மீண்டும் சூடான் சோகம்
ஓரு நாட்டில் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்தும், ஆட்சியாளரை சர்வாதிகாரி என்று குற்றம்சாட்டியும் போராட்டத்தில் மக்கள் ஈடுபடும்போது அந்நாட்டின் நிலை குறித்து அனைவரும் கவலையடைவது இயல்பு. அந்நாட்டின் அரச


ஓரு நாட்டில் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்தும், ஆட்சியாளரை சர்வாதிகாரி என்று குற்றம்சாட்டியும் போராட்டத்தில் மக்கள் ஈடுபடும்போது அந்நாட்டின் நிலை குறித்து அனைவரும் கவலையடைவது இயல்பு.
அந்நாட்டின் அரசு குறித்தும், ஆட்சி செய்பவர்கள் குறித்தும் பிற நாட்டு மக்களிடையே அதிருப்தி உருவாவது தவிர்க்க முடியாதது. அதே நேரத்தில் சாப்பாட்டுக்கு வழியில்லை என்று கூறி அரசுக்கு எதிராக மக்கள் போராட்டக் களத்தில் குதிப்பது மிகுந்த வேதனையளிக்கும் விஷயம். அவ்வாறு போராடும் மக்களை ஒடுக்க அரசு, ஆயுதத்தைக் கையில் எடுப்பது கொடூரத்தின் உச்சம்.
இப்போது அத்தகைய கொடூரத்துக்கு உள்ளாகியிருப்பவர்கள் சூடான் மக்கள். வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்து வருகிறது.
அடிப்படைத் தேவையான சாப்பாட்டுக்கே வழியில்லாதபோது என்னதான் செய்வது? அரசுக்கு எதிராக முதலில் போராட்டத்தில் குதித்தார்கள் தலைநகர் கார்ட்டூமில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள். போராட்டத்தை ஒடுக்க போலீûஸக் களமிறக்கியது அரசு. தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு, ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச்சூடு ஆகியவை போராட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மாணவர்களைச் சிதறி ஓடச் செய்தன.
எனினும் போராட்டம் ஓயவில்லை, அடுத்த சில நாள்களிலேயே பொதுமக்கள் அணி, அணியாகக் களமிறங்கத் தொடங்கினர். தலைநகரில் தொடங்கிய போராட்டம் பிற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. போராட்டக்காரர்களுடன் எதிர்க்கட்சிகளும் கைகோக்க மெல்ல மெல்ல சூடாகி வருகிறது சூடான்.
உணவுக்காகப் போராடும் மக்களை அடித்து ஒடுக்க வேண்டாம் என்று சூடான் அதிபர் ஒமர் அல்-பஷீரிடம் ஐ.நா. கேட்டுக் கொண்டாலும், ராணுவப் புரட்சியின் வழிவந்த அதிபரின் முரட்டுக் காதுகளில் அவை ஏறவில்லை.
1989-ம் ஆண்டு முதல் ஒமர் அல்-பஷீர் ஆட்சி செய்கிறார். அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள புரட்சித் தீ சூடானிலும் பரவியுள்ளது என்று வெளியாகும் செய்திகள் முற்றிலும் ஏற்கக்கூடியதல்ல.
எகிப்து, லிபியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டது ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரத்துக்கு எதிரான புரட்சி. ஆட்சியாளர் மாற்றம் ஒன்று மட்டுமே அதற்குத் தீர்வு எனக் கூறப்பட்டது. அதுவும் நடந்தேறிவிட்டது.
ஆனால் சூடானில் ஒலிப்பது பசி கொண்ட மக்களின் கூக்குரல். பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நிகழ்ந்து வந்த சூடானில், 1990-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சம் மிகக்கொடூரமானது. 1994-ல் வெளியான, பசியில் துவண்டு சாகும் நிலையில் இருக்கும் சிறுமியைச் சாப்பிடக் காத்திருக்கும் பிணம் தின்னி கழுகின் புகைப்படம் சூடான் பஞ்சத்தின் கொடூரத்தை உலக மக்களுக்கு அப்பட்டமாக எடுத்துக் காட்டியது.
அதன் பின்னர் சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் பஞ்சத்தில் இருந்து மெதுவாக விடுபட்டது சூடான். பல்வேறு இனக் குழுக்களிடையே மோதல், ஆயுதக் கடத்தல் போன்ற பிரச்னைகள் அங்கு சாதாரணம். அவை ஒருபுறம் இருந்தாலும், சமீப ஆண்டுகளில் சாதாரண மக்கள் தங்கள் வாழ்க்கையை அமைதியான வழியில் ஓட்டிக் கொண்டுதான் இருந்தார்கள்.
