மலேசிய நாட்டில் தமிழ் மக்கள்
மலேசியா நாடு இப்போது விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. அந்நாட்டில் மலாய்க்காரர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களை நடத்தி முடித்துள்ளனர். அடுத்து தமிழ் ம


மலேசியா நாடு இப்போது விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. அந்நாட்டில் மலாய்க்காரர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களை நடத்தி முடித்துள்ளனர்.
அடுத்து தமிழ் மக்களின் பொங்கல் விழாவும், தைப்பூசமும் மலேசிய நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இத்துடன் உத்தமர் நபியின் உதயதினமாகிய மீலாது விழாவும் இங்குள்ள முஸ்லிம் மக்களால் உற்சாகத்துடன் நடத்தப்படுகிறது.
மறுபக்கம் நாடெங்கும் பொதுத்தேர்தல் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. அரசாங்கத்தின் அறிவிப்புகள் எல்லாம் தேர்தலை ஒட்டியதாகவே இருக்கிறது. எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படலாம்.
நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13-வது பொதுத் தேர்தல் ஆளும் தேசிய முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் கூட்டணி இவற்றுக்கு இடையே கடுமையான போட்டியாக இருக்கும். ஆளும் கூட்டணி அரசாங்கம் சிறுபான்மையினரான இந்தியச் சமுதாயத்தின் வாக்குகளைப் பெறுவதில் குறியாக இருக்கிறது.
2007-ம் ஆண்டு நவம்பர் 25 அன்று ஹிண்ட்ராஃப் பேரணி நடந்தது. நாடு சுதந்திரமடைந்து 50 ஆண்டுகளாகியும் இந்தியர்கள் வேலைவாய்ப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து இப்பேரணி நடந்தது. இதன் பிறகு 2008 மார்ச் 8 அன்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் இழந்தது; மீண்டும் இந்தத் தேர்தலில் அதைப் பெறுவதற்கான முயற்சியில் ஆளும் தேசிய முன்னணி ஈடுபட்டுள்ளது.
மலேசியா நாட்டின் மக்கள்தொகை 27.5 மில்லியனாக அதிகரித்திருப்பதாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வாரியம் அறிவித்துள்ளது. மலாய்க்காரர்கள் 50.1 விழுக்காடும், சீனர்கள் 22.5 விழுக்காடும், மலாய்க்காரர் அல்லாத பூமி புத்ராக்கள் 11.8 விழுக்காடும், இந்தியர்கள் 6.7 விழுக்காடும், மற்றவர்கள் 0.7 விழுக்காடும் உயர்ந்திருப்பதாக அவ்வாரியம் தெரிவித்துள்ளது. அதேசமயத்தில் மலேசியர்களாக இல்லாத பிற நாட்டினர் 2.25 விழுக்காடு இருப்பதாகவும் - அவர்கள் 8.2 விழுக்காட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல இனமக்களும் கூடி வாழும் பன்முக தேசமாக மலேசியா திகழ்கிறது; வேற்றுமையில் ஒற்றுமை காணும் முகமாக "ஒரே மலேசியா' ("சத்து மலேசியா') என்னும்
முழக்கம் எங்கும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியிருப்பவர் தொகையும் கணிசமானது. அவர்களுக்காக 6பி பொது மன்னிப்புத் திட்டத்தின்கீழ் பதிவு செய்வதற்கான அவகாசம் பிப்ரவரி 15 வரை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்வதற்கு அரசாங்கம் போதுமான கால அவகாசத்தை வழங்கிவிட்டதாகவும், பதிவு செய்யத் தவறிய 13 லட்சம் சட்டவிரோதக் குடியேறிகளை அடையாளம் கண்டு கைது வேட்டை மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் நடத்துவதைத் தாமதப்படுத்தும்படி முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கேட்டுக் கொண்டுள்ளார். சீன சமூகத்தினர் உள்பட பல தரப்பினரின் ஆதரவைப் பெறுவதற்காக மேலும் கால அவகாசத்தை எடுத்துக்கொள்ளும் பொருட்டு தேர்தல் நடத்துவதைத் தேசிய முன்னணி தாமதப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இப்போது தேர்தல் நடத்தினால் 2008-ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது இழந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மீண்டும் பெற முடியாது என்கிறார்.
