர்கள்.
சில மாதங்களுக்கு முன்,தருமபுரியில் கலப்புத் திருமணம் செய்து கொண்ட ஒரு இளைஞன், தன்னைப் பெற்றுவளர்த்த பெற்றோரைப் பற்றியும், தன்னைக் காதலித்து மணந்து கொண்ட பெண்ணைப் பற்றியும் கவலைப்படாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால் யாருக்காவது பயன் உண்டா? மாறாக, அனைவருக்கும் இழப்புதான். இதனை இனிமேல் அவருக்கு எடுத்துக் கூற முடியுமா?
கந்து வட்டிக்காரர்களை எதிர்த்துப் போராடுவதன் மூலமே அந்தச் சமூக விரோதச் செயலை ஒழிக்க முடியும். ஆனால் நமது மக்களுக்குப் போதுமான பலமும், ஆதரவும் இல்லாமையால் கோழைகளைப் போல தற்கொலையை நாடுகிறார்கள். இதனால் அந்தச் சமூக விரோதிகளுக்கே வசதியாகிறது. வட்டிக்கு வட்டி வாங்கி ஏழைகளை வதைக்கும் இந்தத் தொழில் முடிவுக்கு வராமல் தொடரவும் வழி செய்கிறது.
காவல்துறையைக் கேட்டால், "யாராவது எங்களிடம் வந்து முறையிட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்' என்று கூறிவிடுகின்றனர். பல இடங்களில் இந்தச் சமூக விரோத கும்பலும், காவல்துறையினருமே கூட்டாகச் செயல்படுகின்றனர் என்று புகாரும் கூறுகின்றனர்.
தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவு என்பனவற்றால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளுவதற்கு பெரிதும் பெற்றோரே காரணமாக இருக்கின்றனர். முடிந்து போனவற்றைப் பெரிதாக எடுத்துக் கொண்டு அவர்கள் மனம் புண்படும்படி பேசுவதனால் மனம் உடைந்து போகின்றனர். அறியாப் பருவம் அவர்களை மரணத்துக்கு இட்டுச் செல்கிறது. அதன்பின் "குய்யோ, முறையோ' என்று பெற்றோர் அழுது அரற்றுவதால் பயன் என்ன?
"மேழிச் செல்வம் கோழைபடாது' என்று கூறுவார்கள். ஆனால் வீரமும், துணிவும் மிக்க விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்வது, நாட்டின் தன்மானத்துக்கு விடப்படும் அறைகூவலாகும். தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி மிகுந்த வேதனையானது.
தற்கொலை செய்து கொள்ளுகிறவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே அசிங்கப்படுத்திக் கொள்ளுகிறார்கள். இதனை அரசும், காவல்துறையும், நீதித்துறையும் கண்காணிக்க வேண்டும். சட்டமும். நீதியும் சரியான பாதையில் செல்லுமானால் சமுதாயமும் சரியான பாதையில் போவதை உறுதி செய்ய முடியும். எல்லாம் நடந்து முடிந்த பிறகே நாம் அதைப் பற்றி யோசிக்கிறோம். குதிரைகள் எல்லாம் ஓடிப் போன பிறகு கொட்டடியை மூடுவதால் என்ன பயன்?
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவன் நாவுக்கரசு, தன் உடன் படித்த மாணவனால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பின்புதான் "ராகிங்" சட்டம் கொண்டு வரப்பட்டது.சென்னை மாணவி சரிகாஷா, சில இளைஞர்களின் கிண்டல் கேலிக்கு ஆளாகி சாலையில் தள்ளப்பட்டு கொல்லப்பட்ட பின்தான் "ஈவ் டீ சிங்" சட்டம் வந்தது.
அநியாய வட்டி, கந்து வட்டிக்காரர்களின் மிரட்டலால் புகழ்பெற்ற பட அதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பிறகுதான் கந்து வட்டி ஒழிப்புச் சட்டம்-2003, தமிழ்நாடு சட்டப் பேரவையில் அவசரச் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
திருச்சி மாவட்டம் வளையப்பட்டியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், சென்னையில் மத்திய அரசு ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் அக்கிராமப் பஞ்சாயத்தார், தங்கள் பேச்சுக்குக் கட்டுப்படாத அப்பெண்மணியை காலை முதல், மாலை வரை அவர்கள் முன் மண்டியிட்டு வணங்க வேண்டும் என்றனர். அத்துடன் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.