கடந்த ஆண்டில், வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் 17-வது இடத்தைப் பிடித்திருந்தது சூடான். ஆனால் இப்போது அங்கு ஏன் இந்தத் தலைகீழ் மாற்றம் என்று பார்த்தால், முதலில் வந்துநிற்பது தெற்கு சூடான்.
ஓராண்டுக்கு முன்பு சூடானில் இருந்து பிரிந்து தனியாக உருவான நாடு அது. எண்ணெய் வளத்தையே பெரிதும் நம்பியிருந்த ஒன்றுபட்ட சூடானில் இருந்து, தெற்கு சூடான் பிரிந்தபோது எண்ணெய் வளம்மிக்க பகுதிகளில் 80 சதவீதம் தெற்கு சூடானுக்குச் சென்றுவிட்டது. அப்படியிருந்தும் தெற்கு சூடானும் சுபிட்சமாக இல்லை என்பது வேறு விஷயம்.
தெற்கு சூடான் பிரிந்த பிறகுதான், சூடானுக்கு பிரச்னை தொடங்கியது. பொருளாதாரத்தைத் தூக்கிப்பிடித்திருந்த எண்ணெய் ஏற்றுமதி குறைந்ததால், வருவாய் குறைந்து நாட்டின் நிதிநிலை மோசமாகத் தொடங்கியது. ஏற்கெனவே உள்நாட்டில் உணவு உற்பத்தி போதுமான அளவு இல்லாத நிலையில், இறக்குமதி செய்தே தேவையைச் சமாளித்து வந்தது.
எண்ணெயை ஏற்றுமதி செய்யாவிட்டாலும், தெற்கு சூடானில் இருந்து சூடான் வழியாகப் பிற நாடுகளுக்குக் குழாய்கள் மூலம் பெட்ரோலியப் பொருள்கள் வழங்கப்பட்டு வந்தன. இதன் மூலம் ஓரளவுக்கு சூடான் அரசுக்கு நிதி கிடைத்து வந்தது. ஆனால் இப்போது சூடான் வழியாக எண்ணெய் வழங்குவதை தெற்கு சூடான் குறைத்துக் கொண்டது. இதனால் அரசுக்கு பெருமளவில் வருமானம் தடைப்பட்டது. இதனால் விலைவாசி உயர்ந்து மக்கள் தலையில் சுமை ஏறியது.
தனது இயற்கை வளத்தின் பெரும் பகுதியை எடுத்துக் கொண்டுதான் தெற்கு சூடான் தனிக்குடித்தனம் போகிறது என்பது சூடானின் ஆட்சியாளர்கள் அறிந்ததுதான். அதனால் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பிரச்னைகளை முன்னெச்சரிக்கையுடன் யோசித்து நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் இப்போது நிலைமை கையை மீறிச் செல்லும் நிலையில் ஆட்சியைக் காப்பாற்றப் போராடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் ஆட்சியாளர்கள்.
மக்களை ஒடுக்கி அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சிக்கின்றனர் ஆட்சியாளர்கள்; அதே நேரத்தில் அரசுக்கு எதிரான மக்களின் கோபத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன எதிர்க்கட்சிகள். இப்பிரச்னையில் தலையிட்டு சூடானில் மிச்சமிருக்கும் எண்ணெய் வளங்களையும் தாங்கள் உறிஞ்சிக் கொள்ளலாமா என்று யோசிக்கத் தொடங்கிவிட்டன உலக வல்லரசுகள்.
சோமாலியா, எத்தியோபியா, ஜிபூட்டி என ஆப்பிரிக்காவில் கடுமையான பஞ்சத்தில் அடிபட்ட நாடுகளின் வரிசையில் மீண்டும் சேர இருக்கிறது சூடான்.
இத்தனைக்கும் ஏற்கெனவே உணவுப் பஞ்சத்தில் அடிபட்டு மீண்டு வந்துள்ள நாடு சூடான். எலும்பும், தோலுமான உடம்பு, பெருத்த தலை, வெறித்த கண்களுடன் கையில் பாத்திரத்துடன் சூடான் குழந்தைகள் செய்தித்தாள்களில் மீண்டும் வர இருப்பதைக் காண மனதை தைரியப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...