கேலிக்கூத்து!
தமிழகத்தின் மிகத்தொன்மையான திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 292-வது பட்டம் சமீபத்தில் 293-வது ஆதீனமாக சர்ச்சைக்குரிய யோகா குரு நித்யானந்தாவைத் தேர்வு செய்து பெங்களூர் பிடதியில் நித்யானந்தா ஆசிரமத


தமிழகத்தின் மிகத்தொன்மையான திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 292-வது பட்டம் சமீபத்தில் 293-வது ஆதீனமாக சர்ச்சைக்குரிய யோகா குரு நித்யானந்தாவைத் தேர்வு செய்து பெங்களூர் பிடதியில் நித்யானந்தா ஆசிரமத்தில் வைத்து அவருக்குத் தங்ககிரீடம் சூட்டி தங்கச்செங்கோல் வழங்கி விழா நடத்தியது ஆன்மிகவாதிகள் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தருமை ஆதீனத்தில் கூடிய தமிழகத்தின் குருமகா சந்நிதானங்கள் அனைவரும் இதுவிஷயத்தில் கண்டனம் தெரிவித்துப் பத்து நாள்களுக்குள் மதுரை ஆதீனப் பொறுப்பிலிருந்து நித்யானந்தாவை நீக்க வேண்டும் என்று கெடு வைத்துள்ளனர். ஏட்டிக்குப் போட்டியாக நித்யானந்தாவும் கெடுவைத்துள்ளார்.
1500 வருடங்களுக்கு முன்பு திருஞான சம்பந்தர் மதுரைக்கு விஜயம் செய்தபோது மந்திரி குலச்சிறையார் சம்பந்தர் பெருமானை இம்மடத்தில் தங்க வைத்தார். மதுரை மன்னன் கூன்பாண்டியன் சமண மதத்தை ஏற்றுக்கொண்டு வாழ்ந்த காரணத்தால் பாண்டிய நாடு முழுவதும் சமண மத ஆக்கிரமிப்பில் இருந்தது. சிவாலயங்களில் பூஜைகள் நடைபெறவில்லை, சிவநாமத்தைக் கேட்டால் கேட்டுமுட்டு என்கிற தீட்டு, சிவச்சின்னங்களைப் பார்த்தாலே கண்டுமுட்டு என்கிற தீட்டு என மக்கள் திருநீறு பூசக் கூட அஞ்சி வாழ்ந்தகாலம் அது.
கூன்பாண்டியன் மனைவி பெயர் மானி. சோழநாட்டு இளவரசியான அவர் சைவ சமயத்தின்பால் பற்றுக் கொண்டு மார்பில் மறைவாக திருநீறு பூசி வாழ்ந்தார். மந்திரி குலச்சிறையாரும் சிவபக்தர். அரசியும் மந்திரியும் ஆலோசனை செய்து திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்தனர்.
மதவெறி கொண்ட சமணர்கள் சம்பந்தரைக் கொலை செய்யும் உள்நோக்கத்துடன் சம்பந்தர் தங்கியிருந்த இம்மடத்திற்கு தீ வைத்தனர். சம்பந்தர் மடத்தை விட்டு வெளியில் வந்து ஆலவாய் அண்ணலை தேவாரப்பதிகப் பாடலால் வேண்டினார். நெருப்பு வெப்பு நோயாக மாறிக் கூன்பாண்டியனை வாட்டியது.
சமணர்கள் மன்னனின் நோயைக் குணப்படுத்த பல முயற்சி செய்தும் பலனில்லை. ஞானசம்பந்தப் பெருமான் மன்னனின் வெப்பு நோயை திருநீற்றுப் பதிகம் பாடி குணப்படுத்தினார். சமணர்கள் மீண்டும் போட்டிக்கு அழைத்தனர். அனல் வாதம், புனல் வாதம் அனைத்திலும் ஞானசம்பந்தர் வென்று கூன்பாண்டியனின் கூன் முதுகு நோயை நீக்கி நின்றசீர் நெடுமாறனாக மாற்றினார். மதுரைக்கு வந்த அன்றைய சோதனை நீங்கியது.
