பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மனிதநேயம் மட்டுமே மாமருந்து

சித்திரை முழுநிலவு அன்று மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் இளைஞர் பெருவிழா நடைபெற்றது. விழா முடிந்து ஊர் திரும்பும்போது மரக்காணம் என்னும் இடத்தில் பெரும் ஜாதிக் கலவரம் ஏற்பட்டது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:40 am

உதயை மு. வீரையன்

சித்திரை முழுநிலவு அன்று மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் இளைஞர் பெருவிழா நடைபெற்றது. விழா முடிந்து ஊர் திரும்பும்போது மரக்காணம் என்னும் இடத்தில் பெரும் ஜாதிக் கலவரம் ஏற்பட்டது. அவ்வழியே வந்த அரசுப் பேருந்துகளும் கொளுத்தப்பட்டன. குடிசை வீடுகள் எரிக்கப்பட்டன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். ""ஜாதிக் கலவரத்தைத் தூண்டுவோர், பொது அமைதிக்கு ஊறு விளைவிப்போர் மீது தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அவர் எச்சரித்துள்ளார். அவ்வாறே காவல்துறை மூலம் நடவடிக்கையும் எடுத்துள்ளார்.

சமுதாய நல்லிணக்கத்துக்கு எதிராக ஜாதி மோதல்களை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. மனிதநேயம் மட்டும்தான் சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் உருவாக்குமே தவிர, ஜாதி வெறி கலவரங்களையே பெருக்கும்; சண்டை, சச்சரவுகளை வளர்க்கும்; பொதுச் சொத்துகளை அழிக்கும்; சமுதாய உறவுகளைச் சீரழிக்கும்.

நாம் நாகரிகமான குடிமக்கள் என்பதை எப்படி நிரூபிப்பது? சகிப்புத்தன்மை மூலமும், சக மனிதர்களை நேசிப்பதன் மூலமும் மட்டுமே அடையாளப்படுத்த முடியும். அத்தகைய நல்ல, பொறுப்புள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

இரண்டு கைகளும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை உருவாகும்; ஒரு கையால் மட்டும் ஓசை ஏற்படாது. இரண்டு கண்களும் சேர்ந்து பார்க்கும்போதுதான் ஒரு காட்சியை ஒழுங்காகப் பார்க்க முடியும். இது எல்லாருக்கும் தெரிந்ததுதான். தெரிந்தும் தெரியாததுபோல நடப்பவர்களை என்ன செய்ய முடியும்?

உண்மைகளையும், உபதேசங்களையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் தலைவர்கள் இல்லை என்பதே எல்லாக் குழப்பங்களுக்கும் காரணமாகிறது. இங்கே மக்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்; அவர்களை வழிநடத்தும் சமுதாயத் தலைவர்கள் சரியாக இல்லை. சுயநலமும், ஒரு சார்பான தீர்மானங்களும் புதிய சமுதாயத்தை, புதிய தேசத்தை உருவாக்க உதவாது.

நமது நாட்டில் நல்ல தலைவர்கள் குறைந்துகொண்டே போகின்றனர். நல்ல தலைவர்கள் அடுத்த தலைமுறையைப் பற்றியே கவலைப்படுவர். அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைப் பற்றியே கவலைப்படுகின்றனர். தலைவர்களே தேசத்தின் முன்னேற்றத்தைப்பற்றிக் கவலைப்படுவர்; அரசியல்வாதிகள் தம் குடும்பத்தைப் பற்றியும், தம் கட்சியைப் பற்றி மட்டுமே கவலைப்படுவர். இங்கே வரும் கலவரங்களுக்கெல்லாம் இத்தகைய அரசியல்வாதிகளே காரணங்கள் என்பதை மக்கள் தெரிந்துகொண்டால் நல்லது.

உலகத்தில் மனித இனம் உருவான காலத்தில் அனைவரும் ஒன்றுபட்டு அன்புடன் வாழ்ந்தனர்; இடையில் வந்த ஜாதி, சமய, நிற, இனப் பிரிவினைகள் மனித இனத்தையே கூறுபடுத்திவிட்டது. இது கண்டு வருந்தி வேதனைப்பட்ட ஞானியரும், மகான்களும் செய்யாத உபதேசங்களா?

