/

அரசியல் நாடகங்கள் அரங்கேற்றம்

உலகமே ஒரு நாடகமேடை என்றும், அதில் நாம் எல்லோரும் நடிகர்கள் என்றும் கூறுவர். நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் நாடகம் முடிந்ததும், தங்களது வேடத்தை மாற்றி விடுவார்கள். ஆனால், நாம் வேடத்தை மாற்றி விடுவதில்ல

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:42 pm

உதயை மு. வீரையன்

உலகமே ஒரு நாடகமேடை என்றும், அதில் நாம் எல்லோரும் நடிகர்கள் என்றும் கூறுவர். நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் நாடகம் முடிந்ததும், தங்களது வேடத்தை மாற்றி விடுவார்கள். ஆனால், நாம் வேடத்தை மாற்றி விடுவதில்லை. அது நிரந்தரம்.

 இந்த அரசியல் மேடைகளில் அரசியல்வாதிகள் நடத்தும் நாடகத்துக்கு முடிவேயில்லை. அதனால் அவர்கள் வேடத்தைக் கலைக்க வேண்டிய அவசியமும் இல்லை. மக்கள் பார்க்கிறார்களா? ரசிக்கிறார்களா? என்ற கவலையில்லாமல் எப்போதும் நடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

 ஆரம்ப காலத்தில் இந்த நாடகத்தைப் பார்த்து ரசித்துக் கைதட்டிய மக்களுக்கு இப்போது சலிப்பு ஏற்பட்டுவிட்டது. ஒரே நாடகத்தை எத்தனை தடவை பார்த்துக் கொண்டிருப்பது? இதுவரை பணம் கொடுத்துப் பார்த்து வந்த மக்கள், இப்போது பணம் வாங்கிக்கொண்டுதான் நாடகம் பார்க்கவே வருகிறார்கள். இப்படி காலம் தலைகீழாக மாறிவிட்டது; என்றாலும் அரசியல்வாதிகள் மாறவேயில்லை.

 நாம் சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. மக்கள்தொகையில் நாடு 4 மடங்காகிவிட்டது. 30 கோடி மக்கள்தொகை 120 கோடியாகிவிட்டது. மக்கள்தொகையின் வளர்ச்சிக்கேற்பத் திட்டமிடுதல் வேண்டும் என்பது பொருளாதார மேதையான பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தெரியாமல் போனது எப்படி?

 விலைவாசிகள் விண்ணைத் தொடுகின்றன. ஏழை எளிய மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் எதிர்காலம் பற்றிய கவலையில் மூழ்கிக் கிடக்கின்றனர்; ஊழலில் நாடே மிதக்கிறது. இதைப்பற்றி எந்த அரசாங்கமும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

 மாநில அரசு பேருந்துக் கட்டணம், ஆவின் பால், மின்சாரக் கட்டணம் என உயர்த்தியது; மத்திய அரசு இதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா? பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கும் என ஒரு கொள்கை முடிவை அறிவித்துவிட்டு, தனது பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டது.

 எண்ணெய் நிறுவனங்களுக்குக் கேட்க வேண்டுமா? கச்சா எண்ணெய் விலை ஏறிவிட்டது என்று கூறிவிட்டு விலையை ஏற்றிக் கொண்டிருக்கிறது. மத்திய கூட்டணி அரசு பெட்ரோல் விலையை இப்போது லிட்டருக்கு ரூ. 7.54 இரவோடு இரவாக உயர்த்திவிட்டது. இரவில் சுதந்திரம் வாங்கியதால் இவர்களும் இரவோடு இரவாகவே எல்லாவற்றையும் உயர்த்துகிறார்கள்போலும்.

 இதில் வேடிக்கை என்னவென்றால் மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகளும், எதிர்க்கட்சிகளோடு சேர்ந்துகொண்டு தனித்தனியாகப் போராட்டங்கள் நடத்தின. மத்திய அரசில் சேர்ந்து பதவி சுகங்களை அனுபவித்துக் கொண்டே மக்கள் பிரச்னைகளுக்காகப் போராட்ட நாடகங்கள் நடத்துகின்றன.

 மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி இன்னும் ஒரு படி மேலே போய்விட்டது. பெட்ரோல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சிக்கோ, மத்திய அரசுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்றும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் அதற்கேற்ப இந்தியாவில் உள்ள அரசு எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தி விடுகின்றன என்றும் நாடகம் ஆடுகின்றது.

 இப்படி ஒரு நாடகம் ஆடுவதற்காகவே பெட்ரோல் மீதான விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம் என்ற முடிவை மத்திய அரசு 2010 ஜுன் மாதம் எடுத்ததோ?

 பெட்ரோல் விலை உயர்வு நியாயமற்றது என்று கண்டித்துள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ""இந்த பெட்ரோல் விலை உயர்வு பற்றி மத்திய அரசு எங்களுடன் கலந்து ஆலோசிக்கவில்லை'' என்று கூறியுள்ளார். அத்துடன் கொல்கத்தாவில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஊர்வலமும் நடத்தியுள்ளார்.

 திமுகவும் பெட்ரோல் விலை உயர்வைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், பேருந்து, பால், மின் கட்டணங்களைக் குறைக்க மாநில அரசை வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. ""பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் கசப்புடன் நீடிப்போம்'' என்று திமுக தலைவர் கூறியுள்ளார்.

 அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தரப் பகைவர்களும் இல்லை என்று கூறுவார்கள். அரசியல் நாடகத்தின் அடுத்த காட்சி இதுதான். இதற்காகவே வழிமேல் விழிவைத்து வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள் அடுத்த தேர்தல் வரை அமைதியாகவே இருப்பார்கள்.

