"காதல் பயங்கரவாதிகள்'
காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் ஓர் அழகான உணர்வு. காதல் என்பது இரு மனங்கள் ஒன்றை ஒன்று நேசிக்கும் விஷயமாகும். காதலால் பலர் ராஜ்யங்களை இழந்துள்ளனர்.


காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் ஓர் அழகான உணர்வு. காதல் என்பது இரு மனங்கள் ஒன்றை ஒன்று நேசிக்கும் விஷயமாகும். காதலால் பலர் ராஜ்யங்களை இழந்துள்ளனர். சிலர் புதிய ராஜ்யங்களை நிலைநாட்டியுள்ளனர். காதல் பல சாதனைகளுக்கும், தோல்விகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது. ஆனால், எது எப்படி இருந்தாலும் காதல் உணர்வு என்பது ஒரு குறிப்பிட்ட வயதில் வந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.
காதலைப் பற்றி இவ்வளவும் சொன்னது, "காதல் பயங்கரவாதிகளை'ப் பற்றி சொல்வதற்காகத்தான்.
அதாவது, காதலை காதலிப்பதை விட்டுவிட்டு, காதலை மற்றவர்களிடம் திணிப்பது அல்லது அதனை சுவரொட்டி அடித்து ஒட்டுவதற்கு இணையான காரியங்களில் ஈடுபடுபவர்களைத்தான் "காதல் பயங்கரவாதிகள்' என்று அழைக்க வேண்டும்.
இப்போதைய காதலர்கள், காதலித்துவிட்ட ஒரு மகத்தான சாதனையைச் செய்ததற்காக ஆங்காங்கு கல்வெட்டுகளில் தங்களது பெயர்களைப் பொறித்து வருகின்றனர். இதனால் என்ன ஆகிவிட்டது என்று கேட்கலாம்.. ஆம்.. ஆகிவிட்டதுதான், நிறையவே ஆகிவிட்டது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சுற்றுலாப் பயணிகள் சென்று பார்ப்பது வழக்கம். அதுபோல அங்கு செல்லும் காதலர்கள், அவர்கள் அங்கு சென்று வந்ததற்கான அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, மிக முக்கியமான கல்வெட்டுகள் மீதும், சிற்பங்கள் மீதும், தங்களது பெயர்களைக் கூர்மையான கல் அல்லது ஆணி போன்ற ஏதேனும் ஒன்றைக் கொண்டு "பொறித்துவிட்டு' வருகிறார்கள்.
உலகப் புகழ்பெற்ற சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் ஏற்கெனவே காலத்தின் கோலத்தால் சிதிலமடைந்து காணப்படுகிறது. அதனை நம்மால் எந்த வகையிலும் புனரமைக்க முடியாது. அதை அதே நிலையில் பராமரிப்பதே கடினமான காரியமாகும். தற்போது சித்தன்னவாசல் குகை ஓவியங்களை "யுனெஸ்கோ' தனது கட்டுப்பாட்டில் எடுத்துப் பராமரித்து வருகிறது.
சித்தன்ன வாசல் பகுதிக்குச் செல்லும் வழியில், பல முக்கிய வரலாற்றுச் சாதனையாளர்களின் கல்லறைகள் அமைந்துள்ளன. அவற்றின் மீது நம் காதலர்கள் தங்களது கைவண்ணத்தைக் காட்டியுள்ளதால், தற்போது, பார்வையாளர்களின் அனுமதிக்கு மறுக்கப்பட்டு வேலி போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்ல, சித்தன்னவாசல் பகுதியில் உள்ள "சமணர் படுக்கை' என்பது வரலாற்றுச் சின்னமாகப் பராமரிக்கப்பட்டுவரும் இடம். அதன் உன்னதம் தெரிந்தவர்கள் நேரில் போய் பார்த்தால் மிகவும் நொந்து போய் இருப்பார்கள். அதற்குக் காரணம், சமணர் படுக்கை முழுவதும் காதலர்கள் தங்களது பெயர்களை எழுதி, காதல் சின்னங்களை வரைந்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால், தற்போது கம்பி வேலி அமைத்து, தொலைவில் இருந்தே சமணர் படுக்கையைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறது. இதனைப் பார்க்கும் இந்தியர்களை விட, வெளிநாட்டினர் என்ன நினைத்திருப்பார்கள்? இந்த அளவுக்குத்தான் ஒரு வரலாற்றுச் சின்னம் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்று எண்ண மாட்டார்களா?
