/

புதிய பாதை; புதிய பயணம்

உலக மக்கள் தங்கள் நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களை வரவேற்பதும், அதைக் கொண்டாடி மகிழ்வதும் வழக்கம்தான். மண்ணுக்கும், மக்களுக்கும் இடையேயான தொடர்பை அது வளர்க்கிறது; அடுத்த தலைமுறைக்கு நாட்டுப்பற்றை ஊட்டுவதற

News image
Updated On :2 ஜனவரி 2024, 3:58 pm

உதயை மு. வீரையன்

உலக மக்கள் தங்கள் நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களை வரவேற்பதும், அதைக் கொண்டாடி மகிழ்வதும் வழக்கம்தான். மண்ணுக்கும், மக்களுக்கும் இடையேயான தொடர்பை அது வளர்க்கிறது; அடுத்த தலைமுறைக்கு நாட்டுப்பற்றை ஊட்டுவதற்கும் ஒரு காரணியாக அமைகிறது; அந்த ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்கு இது ஒரு பெரிய வாய்ப்பு இல்லையா?

இந்தியாவிலும் குடியரசு நாள் கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. தலைநகர் தில்லியில் பலத்த பாதுகாப்புடன் கொடி ஏற்றப்படுகிறது. ராணுவ மரியாதை மற்றும் ஆடல் பாடல்களும் நடத்தப்படுகின்றன. குடியரசுத் தலைவர் ஆற்றும் குடியரசு நாள் உரை முக்கிய இடம் பெறுகிறது.

மாநிலங்களிலும் இது ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது. அரசாங்க அலுவலகங்களிலும், கல்வி நிலையங்களிலும் கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கப்படுகின்றன.

எல்லாம் சரி, மக்கள் இந்த அரசு விழாக்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களா? இந்த ஈடுபாடு அவர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? அரசாங்கமும் இதுபற்றிக் கவலைப்படுவதில்லை. அரசியல் கட்சிகளும் எண்ணிப் பார்ப்பதில்லை. காரணம் என்ன?

எந்த ஆட்சி பதவிக்கு வந்தாலும் மக்களின் நிலை மாறவில்லை. விலைவாசிகள் குறையவில்லை. மாறாக, உயர்ந்துகொண்டே போகின்றன.

அண்மையில் உயர்த்தப்பட்ட மாநில அரசின் பேருந்துக் கட்டணம், பால் விலை, மின்சாரக் கட்டணம் இவையே சாட்சிகள். மத்திய அரசும் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலைகளை அடிக்கடி ஏற்றிக்கொண்டே இருக்கின்றது. இவையெல்லாம் ஏழை, எளிய மக்களின் தலையில் வந்து விழுகின்றன. பிறகு மகிழ்ச்சி எங்கிருந்து வரும்?

மக்கள் எழுச்சி ஏற்படும் போதெல்லாம் மத்திய அரசு, மாநில ஆட்சிகள் மேல் குற்றம் சுமத்துவதும், மாநில அரசுகள் மத்திய ஆட்சியின் மேல் பழி போடுவதும் வாடிக்கையாகிவிட்டது. மக்களைப் பொருத்தவரை முடியாட்சியாயினும், குடியாட்சியாயினும் அதுபற்றிக் கவலையில்லை. நல்ல ஆட்சியாக இருக்க வேண்டும் என்ற ஒரே கவலைதான்.

குடியரசில் ஆட்சியைத் தீர்மானிக்கும் உரிமை மக்களிடம்தான் இருக்கிறது என்று கூறப்பட்டது. "எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்றும், "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்றும் கூறப்படுகிறது. அதுவும்கூட கால மாறுதலுக்கு உள்பட்டதுதானா? "பணம் பத்தும் செய்யும்' என்பதனால் மக்களாட்சித் தத்துவமே படுதோல்வியடைந்து விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பணம் படைத்தவர்களே ஒரு நாட்டு ஆட்சியின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நிலை உருவாகுமானால் குடியரசு எங்கே இருக்கிறது? கொடிய அரசுதானே உருவாகும்.

இந்திய அரசியல் அமைப்பின் முகப்புரையில் இந்தியா ஒரு மக்களாட்சி நாடு என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. சமூக, பொருளாதார, அரசியல், நீதியும் பாதுகாப்பும் இந்திய மக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. இது ஓர் எழுதப்பட்ட அரசியல் அமைப்பாகும்.

இந்திய மக்கள் சுதந்திரமாகச் சிந்திக்கவும், பேசவும், எழுதவும், ஜாதி, மத, இன வேறுபாடு இன்றி வழிபாடு செய்யவும் உரிமைகளை வழங்கியுள்ளது.

சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சமய உரிமை, பண்பாடு மற்றும் கல்வி கற்கும் உரிமை, சொத்துரிமை, அரசியல் அமைப்புக்கு உள்பட்டுப் பரிகாரம் பெறும் உரிமை என அனைவருக்கும் அடிப்படை உரிமைகளும் அளிக்கப்பட்டுள்ளன என நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?

