பரம்பரையின் மீட்சி
உலகத்தில் பெரும்பான்மையான நாடுகளில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. குடியரசுத் தலைவரும் பிரதம மந்திரியும்தான் நாட்டை ஆட்சி புரிகிறார்கள்.


உலகத்தில் பெரும்பான்மையான நாடுகளில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. குடியரசுத் தலைவரும் பிரதம மந்திரியும்தான் நாட்டை ஆட்சி புரிகிறார்கள். அவர்கள் ஜனநாயக நெறிமுறையின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் ஆட்சிக்கு கால வரையறை உண்டு. பெரும்பாலும் ஐந்தாண்டுகள். ஆனால், மறுபடியும் தேர்தலுக்கு நிற்கலாம். வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி புரியலாம். சில நாடுகளில் இரண்டு முறைக்கு மேல் குடியரசுத் தலைவருக்கு நிற்க முடியாது. பல நாடுகளில் காலக்கெடு கிடையாது. எனவேதான் குடியரசுத் தலைவர், பிரதம மந்திரி போன்றோர் நெடுங்காலத்திற்கு பதவியில் இருக்கிறார்கள்.
குடியரசுத் தலைவர், பிரதம மந்திரி போன்றோர் சம்பளம் வாங்கினாலும் அவர்களின் பணி மக்கள் சேவை. திடீரென்று ஒருவர் குடியரசுத் தலைவராகவோ, பிரதம மந்திரியாகவோ, மாநில முதலமைச்சராகவோ வர முடியாது. ஒருவர், ஒரு கட்சியில் சேர்ந்து பல ஆண்டுகள் தன் அறிவு, ஆற்றல், செயல்திறன், பேச்சுவன்மை, இடையறாத முயற்சி இவற்றைக் கொண்டு உழைத்து தலைவராகி அதன் பின்னர் ஆட்சியைப் பிடிக்கிறார். வேறு சிலர், தானே புதிய கட்சியொன்றை ஆரம்பித்து, அதற்குத் தலைமை ஏற்று வழிநடத்தி மக்கள் ஆதரவைப் பெற்று அதிகாரத்திற்கு வருகிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் மக்களுக்குச் சொல்வது, ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுவது, கல்வி, சுகாதாரத்தை மேம்படுத்துவது, நாட்டை மாபெரும் வல்லரசாக மாற்றுவது, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவது ஆகியவைதான்.
தங்கள் கட்சியின் திட்டங்களை மக்களிடம் கவர்ச்சிகரமான முறையில் பிரசாரம் செய்து ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள். பல திட்டங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்கிறார்கள். சில திட்டங்களை விரைவாக நடைமுறைபடுத்துகிறார்கள். அவை பற்றி பெரிய அளவில் ஊடகங்களில் பிரசாரம் செய்கிறார்கள். மக்கள் வாழ்க்கையில் சில முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன.
தலைவர்களின் குடும்பங்களும் வளர்கின்றன. மகன், மகள்கள் படித்து பட்டம் பெறுகிறார்கள். டாக்டர், என்ஜினியர், பேராசிரியர், கணக்காயர் என்று சிலர் வேலைக்குப் போகிறார்கள். தலைவர்கள் அமைச்சர்களாகி அலுவல் காரணமாகவும், கட்சிப் பணி காரணமாகவும் உழைப்பதைப் பார்க்கிறார்கள். இடையறாது உழைக்கும் தலைவருக்கு உதவி புரிய, அவருடைய வேலைப் பளுவைக் குறைக்க, மக்களிடம் அவருக்குள்ள நெருக்கத்தை நல்ல முறையில் பேணிக் காக்க அவருடைய மகன், மகள்கள் உதவிக்கு வருகிறார்கள். அவர்கள் தலைவருடைய அருமை மக்கள் என்ற அளவில் கட்சி சார்ந்தவர்களிடமும் பொதுமக்களிடமும் மதிப்பு பெறுகிறார்கள். இரண்டாவது தலைமுறை, அரசியல் நீரோட்டத்தில் முதலிடம் பெறுகிறது. வாரிசு கண்களுக்குத் தெரியாமல் முக்கியத்துவம் பெறுகிறது.