அதுமட்டும் அல்லாமல், "ஆந்த்ரோபாலஜி' என்ற மானுடவியல் படிப்பை எடுத்து படித்து, அதில் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள், இதுபோன்ற கல்வெட்டுகளை ஆராயும் போது, அதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளின் வடிவம் புரியாமல் மிகவும் சிரமப்பட நேரிடுகிறது. சில சிற்பங்களின் நுணுக்கங்களை அறிய முடியாமல் வருந்துகின்றனர்; சமணர் படுக்கை போன்ற இடங்களில் அதன் வழுவழுப்புத் தன்மையைப்பற்றி ஆராயும்போது பல சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர்.
இதுபோல, பல வரலாற்றுப் பெருமைமிக்க இடங்களுக்கு வரும் காதலர்கள், அங்குள்ள தனிமை, வெளிச்சமின்மை, கேட்க ஆளில்லை என்ற சூழல் போன்றவற்றால் தவறான காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள். செஞ்சிக் கோட்டை போன்ற இடங்களுக்குக் குடும்பத்தோடு சுற்றுலா செல்பவர்கள், பல இடங்களில் "காணக் கிடைக்காத' இடங்களைப் பார்த்து ரசிப்பதோடு, "காணக்கூடாத காட்சிகளையும்' கண்டு வர நேரிடுகிறது.
இதனால், குழந்தைகளை அழைத்துக் கொண்டு செஞ்சிக் கோட்டை போன்ற இடங்களுக்குச் செல்பவர்கள், இரு குழுவாகப் பிரிந்து முதல் குழுவினர் ஓரிடத்துக்குச் சென்று அங்கு காதல் ஜோடிகளின் சேஷ்டைகள் ஏதும் இல்லை என்று உறுதியாகத் தெரிந்த பிறகு குழந்தைகள் அடங்கிய குழுவினரை வரவழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இணையத்தில், ஒரு சுற்றுலா தலத்தைப் பற்றிய கட்டுரையை பிரசுரித்ததும், அதில் வரும் கருத்துகளில் குறைந்தபட்சம் ஒன்றாவது, அங்கு காதலர்கள் செய்யும் தவறுகள் குறித்து புலம்பும் விதத்தில் இருக்கிறது.
பேருந்து, ரயில், கோயில் சுவர், பள்ளி, கல்லூரிகளின் சுற்றுச் சுவர், மரம் என எதையும் விட்டு வைக்காத "காதல் பயங்கரவாதிகள்', வரலாற்றுச் சின்னங்களையும் தாக்கி அழித்து வருகின்றனர். ஒரு கல்வெட்டு என்பது, பல காலங்களுக்கும் அழியாமல் இருந்து வரலாற்றை அடுத்து வரும் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வதற்காக அந்த காலத்திலேயே உருவாக்கப்பட்ட ஒரு நல்ல தகவல் தொடர்பு சாதனம். அதை நன்கு பராமரிப்பது நம்முடைய கடமை.
கடைசியாக ஒரு வார்த்தை, "காதலர்களே உலகின் முதல் காதல் ஜோடியும் நீங்கள் இல்லை, கடைசி ஜோடியும் நீங்கள் இல்லை; உங்களுடைய பெயர்களைப் பதிவு செய்வதற்காகவே திருமணப் பதிவாளர் அலுவலகம் காத்துக்கொண்டிருக்கிறது, வரலாற்றுச் சின்னங்களை விட்டுவையுங்கள்'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...