பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மதிக்கப்படும் நீதியா? மறுக்கப்படும் நீதியா?

அண்மைக் காலமாக நீதிமன்றத் தீர்ப்புகள் பொது விவாதத்துக்குரிய பொருளாக மாறிக் கொண்டிருக்கின்றன.

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:45 am

உதயை மு. வீரையன்

அண்மைக் காலமாக நீதிமன்றத் தீர்ப்புகள் பொது விவாதத்துக்குரிய பொருளாக மாறிக் கொண்டிருக்கின்றன. புதிய உலகமும், புதிய சமுதாயமும் உருவாக இத்தகைய தீர்ப்புகள் "வழி வகுக்கும்' என்றும், "வழி வகுக்காது' என்றும் ஊடகங்கள் பட்டிமன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன. "இல்லாத ஊருக்கு, போகாத வழிகளைக் காட்டிப் புதிய தலைமுறையைக் குழப்ப வேண்டுமா?'' என்ற வினாவையும் எழுப்புகின்றனர்.

நாட்டில் ஜனநாயகம் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கும்போது, நான்கு தூண்களில் ஒன்றான நீதிமன்றம் கண்டும் காணாமல் இருக்க வேண்டுமா? சரியான திசையை சரியான நேரத்தில் காட்ட வேண்டாமா? அத்தகைய முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும் என்று ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாட்டின் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட முயற்சிகளை வரவேற்கவே செய்வர். "தலைவிதி' என்று வாளாவிருக்காமல் புதிய விதிகளை உருவாக்குகிற முயற்சிகளை ஊக்கப்படுத்த வேண்டாமா? இப்போது செய்திக்கு வருவோம்.

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை "மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகளின்படி' லஞ்சமாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இது 2013 ஜூலை 5 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பாகும்.

ஆனால், அந்த வாக்குறுதிகளால் வாக்காளர்கள் ஈர்க்கப்படுகிறார்கள் என்ற யதார்த்தத்தை ஒதுக்கிவிட முடியாது. தேர்தலின்போது அரசியல் கட்சிகளின் "இலவச அறிவிப்புகள்' உள்ளிட்ட வாக்காளர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாதவாறு, தேர்தல் அறிக்கை வெளியீடு தொடர்பாகவும் சில வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"தேர்தலில் வெற்றிபெறும் அரசியல் கட்சி, வாக்குறுதிகளை நிறைவேற்ற வசதியாக, "ஆளும் அரசு' கொள்கை முடிவு எடுக்கிறது. பின்னர் அது சட்டமாக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. எனவே, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது' என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழக அரசு சார்பில் இலவசப் பொருள்கள் அளிப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 2013, ஜூலை 5 அன்று தள்ளுபடி செய்தது. மேலும், கட்சிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகள்பற்றி வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் ஆணையிட்டது.

இதைத் தொடர்ந்து, தேர்தல் அறிக்கையில் இலவசம் தொடர்பான வாக்குறுதி வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் முன்பு, அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இதற்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகலை, அங்கீகாரம்பெற்ற அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. ""தேர்தல் வாக்குறுதியில், தங்கள் கட்சி ஆட்சியமைத்தால் "இலவசமாக' சில பொருள்கள் வழங்குவதாக கட்சிகள் அறிவிப்பது வழக்கம்.

இதில் "இலவசம்' என்ற வார்த்தையை வரையறை செய்வது கடினமான வேலை'' என்று தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் ஒட்டுமொத்தக் கடன் இப்போது ரூ. 1.35 லட்சம் கோடியாகும்; பல்வேறு நிதியமைப்புகளிடமிருந்து பெற்ற கடனுக்காக ரூ. 10,945 கோடி வட்டியாகக் கட்ட வேண்டியுள்ளது.

அரசாங்கத்தின் மக்கள்நலத் திட்டங்களுக்கே நிதியில்லாதபோது இந்த இலவசங்கள் தேவைதானா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பொதுநல வழக்குகள் தொடுக்கப்படுவதற்குக் காரணமாக இதனையே சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, "குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்யலாம்' என்று உச்ச நீதிமன்றம் கடந்த 10-7-2013 அன்று தீர்ப்பளித்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பால், அரசியலில் ஈடுபடும் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது.

அதே சமயம், "தண்டனை விதிக்கப்பட்டவர்கள் இதை எதிர்த்து மேல் நீதிமன்றங்களில் முறையீடு செய்வதற்கு ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (ஆர்பிஏ) பிரிவு 8(4)ன்படி, அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது இச்சட்டத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், "இத்தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு தண்டனை பெற்று, ஏற்கெனவே நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்துள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு இது பொருந்தாது; குற்றம் இழைப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையிலிருந்து விலக்குப் பெறுவதில் சாமானியர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையேயுள்ள பாகுபாட்டைக் களைய வேண்டும்' என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் இந்தப் பிரிவை நீதிமன்றம் மாற்றுவதை அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. ஆளும் கட்சியாக இருப்பவர்கள் தங்கள் அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகளை ஜோடித்து, இச்சட்டத்தின் கீழ் அவர்களைத் தேர்தல்களில் போட்டியிட இயலாமல் செய்ய முடியும் என்பது அவர்களின் வாதம்.

