தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

சின்ன சாத்தனின் குமுறல்

நண்பர்கள், தெரிந்தவர்களிடம் கடனை வாங்கி, பதிப்பகத்தின் அடிமை சாசனத்துக்கு ஒப்புக்கொண்டு

Updated On :21 ஜனவரி 2013, 11:35 pm

நண்பர்கள், தெரிந்தவர்களிடம் கடனை வாங்கி, பதிப்பகத்தின் அடிமை சாசனத்துக்கு ஒப்புக்கொண்டு புத்தகத்தைப் போடுவதும், பின்னர் விற்காத சரக்கென்ற பெயர் தாங்கிய மூட்டையை வருடக்கணக்கில் பூச்சிகளிடம் இருந்து பாதுகாப்பதும் நம்மூர் புதிய படைப்பாளிகளின் குலத் தொழில்தான்.

 '"நான் அப்போதே சொன்னேன் இல்லியா?'' என்று வலிய வந்து வேதனையைக் கிளறும் சொந்தங்களைத் தவிர்ப்பதும், கடன் கொடுத்தவன், வீட்டைக் கடப்பதைப் போன்று செல்லும் அந்த கடைசி வாசகனாவது திரும்பிவிட மாட்டானா, நம் புத்தகத்தை வாங்கிவிட மாட்டானா என  ஏங்கித் தவிப்பதும் அவர்களுக்குப் பழகிய ஒன்றுதான்.

 ""பொண்டாட்டி தாலியை அடகு வெச்சு புஸ்தகம் போட்டேன்.. விசிட்டிங் கார்டு மாதிரி ஓசியில் தர வேண்டியிருக்கு...'' கவிஞர் நா.முத்துக்குமாரின் இந்தக் கவிதை தாங்கிய நூலிருக்கும் புத்தகக் காட்சியின் பட்டாம்பூச்சி அரங்கில் இருந்து கூப்பிடும் தூரத்தில்தான் இருந்தார் சின்னசாத்தன் (சாத்தன் என்றால் மழைக்குருவி என்று அர்த்தமாம்).

 மத்திய சுங்கத் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி கடந்த ஆண்டில் ஓய்வு பெற்ற கோயம்புத்தூர்காரர் இவர். ஏற்கெனவே எழுதிய சில சிறு நூல்களை நூலகத்துக்கு விற்று தப்பித்துக் கொண்ட தைரியத்தில், தாவரவியலில் பெற்ற பட்டத்தையும் பறவைகள் மீதான காதலையும் ஆதாரமாக வைத்து சற்றே பெரிய திட்டம் தீட்டியுள்ளார்.

 2004 முதல் 2009 வரை 5 ஆண்டுகளைச் செலவழித்து, குருவி சேர்த்தது போலச் சேமித்த பணம் ரூ.3 லட்சத்தைக் கொண்டு, "இந்தியப் பறவைகளின் கூடுகட்டும் குணநலன்கள்' என்ற பறவையியல் நூலை, கடந்த 2009 மே மாதம் பதிப்பித்துள்ளார் சின்னசாத்தன்.

 கூந்தன்குளத்தில் தினக் கூலியாக உள்ள பால்பாண்டி இவருக்கு உதவியதால், லாபத்தில் பங்கு கொடுக்கலாமே என்ற நோக்கில் நூலாசிரியர் பெயரிலும் பங்கு கொடுத்துள்ளார்.

  முதலில் பறவைகளைத் தேடினார். பின்னர் பதிப்பகங்களைத் தேடினார். ஆனால் இப்போதோ விற்பதற்கு வழியைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

  ""இந்தியாவில் உள்ள 51 பறவையினங்களைப் பின் தொடர்ந்து கூந்தன்குளம், சத்தியமங்கலம், மேற்குத் தொடர்ச்சி மலைகள் உள்ளிட்ட காடுகள், மலைகள், வயல்கள் என ஐந்திணை நிலங்களிலும் உழன்று தகவல்களைச் சேகரித்து, இதுவரை வெளிவராத பல புதிய தகவல்களை வெளிப்படுத்தினேன்.

