பூங்காவில் பூத்த புரட்சி...
புவியியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஐரோப்பிய - ஆசிய அடையாளங்களை ஒருங்கே கொண்டுள்ள நாடு துருக்கி.


புவியியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஐரோப்பிய - ஆசிய அடையாளங்களை ஒருங்கே கொண்டுள்ள நாடு துருக்கி. இரு கண்டங்களுக்கு இடையே பரந்து இருப்பதால் கிழக்கத்திய கலாசாரம், மேற்கத்திய நாகரிகம், கம்யூனிஸ வர்க்கப் போராட்டம், சிறுபான்மையினப் பிரச்னை, தாராளமயமாக்கல், முதலாளித்துவம், இஸ்லாமிய மதம் என வேறுபட்ட பல்வேறு உலகங்களை உள்ளடக்கிய "மதச்சார்பற்ற நாடாக' துருக்கி உள்ளது.
அந்நாட்டில் ஏற்பட்டுள்ள தீவிர அரசு எதிர்ப்புப் போராட்டங்கள் உலகின் கவனத்தை அதன் பக்கம் திருப்பியுள்ளது. இஸ்தான்புல் நகரில் உள்ள பூங்காவை அழித்து வணிக வளாகம் கட்டுவதற்கான அரசின் முயற்சிக்கு எதிரான சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஆர்ப்பாட்டத்தில் தொடங்கிய எதிர்ப்பு, இப்போது நாடு முழுவதுமான மக்கள் போராட்டமாக மாற வழிவகுத்துள்ளது.
பூங்காவில் அமர்ந்து போராடிய குழு மீது அரசு மேற்கொண்ட அடக்குமுறை, அதுவரை அமைதி காத்துவந்த மக்களின் கோபத்தைத் தூண்டுவதாக அமைந்தது. தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு என அடக்குமுறைகள் தொடர்ந்தாலும், வீதியில் இறங்கி போராடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இஸ்தான்புல்லின் தாஸ்கிம் சதுக்கம் ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்தின் மையக்களமானது.
தலைநகர் அங்காரா உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் போராட்டம் வலுக்கத் தொடங்கியுள்ளது.
""முன்யோசனை ஏதுமில்லாத உணர்ச்சிவசப்பட்ட வன்முறைக் குழுவினரின் போராட்டம்'' என்று துருக்கிக் கிளர்ச்சியை மேற்கத்திய சர்வதேச ஊடகங்கள் வர்ணித்தாலும், போராட்டத்தில் ஈடுபடுகிறவர்கள் டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட கருத்துகள் அவற்றுக்கு எதிராக அமைந்துள்ளது.
"முதலாளித்துவ ஆக்கிரமிப்புக்கும், துருக்கிப் பிரதமர் தயீப் எர்டோகனின் எதேச்சாதிகாரப் போக்குக்கும் எதிரான போராட்டம் இது' என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.
சுற்றுச்சூழல், மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள், கிராமப்புற ஏழை இளைஞர்கள், தனியார் துறைகளில் பணிபுரிவோர், நகர்ப்புற பெண்கள், நடுத்தர வருவாய் பிரிவினர், கல்வியாளர்கள் என போராட்டக் களத்தில் இறங்குவோரின் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கிறது. பிரதமரின் கொள்கைகளை எதிர்ப்பதற்கு அனைவருமே காரணங்களை வைத்துள்ளனர். ஜனநாயக வழியில் ஆட்சியைப் பிடித்துவிட்டு சர்வாதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளது அரசு என்ற குற்றச்சாட்டு பொதுவானதாகிவிட்டது.
2003-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராகத் தொடரும் எர்டோகன், துருக்கியின் வெற்றிகரமான தலைவராகவும், பொருளாதார சீர்திருத்தவாதியாகவும் அவரது ஆதரவாளர்களால் வர்ணிக்கப்படுகிறார்.
எர்டோகன் ஏற்படுத்தி வரும் வளர்ச்சி சாமானிய மக்களுக்கானது அல்ல, பெரும் முதலாளிகளுக்கானது என்பது போராட்டக்காரர்களின் ஒட்டுமொத்தக் குரலாக உள்ளது.
போராட்டக்காரர்களுக்கு எதிரான எர்டோகனின் கடுமையான நடவடிக்கைகளும், கருத்துகளும் அவர் மீதான அதிருப்தியை வளர்த்து வருகிறது.
பிரதமருக்கு எதிரான போராட்டத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஒடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளும் எழுந்து நிற்கப் போராடுகின்றன. இவை அனைத்துக்கும் மேலாக "குர்திஸ்தான்' தனிநாடு கேட்டுப் போராடும் குர்து சிறுபான்மை இனமக்களும் போராட்டக்காரர்களுடன் இணைந்துள்ளனர்.
நாடு முழுவதுமே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையில் உயிரிழப்புகள் ஏற்படத் தொடங்கிவிட்ட நிலையில், பிரச்னை ஆட்சியாளர்களின் கையைமீறிச் செல்லத் தொடங்கியுள்ளது.
""நேட்டோ''வில் அங்கம் வகிக்கும் நாடு என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் துருக்கி மக்கள் புரட்சியைக் கண்டுகொள்ளவில்லை. துருக்கி மக்கள் மீதான அரசின் அடக்குமுறை கவலையளிக்கிறது என்று கருத்துக் கூறிய ஐரோப்பிய யூனியனுக்கு, "கிரேக்கம், ஸ்பெயின், பல்கேரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மக்கள் போராட்டத்தை எப்படி அடக்கினீர்கள் என்பது தெரியாதா?' என்று கேள்வி கேட்டு அடக்கிவிட்டார் எர்டோகன்.
டுனீசியா, எகிப்து, லிபியா, யேமன் ஆகிய நாடுகளில் ஆட்சியாளர்களை விரட்டிய மக்கள் புரட்சியின் தொடர்ச்சி என்று துருக்கியில் ஏற்பட்டுள்ள போராட்டங்களை வர்ணிக்க முடியாது. அந்நாடுகளின் ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு தனிப்பட்ட முறையில் இருந்த அளவு கடந்த கோபம் ஆயுதம் ஏந்த வைத்தது. ஆனால் துருக்கியில் ஆட்சியாளர்களின் பொருளாதாரக் கொள்கைகளையும், அடக்குமுறை நடவடிக்கைகளையுமே மக்கள் தீவிரமாக எதிர்க்கின்றனர். ஆயுதங்களைக் கையில் எடுத்து ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடவில்லை.
போலீஸôரின் தடியடிக்கும், கண்ணீர் புகைக் குண்டுகளுக்கும் அஞ்சி வீட்டிலேயே முடங்கி விடாமல் தொடர்ந்து தெருவில் இறங்கிப் போராடும் துருக்கி மக்களின் நெஞ்சுரம் பாராட்டத்தக்கது.
ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்றாலும், அடக்குமுறைகளும், அதிகார துஷ்பிரயோகமும் அதிகமாகும்போது மக்கள் அடுத்த தேர்தல் வரும்வரை காத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உடனடியாகத் தீர்வுகாணத் துணிந்துவிடுவார்கள் என்பதற்குத் துருக்கி மக்கள் உதாரணமாகியுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சிக்காலம் முடியும்வரை நம்மை யாரும் எதிர்க்க முடியாது என்று நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு துருக்கியின் நிகழ்வுகள் ஓர் எச்சரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...