சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பரிகாரம் தேடுவாரா, பழியைச் சுமப்பாரா...

"செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலேநெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே''- என குலசேகர ஆழ்வார் பாடுகிறார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:32 am

பழ. நெடுமாறன்

"செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே''

- என குலசேகர ஆழ்வார் பாடுகிறார்.

வேங்கடேசப் பெருமானிடம் ஏதேனும் ஒன்றைப் பெறவேண்டி முயன்றவர்களுக்கெல்லாம் எம்பெருமான் - ஏழை, ஏதலன், கீழ்மகன் என்னாது - இரங்கி அருள்புரிவான் என்பது அவனுக்கே உரிய பெருமையாகும் என்பர்.

திருப்பதி மலையில் வீற்றிருக்கும் திருமால், வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனைக் கொன்று பூமாதேவியை தன் கொம்புகளால் மீட்டுக் கொண்டுவந்ததாகப் புராணம் கூறுகிறது.

கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி வேங்கடேசப் பெருமான் திகைத்துத் திணறிப்போயிருப்பார். அன்றைய தினம் அவரை இலங்கை அதிபர் ராஜபட்சவும் அவரது மனைவி ஷிரானியும் வழிபட்டனர். தம்மால் வதம் செய்யப்பட்ட இரண்யாட்சன் மீண்டும் தம் முன்னால் வந்து நிற்பது அவருக்குச் சொல்லொண்ணாத வியப்பை அளித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

வேங்கடவன் வல்வினைகளைத் தீர்ப்பான் என்பதிலும் ஏழை, ஏதலன், கீழ்மகன் என்று பாராது அருள்புரிவான் என்பதிலும் ஐயமில்லை. ஆனால், மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு அருள்புரியும்படி தன்னிடம் வேண்டி நிற்கும் ராஜபட்சவின் துணிவு அவரைத் திகைக்க வைத்திருக்கும்.

திருமாலிடம் மண்டியிட்டதோடு ராஜபட்ச நிற்கவில்லை. புத்தர் புத்தறிவு பெற்ற மகா-போதி ஆலயத்திற்கும் சென்றார். புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தடியில் அமர்ந்து தியானம் மேற்கொண்டார்.

பொருந்து போதியில்

இருந்த மாதவர்

திருந்து சேவடி

மருந்தும் ஆகுமே

- என நீலகேசி உரையில் குறிப்பிடுவதைப் போல, மாதவனாகிய புத்தர் திருமாலைப் போலவே திணறிப் போயிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

"புத்தம் சரணம் கச்சாமி' என்பதற்குப் பதில், "ரத்தம் சரணம் கச்சாமி' என்ற புதிய மந்திரத்தை ஓதி, தமிழர்களின் ரத்தத்தைக் குடித்த காட்டேரியான ராஜபட்ச தனக்கு முன்னால் வந்து நின்று வணங்கியதோடு மட்டுமல்ல, தான் அமர்ந்து ஞானம் பெற்ற போதி மரத்தடியில் அமர்ந்து அதன் புனிதத்தையும் கெடுத்த காட்சி, அமைதியே வடிவான புத்தரையும் கொதிக்க வைத்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

இலங்கையில் தமிழினமே இருக்கக்கூடாது என்று வெறியுடன் செயல்பட்ட ராஜபட்ச திருவேங்கடப் பெருமானையும் புத்த பிரானையும் தரிசித்துவிட்டால் தனது பாவங்கள் யாவும் கழுவப்பட்டுவிடும் என்ற புதிய வழியைக் கண்டுபிடித்திருக்கிறார். இவருக்கு வழிகாட்டிகளாக விளங்கிய இட்லர், முசோலினி, மிலோசேவிக் போன்ற "பாசிச' சர்வாதிகாரிகளுக்கு இந்த யோசனை தோன்றாமல் போயிற்று!

கடவுளை ஏமாற்றும் இந்தத் தந்திரம் அவர்களுக்கும் தெரிந்திருந்தால் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களைக் கொன்று குவித்த இட்லர் ஜெருசலத்திற்குச் சென்று யூதர்களின் கடவுளான சிகோவாவை வழிபட்டிருப்பார்.

ராஜபட்சவின் வழி இட்லருக்குப் புலப்படாமல் போனதால்தானோ என்னவோ, செஞ்சேனை சுற்றி வளைத்துக்கொண்டபோது தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

அபிசீனியா என்றழைக்கப்பட்ட இன்றைய எத்தியோப்பியா நாட்டின் மீது படையெடுத்து உலகில் முதன்முதலாக நச்சு வாயு குண்டுகளைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த முசோலினி, அடிஸ்அபாபா சென்று அங்குள்ள மசூதியிலும் தேவாலயத்திலும் வழிபட்டிருப்பார். ராஜபட்சவின் குறுக்கு வழி முசோலினிக்குத் தெரியாததால்தான் மக்களிடம் சிக்கி உயிரிழந்தார்.

