தங்க இறக்குமதிக்கு தடை தேவை
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2012-ஆம் ஆண்டு, அக்டோபர்-டிசம்பர்


இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2012-ஆம் ஆண்டு, அக்டோபர்-டிசம்பர் காலாண்டில், நம் நாட்டு நடப்பு கணக்கின் பற்றாக்குறை (அன்னியச் செலாவணியின் வரவு, செலவு கணக்கு இடைவெளி) வரலாறு காணாத வகையில், நமக்கு "பாதகமாக' விரிவடைந்திருக்கிறது.
2011-ஆம் ஆண்டு, அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 20 பில்லியன் டாலர்களாக இருந்த இந்த இடைவெளியின் அளவு 32.6 பில்லியன் டாலர்களாக (1,79,300 கோடி ரூபாய்) உயர்ந்திருக்கிறது. இது இந்திய உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி..) 6.7 சதவிகிதம் ஆகும். கடந்த ஒப்பீட்டு காலத்தைவிட, தற்போது இந்த இடைவெளி 60 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
1991-ஆம் ஆண்டில், இந்தியா கடும் பொருளாதார நெருக்கடி நிலையைச் சந்தித்தபோது நிலவிய பற்றாக்குறை நிலைமையை விட, இது இரு மடங்கு அதிகமாகும். அந்தத் தருணத்தில், பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க, நாட்டின் தங்க கையிருப்புகளை அடமானம் வைக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். இதற்கு முக்கிய காரணி, நம் நாட்டின் ஏற்றுமதிகளைவிட, இறக்குமதித் தேவைகள் அதிகரித்துக்கொண்டிருப்பதுதான்.
நமக்குத் தேவையான 80 சதவிகித பெட்ரோலிய கச்சா எண்ணெய் தேவைகளை நாம் இறக்குமதி செய்கிறோம். அதற்கான அன்னியச் செலாவணி செலவு 46.9 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதே சமயத்தில், தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான செலவுகள் 49.4 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. தற்போது நிலவிவரும் சர்வதேசப் பொருளாதார மந்தநிலையால், மென்பொருள் ஏற்றுமதியின் அளவில் ( 18.9 பில்லியன் டாலர்கள்) பெருமளவில் முன்னேற்றமில்லை. மற்ற பொருள்களின் ஏற்றுமதி மதிப்பு குறைந்து கொண்டிருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் ஸ்திரத்தன்மை இல்லாததால், நம் நாட்டுக்கு அன்னியச் செலாவணி அனுப்புவதில் அயல்நாடுவாழ் இந்தியர்களிடையே தயக்கம் நிலவுகிறது.
நம்முடைய அன்றாட வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கக்கூடிய நேரடித் தொடர்புகள், இந்தப் பொருளாதார நிகழ்வுகளில் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்திருக்கின்றன. உதாரணமாக, நம் இந்திய ரூபாயின் மதிப்பைக் கணக்கிடுவதில், நடப்பு கணக்கின் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணியாக அமைந்திருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பின் சமீபத்திய பெரும் வீழ்ச்சிக்கு, நடப்பு கணக்கில் விரிவடையும் இடைவெளி ஒரு முக்கிய காரணமாகும்.
பல நாடுகளின் "தர மதிப்பீட்டை' வழங்கும், மூடிஸ், ஃபிட்ச் போன்ற நிறுவனங்கள், இந்தப் பொருளாதார நிகழ்வுகளை ஒரு காரணியாகப் பயன்படுத்தி, நம் நாட்டின் சர்வதேச முதலீடுகளுக்கான மதிப்பீட்டை சமீபத்தில் குறைத்தது, அதிர்வு அலைகளை ஏற்படுத்தின. இது ஒரு சுழல் போன்றது. இதனால், சர்வதேசச் சந்தைகளில் நம் நாட்டின் மதிப்பீடு குறையும். இந்திய வங்கிகள், மற்றும் தனியார் கம்பெனிகள், சர்வதேசச் சந்தைகளில் பெறும் கடன் தொகைகளுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கும். இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதால், எரிபொருள்களின் விலை அதிகமாகும், விலைவாசி கூடும், பண வீக்கம் பெருகும்.