இதன் தொடர்ச்சியாக, இப்போது அலாகாபாத் நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றினைத் துணிவோடு பிரகடனப்படுத்தியுள்ளது. "உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஜாதி அடிப்படையிலான பேரணிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக' அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த உத்தரவு மாநிலம் முழுவதற்கும் பொருந்தும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் முக்கிய கட்சிகளுக்கு நோட்டீஸ் அளிக்கவும் ஆணையிட்டுள்ளது. இது அம்மாநிலக் கட்சிகளுக்கு தரும சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

கொஞ்ச காலமாக மாநிலத்தில் ஜாதி வாரியான பேரணி, கூட்டங்கள் அதிகம் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் ஜாதிவாரியாக பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் எனத் தனித்தனியாக பேரணி மற்றும் கூட்டங்களை நடத்துகின்றன.

இதுபோன்ற கூட்டங்களும், பேரணிகளும் மாநிலத்தில் சமூக ஒற்றுமைக்கு ஊறு ஏற்படுத்தும் என்றும், இது அரசியல் சாசன நடைமுறைக்கு எதிரானது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தேர்தல் ஆணையம், காங்கிரஸ், பாஜக, சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தன.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 40 மாவட்டங்களில் பிராமணர் சம்மேளனம், பேரணி நடத்தியது. இதில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பங்கேற்றுப் பேசியுள்ளார். இதேபோல அண்மையில் முஸ்லிம் சம்மேளனம், ஆளும் சமாஜவாதி கட்சி ஆதரவோடு பெரும்பாலான மாவட்டங்களில் பேரணியை நடத்தியது. இந்த இரண்டு நிகழ்வுகளைத் தொடர்ந்து பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. அப்போது வந்த தீர்ப்புதான் இது.

உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மட்டுமேயான இந்தத் தீர்ப்பு நாடு முழுவதற்கும் வரவேண்டும் என்றும், அந்த நாள் தொலைவில் இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்கவே செய்கின்றனர்.

ஜாதி வேறுபாடுகளை ஊக்குவித்து, பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாக்கி, வாக்கு வங்கிகளாக அவர்களைப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு இதுவோர் வேகத்தடையாகும்.

""நீதிமன்றங்கள் அதன் வேலையைச் செய்யட்டும்; அரசியல் விவகாரங்களில் தலையிட வேண்டாம்'' என்று பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கடி கூறி வருகிறார். அரசாங்கத்துக்கு நெருக்கடி நேரும்போதெல்லாம் இப்படிப் பேசுவது அவரது வழக்கம்.

"சி.பி.ஐ. என்ற மத்தியப் புலனாய்வு அமைப்பு, சுதந்திரமான தன்னாட்சி அமைப்பு இல்லை' என்ற தகவல் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் நாட்டு மக்களுக்கே தெரிய வந்தது. இப்போது அந்த அமைப்பு தன்னாட்சி அதிகாரத்துக்கு நீதிமன்றத்தையே நாடி நிற்கிறது.

"தங்கள் அமைப்புக்குக் கூடுதல் அதிகாரத்துடன் தன்னாட்சி வழங்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

நிலக்கரிச் சுரங்க முறைகேடு விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோதுதான் சி.பி.ஐ. பற்றிய பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அந்த முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் திருத்தினார் என்பதை சி.பி.ஐ. ஒப்புக்கொண்டது.

இதனையடுத்து மத்திய அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ.க்குத் தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. சி.பி.ஐ.-யைக் கூண்டுக்கிளி போல வைத்திருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி சி.பி.ஐ.-க்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்குவதுபற்றி பரிந்துரை அளிப்பதற்கான அமைச்சர்கள் குழுவை பிரதமர் அமைத்தார். இக்குழு அளித்த அறிக்கையைப் பரிசீலித்த மத்திய அமைச்சரவை அதனை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இவ்வாறு மக்களாட்சி முறையில் நீதித்துறையின் பங்கு மகத்தானது; அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் பாலமாகத் திகழ்கிறது. ஆனால், காலதாமதமே அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து விடுகிறது. இது களையப்பட வேண்டாமா?

நீதித் துறைகளில் தேங்கியுள்ள வழக்குகளை முடிக்க நடவடிக்கை எடுப்பது பற்றியும், நீதித்துறையைக் காலத்திற்கேற்ப நவீனப்படுத்த வேண்டியது பற்றியும், வழக்குகளின் கால விரயத்தைத் தொழில் நுட்பம் மூலம் தீர்ப்பது பற்றியும் உச்ச நீதிமன்றப் புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் பதவி ஏற்றதும் பேசியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் கடைசிப் புகலிடமாக இருப்பவை நீதிமன்றங்களே! ஆனால், வழக்குகள் தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடப்பதும், மக்கள் நீதி கிடைக்காமல் தவிப்பதும் தொடர்ந்துகொண்டு வருவதை நீதிமன்றங்கள் கவனிக்க வேண்டாமா? "தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி' என்பது நீதியரசர்களுக்குத் தெரியாதா?

கட்டுரையாளர்:பணி நிறைவுபெற்ற தமிழ்ப் பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.