இதேபோல முதுகுளத்தூரில் மூண்ட சாதித் தீ, நெல்லைச் சீமையை நெருங்காமல் தடுத்த பெருமை செல்லப்பாண்டியனுக்கு உண்டு. அப்போதைய முதல்வர் காமராஜருடன் பேசி நெல்லை, ராமநாதபுரம் எல்லையை மூடி அடியாட்களோ, ஆயுதங்களோ ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல முடியாமல் தடுக்கச்செய்தார். அத்துடன் மக்களைச் சந்தித்து, ""நெல்லை மக்களாவது நிம்மதியாக வாழ வேண்டும், அதற்கு உதவுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்தார். நெல்லை மண்ணில் அன்று நிலவிய அமைதிக்கு அவரே காரணமாக இருந்தார். காந்திஜியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். காமராஜர் இறக்கும்வரை அவருடனேயே இருந்தார். பிறகு ஜி.கே. மூப்பனாருக்குத் துணையாக, அவருடைய அரசியல் ஆலோசகராக விளங்கினார்.