நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

எய்தவர் இருக்க அம்பை நோவானேன்?

அரசு ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது அந்தப் பணியை மேற்கொள்ள ஒரு ஒப்பந்ததாரரை நியமிக்கிறது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:00 pm

எம். அருண்குமார்

அரசு ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது அந்தப் பணியை மேற்கொள்ள ஒரு ஒப்பந்ததாரரை நியமிக்கிறது. அந்தப் பணியை அந்த ஒப்பந்ததாரர் தரத்துடன், அரசு நிர்ணயிக்கும் மதிப்பீட்டுக்குள், கால அளவுக்குள் செய்து முடிக்க வேண்டும். அந்தப் பணி தரமானதாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை அரசு அலுவலர்கள் கண்காணிக்கிறார்கள். இவ்வாறு அரசின் விதிமுறைகள் இருக்கும்போது, அந்தப் பணி சரிவர செய்யப்படவில்லையெனில் அதற்கு முழுப் பொறுப்பு அந்த ஒப்பந்ததாரரையும், அந்தப் பணியைச் சரிவர கண்காணிக்காத அரசு அலுவலரையுமே சாரும். அந்தப் பணியின் தரமின்மை குறித்து பொதுமக்களிடையே தகவல் வெளியாகி அதனால் பெரும் பிரச்னை ஏற்பட்டால், அதுகுறித்து அரசு அந்த இருவரை மட்டுமே அதற்குப் பொறுப்பாக்க வேண்டும்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பள்ளி சத்துணவு மையத்துக்கு அழுகிய முட்டைகள் விநியோகம் செய்யப்பட்ட பிரச்னை தொடர்பாக ஆய்வு செய்ய வந்த தமிழக அரசின் சமூகநலத் துறைச் செயலர், பள்ளியின் தலைமை ஆசிரியரைக் கடிந்து கொண்டாராம்.

"ரூ.1,800 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தி விட்டீர்களே?' என்றும், "இந்தப் பிரச்னையைத் திறமையாகக் கையாண்டிருக்கலாமே?' என்றும் தலைமை ஆசிரியரிடம் கூறினாராம்.

பள்ளிக்கு முட்டைகளை விநியோகம் செய்ய டெண்டர் எடுத்தவர், அதனுடைய தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டிய மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளர், அந்த முட்டையைப் பெறும் பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் என இவ்வளவு பேர் நடுவில் இருக்கும்போது அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரை அரசுச் செயலர் கடிந்து கொண்டதாகக் கூறப்படுவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் அவர் இவ்வாறு நடந்துகொண்டார் என்றால், இந்தப் பிரச்னையை ஊடகங்கள் வெளிக்கொணர்ந்ததால் ஊடகங்களுக்கு இந்தப் பிரச்னை தெரியுமளவுக்கு அந்தத் தலைமை ஆசிரியர் செயல்பட்டுள்ளார் என்ற எண்ணம் அரசுச் செயலர் மனதில் எழுந்திருக்கலாம். அதனால் அவரைக் கடிந்து கொண்டிருக்கலாம்.

இந்தப் பிரச்னை வெளிவர முக்கிய காரணம் தலைமை ஆசிரியர் அல்ல; வாகனத்திலிருந்து முட்டைகளை இறக்கி பள்ளிக்குள் கொண்டு செல்லும்போது ஒரு மாணவரின் தந்தை அப்பள்ளிக்கு வந்துள்ளார். முட்டைகளிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அதுகுறித்து முட்டை ஏற்றி வந்த வாகனத்தின் டிரைவரிடம் கேட்டுள்ளார். டிரைவர் பொறுப்பாக பதில் கூறாமல், "இதைக் கேட்க உங்களுக்கு அதிகாரம் இல்லை, உங்களுடைய வேலையைப் பாருங்கள்' என்று தரக்குறைவாகப் பேசியுள்ளார்.

மாணவரின் தந்தை அந்த முட்டைகளை உடைத்துப் பார்த்தபோது அவை அழுகியும், புழுக்கள் நெளிந்து கொண்டும் இருப்பதைக் கண்டு, மனது பொறுக்காமல் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அதிகாரிகளின் கவனத்துக்கு அதைக் கொண்டு சென்றுள்ளார். தொடர்ந்து ஊடகங்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்த அந்த மாணவருடைய தந்தையின் செயல் சமூக ஆர்வத்தின் காரணமாக நடந்தது; அது தலைமை ஆசிரியரின் கவனத்துக்கே வராமல் நடந்த செயலாகும்.

ஒப்பந்ததாரரிடம் கூறி முட்டையை மாற்றித் தருவதாக டிரைவர் கூறாமல், அதை சுட்டிக்காட்டியவரைத் தரக்குறைவாகப் பேசியதால் ஒருவகையில் நன்மைதான் ஏற்பட்டுள்ளது! முட்டையை மாற்றித் தருவதாக அவர் கூறியிருந்தால், அந்தப் பள்ளிக்கு மட்டும் முட்டையை மாற்றித் தந்திருப்பார்.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மற்ற சத்துணவு மையங்களுக்கும் அதேபோல அழுகிய முட்டைகள்தான் விநியோகம் செய்யப்பட்டிருக்கும். டிரைவரின் முன்கோபத்தால் அந்த விபரீதம் தடுக்கப்பட்டுவிட்டது! இல்லையெனில் ஏற்கெனவே பிகாரில், தமிழ்நாட்டில் நெய்வேலியில் நடந்ததுபோன்ற பாதிப்பு மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அதனால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்பட்டிருக்கும்.

மாணவரின் தந்தையால் அந்த விபரீதம் தடுக்கப்பட்டதன் விளைவு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்குப் பிரச்னையாக வந்தது. பிரச்னை ஏற்படுவதற்கு முன்பாக அது தடுக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடையாமல், ஊடகங்களில் செய்தி வெளியானதால் வருத்தப்படுவது தேவையில்லாதது. செய்தி வெளியானதால்தான் தமிழகமெங்கும் சத்துணவு மையங்களில் ஒரே நாளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்துணவு மையங்களில் முட்டை, அரிசி ஆகியவை தரமாக உள்ளதா, பாத்திரங்கள், சத்துணவு மையங்கள் சுகாதாரமானதாக பேணப்படுகிறதா, பதிவேடுகள் சரிவர பராமரிக்கப்படுகிறதா, உணவுப் பொருள்களின் கையிருப்பு சரியாக உள்ளதா என ஆய்வின்போது சரிபார்க்கப்பட்டுள்ளது. அதனால் சிறிது காலம் சத்துணவு மையங்களின் நடைமுறை சரியாக இருக்குமென கருதலாம். இல்லையெனில் வழக்கம் போல் அழுகிய முட்டைகளும், தரமில்லாத அரிசி, பருப்பு, சுகாதாரமற்ற பாத்திரங்களும் சத்துணவு மையங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டிருக்கும்.

ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால்தான் ஆய்வுகள், பணியிடை நீக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரச்னை ஏற்படுவதற்கு முன்பாகவே பள்ளி மாணவர்களின் உயிரைக் கருத்தில் கொண்டு அதற்கென துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுக்களை ஏற்படுத்தி, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது பள்ளி சத்துணவு மையம், அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டு குறைகளே இல்லாதவாறு அவற்றைத் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால் இத்தகைய பிரச்னைகள் ஏற்படாது. "எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?' என்று சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பமாட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.