தேரு வருதே... தேரு வருதே...
சித்திரை பிறந்துவிட்டாலே கோயில் திருவிழாக்கள் குறிப்பாக, தேர்த் திருவிழாக்கள் குக்கிராமங்கள் தொடங்கி, மாநகரம் வரை நடைபெறுவது வழக்கமானதுதான். தேர்த் திருவிழாக்களில் நடைபெற்ற அடுத்தடுத்த விபத்துகளால் க


சித்திரை பிறந்துவிட்டாலே கோயில் திருவிழாக்கள் குறிப்பாக, தேர்த் திருவிழாக்கள் குக்கிராமங்கள் தொடங்கி, மாநகரம் வரை நடைபெறுவது வழக்கமானதுதான். தேர்த் திருவிழாக்களில் நடைபெற்ற அடுத்தடுத்த விபத்துகளால் கடவுளிடம், "தேர்த் திருவிழாவை விபத்து இன்றி நடத்திக் கொடு' என்று பக்தர்கள் கட்டாய வேண்டுதல் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மே 1-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி கைலாயநாதர் கோயில் தேரோட்டத்தின்போது, தேர் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்தனர். அதற்கடுத்த நாளே வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஸ்ரீகருப்புலீஸ்வரர் கோயில் தேரோட்டத்தின்போது, தேர் மீது மின்சாரம் பாய்ந்து 5 பேர் உயிரிழந்தனர். இவ்விரு சம்பவங்களிலும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
அண்மையில் நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி நடைபெற்ற சந்தனக் கூடு ஊர்வலத்தில் அணிவகுத்து வந்த அலங்கார வாகனத்தில் மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
ஒரு காலத்தில் தேரோடும் வீதிகள் விசாலமானதாக இருந்தன. இப்போதோ ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதில் குறுகலான வீதிகள்; போடப்பட்ட சில மாதங்களிலேயே குண்டும், குழியுமாகிவிட்ட சாலைகள்; இடியாப்பச் சிக்கலில் மின்கம்பங்களில் இருந்து வீடுகளுக்குச் செல்லும் மின்வயர்கள்; குறுக்கும், நெடுக்குமாக கேபிள் டி.வி. வயர்கள், டெலிபோன் வயர்கள்.... இவையெல்லாம் வழக்கமாக தமிழகத்தின் வீதிகளில் காணப்படும் காட்சிகள். இந்த வீதிகளில்தான் தேரும் ஓட வேண்டும்.
கடவுள் என்ன அதிகார வர்க்கமா? வரும் பாதையை முன்கூட்டியே செப்பனிடவும், பல நாள்களுக்கு முன்பே ஒத்திகை பார்க்கவும், அணிவகுத்து பாதுகாப்பு வாகனங்கள் பவனி வரவும்!
பெரும்பாலான தேர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டவை. அவை தேரோட்டத்துக்கு முன்னர் நல்ல நிலையில் இருக்கிறதா என்பதைப் பார்ப்பது சில இடங்களில் மட்டுமே வழக்கத்தில் உள்ளது. தேர் பராமரிப்பும் பல இடங்களில் முறையாக நடைபெறுவதில்லை.
முக்கியத் திருக்கோயில்களில் உள்ள தேர்கள் ஹைட்ராலிக் முறையில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இதுபோல, படிப்படியாக அனைத்துத் தேர்களையும் சீர்படுத்த
செல்வந்த ஆன்மிக அன்பர்களும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கணக்கின்றி இருக்கும் ஆன்மிக மடங்களும் இதில் மேலும் கூடுதல் கவனம் காட்டலாம். திருக்கோயில்களைப் பராமரித்தும், சொத்துகளைக் கண்காணித்தும் வரும் அறநிலையத் துறை வருவாய் ஈட்டுவதில் காட்டும் அக்கறையை பக்தர்களின் நலனில் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு பக்தர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. வருவாய் ஈட்ட முனைப்புடன் செயல்பட வேண்டியதுதான்; அதேசமயம் பக்தர்கள் நலனுக்கும், பாதுகாப்புக்கும் செலவழிக்கவும் வேண்டுமல்லவா?
திருவிழாக்கள் நடைபெறும்போது முன்கூட்டியே பக்தர்கள், ஆன்மிக அமைப்புகளிடமிருந்து உரிய ஆலோசனைகளைப் பெற்று குறைகளைக் களைய நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும். மின்சாரம், உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித் துறை போன்ற அரசுத் துறையினரை அழைத்து ஆலோசனைக் கூட்டம் போட்டு, இனிவரும் காலங்களில் பக்தர்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் திருவிழாக்களை நடத்தும் முன், திட்டமிடுதல் அவசியம்.
தமிழர்களின் வீர விளையாட்டாக இருந்து வந்த ஜல்லிக்கட்டு, மாடு விடும் திருவிழாக்கள் போன்றவை சமூக சிந்தனையாளர்கள் சிலரின் முயற்சியால் நீதிமன்றங்கள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டன.
இப்போது கடுமையான விதிமுறைகளுக்கு உள்பட்டு, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல் வரும் காலங்களில் தேர்த் திருவிழாக்களின்போது அசம்பாவிதங்கள் நடைபெறாதவாறு, கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த மாநில அரசு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
"தேரு வருதே' என்ற வார்த்தையை முதலில் இருந்தும் கடைசியில் இருந்தும் படித்துப் பாருங்கள் "தேரு வருதே' என்ற உச்சரிப்பில் மாற்றம் வராது. தேர் தொடர்பான இந்த வார்த்தையை உச்சரிப்பு விளையாட்டு விளையாடி மகிழ்வதுண்டு. கோயில் திருவிழா அதுவும் தேர்த்திருவிழாக்களின் உற்சாகம் சொல்லி மாளாது. இந்த உற்சாகம் நிலைக்க இப்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் போதவே போதாது.
உள்ளூர் முக்கியப் பிரமுகர்கள், உள்ளாட்சி அமைப்புகள், மின் துறை, காவல் துறை இணைந்த கூட்டத்தை முன்கூட்டியே கூட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். தேரோடும் வீதிகளில் முன்னெச்சரிக்கையாக மின்சாரத்தை நிறுத்த வேண்டும். இருக்கவே இருக்கிறது மின்தட்டுப்பாடு என்று அசட்டையாக இருந்துவிடக் கூடாது.
எந்தத் திருவிழாவாக இருந்தாலும் அது கோயில் திருவிழாவாக இருந்தாலும், "குவார்ட்டராவது அடித்தால்தான் அந்தஸ்து' என்ற கலாசாரத்துக்கு விடை கொடுக்க வேண்டும்.
தேர்த்திருவிழாவை விமரிசையாகக் கொண்டாடுங்கள் அதில் தவறில்லை. ஆனால், அது பாதுகாப்பானதாக இருக்கட்டும். ஏனென்றால், போனால் வராது உயிர்.
பக்தர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; பாதுகாப்பான கோயில் விழாக்களை நடத்த அரசும் முன்வர வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...