போஸ்னியா நாட்டின் கிழக்குப் பகுதியில் வாழும் 40,000}த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களைத் தனது ராணுவத்தை ஏவி, திட்டமிட்டு இனப்படுகொலை செய்த அந்நாட்டின் அதிபரான ஸ்லோபோர்தான் மிலோசேவிக், ராஜபட்சவின் தந்திரத்தை அறிந்துகொள்ளாததால்தான் சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிறையில் மரணத்தைத் தழுவ நேர்ந்தது.

ஈழத் தமிழர்களைத் திட்டமிட்டு இனப்படுகொலை செய்த ராஜபட்சவுக்கு ஆயுதங்கள் தந்தும் எல்லா வகையிலும் துணை நின்றும் செயல்பட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், ராஜபட்சவின் வழியைப் பின்பற்றி திரிகோணமலைக்குச் செல்லலாம். அதாவது அவர் இந்தியா வந்து கோயில்களில் பாவ மன்னிப்பு கேட்டார். இவர் இலங்கை சென்று பாவ மன்னிப்பு கேட்கலாம்.

குற்றம் இலாதார் குறைகடல் சூழ்ந்த

கோணமாமலை அமர்ந்தாரை

எனப் பாடி, திருஞானசம்பந்தர் துதித்ததைப் போல மன்மோகன்சிங்கும் கோணேசுவரரை வணங்கி தனது பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம்.

உலக நாடுகளை ஏமாற்றிவரும் ராஜபட்ச இப்போது கடவுள்களையும் ஏமாற்றுவதற்கு முற்பட்டிருக்கிறார். தனது பாவங்களை உணர்ந்து அதற்காக மன்னிப்புக் கேட்பவர்களை இறைவன் ஏற்றருள்வான் என்ற நம்பிக்கை எல்லா சமயங்களிலும் நிலவுகிறது. ஆனால் ராஜபட்ச, இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக பக்தர் வேடம் பூண்டு புனித இடங்களுக்கு யாத்திரை வந்து சென்றார்.

இந்தியாவிற்குப் புறப்படுவதற்கு முன்னால் பிப்ரவரி 5-ஆம் தேதி இலங்கையின் 65-ஆவது சுதந்திரதின விழா நிகழ்ச்சியில் பேசும்போது, "இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியில் தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது. நாட்டை இனரீதியாகப் பாகுபடுத்துவது என்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது' என்று கூறிவிட்டுத்தான் இங்கு வந்திருக்கிறார்.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதாக, இந்தியாவிற்கும் உலக நாடுகளுக்கும் பலமுறை அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

அது மட்டுமல்ல ராஜீவ் - ஜெயவர்த்தன உடன்பாட்டின்படி ஒன்றாக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாநிலங்களை மீண்டும் பிரித்திருக்கிறார். இலங்கையின் வட-கிழக்குப் பகுதி தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என ராஜீவ் - ஜெயவர்த்தன உடன்பாடு கூறுகிறது. அதை பகிரங்கமாகத் தூக்கி எறிந்துவிட்டு தமிழர் தாயகப் பகுதியில் சிங்களர்களைக் குடியேற்றுவதும், தமிழ் ஊர்ப் பெயர்களைச் சிங்கள மயமாக்குவதும் தமிழர்களின் நிலங்களைப் பறிப்பதும் இந்துக் கோயில்களையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும் இடித்துவிட்டுப் புத்தர்கோயில்களைக் கட்டுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

இவ்வளவும் செய்துவிட்டுத்தான் இந்தியாவிற்குத் துணிந்து வருகிறார். இந்திய அரசுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை மீறிச் செயல்பட அவர் முடிவெடுத்துவிட்டார். இந்தியாவின் பலவீனத்தைப் புரிந்துகொண்டு அவர் மிரட்டுகிறார்.

இந்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதுதான் நம்முன் உள்ள கேள்வியாகும். ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டம் கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றபோது இந்தியா மற்றும் 23 நாடுகளுடன் சேர்ந்து இலங்கை அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. கடந்த ஓராண்டு காலமாக எதையும் செயற்படுத்த சிங்கள அரசு முன்வரவில்லை. மாறாக தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னிலும் அதிகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையில் வரப்போகும் மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் கூடி இது குறித்து விவாதிக்க இருக்கிறது.

2011}ஆம் ஆண்டில் இக்கூட்டம் நடைபெற்றபோது அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யும் திருத்தத்தை இந்தியா முன்மொழிந்தது. சீனா, ரஷியா, கியூபா போன்ற நாடுகளின் ஆதரவுடன் இந்தியாவின் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

இப்போது, சீனா, கியூபா, ரஷியா போன்ற நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அங்கம் வகிக்கவில்லை. எனவே இனியாவது இலங்கையின் மனித உரிமை மீறல்களைப் பகிரங்கமாகக் கண்டிக்க இந்திய அரசு முன்வருமா என்பதுதான் கேள்வி.