ஞானசம்பந்தப் பெருமான் சைவத்தையும், தமிழையும் மதுரையில் மீண்டும் நிலைநாட்டினார். இச்செய்திகள் முழுவதும் சேக்கிழார் அருளிய பெரிய புராணத்திலும், சுந்தரர் அருளிய திருத்தொண்டர் தொகையிலும், நம்பியாண்டார்நம்பிகள் அருளிய திருத்தொண்டர் அந்தாதியிலும் காணப்படுகிறது. தமிழகத் திருக்கோயில் கல்வெட்டுகள் மற்றும் தேவாரப்பதிகப் பாடல்கள் ஆகியவற்றில் இவ்வரலாற்றுச் செய்திகள் சிறப்பாக இடம்பெற்று உள்ளன.
திருஞானசம்பந்தப் பெருமான் சமயக்குரவர் நால்வரில் முதல்வர். சீர்காழி நகரில் சிவபாத இருதயருக்கு மகனாகப் பிறந்தவர். மூன்று வயதில் உமையம்மையால் ஞானப்பால் புகட்டப்பெற்று தோடுடைய செவியன் எனும் பதிகத்தைப் பாடினார். பதினாறு வயது வரை வாழ்ந்த பெருமான் தன்னை தமிழ் ஞான சம்பந்தன், நற்றமிழ் ஞானசம்பந்தன் என திருக்கடைக்காப்பு பாடல்களில் குறிப்பிடுகிறார்.
குடும்ப மற்றும் சமூக நிர்பந்தம் காரணமாக திருமணத்துக்குச் சம்மதித்து மணக்கோலத்தில் உள்ளபோது தனக்குக் குடும்ப வாழ்வு தேவையா என்று பெருமானை நினைத்துக் காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கிப் பாடியபோது ஜோதி வடிவத்தில் இறைவன் தோன்றி சம்பந்தருக்கும் அங்கு உள்ள அனைவருக்கும் முக்திபேறு கொடுத்தார். சம்பந்தர் ஒழுங்குபடுத்திய மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். சைவ சித்தாத்தங்களை அடிப்படையாகக் கொண்ட மடம் இது. இதுவரை 292 குருநாதர்கள் இந்த ஞானபீடத்தை அலங்கரித்துள்ளனர்.
பொதுவாக சைவ மடங்களில் ஆதீனத் தலைமைப்பொறுப்புக்கு வருபவர்கள் சமய தீட்சை, விசேஷ தீட்சை, நிர்வாண தீட்சை பெற்றவர்களாகவும் ஆன்மார்த்த சிவபூஜை செய்பவர்களாகவும், சிரியை, கிரியை, யோகம், ஞானம் என முறையாக சைவ சித்தாந்த வாழ்நிலை பயிற்சி பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
குருநாதரிடத்தில் அவரின் வழிகாட்டுதலில் மடங்களில் தம்பிரானாக அதாவது கட்டளைத் தம்பிரான், பூசைத் தம்பிரான், ஒடுக்கத் தம்பிரான் எனத் தொண்டு செய்து பயிற்சி பெறுபவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை இளைய ஆதீனமாகத் தேர்ந்தெடுத்து அறிவித்து தற்போதைய குரு மகா சந்நிதானத்தில் சமாதி நிலை ஒடுக்கத்திற்குப் பின் அடுத்த சந்நிதானமாக அபிஷேகம் செய்து மரபுப்படி ஆதீனத்தை அறிவிப்பார்கள். ஆனால், தற்போது நடந்திருப்பது கேலிக்கூத்து. தற்போதைய 292-வது ஆதீனம் ஏற்கெனவே மூன்றுபேரை வாரிசாக நியமித்து பின் வெளியேற்றி உள்ளார். இப்போது நான்காவதாக ஒருவருக்குப் பட்டாபிஷேக விழா நடத்தி இருக்கிறார்.
