தமிழ் வளர்ந்ததும், தென்றல் பிறப்பதும் சந்தனப் பொதிகையில் ஆகும். தொன்றுதொட்டு தமிழோடு இணைத்துப் பேசப்படும் மலை பொதிகை ஆகும். இம்மலையின் சிறப்பினை சங்க காலம் முதல் இன்றுவரை தோன்றிய இலக்கியங்கள் அனைத்தும் குறிப்பிடுகின்றன. மதுரைக் காஞ்சி, பரிபாடல், குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்களிலும் பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், இராமாயணம், பாரதம் போன்ற புராண இதிகாச இலக்கியங்களிலும் மூவர் தேவாரம், திருவாசகம் முதலிய திருமுறைகளிலும் திருப்புகழ் போன்ற அருட்பாடல்களிலும் பொதிகை சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. தென்பொதிகையில்தான் தண்பொருனை பிறக்கிறது.
பொதிகையில் தமிழ் பிறந்தது என்று வில்லிபாரதம் கூறுகிறது.
"பொருப்பிலே பிறந்து' தென்னன் புகழிலே
கிடந்து, சங்கத்(து)
இருப்பிலே இருந்து, வையை
ஏட்டிலே தவழ்ந்த பேதை.
நெருப்பிலே நின்று, கற்றோர்
நினைவிலே நடந்தோர் என
மருப்பிலே பயின்ற பாவை
மருங்கிலே வளருகின்றாள்.
(வி.பா.)
பெருமை மிக்க பொதிகையில் பிறந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் வழியாக 120 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடி வங்கக் கடலில் கலக்கிறது பொருநை என்னும் தாமிரவருணி. தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி தமிழ்நாட்டிற்குள்ளேயே ஓடிக் கடலில் கடக்கும் ஒரே நதி பொருநை மட்டுமே.
பொதிகை மலைத் தொடரில் பாபநாசம் என்னும் அழகிய சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. பொதிகை மலைக் காடுகள் அடர்த்தியானவை அழகானவை. பல்வேறு விலங்கினங்கள் அங்கே வாழ்கின்றன.
பாபநாசம் ஊரிலிருந்து மலைமேல் 40 கிலோ மீட்டர் தொலைவில் வானதீர்த்தம் என்னும் பாணதீர்த்தம் அமைந்துள்ளது. பாபநாச அணை நீர்த்தேக்கத்தைப் படகில் கடந்து இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அருவி 122 அடி உயரத்திலிருந்து விழுவது இனிமையான காட்சியாகும். அதற்குக் கீழே கலியாணத் தீர்த்தம் என்னும் அருவி உள்ளது. 162 அடி உயரத்திலிருந்து இது விழுகிறது. யாரும் குளிக்க இயலாது. அருவித் தண்ணீர் தேங்கி நிற்கும் குளமே குளிப்பதற்குரிய இடமாகும்.
அதிலிருந்து கீழே சற்றுத் தூரத்தில் பல கிளைகளாக விழும் அழகான அகத்தியர் அருவி உள்ளது. 40 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவியில் மக்கள் விரும்பிக் குளிக்கிறார்கள். அதற்குக் கீழே ஆறு தரையில் இறங்கும் இடத்தில் தலையணை என்ற ஒரு அணை கட்டப்பட்டுள்ளது. இதன் மேல் வழிந்து விழும் அருவியிலும் மக்கள் விரும்பிக் குளிக்கிறார்கள்.
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு முண்டந்துறைப் பகுதி முழுவதும் புலிகளின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயப் பகுதியில் திருக்குறுங்குடி, திருமலைக்கோவில், பாபநாசம் சொரிமுத்தையனார் கோவில், கோரக்கநாதர் கோயில், அகத்தியர் கோயில், வனப்பேச்சியம்மன் கோயில் போன்ற வழிபடு தலங்களும் அமைந்துள்ளன.
பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே இக்கோயில்களுக்குச் சென்றும் இங்குள்ள அருவிகளில் நீராடி மகிழ்ந்தும் வருவது மக்களுக்கு வழக்கமாக உள்ளது. ஆனால் இப்போது புலிகள் சரணாலயப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் நுழைவதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புலிகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஜுலை 25ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இத்தகைய இடைக்காலத் தடையை விதித்துள்ளது.
பாபநாசம் மற்றும் கோயில்களுக்கும் பொதிகை மலையில் உள்ள அருவிகளுக்கும் சாதாரண ஏழை எளிய மக்களும் மத்தியதர வர்க்க மக்களும் சென்று மகிழ்ந்து வருகிறார்கள். ஆனால் இப்போது இந்தத் தடையின் விளைவாக இந்த மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இத்தனை காலமாக புலிகள் சரணாலயப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்று வந்ததனால் புலிகளுக்கு எத்தகைய இடையூறும் ஏற்பட்டதில்லை. புலிகளால் மக்களுக்கும் ஆபத்து ஏற்பட்டதில்லை.
தாமிரவருணி ஆற்றிலும் அதன் கிளை நதியான சேர்வலாறு ஆற்றிலும் பல அணைகள் அமைக்கப்பட்டுள்ளன. அகத்தியர் அருவிக்கு அருகே பாபநாசம் புனல் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. அதன் அலுவலர்களின் குடியிருப்பு அதற்குமேலே உள்ள ஒட்டன் தலம் என்ற இடத்தில் அமைந்து பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கே வாழ்ந்து வருகின்றன. மற்ற அணைப் பகுதிகளிலும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வாழ்கிறார்கள். இதைத் தவிர இந்த மலைமேல் பல இடங்களில் மலைவாசி மக்களின் குடியிருப்புகள் பல நூற்றாண்டுக் காலமாக இருந்து வருகின்றன. இப்போது விதிக்கப்பட்டுள்ள தடையின் விளைவாக மலைவாசி மக்கள் மட்டுமல்ல புனல் மின் நிலையக் குடியிருப்பு மற்றும் அணைகளில் வேலை பார்க்கும் அலுவலர்களின் குடியிருப்புகள் அத்தனையும் அகற்றப்பட வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இத்தனை ஆண்டுகாலமாக மக்கள் வாழ்ந்தும் புலிகளுக்கோ மற்ற விலங்குகளுக்கோ எத்தகைய ஊறும் விளைந்துவிடவில்லை.
இந்த உண்மைகளை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டு இந்தத் தடையை விலக்குவதற்கும் சாதாரண மக்களின் மகிழ்விடமாகத் திகழும் அகத்தியர் அருவி போன்றவற்றில் குளிப்பதற்கும் அனுமதியைப் பெற்றுத்தர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