கலில் ஜிப்ரான் என்ற கவிஞர், "குழந்தைகள் உங்கள் வழியாகப் பிறக்கிறார்கள். ஆனால் அவர்கள் உங்கள் குழந்தைகள் இல்லை' என்றார். அதன் பொருள், ஒவ்வொரு மகனும், மகளும் தனி உயிர். தனி ஆளுமை கொண்டவர்கள். அவர்கள் தாய், தந்தை, தம் குடும்பம், முன்னோர்களைச் சார்ந்து இருப்பதில்லை என்பதுதான். குடியரசுத் தலைவர்கள், பிரதம மந்திரிகள், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு தத்துவம் தெரிவதில்லை. தன்னைப் போலவே தம் மக்களும் கட்சியிலும், ஆட்சியிலும் முதலிடத்தில் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். அதற்காகக் கடுமையாக உழைக்கிறார்கள். சாதுரியமும் திறமையுங் கொண்டவர்கள் சாதனை புரிகிறார்கள். ஜனநாயகத்தின் பேரில் குடும்பத்தின் ஒற்றை ஆட்சி முறையை ஸ்தாபிக்கிறார்கள். அவர்களின் குடும்பத்து பீடும் பெருமையும் பத்திரிகைகள், ஊடகங்களின் வழியாக மக்களின் மனத்தில் ஏற்றப்படுகிறது. கதியற்ற மக்கள், தங்களைக் காக்க வந்த மகா புருஷர்களின் ஆட்சி மலர வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்க வைக்கப்படுகிறார்கள்.
சர்வாதிகாரி ஹிட்லர் தன் சுய சரித்திரமான மெயின் கேம்பில், "சாதாரண மனிதர்கள் சின்னச் சின்ன பொய்கள் சொல்லி ஜீவிக்கிறவர்கள். அவர்களிடம் பெரிய பொய்யைச் சொன்னால் அப்படியே நம்பி விடுவார்கள்' என்று சொல்லி வைத்திருக்கிறார்.
மனிதர்களின் மகத்தான ஆசை, தலைவர்களின் பேராசை என்றால் அது தன் மனைவி, தன் மக்கள், தன் குடும்பம் என்பதுதான். தன் அறிவு, ஆற்றல், பணியின் விளைச்சலை தம் மக்களே அறுவடை செய்து அனுபவிக்க வேண்டும் என்று விழைகிறார்கள். இது இன்று நேற்று வந்ததில்லை.
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக, கிரேக்க ஜனநாயக மரபை அறுத்ததும் அதுதான். எனவேதான் ஜனநாயகம் தழைக்க சாக்ரடீஸின் உற்ற மாணவராகிய பிளோட்டோ, நல்லாட்சிக்காக குடியரசு என்ற கருத்தை முதன்மைப்படுத்தினார். அதற்காக "குடியரசு' என்ற பெயரில் ஒரு புத்தகமே எழுதினார். அவருடைய குடியரசில் குடியரசுத் தலைவர், பிரதம மந்திரி எல்லாம் கிடையாது. ஒரு குழு ஆட்சியில் இருக்கும். குழுவில் இடம் பெற்றவர்களுக்குக் குடும்பம் கிடையாது.
பிளோட்டோ குடியரசில் அறிவும் ஆற்றலும், உடல் வலிமையும், இளமையுங் கொண்ட ஆண் மக்களும், அழகும், வனப்பும், பருவமுங் கொண்ட மகளிரும் இணைந்த ஒரு குழு அமைக்கப்படும். அவர்கள் ஒன்று சேர்ந்து சிறந்த திட்டங்களைத் தீட்டி மக்களின் நல்வாழ்க்கைக்காக அயராது உழைப்பார்கள். மக்களுக்குப் பாடுபடுவதே அவர்களின் வாழ்க்கை. ஏனெனில் அவர்களுக்குத் தனியாகக் குடும்பம் கிடையாது. சொத்துகள் இல்லை. மனைவி கிடையாது. கணவன் இல்லை. ஆற்றல் மிகுந்த இளைஞர்களும், அழகு மிளிரும் மகளிரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்வார்கள்; சேர்ந்தே வாழ்வார்கள்.
பெண்கள் பிள்ளை பெறுவார்கள். அவை உடனடியாகத் தாயிடம் இருந்து பிரிக்கப்படும். அதற்குத் தனது தாய் யாரெனத் தெரியாதது போலவே தந்தையும் யாரென அறியாமலேயே வளர்க்கப்படும். தாதிகள், தேசத்தின் சொத்தான குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து ஆளாக்குவார்கள்.