 இவ்வாறு அடிக்கடி தங்கள் வேடத்தை மாற்றிக் கொள்வது அரசியலில் சாதாரண நிகழ்வாகிவிட்டது. இந்த அரசியல் நாடக அரங்கேற்றத்துக்குப் பிறகுதான் நாடெங்கும் நடந்து வந்த மேடை நாடகங்கள் செல்வாக்கு இழந்துபோய்விட்டன. அரசியல்வாதிகளுக்கு நிகராக நாடக நடிகர்களால் நடிக்க முடியவில்லை என்பதுதான் நாடக மேடைகளின் அழிவுக்குக் காரணமோ?

 "நாடகமே உலகம்; நாளை நடப்பதை யார் அறிவார்?' என்பது தத்துவப்பாடல். நாளை நடப்பதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இன்று நடப்பதையே அறியாமல் மக்கள் இருக்கிறார்களே! ஒருபக்கம் விலைவாசி உயர்வுக்குக் காரணமான பெட்ரோல் விலையை உயர்த்திக்கொண்டே மறுபக்கம், "வறுமையை ஒழித்துவிட்டோம்' என்று முழங்குவது மிகச்சிறந்த இரட்டைவேடம் இல்லையா?

 விலைவாசி உயர்ந்துகொண்டே போவதற்கும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே போவதற்கும், இப்போது நிலவும் மந்தமான பொருளாதார நிலைக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும் தொடர்பில்லையா? சர்வதேச கச்சா எண்ணெய் பற்றியே பேசப்படுகிறது. உள்நாட்டில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்க்கும் சர்வதேச சந்தை விலையை அடிப்படையாகக் கொள்வது என்ன நியாயம்?

 "அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டதால் விலையை ஏற்றுவதைத் தவிர வேறு வழியில்லை' என்று எண்ணெய்த்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்துள்ளார்.

 அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியாவின் ரூபாய் மதிப்பு ஒரு ரூபாய் அளவுக்குச் சரிந்தால்கூட ஆண்டுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்புக்கு இந்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

 2011-12 இல் மூன்று அரசுத்துறை நிறுவனங்களுக்கும் மொத்தமாக ரூ. 1,38,541 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதென்றும், இந்த ஆண்டு இழப்பு ரூ. 1,93,880 கோடியாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

 இந்தப் பெட்ரோல் விலை உயர்வு நாடு முழுவதும் உள்ள மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 15 விழுக்காடு குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு அறிவித்து நாடகம் நடத்துகிறது என்றும் இடதுசாரி இயக்கங்கள் எதிர்க்கின்றன.

 மக்களுக்காக மத்திய அரசு செயல்படாமல் எண்ணெய் நிறுவனங்களுக்கும், பெரிய நிறுவனங்களுக்கான அரசாகவே செயல்படுகிறது. பெட்ரோலுக்காகப் பெருந்தொகை மானியம் தருவதாகக் கூறும் மத்திய அரசு பெட்ரோல் விலையில் 50 விழுக்காட்டை வரியாகப் பெற்று வருவாய் ஈட்டி வருகிறது. அதாவது, கடந்த ஓராண்டில் மட்டும் பெட்ரோல் மீதான வரி மூலம் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு வருவாய் ஈட்டியுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

 இந்த விலை உயர்வைக் கண்டித்து பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, "பாரத் பந்த்' அறிவித்தது. அதேநாளில் இடதுசாரி முன்னணியினர் அனைத்திந்திய எதிர்ப்பு நாளாகக் கடைப்பிடித்தனர். ஆகவே "வேற்றுமைக்குள் ஒற்றுமை' என்னும் நாடகம் இதுதான்.

 மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அதையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் அளித்த விருந்தில், தமது அரசின் செயல்பாடுகளை மதிப்பிடும் பட்டியல் தொகுப்பை வெளியிட்டுப் பேசியுள்ளார்.

 சர்வதேச அளவில் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா விளங்கி வருகிறது என்றும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பல சாதனைகளைச் செய்திருப்பதாகப் பெருமிதம் கொள்கிறோம் என்றும் பேசினார்.

 அவர் பெருமிதப்பட்ட சில தினங்களுக்குள்ளேயே நாடு பெரும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து விலைவாசிகள் ஏறுமுகமாகி, ஏழை எளிய நடுத்தர மக்கள் கவலைமுகமாகிவிட்டனர்.

 உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்ற புதிய நாடகத்தை பிரதமர் மன்மோகன் சிங் நாட்டுக்கு அறிமுகம் செய்தார். அதன் விளைவாகவே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தேள் கொட்டினால் இந்தியாவில் நெரிகட்டுகிறது. பொருளாதாரச் சரிவுகளுக்கும் இதுவே காரணம்.

 மக்களைப் புறக்கணித்துவிட்டு, நாட்டை முன்னேற்றுவது எப்படி என்பதை மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசிடம்தான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

 மக்களை ஏமாளியாக்கும் நாடகம் இது. ஒட்டகத்தின் முதுகில் பெரும் சுமையை ஏற்றிவிட்டு, சிறிதளவு குறைத்தால் சுமையெல்லாம் எடுத்துவிட்டதாக எண்ணிக்கொண்டு அது மகிழ்ச்சியோடு நடந்து போகுமாம். அதுபோலவே மத்திய அரசும் மக்களைச் சுமைதூக்கும் ஒட்டகமாக நினைக்கிறது.

 அரசும், எண்ணெய் நிறுவனங்களும் ஓர் இரவில் ரூ. 7.54 உயர்த்திவிட்டு, இப்போது ரூ. 2.02 குறைத்துவிட்டனர். இந்த நாடகம் அந்த மேடையில் இன்னும் எத்தனை நாள் நடக்கும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.