இதனை எதிர்த்து அந்தப் பெண்மணி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி,கட்டப் பஞ்சாயத்தைப் பற்றிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதன் பிறகுதான் அரசின் கவனமும், காவல்துறையின் கவனமும் அதன் பக்கம் திரும்பியது. கட்டப்பஞ்சாயத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை நாடும் உணர்ந்தது.
காரைக்காலைச் சேர்ந்த இளம்பெண் வினோதினி,தன்னை மணந்து கொள்ள மறுத்துவிட்ட காரணத்துக்காக "ஆசிட் வீசி முகம் மட்டுமல்ல, அவளது வாழ்க்கையே சிதைக்கப்பட்டது. மகளைப் பிரிந்த துயரம் தாங்காமல் தாயும் தற்கொலை செய்து கொண்டார். அந்தக் குடும்பமே உருக்குலைந்து போய்விட்டது.
இவ்வாறு தனிநபர்கள் மட்டுமல்லாமல், தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள், மனித வெடிகுண்டுகளாக மாறுவதும், ஆங்காங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மொழி, இனம், அரசியல் போன்றவற்றுக்காக தங்களை பலியிட்டுக் கொள்வதை மனிதநேயம் கொண்டவர்களால் வரவேற்க இயலாது.
தீபாவளிக் கொண்டாட்டத்துக்காக பட்டாசுகள் தயாரிக்கப்பட்ட போது கும்பகோணம் அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். இது தீபாவளிக்கு முதல்நாள் நடைபெற்றுள்ளது.
இதுபோல அடிக்கடி பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. யாரோ சிலரது மகிழ்ச்சிக்காக சக மனிதர்களின் வாழ்வு பாழாவதைப் பற்றி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். இந்தப் பட்டாசுகளால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. மக்களின் பணமும் பாழாகிறது. காசும் கரியாகிறது. பட்டாசு இல்லாத பண்டிகை வருமானால் பலரது சாவுகளைத் தடுக்க முடியும்.
இந்தத் தீபாவளிக்கு தமிழகத்தின் மதுக்கடைகளில் ஒரே நாளில் ரூ.150 கோடி அளவுக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. அந்த 3 தினங்களில் மது விற்பனை ரூ. 300 கோடியையும் தாண்டியுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. இது தமிழ்நாட்டிற்குப் பெருமை தரும் செய்தியல்ல. மனிதனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் மரணிக்கச் செய்யும் நடவடிக்கையாகும். இதுவும் ஒருவகை தற்கொலையே.
கொலைக்கும், தற்கொலைக்கும் மிகச் சிறிய வேறுபாடுதான். அடுத்தவர்களின் உயிரைப் பறிப்பது கொலையாகும். தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக் கொள்வது தற்கொலையாகும். இரண்டு வகையிலுமே மனித உயிர் பறிக்கப்படுகிறது. வாழப் பிறந்தவர்களின் உயிரைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.
அதனால்தான் உலகத்திலுள்ள பல நாடுகளில் மரண தண்டனை சட்டப்படியோ, நடைமுறைப்படியோ ஒழிக்கப்பட்டுவிட்டது. மரண தண்டனையை சட்டப் புத்தகத்திலும், நடைமுறையிலும் வைத்திருக்கும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. "அகிம்சையின் தந்தை காந்தியார் பிறந்த நாட்டில் இது தேவைதானா? என்ற கேள்வியை அறிவாளிகள் எழுப்பிக் கொண்டேயிருக்கின்றனர். விடைதான் இன்றுவரை கிடைக்கவில்லை.
நீதியும், சட்டமும் கூறுவது போல "பல குற்றவாளிகள் தப்பிக்க நேர்ந்தாலும் பரவாயில்லை. ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது' என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நிரபராதியான கோவலனைத் தண்டித்துவிட்டு, பாண்டியன் நெடுஞ்செழியன் தனது தவறினை உணர்ந்து தன்னையே மாய்த்துக் கொண்டநிலை ஏற்பட்டுவிடக் கூடாது அல்லவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...