இராஜாராம் மோகன்ராய் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் சமுதாய மேம்பாட்டுக்காகப் பெரும் பாடுபட்டனர். கேரளத்தில் நாராயண குரு, ஆந்திரத்தில் கோரா, தமிழ்நாட்டில் பெரியார் ஈ.வெ.ரா. என எண்ணற்ற மாமனிதர்கள் ஜாதி ஒழிப்புக்காகக் குரல் கொடுத்தனர்; கொடி பிடித்தனர்; போராட்டங்கள் நடத்தினர்; மராட்டிய மண்ணில் பிறந்த அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடியதையும், வாதாடியதையும் வரலாறு மறக்காது.

தமிழ்நாட்டில் அறநூல்களின் பங்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. "ஜாதி இரண்டொழிய வேறில்லை' என்றார் ஒளவைப் பிராட்டி. இட்டார் பெரியோர், இடாதோர் இழிகுலத்தோர் என்றார். இதனை அடுத்து திருமூலர், "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்று முழங்கினார்.

"ஜாதிகளிலே மதங்களிலே சமய நெறிகளிலே அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே' என்று வள்ளலார் பாடினார். இக்காலத்தின் இணையற்ற புலவர் பாரதி, "ஜாதிகள் இல்லையடி பாப்பா-குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்' என்றார்.

"ஜாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே' என்று வருந்தினார் பாரதிதாசனார். எந்த மாற்றமும் ஏற்படவில்லையே!

நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைச் சீர்குலைக்கும் வகையில் பேசும் அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

"பிரவாசி பலாய் சங்கடன்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அரசியல் சட்டத்துக்குப் புறம்பாகவும், ஜனநாயகக் கட்டமைப்பைச் சீர்குலைக்கும் வகையிலும் பேசுவதைக் கட்டுப்படுத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை' கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் அடிக்கடி பேசிவந்தாலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சட்டத்துக்குப் புறம்பாகப் பேசியதாக ஆந்திரத்தைச் சேர்ந்த அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேதுல் முஸ்லிமின் கட்சித் தலைவர் அக்பரூதீன் ஒவைசி கைது செய்யப்பட்டார். ஆனால் ஜாமீனில் வெளிவந்த அவர் மீண்டும் அதுபோலவே பேசி வருவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவின் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் கவலையளிப்பதாக உள்ளது என்றும், வெறுப்பூட்டும் வகையில் பேசுவதைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற பேச்சு நாட்டின் நலனுக்கு நல்லதல்ல என்றும் அது தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே இப்போது தமிழ்நாட்டிலும் ஆங்காங்கு அரசியல்வாதிகள் மற்றும் ஜாதித்தலைவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. மாமல்லபுரத்தில் கடந்த 25-ஆம் நாள் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழாவின்போது, உயர் நீதிமன்றம் வெளியிட்ட நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என்று சட்டப் பேரவையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

விழாவுக்குச் சென்றவர்கள் மரக்காணம் உள்ளிட்ட பல இடங்களில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதோடு, பொதுச் சொத்துகளுக்கும், தனியார் சொத்துகளுக்கும் பலத்த சேதத்தை விளைவித்தனர். பிற கட்சியினரின் கொடிக்கம்பங்களை உடைத்தும், தேசியத் தலைவர்களின் படங்களின் முகத்தில் சாயம் பூசியும் ஜாதி மோதலைத் தூண்டும் விதத்தில் நடந்துகொண்டனர்.

பல்வேறு அரசியல் மற்றும் ஜாதிரீதியான அமைப்புகள் சில காரணங்களுக்காக தங்கள் பலத்தைக் காட்டும் விதத்தில் ஊர்வலம், பொதுக்கூட்டம், மாநாடு, நினைவுதின நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தும்போது அந்த நிகழ்ச்சிகளுக்குப் பெருமளவில் வாகனங்களில் வந்து செல்கின்றனர். குறிப்பிட்ட சாலை வழியே வந்துசெல்லும்போது காவல்துறையினர் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாமல், திறந்த வாகனங்களில் ஒழுங்கீனமான முறையில் நடந்துகொள்ளும்போதும் வழிநெடுக சாலையோர உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தகராறுகளில் ஈடுபடும்போதும் மாற்றுக்கட்சி மற்றும் பிற அமைப்புகளின் கொடி, மற்றும் அடையாளச் சின்னங்களைச் சேதப்படுத்தும்போதும் அவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது காவல்துறையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்துவருகிறது.