அந்தக் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியும், நல்ல உடற்பயிற்சியும் கொடுக்கப்படும். பெண், ஆண் என்ற பேதமின்றி அவை வளர்க்கப்படும். ஏனெனில் அவர்கள் தேச பிரஜைகள். தேசத்தை ஆள்வதற்காக, ஆளுகின்றவர்கள் மூலமாகப் பிறந்தவர்கள். அவர்களால் தேசம் நன்கு வளர்ந்து முதன்மை பெறும்.
பிளோட்டோ சித்தாந்தம் அவர் காலத்தில் உருவாகவில்லை. ஏனெனில் ஒவ்வொரு ஜனநாயகவாதியும், தான் என்ற முனைப்பிலும், தன் குடும்பம், தன் மக்கள் என்பதிலும் அதிகமான ஆர்வங் கொண்டிருந்தார்கள். அவற்றை அடைய பெரிதும், சிறிதுமான பல காரியங்களைச் செய்தார்கள். பிளோட்டோவின் மாணவராகிய அரிஸ்டாட்டில் காலத்தில், கிரேக்க நாட்டை பிலிப் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் மகன் அலெக்சாண்டர். அவன் இளம் பருவத்தில் அரிஸ்டாட்டில் அகாதெமியில் கல்வி கற்றவன்.
அலெக்சாண்டர், பிலிப் மன்னனின் மகன் என்ற பெருமிதத்தோடு உலகத்து நாடுகளை எல்லாம் வென்று அடிமைப்படுத்த பெரும்படையுடன் புறப்பட்டான். அவனும், அவன் குதிரைப் படையும் சிப்பாய்களும் கிளப்பிய புழுதியில் பிளோட்டோவின் குடியரசு கோட்பாடு மண்ணில் புதைந்து போய்விட்டது.
அரச பரம்பரை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், எதுவும் உலகத்தில் இல்லாமல் முற்றாக மறைந்து போவதில்லை என்று சொல்வது மாதிரி ஜனநாயக முறையில் குடியரசுத் தலைவர் பரம்பரை, பிரதம மந்திரி பரம்பரை, முதலமைச்சர் பரம்பரைகள் ஆட்சிக்கு வந்து விட்டன. அதற்கு ஒரு நாடு என்று என்றில்லை. பல நாடுகளிலும் உதாரணங்கள் எடுத்துக் காட்டலாம். நாடும், பெயரும் முக்கியமல்ல. தங்கள் பரம்பரையை ஏற்படுத்துவதில், அவர்களைப் பதவியில் அமர்த்துவதில் தலைவர்களுக்கு பெரும் விருப்பம் இருக்கிறது. அதனை ஏற்றுக் கொள்வதில் மக்களுக்கும் தயக்கம் ஏதுமில்லை என்பதும் கண்கூடாகத் தெரிகிறது. அது எளிய மக்கள் ஏமாளிகளாக இருக்கிறார்கள் என்பதைப் புரிய வைக்கிறது. உலக சரித்திரம் என்பது பரம்பரைகளின் சரித்திரம். எகிப்து, மெசபடோமியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் சரித்திரம், அரச பரம்பரைகளின் சரித்திரமாகவே இருக்கிறது. தமிழகத்தின் சரித்திரம் சேர, சோழ, பாண்டிய பரம்பரையின் சரித்திரம். அதன் மீட்சியாகவே புதிய பரம்பரை இருக்கிறது.
பரம்பரை என்றால் புனிதமானது என்பதில்லை. குடும்பத்தில், நாட்டில் உள்ள எல்லாம் அதில் இருக்கும். ஆனால், பரம்பரை என்பது அதிகாரம் கொண்டது. பணம் சொத்து என்று பெரும் செல்வம் உடையது. புதிய பரம்பரை, அதிகாரத்தின் வழியாகப் பணம் சம்பாதித்துக் கொண்டு, தொழில், வணிகம், பத்திரிகை, ஊடகம் என்று இறங்கி பரந்து விரிந்து விடுகிறது. அதனை நிலைநிறுத்திக் கொள்ள தனக்குப் பிறகு தன் குடும்பத்து வாரிசுகளை முன்நிறுத்துகிறது. இதுவே இப்போது இந்தியாவில் அசுர வேகத்தில் நடந்து வருகிறது.
கட்டுரையாளர்: எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...