நடைபெறப்போகும் மனித உரிமை ஆணையக்கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா வற்புறுத்தப்போகிறது என்ற செய்திகள் வெளியாகி உள்ளன. ஏற்கெனவே தமிழக சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி பேசி ஆளுநர் உரையில் இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டுள்ளது.

ஆளுநர் உரையின்மீது பேசிய தமிழக முதலமைச்சரும் தனது உரையில், ""இலங்கையில் தமிழர்கள் சிங்களர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளுடன் வாழவேண்டும்; இந்த நிலை ஏற்படும்வரை இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும்; இனப்படுகொலை நிகழ்த்தி போர்க் குற்றம் புரிந்தவர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க இந்திய அரசு ஐ.நா. பேரவையில் வலியுறுத்த வேண்டும்'' என அழுத்தம் திருத்தமாகப் பேசியுள்ளார்.

பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கை என்பது ஐ.நா. பட்டயத்திற்கு உட்பட்டதேயாகும். ஐ.நா.வின் தீர்மானங்களை மீறிய நாட்டிற்கு எதிராகப் பொருளாதார புறக்கணிப்பு, இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக்கொள்வது, ரயில், கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, அஞ்சல், தந்தி, வானொலி ஆகிய துறைகளில் உறவுகளை அறுத்துக்கொள்வது போன்றவற்றை மேற்கொள்வதற்கு ஐ.நா. பட்டயத்தின் 41-ஆவது விதி இடமளிக்கிறது.

அமெரிக்கா மட்டுமல்ல கனடா போன்ற நாடுகளும் இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இலங்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷிரானி பண்டார நாயக மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து, அவரைப் பதவி நீக்கம் செய்துள்ள ராஜபட்சவின் செயலை "காமன்வெல்த்' அமைப்பு நாடுகளின் பிரதமர்கள் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்; இல்லையேல், தான் அதிலிருந்து வெளிநடப்புச் செய்யப் போவதாக கனடா பிரதமர் ஸ்டீபன் கார்டர் எச்சரித்துள்ளார்.

மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவரும் இலங்கையில், "காமன்வெல்த்' மாநாட்டை நடத்தக்கூடாது என "காமன்வெல்த்' நாடுகளின் பிரதமர்களுக்கு உலக மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

1961}ஆம் ஆண்டில் "காமன்வெல்த்' மாநாடு லண்டனில் நடைபெற்றபோது, "தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு நிறவெறிக் கொள்கையைக் கைவிடவேண்டும் அல்லது காமன்வெல்த்திலிருந்து வெளியேற வேண்டும்' என்ற தீர்மானத்தை அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு கொண்டுவந்து நிறைவேற்றினார். நேருவின் பாதையில் நடைபோடுவதாகத் தம்பட்டம் அடிக்கும் மன்மோகன் அரசு, நேருவைப் பின்பற்றிச் செயல்படுமா?

இனவெறிப்போக்கை இலங்கைக் கைவிடாவிட்டால் "காமன்வெல்த்' அமைப்பிலிருந்து அதை வெளியேற்றும் தீர்மானத்தை மன்மோகன் கொண்டுவருவாரா?

கடந்தகாலத் தவறுக்குப் பரிகாரம் தேடுவாரா?

சீக்கியர்களின் 10}ஆம் குருவான குரு கோவிந்தசிங், சீக்கிய மதத்தைக் கட்டிக்காக்க "கால்சா' அமைப்பை உருவாக்கும்போது, "தரும தேவதை தாகத்தால் தவிக்கிறாள். கருமம் வென்று களபலி வேண்டும்' என்கிறார். உடனே கூடியிருந்தோரில் இருந்து ஐவர் களபலியாக முன்வந்தனர். "அவர்களில் ஒருவர் தமிழர்' என்ற குறிப்பினை சுத்தானந்த பாரதியார் தனது "பாரத சக்தி மகா காவியத்தில்' தந்துள்ளார்.

குருதி கக்குங் கொடுநகை வாளுடன்

இரு நொடியில் எழுந்தினும் யாரென்றே

குரு வினாவிடக் கொள்கென் றொருவனும்

தருமன் என்ற தமிழனு நின்றனர்

சீக்கிய மதத்தைக் கட்டிக்காக்கத் தன்னை களப்பலியாக்கிக் கொள்ள முன்வந்த தமிழனின் பரம்பரைக்குத் தீங்கு செய்தல் தகுமா, சீக்கிய தருமத்திற்கு அது உகந்ததா என்பதை மன்மோகன் சிங் எண்ணிப் பார்க்கட்டும். அல்லது, காலமெல்லாம் பழியைச் சுமக்கத் தயாராகட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.