இசையோடு இயைந்த வாழ்வு
உலகமே இசைமயமானது. இசை தரும் இன்பத்தை அனுபவிக்காதவர் யாரும் இலர். அது மனிதர்களை மட்டுமல்ல, எல்லா உயிர்களையும் ஈர்க்க வல்லது. எல்லாரையும் இசைய வைப்பதால்தான் "இசை' என்று பெயர் பெற்றது.


உலகமே இசைமயமானது. இசை தரும் இன்பத்தை அனுபவிக்காதவர் யாரும் இலர். அது மனிதர்களை மட்டுமல்ல, எல்லா உயிர்களையும் ஈர்க்க வல்லது. எல்லாரையும் இசைய வைப்பதால்தான் "இசை' என்று பெயர் பெற்றது.
இப்பூவுலகில் இசை இல்லாத இடம் உண்டா? எல்லா இடங்களிலும் இசை ஆட்சி செய்கிறது. அதனை அறிந்து அனுபவிக்கத் தெரிய வேண்டும். உல்லாசமாக இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, உழைத்துக் களைத்தவருக்கும்கூட இசை ஆறுதல் தருகிறது. அவர்களது வியர்வையை வருடி இன்பம் தருகிறது. வார்த்தையில்லாத மொழிகளால் அவர்களோடு பேசுகிறது.
இசையைக் கேட்டு இன்புறாத உயிர்களே இல்லை என்று கூறலாம். கல் மனதையும் கரைய வைக்கும், கண்ணீர் விட வைக்கும். கொடிய விலங்குகளையும், நச்சுப் பாம்புகளையும் கூடக் கனிய வைக்கும். இசை வயப்பட்ட விலங்குகள் தம் பகையை மறந்து மயங்கி நிற்கும்.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில் பொழுது புலரும் போதே இசையும் இளம் பனியாய்ப் பொழிகிறது. திருப்பாவையும், திருவெம்பாவையும் செவியின் வழியாக மனதைக் குளிர்விக்கிறது. எங்கும் இசையாய், இசைப் பயனாய் அன்பையும், அமைதியையும் புதுப்பிக்கிறது.
"பாட்டினைப் போல் விந்தை பாரின்மிசை இல்லையடா' என்று வியந்த பாரதி, "பாட்டினிலே நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்' என்று தம் பரவச நிலையைப் பாடுகிறார். அந்த அளவுக்கு உணர்ச்சியுள்ள ஒவ்வொரு உயிரையும் கவர்ந்து இழுக்கவல்ல காந்தமாக இனிக்கும் இசை மார்கழி மாதப் பனிப் பொழிவுக்கு இதமாக இருக்கிறது.
அன்று முதல் இன்று வரை தமிழ் மக்களின் வாழ்க்கையே இசைமயமானதுதான். குழந்தை பிறந்தபோதே பாட்டும் பிறந்து விடுகிறது. தாலாட்டுப் பாடல் பாடுகிறோம். மனிதர்கள் இறக்கும்போது பாடப்படும் ஒப்பாரிப் பாடல் ஓலத்தை மறக்க முடியுமா? தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் இந்தப் பாடல்கள் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
இதற்கு இடையில்தான் எத்தனை எத்தனை பாடல்கள்? வண்டி ஓட்டும்போது, நாற்று நடும்போது, அறுவடை செய்யும்போது, நெல் குற்றும்போது: இப்படி பல சூழ்நிலைகளிலும் பாடல்கள் பாடப்படுகின்றன. கிராமப்புறத்தில் அன்பு கொண்ட தலைவன், தலைவியால் பாடப்படும் நாட்டுப் பாடல்களை "எழுதாக் கிளவி' என்றும், "நாட்டார் பாடல்கள்' என்றும் இலக்கிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கும்மி, கோலாட்டம் முதலிய விளையாட்டுப் பாடல்களும் இதில் அடங்கும்.
உலக மொழிகள் எல்லாவற்றிலும் முதலில் வாய்மொழி இலக்கியங்கள் தோன்றி வளர்ந்த பின்னரே எழுத்து இலக்கியங்கள் எழுந்துள்ளன. எனவே இசைக்குப் பிறகே இயலும், நாடகமும் வளர்ந்துள்ளன. இதனால் முத்தமிழில் முதல் தமிழ் இசையேயாகும்.
நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டு, காதல், திருமணம், குடும்பம், ஒப்பாரி ஆகியவை அகப்பாடல் எனவும், தொழில், வழிபாடு, ஊர்வலம், நாட்டுச் சிறப்பு, கலகம், பஞ்சம், கதைப் பாடல்கள் போன்றவற்றைப் புறப்பாடல் எனவும் ஆய்வாளர்கள் பகுத்துள்ளனர்.
தமிழில் யாப்பு என்று கூறப்படும் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களும், அவற்றின் இனங்களும் இசையை அடிப்படையாகக் கொண்டவையே. பரிந்து வரும் இசைப்பாட்டையே "பரிபாடல்' என்கின்றனர். பரிபாடல் நூலில் இப்போது கிடைத்திருக்கும் பாடல்களில் பாடியவர் பெயரும், பண்ணின் பெயரும், இசை வகுத்தார் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவர்கள் வகுத்தெழுதிய முறையும், அம்முறை பற்றிய இசைக்குறிப்பும் இக்காலத்தில் கிடைக்கவில்லை. இதுமட்டுமல்லாமல் இடைக்காலத்தில் மறைந்துபோன இசை நூல்களும் ஏராளம்.
இப்போது கிடைத்திருக்கும் சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தில் இசைக் குறிப்புகள் இருப்பதை அறியலாம். "இசைத் தமிழ் நூலாகிய பெருநாரை, பெருங்குருகும் பிறவும் தேவ குருடி நாரதன் செய்த பஞ்ச பரதீயமும் முதலாகவுள்ள தென்னூல்கள் இறந்தன' என்று உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் கூறுகின்றார்.
சிகண்டி என்னும் செந்தமிழ் முனிவர் இயற்றிய இசை நுணுக்கம், இந்திர காளியம், அறிவனார் செய்த பஞ்ச மரபு, ஆதிவாயிலார் செய்த பரத சேனாபதீயம், பாண்டிய மதிவாணனார் இயற்றிய மதிவாணர் நாடகத் தமிழ்நூல் ஆகிய ஐந்து நூல்களும் அடியார்க்கு நல்லார் காலத்தில் வழக்கில் இருந்தன. இந்த நூல்கள் கூறும் இசை நாடக முடிவுகளைக் கொண்டே சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் விரிவுரை எழுதியுள்ளார். எனினும் மேற்கூறிய நூல்களுள் "பஞ்சமரபு' தவிர மற்றவை பிற்காலத்தில் அழிந்துவிட்டன.
இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் இசைத் தமிழ் நூல்கள் மூலம் பண்டைய இசைத் தமிழ் மரபினையும், குழல், யாழ் முதலிய இசைக் கருவிகளையும், இசை பாடும் முறையினையும் அறிய முடிகிறது.
அக்காலத்தில் இசை வளர்த்த மரபினரை "பாணர்' என்று அழைத்துள்ளனர். அவர்கள் இசைத்த யாழ் என்ற கருவி குறித்தும் அவர்களது வாழ்க்கை முறை குறித்தும் பழந்தமிழ் நூல்கள் மூலம் நாம் அறியலாம். அவர்கள் இருந்த ஊர்களில் ஒன்றாக இலங்கை "யாழ்ப்பாணம்' இன்றும் விளங்கி வருகிறது.
இவர்கள் அக்காலத்தில் அரசர்களிடமும், கொடை வள்ளல்களிடமும் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்து வந்தனர். பரிசில் பெற்ற பாணர்கள், வறிய பாணர்களை அந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பர். இதனைச் சங்க நூல்கள் மூலம் அறிய முடிகிறது.
யாழ் இசையால் யானையை வென்ற உதயணன் கதை கூறும் பெருங்கதையும், இசை பாடி சுரமஞ்சரியை வென்ற சீவகன் வரலாறு கூறும் சீவக சிந்தாமணியும் இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் வழங்கி வந்த இசைவளத்தைப் புலப்படுத்துகின்றன. சேந்தனார் முதலிய ஒன்பது பேரால் பாடப்பட்ட திருவிசைப்பாப் பாடல்கள், தேவாரம், திருவாசகம் முதலியன பண் அமைக்கப்பட்டுள்ளன.
இடைக்காலத்தில் தெலுங்கர்களான நாயக்க மன்னர்களும், மகாராஷ்டிரர்களும், இஸ்லாமியர்களும் மாறி மாறி தமிழ்நாட்டை ஆளத் தொடங்கினர். அப்போது தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது. தமிழ் இசைவாணர்கள் ஆதரிப்பார் இல்லாமல் போயினர். தெலுங்குப் பாடல்களுக்குச் செல்வாக்கு ஏற்பட்டது. தியாகராய சுவாமிகள் தம் கீர்த்தனங்களை தெலுங்கு மொழியிலேயே பாடி வைத்தார்.