அதிகமான வாகனங்களில் செல்லும்போது காவல்துறையினர் அறிவுரைகளுக்கு அவர்கள் செவிசாய்ப்பதில்லை. இதுபோன்ற விழாக்களுக்கு காவல்துறையினர் அனுமதியளிக்க மறுத்தால், விழா அமைப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகி அங்கே, ""சட்டம், ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் நடக்கமாட்டோம், காவல்துறையினருக்குக் கட்டுப்படுவோம், அமைதிக்கு ஊறுவிளைவிக்க மாட்டோம்'' எனப் பல்வேறு உத்தரவாதங்களை உயர் நீதிமன்றம் முன்பு அளிக்கின்றனர்.

உயர்நீதிமன்றமும் அவர்களின் உத்தரவாதங்களை ஏற்றுக்கொண்டு அவர்களின் பின்னணியைப் புரிந்துகொள்ளாமல் கடந்த காலங்களில் இதுபோன்ற விழா எப்படி நடத்தப்பட்டது என்பதைப் பார்க்காமல் சில நிபந்தனைகளின் அடிப்படையில் விழாவுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

ஆனால் விழா நடைபெறும்போது சென்னை உயர் நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளையும் அவர்கள் கடைப்பிடிப்பதில்லை. இதுவே இதுபோன்ற கூட்டங்களின்போது பிரச்னைகள் ஏற்படக் காரணமாகிறது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

"வன்முறையும் அச்சமும் இல்லாத ஒரு வாழ்க்கையைக் கொடுக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்' என்று உலகத்துக்குக் கூறினார் நெல்சன் மண்டேலா. வன்முறைக்கு எத்தனையோ முகங்கள் உண்டு, என்றாலும் ஜாதி, சமயப்பூசல்களும் அந்த கோர முகங்களில் அடங்கும். இந்த முகங்களை மறைப்பதற்கு அணியப்படும் அரசியல் முகமூடிகளும் ஏராளம்.

வன்முறையைத் தூண்டுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதைத் தவறு என்று கூற முடியாது. அதிலும் ஜாதி மோதல்கள் ஏற்படாமல் தடுத்திட அரசுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதையே சமூக நல்லிணக்கம் நாடுவோர் விரும்புவர். ஆனால் அதுவே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிடாது. எதிரான விளைவுகளை ஏற்படுத்திவிடவும் கூடும்.

நாம் யாரும் விருப்பத்தோடு ஒரு ஜாதியிலோ மதத்திலோ இனத்திலோ பிறப்பதில்லை. பிறந்ததினால் நம் மீது அவை வந்து ஒட்டிக்கொண்டன. இது நமது உயர்வுக்கும் தாழ்வுக்கும் எப்படிக் காரணமாக அமைய முடியும்? இதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

காற்றையும் உணர்ச்சிகளையும் அடக்குமுறையால் தடுத்துவிட இயலுமா? ஜாதி, சமயப் பூசல்களும் அப்படியே. அடக்குமுறைகளால் ஏற்படும் அமைதி தாற்காலிகமானவையே.சட்டம் ஒழுங்கு பிரச்னையால் ஏற்படும் சமாதானம் நீறுபூத்த நெருப்பாக புகைந்துகொண்டே இருக்கும். ஒரு வாய்ப்புக்காகக் காத்திருக்கும்; வாய்ப்பு கிடைக்கும்போதுஒட்டுமொத்தமாகப் பற்றி எரியும். அடிக்கடி ஜாதி, சமய மோதல்கள் ஏற்படுவதற்குக் காரணம் இதுதான்.

""உங்களிடம் அன்பு இருக்கிறதா? இருந்தால் உங்களால் ஆகாதது ஒன்றும் இல்லை. நீங்கள் தன்னலத்தைத் துறந்தவர்களா? அப்படியானால் உங்களை எதிர்க்கும் சக்தி ஒன்றுமில்லை'' என்றார் சுவாமி விவேகானந்தர். தன்னலத்தைத் துறந்து அன்போடு பிரச்னைகளை அணுகினால் தீர்வுகாண முடியும். அதற்கு ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ சமுதாயத்தை நோக்கிய பயணமே உதவும்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளவை வெறும் சலுகைகள் அல்ல; அவர்களுக்குக் காலம்காலமாக மறுக்கப்பட்டிருந்த உரிமைகளின் மிச்ச மீதிகள் என்பதை நாம் உணர வேண்டும்!

(கட்டுரையாளர்:

பணி ஓய்வுபெற்ற ஆசிரியர்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.