ஆங்கிலவழிக் கல்வியை அரசே தரலாம்!
எதிர்கால இந்தியாவை வளமாக்க மாணவர்களின் பங்களிப்பு முக்கியம். அந்த வகையில் சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு.


எதிர்கால இந்தியாவை வளமாக்க மாணவர்களின் பங்களிப்பு முக்கியம். அந்த வகையில் சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு.
ஆசிரியர் பணி அறப்பணி. மாணவர்களின் எண்ண ஓட்டத்தில் பயணித்து, அவர்களை தன்வசப்படுத்தி பாடங்களை அவர்கள் மனதில் பதிய வைப்பதுடன் சந்தேகங்களை உடனடியாகத் தீர்ப்பதிலும், நல்வழிப்படுத்துவதிலும் ஆசிரியர் பணி அளப்பரியது.
திறமையான ஆசிரியரை மாணவர்களுக்கு தர வேண்டும் எனும் நோக்கில் தகுதித் தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பது வரவேற்கத்தக்கது.
தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தகுதியைப் பற்றி பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. இருந்தும் தனியார் ஆங்கிலப் பள்ளிகளை பெற்றோர்கள் நாடக் காரணம்தான் என்ன?
"ஆங்கில மோகம்' என அதைக் கொச்சைப்படுத்தி விடக்கூடாது. ஏனென்றால், மேல்நிலைப் பள்ளி கல்வியை முடித்து, கல்லூரிக் கல்வியிலிருந்து ஆங்கில பாடதிட்டமே நடைமுறையில் உள்ளது. வேலைக்கான நேர்முகத் தேர்வுகளும் ஆங்கிலத்தில்தான் நடத்தப்படுகின்றன. பல புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் குறித்த வழிகாட்டிப் புத்தகங்கள் எல்லாமே ஆங்கிலத்தில்தான் உள்ளன.
தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் புலமை பெறவேண்டும் என்பதைவிட, ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் எல்லா பெற்றோர்களும் எண்ணுகின்றனர். எனவேதான் ஆங்கிலவழிக் கல்வியை நாட வேண்டியுள்ளது. இதைத் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொடுத்து ஓராண்டு "சீர்' செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது.
இந்நிலையில் தங்களின் குழந்தைகளின் நலனுக்காக ஆண்டுதோறும் தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு "சீர்' செய்ய வேண்டிய நிலைக்கு நடுத்தரக் குடும்பத்துப் பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தனியார் ஆங்கிலப் பள்ளிகளைக் கட்டுப்படுத்தத்தான் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறினாலும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழி பாடதிட்டங்களே செயல்படுத்தப்படுகின்றன.
ஒரு சில அரசுப் பள்ளிகளில்தான் ஆங்கில வழிப் பாடதிட்டம் நடத்தப்படுகிறது.
திறமையான ஆசிரியர்களைக் கண்டறிந்து பணியமர்த்தும் இவ்வேளையில். தமிழை வளர்ப்போம் எனக் கூறி தமிழனின் வளர்ச்சிக்குத் தடைபோடும் போலி முகமூடியை அணிதல் கூடாது.
பல தமிழறிஞர்கள், ஆங்கிலத்தில் வெளியான நல்ல படைப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளனர். அவர்களுக்கு நல்ல ஆங்கில அறிவு இருந்ததால்தானே இது சாத்தியமாயிற்று? அதற்காக அவர்களைத் தமிழ்ப் பற்று இல்லாதவர்கள் எனக் கூறிவிட முடியுமா?
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்களே ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
ஆங்கிலவழிக் கல்வி எட்டாக் கல்வியல்ல. ஏழைக் குழந்தைகளும் ஆங்கிலவழிக் கல்வி பயில வாய்ப்பு ஏற்படுத்தித்தரும் வகையில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைத் தீவிரப்படுத்த வேண்டும்.
இதனால் தமிழ் தாழ்ந்துவிடாது. ஏனெனில் தமிழும் ஒரு மொழிப் பாடமாக இருக்கத்தான் போகிறது.
தமிழ் ரத்தத்தில் கலந்தது. குழந்தை வளர வளர ரத்தம் ஊற்றெடுப்பது போல தமிழ் அறிவும் தானாகவே வளரும். அதற்கு அடித்தளம் இடும் வகையில் வீட்டில் உறவு முறைகளை அழைக்கும்போதும், கடிதங்கள் எழுதும்போதும், கதைகள் கூறும்போதும் தமிழையே பயன்படுத்தலாம்.
திறமையான ஆசிரியர்களுடன், தமிழுடன் கூடிய ஆங்கில வழிக் கல்வி அனைத்து அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் நிலை வந்தால், தனியார் பள்ளிகளால் வணிகமயக்கப்பட்டுள்ள கல்விக்கு விடுதலை கிடைக்கும்.
வளமான இந்தியாவை உருவாக்குவதில் தமிழக மாணவர்களின் பங்களிப்பும் உறுதிப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...