சாதி ஏற்றத்தாழ்வுகளை மறுத்த ஞானசம்பந்தர் ஆதிசைவ அந்தணர் மரபில் பிறந்தவர். வேளாள சமூகத்தவரான திருநாவுக்கரசரின் திருவடிகளில் விழுந்து வணங்குகிறார். அப்பரே என அவரை அழைத்தார். தனது தேவாரப் பாடல்களுக்கு யாழில் இசை கூட்டிய திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் அவரது மனைவி மதங்கசூளாமணி (திரு எருக்கத்தம் புலியூர்) யையும் தன்னோடு கூடவே தலங்கள் (கோயில்கள்) தோறும் அழைத்துச் சென்றார். அந்தணர் திருநீலநக்கநாயனாரின் வேள்விச் சாலையில் திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தங்க வைத்தார். சாதி ஏற்றத்தாழ்வுகள் தீண்டாமை இழிவுகள் சைவத்தில் இல்லை என்பதற்கு ஞான சம்பந்தப் பெருமான் வாழ்க்கையே சான்று.
பெண்களைத் தாயாக, குருவாக, தெய்வமாகப் போற்றி ஆன்மிகத்தில் பெண்ணுரிமையை நிலைநாட்டியவர் சம்பந்தர் பெருமான்.
காரைக்கால் அம்மையாரைத் தனது ஞான குருவாக ஏற்கிறார். இறைவனை தவிர, எவரையும் பாடாத இவர் மதுரை ராணி மங்கையற்கரசியாரை பதிகப்பாடல்களில் போற்றிப் பாடுகிறார்.
திருவீழிமிழலையில் பஞ்சம் வந்தபோது அங்கு சென்று இறைவனைப் பாடிப் படிக்காசு பெற்று மக்களின் பசிப்பிணியைப் போக்கினார். பலரது நோயைக் குணப்படுத்தினார். சென்னை மயிலை கபாலீசுவரர் திருகோயிலில் கன்னிமாடத்தில் வைக்கப்பட்டு இருந்த பூம்பாவையின் அஸ்தி குடத்தை மக்களின் முன் கொண்டு வரச் செய்து எலும்பைப் பெண்ணாக்கி அற்புதம் நிகழ்த்தினார்.
பூம்பாவையின் தகப்பனார் தன் திரண்ட செல்வங்களையும் ஏற்று பூம்பாவையைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியபோது பூம்பாவையை மகளாக ஏற்றார். தனது பதினாறாவது வயதில் ஆச்சான்புரத்தில் முக்திபேறு அடையும் சமயத்தில் தன்னோடு வந்த அனைவரையும் இறை ஜோதியில் கலக்கச் செய்து தானும் மணக்கோலத்தில் ஜோதியில் ஐக்கியமாகி இறைவனோடு கலந்தார்.
16-வயது வரை வாழ்ந்த சம்பந்தர் முருகப்பெருமானின் அம்சமாகக் கருதப்படுகிறார். 12 ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாரைச் சந்தித்து சைவ வைணவப் போட்டி வளர்வதைத் தடுத்து மங்கையாழ்வாருக்கு வேல் பரிசளித்தார். சைவ வைணவ நல்லிணக்கத்திற்கு அடிகோலினார். தமிழ் வேதமாகிய பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் ஞான சம்பந்தர் அருளியது ஆகும். பரசமயக் கோளரி, பாலறாவாயன், கவுனியர் கோன் போன்ற பதினாறு வகைப்பெயர்களால் அழைக்கப்பட்ட சைவ சமயத்தின் ஒப்பற்ற தலைவர் ஞானசம்பந்தர் ஆவார். பெருமான் அமர்ந்த அந்தப் பீடத்தில் இன்றைய மதுரை ஆதீனத்தின் 292}வது குரு மகா சந்நிதானம் நித்யானந்தாவை அமர வைத்து அழகு பார்க்க நினைக்கிறார் என்பதை நினைக்கவே மனம் கூசுகிறது.