எனினும் தமிழிசை இலக்கியமாகக் கீர்த்தனைகளை இயற்றிய முத்துத் தாண்டவர், இராம நாடகக் கீர்த்தனை பாடிய அருணாசலக் கவிராயர், கீர்த்தனைகள் பல பாடிய மாரி முத்தாப் பிள்ளை ஆகிய மும்மூர்த்திகளை தமிழ் மக்கள் மறக்கலாமா?
இவர்களைத் தவிர சர்வ சமய சமரசக் கீர்த்தனை பாடிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை, காவடிச் சிந்து பாடிய அண்ணாமலை ரெட்டியார், நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளைப் பாடிய கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோர் இடைக்காலத்தில் இசைத் தமிழைக் கட்டிக் காத்து வளர்த்தனர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர், பழந்தமிழ் நூல்களையும், இக்கால இசைமரபினையும் ஒப்பு நோக்கி "கருணாமிர்த சாகரம்' என்னும் இசைத்தமிழ் நூலை இயற்றி இசைத்தமிழுக்கு பெரும்பணி செய்துள்ளார். சங்க நூல்களை ஆராய்ந்து பழைய இசைக் கருவியான யாழ் பற்றிய அரிய விளக்கங்களுடன் "யாழ் நூ'லை இயற்றிய விபுலானந்த அடிகளை இந்த நேரத்தில் நினைவுகூர வேண்டும். இவ்வாறு தமிழ் இசைக்கு மிகச் சிறந்த வரலாறு இருக்கிறது.
அக்காலத்தில் கலைகளை வளர்க்க அரசர்களும், வள்ளல்களும் இருந்தனர். இக்காலத்திலும் நல்ல மனம் கொண்ட புரவலர்களின் துணையோடு இசை விழாக்கள் நடைபெற்று வருவதைப் பாராட்ட வேண்டும். இசைவாணர்களுக்குப் பாராட்டுகளும், விருதுகளும் வழங்கி ஊக்கப்படுத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் ஆங்கே அனைத்தும் அயல்மொழியாக இருப்பது தமிழ் ஆர்வலர்களுக்கு நெருடலாக உள்ளது. தமிழில் இசைப் பாடல்கள் இல்லையா? பாரதி கூறியதுபோல - தமிழர்களுக்கு இரும்புக் காது என்று எண்ணி விட்டார்களா?
தமிழ்நாட்டு இசையரங்குகளில் தெலுங்கு இசை மட்டுமே பாடப்படுவது கண்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியாரும், சர். ஆர்.கே. சண்முகம் செட்டியும் மனம் வருந்தினர். அதனால் தமிழ் இசைச் சங்கத்தை உருவாக்கியும், தமிழ் இசைக் கல்லூரி ஒன்றை நிறுவியும், இசைத் தமிழ் நூல்களை வெளியிட்டும் பெருந் தொண்டு புரிந்துள்ளனர். அவற்றைத் தமிழ் இசை வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளுவது அவசியம்.
""ஆரம்பப் படிப்பின் பாடங்களில் இசையும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்த யோசனையை நான் மனமார ஆதரிக்கிறேன்...'' என்று காந்தியடிகள் கூறியுள்ளார்.
கலையும், பண்பாடும்தான் ஒரு நாகரிக சமுதாயத்தின் அடையாளங்களாகும். ஆய கலைகள் 64 எனினும் அவற்றுள் இசைக் கலைக்குச் சிறந்த இடம் உண்டு; திசைமாறிச் சென்று கொண்டிருக்கும் மாணவர்களைத் திருத்துவதற்கும், அவர்களை நல்ல குடிமக்களாக மாற்றுவதற்கும் கலை இலக்கியங்களில் கவனம் செலுத்தச் செய்வது நல்லது. இதனைக் கல்வித் துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.
"இசையால் பயிர்கள் வளரும்' என்பதை அறிவியல் ஆய்வு கண்டுபிடித்து அறிவித்தது. மனித மனங்களை வளர்ப்பதற்கு இந்த இசையாலும் இயலும் என்பதை இலக்கியங்கள் கூறுகின்றன. மனநோயைப் போக்கும் மாமருந்து என்று உளவியல் வல்லுநர்கள் உரைக்கின்றனர். இந்த இசை மரபுகளை நன்கு கட்டிக் காத்து அடுத்தத் தலைமுறைக்கு நாம் அளிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...