"இந்தியா ஒரு பெரிய நாடு. அது அளவில் பெரிய நாடு என்பதால் பெரிதாகக் கருதப்படவில்லை. இந்திய மக்கள் எண்ணத்தில் பெரியவர்களாய், இதயத்தில் பெரியவர்களாய், சிந்தனையில் பெரியவர்களாய், செயலில் பெரியவர்களாய் இருக்க வேண்டும்'' என்று முதல் பிரதமர் நேரு விரும்பினார். அந்த விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

மக்களாட்சியில் எல்லாம் மக்களின் ஒப்புதலோடுதான் நடப்பதாக நாடகம் நடத்துகின்றனர். கூடங்குளத்தில் நடக்கும் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை மத்திய அரசு மதிக்கிறதா? "சாம பேத தான தண்டம்' என்ற முறையில் செயல்படுகிறது; பழி வாங்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

குடியரசு என்பது சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்; நமது நாட்டு அரசாங்கம் சுதந்திரமாகச் செயல்படுகிறதா? அயல் நாட்டு வல்லரசுகளுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றது. அதனால்தான் அணு உலையாகட்டும், சில்லறை வணிகமாகட்டும், மக்களுக்கு எதிரான திட்டங்களை மக்களிடம் திணிக்கும் போக்கே தொடர்கிறது.

மக்களின் எதிர்ப்பைச் சமாளிப்பதற்கு அமைச்சர்களையும், அதிகாரிகளையும், காவல்துறையையும் ஏவி ஏற்றுக் கொள்ளும்படி மக்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் அல்லது அடக்கப்படுகின்றனர்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பெயரால் விவசாய விளைச்சல் நிலங்களைக் கைப்பற்றுவதற்கு விவசாயிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டதா அல்லது பெறப்படுகிறதா? இல்லையே! இதற்கு யாரைக் குறை கூறுவது? அரசையா? அரசைத் தேர்ந்தெடுத்த மக்களையா?

மக்களின் பணத்தில் மக்களுக்கு அளிக்கப்படுவது "இலவசங்கள்' என்று கூறலாமா? இதனால் மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்கிவிட்டனர் என்ற குற்றச்சாட்டு நியாயமானதா?

மக்கள் பணத்தையே ஊதியமாகப் பெற்றுக் கொண்டுவரும் அமைச்சர்களும், அதிகாரிகளும் மக்களுக்காக உழைப்பதற்குப் பதிலாக அவர்களிடமே "லஞ்சம்' வாங்கும் போக்கு தொடர்கிறதே, இதுதான் குடியரசா?

மக்களிடம் வாக்குகளைப் பெற்று, ஆட்சியதிகாரத்தில் அமர்ந்தவுடன் அது மக்களின் அரசாக இல்லாமல் தங்கள் கட்சிக்காரர்களின் அரசாக மாறிவிடுகிறது. அரசாங்கத்தின் வேலைகளைப் பெறுவதற்கும், சலுகைகளை அனுபவிப்பதற்கும் மக்களுக்கு உரிமையில்லாத கட்சி அரசை "குடியரசு' என்று கூறலாமா?

12-வது ஐந்தாண்டுத் (2012-2017) திட்டத்துக்கான வரைவு அணுகுமுறை அறிக்கைக்கு "தேசிய வளர்ச்சிக் குழு' ஒப்புதல் அளித்துவிட்டது. "வேகமான, நீடித்த மற்றும் கூடுதலாக உள்ளடக்கிய வளர்ச்சி' என்பது வரைவு அணுகுமுறை அறிக்கையின் மையக் கருத்தாகும். இந்த வரைவு அறிக்கையை மத்திய திட்டக்குழு தயாரித்துள்ளது.

"இந்தியப் பொருளாதாரம் மிகவும் சாதகமான சூழலில் 12-வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்துக்குள் அடியெடுத்து வைக்க உள்ளது...' என்று கூறும் மத்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, ""ஆனால் அடுத்து வரும் ஐந்தாண்டுகள் மிகப்பெரிய சவால்கள் நிறைந்த ஆண்டுகளாகும்...'' என்று அச்சுறுத்துகிறார்.

திட்டங்கள் மக்களைச் சென்று சேராமைக்குக் காரணம் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிக் கிடக்கும் ஊழல்தான் என்பதை அனைவரும் அறிவர். அண்ணா ஹசாரேவும் நாடெங்கும் வெளிச்சம் போட்டுக் காட்டினார். நாட்டுக்குப் புதிய விடியல் வந்துவிட்டதுபோல ஆடினர். பாடினர். இறுதியில் எதுவும் இல்லாமல் ஓடினர் என்ற கதையாகிவிட்டது.

"உண்மை என்னவென்றால், கிராமப்புற மக்கள் அனைத்து நம்பிக்கையையும் இழந்துவிட்டனர். ஒவ்வொரு புதியவரின் கைகளும் தங்கள் கழுத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் தங்களைச் சுரண்டப் போவதாகவும் கிராமத்து மக்கள் சந்தேகிக்கின்றனர்...' என்று கிராமப்புறங்களில் சேவை செய்ய விரும்பி அறிவுரை கேட்பதற்காக வந்த மாணவர்கள் இடையே உரையாற்றியபோது காந்தியார் கூறினார்.

அவர் கூறி 80 ஆண்டுகள் கழிந்துவிட்டன. நிலைமை மாறவில்லை. இப்போதும் கிராமப்புறங்கள் அப்படியேதான் இருக்கின்றன.

இந்தியாவின் வளர்ச்சி செல்வர்களுக்கும், எளிய மக்களுக்குமான இடைவெளியை அதிகரித்துவிட்டது என்பதைத்தானே அரசாங்க புள்ளிவிவர அறிக்கைகள் கூறாமல் கூறுகின்றன.

இந்தியா சிறந்த குடியரசு நாடாக விளங்குவதற்கு கனவு கண்டால் போதாது. அயல்நாட்டு நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல் சொந்தக் காலில் நிற்க வேண்டும். குடிமக்கள் ஒவ்வொருவரும் இதைத் தங்கள் நாடு எனவும், இந்த ஆட்சியைத் தங்கள் ஆட்சி எனவும் நேசிக்க வேண்டும். இதற்குப் புதிய பாதை, புதிய பயணம் தேவைப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.