பிரதமர் நஜீப் துன் ரசாக் நாடாளுமன்றத்தில் குறைந்த பெரும்பான்மையைத்தான் மறுபடியும் பெறுவார்; காரணம் சீனர்கள் அரசாங்கத்துக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது இப்போதைய எண்ணமாக உள்ளது. அதேசமயம் பொதுத் தேர்தலைத் தாமதப்படுத்தினால் சீனர்கள் உள்பட அனைத்து சமூகங்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் தேசிய முன்னணி வெற்றிபெற முடியும் என்பது அவர் கருத்தாக இருக்கிறது.
எனினும் அரசாங்கம் பொதுத் தேர்தலைப் பற்றி அதிகாரப்பூர்வமாக ஏதும் அறிவிக்கவில்லை. இதுபற்றி பிரதமர் நஜீப் பேசும்போது, நாட்டில் அடுத்த பொதுத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை இப்போது திட்டவட்டமாகக் கூற இயலாது என்றும், ஆனால், 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாகவே எந்த நேரத்திலும் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி முதலிய ஊடகங்களிலும், மக்கள் மத்தியிலும் பொதுத்தேர்தல் பற்றிய பேச்சே முதலிடம் பெற்றுள்ளது. ஆளும் தேசிய முன்னணி மறுபடியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக வாக்குறுதிகளை வாரி இறைக்கிறது; எதிர்க்கும் மக்கள் கூட்டணியும் மக்கள் ஆதரவைப் பெற முடியும் என நம்பிக்கையுடன் செயல்படுகிறது.
பிரதமர் நஜீப்பின் தேசிய முன்னணிக்குப் பெரும் சவாலாக இருப்பவர் அன்வர் இப்ராஹிம். கடந்த காலத்தில் துணைப்பிரதமராக இருந்த இவருக்கு எதிராக ஓரினப் புணர்ச்சி வழக்குத் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது உயர் நீதிமன்றத்தால் அக்குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனால் இவரது வருகை எதிர்க்கட்சியினருக்கு தெம்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் ஆளும் கட்சிகள் மக்கள் பணத்தில் தங்கள் அரசின் சாதனைகளைப் பட்டியல் இட்டு விளம்பரப்படுத்துவது போலவே மலேசியாவிலும் பிரதமர் நஜீப் அறிமுகப்படுத்திய மகத்தான திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளன. இந்திய சமூகத்தினருக்கு அரசு செய்துள்ள சேவைகளே அதில் இடம்பெற்றுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 284 தமிழ்ப் பள்ளிகளின் புதிய கட்டட நிர்மாணிப்புக்கும், சீரமைப்புக்கும் மத்திய அரசாங்கம் 19 கோடியே 46 லட்சத்து 5 ஆயிரத்து 68 வெள்ளி வழங்கியுள்ளது. மலேசிய அரசாங்கத்தின் வெளிநாட்டுத் தூதுவர்களாக 6 இந்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மலேசிய இந்திய வர்த்தகர்களுக்கு மேலும் சிறப்பான பயிற்சிகளையும், வர்த்தக வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரும் நோக்கத்தில் 20 லட்சம் வெள்ளி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அரசு சேவையில் இந்தியர்களின் சேவை விகிதம் 5.2 ஆக இருப்பதை 7.4 விழுக்காடாக உயர்த்த பிரதமர் ஆணையிட்டுள்ளார் என இது தொடர்கிறது.
தனது தந்தையும் மலேசியாவின் இரண்டாவது பிரதமருமான துன் அப்துல் ரசாக் விட்டுச் சென்ற சேவையை அவரது புதல்வரும், இப்போதைய 6-வது பிரதமருமான நஜீப் மாற்றுச் சிந்தனையுடன் தொடர்கிறார்; 2020-ம் ஆண்டுக்குள் மலேசியாவை வளர்ச்சியடைந்த நாடாக உயர்த்துவதற்கு பல மாற்றங்கள் கொண்டு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
""பின்தங்கியிருக்கும் இந்தியர்களைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது; அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இன்னும் அதிக அக்கறை செலுத்த வேண்டும்...'' என்று பிரதமர் நஜீப் வருந்தியிருப்பது உண்மையா? தேர்தல் நோக்கமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.
மலேசிய அரசியல் போராட்டத்தில் இந்திய சமுதாயம் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு புதிய அரசியல் சக்தியாகத் திகழ்கிறது.