இதற்கான தீர்வுகளில் ஒன்று, இந்தியப் பொருள்களின் ஏற்றுமதிகளை அதிகரிப்பதாகும். தற்போதைய உலகப் பொருளாதார மந்தநிலையில் இதற்கான உடனடி சாத்தியக்கூறுகள் இல்லை. எஞ்சியிருக்கும் ஒரே தீர்வு, இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவது மட்டும்தான்.
நம் நாட்டு இறக்குமதிச் செலவில், பெட்ரோலியப் பொருள்களுக்கு அடுத்தபடியாக தங்க இறக்குமதிச் செலவுகள் இரண்டாமிடத்தை ஆக்கிரமிக்கின்றன. மொத்த இறக்குமதிச் செலவுகளில், தங்க இறக்குமதிக்கான செலவு 10 சதவிகிதத்துக்கு மேலாகும். உலக கோல்டு கவுன்சில் அறிக்கையின்படி, 2011-12-ஆம் ஆண்டில், இந்தியா, ரூ3,38,250 கோடி மதிப்பிலான 969 டன் தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறது. 2012-13-ஆம் ஆண்டில், தங்க இறக்குமதி ரூ2,75,000 கோடிகளாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில், இரண்டு சதவிகித தங்கம் மட்டும்தான், தொழில் உற்பத்தித் துறையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. மற்றவை யாவும், தங்க நாணயங்கள், பாளங்கள், மற்றும் நகைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தில், 10 சதவிகிதம் வரை நகைகளாக மாற்றப்பட்டு ஏற்றுமதியாகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, தங்கம் அனைத்துத் தரப்பினராலும், ஒரு முதலீட்டுப் பொருளாகவே கருதப்படுகிறது. ஆனால், இது இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வகையிலும் உதவாத ஒரு முதலீடு. கிராமப்புற மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் பெரும்பாலான சேமிப்புகள், தங்கத்தில் முதலீடு செய்யப்படுகின்றன. இந்தியர்களின் வருவாயில் 30 சதவிகிதம் சேமிக்கப்படுகிறது. அதில், 10 சதவிகிதம் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது.
2011 நிலவரப்படி, இந்தியாவில் புழங்கும் தங்கத்தின் அளவு சுமார் 20,000 டன்கள். அதன் மதிப்பு சுமார் 54 லட்சம் கோடி ரூபாய். தங்க இறக்குமதியினால், பெருமளவு பயன் பெறுவது, அதை ஏற்றுமதி செய்யும் மேற்கத்திய நாடுகள்தான். அவர்களுடையப் பொருளாதார வளர்ச்சி, நம்முடைய வீழ்ச்சிக்குக் காரணமாகி விடக்கூடாது.
பாதுகாப்பான சேமிப்புக்கு தங்கம்தான் உறைவிடம் என்ற மனப்பான்மை நம்மிடையே மாறவேண்டும். பாதுகாப்பான, மாற்று சேமிப்பு திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தி, அவற்றை வேகமாக கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்தவேண்டும். விவசாயிகளின் சேமிப்புகளுக்கு அதிக வட்டி வழங்கும் திட்டங்களுடன், அவைகளின் மீது, தங்க அடகுக் கடன்கள் போல், குறுகிய கால கடன்கள் பெறுவதற்கு, தபால் அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் மூலம் வழி வகுக்கவேண்டும்.
சில ஐரோப்பிய நாடுகள்போல் நாம் சில குறுகிய கால தியாகங்களைச் செய்துதான் ஆகவேண்டும். நாட்டின் பொருளாதார நிலைமை சீரடையும்வரை, தங்க இறக்குமதிக்குத் தற்காலிகத் தடை விதிப்பதையும் அரசாங்கம் பரிசீலித்துச் செயல்படுத்தவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...