கோடிக்கணக்கில் நன்கொடைகள், தங்க சிம்மாசனங்கள், தங்கக் கிரீடங்கள் ஆகியவை தெய்வத் தன்மைவாய்ந்த ஒரு பீடத்தைக் கபளீகரம் செய்துள்ளதாகவே அனைவரும் கருதுகின்றனர். இப்படி மதுரை ஆதீனத்தில் நித்யானந்தா பெயர் சர்ச்சைக்குரியதாகப் பேசப்பட்டு வரும் வேளையில் இராமகிருஷ்ணா தபோவனத்தின் தலைவர் நித்யானந்தா என்கிற சுவாமிஜி தனது 82 வயதில் இறை நிலை எய்தி இருக்கிறார். விவேகானந்தர் நமக்களித்த தேசிய லட்சியங்களாகிய துறவு தொண்டு என்கிற விஷயங்களுக்கு உதாரணமாக வாழ்ந்தவர். திருப்பராயத்துறை தபோவனத்தை தோற்றுவித்த சுவாமி சித்பவானந்தரை குருவாக ஏற்றுக்கொண்டு துறவு நிலையை மாணவப் பருவத்திலேயே விரும்பியவர். சித்பவானந்தர் சமாதியான பிறகு தலைமைப் பொறுப்பு இவரைத் தேடி வந்தபோது மறுத்தார். தன்னைவிட மூத்த சன்னியாசியான குஹானந்தரைத் தலைவராக்கினார். அதற்குப் பின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். தனது ஓயாத உழைப்பாலும், உறுதியாலும் தபோவன கல்வி நிறுவனங்களையும், தொண்டு நிறுவனங்களையும் மென்மேலும் வளர்த்தார்.
சித்பவானந்தரின் அந்தாயோக வகுப்புகளைத் தமிழகமெங்கும் பரப்பினார். மாணவர்களைச் சிறந்த கல்விமான்களாக ஒழுக்கசீலராக உருவாக்கினார். கடந்த 9-ஆம் தேதி இறை நிலை எய்தினார். ஒரு துறவி எப்படி வாழவேண்டும் என்பதற்கு உதாரணம் தபோவன சுவாமி நித்யானந்தா. அந்தத் தலைசிறந்த ஆன்மிகவாதியின் மறைவு பற்றி வெளியில் தெரியாதவண்ணம் "பிடதி' நித்யானந்தாவின் ஆதீனப் பட்டாபிஷேகப் பிரச்னை மக்கள் மன்றத்தில் விவாதப் பொருளாகி விட்டிருப்பதுதான் துயரத்திலும் துயரம்.
மதுரை ஆதீனம் என்பது ஒரு தனிநபருக்கு பாத்தியப்பட்டது அல்ல. இது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் சொத்தாகும். யாரும் தலையிட முடியாது, எனது தனிப்பட்ட விருப்பம் என்று சொல்வது ஏற்புடையதல்ல. நீதித்துறையும், தமிழக அரசும் இதனை நீண்ட காலம் வேடிக்கை பார்க்காது என்றே கருதுகிறோம். தமிழகத்தின் திருமடங்கள் சில குறிப்பிட்ட சாதிகளைச் சார்ந்தவர்கள் மட்டுமே தலைவராக வரமுடியும் என்பதே கூட சைவ மரபல்ல. இதில் சாதிய கண்ணோட்டம் தேவையுமில்லை. சைவம் சாதிகளுக்கு அப்பாற்பட்டது என்பதை 63 நாயன்மார்களின் வாழ்க்கையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
சைவ ஆதீனங்கள் தமிழையும் சைவத்தையும் வளர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை. இதில் மிகவும் புராதனமானதும், போற்றுதலுக்குரியதும் திருஞானசம்பந்தப் பெருமானால் நிறுவப்பட்ட மதுரை ஆதீனம். அந்த ஆதீனத்துக்குக் களங்கமும் பழியும் ஏற்படுவது தமிழுக்கு ஏற்படும் தலைகுனிவு. மதுரை மீனாட்சி உடனுறை சொக்கநாத பெருமான் அருளால் ஞான சம்பந்தர் பீடமாகிய மதுரை ஆதீனத்தின் புனிதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...