இதற்கு முன் 2008-ம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் 12-வது பொதுத் தேர்தலின் முடிவுகள் ஒரு முக்கிய காரணமாகும்; தொடர்ந்து இந்திய சமுதாயம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் எதிர்நீச்சல் போட வேண்டிய நிலையில் இருப்பதை மறுக்க முடியாது.
இந்திய சமுதாயத்தின் தேவைகளையும், பிரச்னைகளையும் சரியாக ஆராயாமல் போனது, அளிக்கப்பட்ட திட்டங்களையும், தீர்மானங்களையும் புறக்கணித்தது. அரசியல், பொருளாதாரம், சமயம், கல்வி மற்றும் பண்பாட்டுக் கூறுகளில் அலட்சியம் செய்தது தேசிய முன்னணி அரசின் மீது இந்திய சமூகம் காலம் காலமாக வைத்திருந்த நம்பிக்கையை இழக்கச் செய்தது.
இழந்த இந்திய சமுதாயத்தின் நம்பிக்கையைத் தூக்கி நிறுத்திட ஆளும் அரசாங்கம் படாதபாடுபடுகிறது. ஆளும் தேசிய முன்னணியில் அங்கம் பெற்றிருக்கும் மலேசிய இந்தியன் காங்கிரஸ் (மஇக) உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் இந்திய மக்களைப் பிரதிநிதித்துவம் செய்தபோதும் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் நம்பிக்கையை யாரும் பெறவில்லை. பல அமைப்புகள் அரசாங்கத்திடம் மானியம் வாங்குவதற்காகவே பெயரளவில் இருக்கின்றனவே தவிர, மக்களுக்காகச் செயல்படவில்லை என்பது அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
கடந்த 2008 தேர்தலில் ஆளும் தேசிய முன்னணி அமோக வெற்றி பெறவில்லை; அத்துடன் எதிர்க்கட்சியான மக்கள் கூட்டணி சிலாங்கூர், பினாங்கு, கெடா, கிள்ளான் ஆகிய 4 மாநிலங்களைக் கைப்பற்றி அரசாங்கம் அமைத்தது. இந்தப் பொதுத்தேர்தலை இரண்டு கூட்டணிகளும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. இங்குள்ள இந்திய மக்களும் புதிய ஆட்சியைக் காணவே காத்திருக்கின்றனர்.
மலேசிய நாட்டில் மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்களுக்கு அடுத்த நிலையில் இந்திய சமூகத்தினர் வாழ்கின்றனர்; நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைகளைத் தீர்மானிக்கும் முக்கிய இடத்தில் இவர்கள் இருக்கின்றனர்.
தமிழ் மக்கள் மிகுதியாக வாழும் கோலாலம்பூர் - பிரிக்ஃபீல்டு பகுதியை "சிறிய இந்தியா' என்று அழைக்கின்றனர். இது இந்தியத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பெருமையாகும்.
""பல நாடுகளில் தமிழர்கள் இருக்கிறார்கள்; மலேசியாவில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள்...'' என்று அண்ணா 1965-ம் ஆண்டு மலேசியாவுக்கு வருகை தந்தபோது பேசியுள்ளார். இங்குள்ள தமிழ் மக்களின் உயர்ந்த வாழ்க்கை நிலைக்கு அளிக்கப்பட்ட சான்றிதழ் ஆகும். இந்த நிலை தொடர வேண்டும்.
நமது முழக்கம், "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதாகும். இங்குள்ள தமிழ் மக்கள் சாதி, மத வேறுபாடுகளை விடுத்து உடன்பிறப்புகளாக வாழ வேண்டும்; உரிமைக்குக் குரல் கொடுக்கும் தமிழ் மக்கள், மற்ற இன மக்களுடன் உறவுக்குக் கைகொடுத்து வாழ வேண்டும்.
""மலேசிய நாட்டிலுள்ள இந்தியர்கள் அரசாங்கத்தின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும்; அதன் வழி இந்திய சமூகம் எதிர்கொள்ளும் விவகாரங்களுக்கும், சவால்களுக்கும் விவேகமான முறையில் தீர்வு காண முடியும் என்பதோடு, அவர்கள் வளமான வாழ்க்கைத் தரத்தை அடைவதற்கும் உதவ முடியும்...'' என்று தைப்பூச வாழ்த்துச் செய்தியில் பிரதமர் நஜீப் துன் ரசாக் வலியுறுத்தியுள்ளார். இதனை இந்தியத் தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நமது விருப்பமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...