 ""நம்பிக்கை அதிகம் இருந்தாலும், முதலில் குறைவாக இருக்கட்டுமே என நினைத்து 5 ஆயிரம் பிரதிகள் அச்சிட்டேன். ஆனால் கடந்த மூன்றரை ஆண்டுகளில் கூவிக் கூவி விற்றது என்னவோ 2 ஆயிரம் புத்தகங்கள் மட்டுமே. இந்தியாவில் பறவைகள் குறித்து ஆய்வு செய்யும் அக்கறை ஆங்கிலேயருக்குப் பிறகு சலீம் அலிக்கு வந்தது.

 அதன் பிறகு குறிப்பிடத்தக்க அளவில் ஆராய்ச்சியாளர்கள் தோன்றாததால், பறவைகள் குறித்த வரலாறை அடுத்த தலைமுறைக்கு அப்படியே எடுத்துச் செல்லும் ஆவலில், சொல்லாத பல இன்னல்களை அனுபவித்தேன்.

 ""கலர் படங்கள், ஆயில் பிரிண்டிங் என பார்த்துப் பார்த்து வடித்தேன். நாடு முழுவதற்கும் பயன்படட்டுமே என்று ஆங்கிலத்தில் எழுதிவைத்தேன். ஆனால் இதற்காக பட்ட வேதனைகளையும் வலிகளையும் காட்டிலும், 40 சதவீதத்துக்கு மேல் கழிவு கொடுக்கிறீர்களா என்று விற்பனையாளர்களும், 50 சதவீதத்துக்கு மேல் கழிவு கொடுக்கிறீர்களா என்று நூலகத்திலும் கேட்பதே ரணத்தை ஏற்படுத்துகிறது'' என்கிறார் இவர்.

 கோல்கத்தாவில் உள்ள  ஒரு மத்திய அரசு நிறுவனம் இவரிடம் சில புத்தகங்களை வாங்கி 7 மாதங்களாகிறது. கர்நாடகத்திடம் தண்ணீரைக் கேட்கும் தமிழகத்தைப் போல் பல வழிகளில் போராடியும் பணம் இதுவரை வந்து சேரவில்லையாம். 

 நூலகத்தில் அடிமாட்டு விலைக்கு புத்தகத்தைக் கேட்பதால் விலையைக் கூட்டி வைத்தாலாவது போட்ட பணத்தை எடுக்க முடியும் என்று நண்பர்கள் ஆலோசனை கொடுத்தனர். ஆனால் அதனாலேயே இப்போது பள்ளி, கல்லூரி நூலகங்களில் கூட விலையைக் கேட்டதும் மறுத்துவிடுவதாக வேதனைப்படுகிறார்.

 ""உழைப்புக்கு மரியாதை கிடைக்கும், சாதனை செய்வோம் என நினைத்து கைக்காசைச் செலவழித்து புத்தகம் போட்டேன், ஆனால் அதுவோ இன்று நண்பரின் அரங்கில் ஓரத்தில் இடம் கேட்டு அமரச் செய்து வேதனைக்கு வழி வகுத்துவிட்டது.

 ""ஒவ்வொரு அரங்குகளிலும் புத்தகத்தைப் புரட்டுபவர்கள் விலையைப் பார்க்கின்றனர், அதன் பிறகு அளவைப் பார்க்கின்றனர். ஆனால் கடைசி வரை அதில் உள்ள செய்திகளையும் எனது உழைப்பையும் மட்டும் பார்க்கத் தவறிவிடுகின்றனர்.

 ""நகைக் கடைகளிலும் ஜவுளிக் கடைகளிலும் விலையைப் பார்த்து தெரிவு செய்யும் பழக்கம் புத்தகங்கள் வாங்குவதிலும் தொடருவது கவலை அளிக்கிறது. போனது போகட்டும் என நினைத்து, வீட்டில் இடத்தை அடைத்து வைத்திருக்கும் 3 ஆயிரம் நூல்களையும் மாணவ-மாணவியருக்கு இலவசமாக கொடுக்கும் முடிவுக்கு இப்போது வந்துவிட்டேன்.

 ""ஆனால் என்ன, இந்த நூல் வாசகர்களின் அங்கீகாரத்தைப் பெற்றால் மேலும் 50 பறவைகளைப் பற்றி ஆய்வு செய்து இரண்டாவது பாகம் எழுத திட்டமிட்டிருந்தேன்'' என்று தனது, நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட லட்சியத்தை நம்மிடம் நினைவு கூர்ந்தார் சின்னசாத்தன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.