அடுத்து வருகிறது ஐ.பி.எல்....
"மதி'யை மயக்கி மனிதனின் செயல்பாடுகளை முடக்கும் எந்த ஒரு பொருளுமே "போதை'தான். அந்த வகையில்


"மதி'யை மயக்கி மனிதனின் செயல்பாடுகளை முடக்கும் எந்த ஒரு பொருளுமே "போதை'தான். அந்த வகையில் ஆண்டுக்கு 2 மாதங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆழ்ந்த மயக்கத்தில் ஆழ்த்தும் ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஏப்ரல் 2-இல் தொடங்க இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) எனும் தனியார் விளையாட்டு அமைப்பின் கிளை நிறுவனமான ஐ.பி.எல்., நாட்டின் பெரும் தொழில் அதிபர்களையும், சினிமா நட்சத்திரங்களையும் கூட்டுசேர்த்துக் கொண்டு, இந்திய மக்களின் "அதிதீவிர' கிரிக்கெட் ரசனையைப் பயன்படுத்தி கோடி கோடியாக பணத்தைத் தங்கள் பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொள்வதற்குத்தான் இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்.
இப்போது வெற்றிகரமாக 6-ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. கடந்த ஆண்டைவிட இப்போது விளம்பரங்கள் மூலம் மட்டும் 27 சதவீதம் அதிக வருமானம் ஈட்ட முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
நாட்டையும், நாட்டு மக்களையும் இந்த ஐ.பி.எல். எந்த அளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது என்பதைக் கடந்த 5 ஆண்டுகளாக ஐ.பி.எல். போட்டிகளுக்கு டிக்கெட் வாங்க ஸ்டேடிய வாசலில் ரசிகர்கள் காத்துக்கிடப்பதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.
ஐ.பி.எல். போட்டியின் தொடக்கத்தில் இருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள் அரங்கில் நடுநாயகமாக "சிக்கன உடையில்' நடனமாடும் "சியர் லீடர்ஸ்'. இவர்களுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு?
இப்பெண்கள் யாருக்கு, எந்த வகையான உற்சாகத்தை அளிக்கிறார்கள் என்பதைப் போட்டி ஏற்பாட்டாளர்கள் விளக்கினால்தான் புரியும்.
அடுத்து வருவது, கிரிக்கெட்டுடன் பிரிக்க முடியாக அம்சமாகி வரும் "ஸ்பாட் பிக்ஸிங்' என்கிற சூதாட்டம். கடந்த ஐ.பி.எல்.
போட்டியில் 5 வீரர்கள் "ஸ்பாட் பிக்ஸிங்' முறைகேட்டில் ஈடுபட்டதாகச் சிக்கினார்கள்.
ஏலத்தில் தாங்கள் எடுக்கப்பட்டதைவிட, அதிகமான அளவு பணத்தைத் தருகிறார்கள் என்று "ஸ்பாட் பிக்ஸிங்கில்' சிக்கிய வீரர் ஒருவரே கேமரா முன்பு ஒப்புக் கொண்டார்.
இவையெல்லாம் அடுத்த சில நாள்களிலேயே மாற்றப்பட்டு பின் மறைக்கப்பட்டும், மறக்கடிக்கப்பட்டும் விட்டன.
மைதானத்தில் வீரர்களின் விளையாட்டைவிட மைதானத்துக்கு வெளியே அணி உரிமையாளர்களும், வீரர்களும் அடிக்கும் கும்மாளம்தான் அதிகம். "கொல்கத்தா நைட் ரைடர்ஸ்' அணி உரிமையாளரான நடிகர் ஷாருக்கான், குடித்து விட்டு மைதானத்துக்கு வந்ததை மறக்க முடியாது.
நடிகைகள் புடைசூழ சுற்றும் உரிமையாளர்கள் தொடங்கி, ""ரேவ் பார்ட்டி''க்குச் சென்று போலீஸாரால் கைதான ஐ.பி.எல். வீரர்கள் வரை பலரையும் கடந்த ஆண்டு கண்டோம். இந்த ஆண்டும் இதுபோன்ற பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது.
இது தவிர ஐ.பி.எல். "தொடக்க விழா'வுக்கு உள்ளூர் நடிகைகள் முதல் உலகப் புகழ்பெற்ற மேற்கத்திய நாடுகளின் "பாப்' பாடகிகள் வரை பலதரப்பட்ட நட்சத்திரங்கள் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.
கிரிக்கெட் என்பது "விளையாட்டு' என்பதைத் தாண்டி, லாபகரமான "விற்பனைப் பொருள்' என்றாகிவிட்ட பிறகு இதுபோன்ற மலினமான விளம்பரங்கள் தேவைப்படுகின்றன.
ஐ.பி.எல். போட்டியை எதிர்த்து 2011-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில், "ஐ.பி.எல். போட்டிக்கு வரி விலக்கு அளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து அரசிடம் விளக்கம் கேட்டதும் உண்டு.
இந்தப் போட்டியை வைத்து தமிழகம் "பெருமைப்பட்டு' கொள்ளக்கூட ஒரு விஷயம் இருக்கிறது. ஐபிஎல் போட்டிக்கு நமது மண்ணில்தான் வரவேற்பு ஆண்டுக்கு ஆண்டு பெருகிக் கொண்டே செல்கிறதாம்!
எனினும், சென்னை ரசிகர்களுக்கு இந்த முறை கொஞ்சம் ஏமாற்றம்தான். ஏனெனில் கடந்த ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகைகளும், பாப் பாடகியும் வந்து மகிழ்வித்தனர்.
இந்த முறை அந்தத் தொடக்க நிகழ்ச்சி கொல்கத்தாவுக்கு சென்றுவிட்டதால், அவர்களுடைய கலைத் திறமையை நேரில் காணும் பாக்கியம் சென்னை ரசிகர்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது.
முன்பு, "இந்தியா' என்ற லேபிளை ஒட்டி, தேசப்பற்றுடன் கூடிய கிரிக்கெட் வியாபாரம் நடந்து வந்தது. இப்போது நகரவாரியாகப் பிரித்து சென்னை, மும்பை, ஹைதராபாத் என்று பெயரிட்டு மக்களிடையே நகரப் பற்றையும், மாநில அபிமானத்தையும் வளர்க்கிறார்கள்!
ஆயிரம் இருந்தாலும் தோனி அடிக்கும் ஒரு "ஹெலிகாப்டர் ஷாட்'டுக்கு முன்னால் இவையெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி, "பெரிய விசில்' போட பலரும் தயாராகவே உள்ளனர்.
எது, எப்படிப் போனால் என்ன? எனக்குத் தேவை சில மணிநேர பொழுதுபோக்கு, அது ஐ.பி.எல்.-லில் கிடைக்கிறது என்று மைதானத்திலும், டி.வி.க்கு முன்னாலும் தவம் கிடப்பவர்கள் இருக்கும்வரை ஐ.பி.எல். செழிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...