டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அதிர்ச்சி தரும் வறட்சி

புத்தகக் காட்சிகளில் இத்தனை லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியிருக்கின்றன. இத்தனை கோடி வருவாய் கிடைத்திருக்கிறது என்ற செய்தியை கேட்டாலோ அல்லது படித்தாலோ உற்சாகம் பிறக்கிறது. நல்ல விஷயம்தான். ஆழமாக சிந்தி

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:06 pm

ஜெபலின்ஜான்

புத்தகக் காட்சிகளில் இத்தனை லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியிருக்கின்றன. இத்தனை கோடி வருவாய் கிடைத்திருக்கிறது என்ற செய்தியை கேட்டாலோ அல்லது படித்தாலோ உற்சாகம் பிறக்கிறது. நல்ல விஷயம்தான். ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் புத்தகக் காட்சியின் பிரதான நோக்கம் நிச்சயம் அதுவாக இருக்க முடியாது. எத்தனை லட்சம் புத்தகங்கள் விற்பனையாகி இருக்கின்றன என்பது முக்கியம் அல்ல. எத்தனை  ஆயிரம் அல்லது எத்தனை லட்சம் தரமான புத்தகங்கள், இலக்கியப் புத்தகங்கள் விற்பனையாகி இருக்கின்றன என்பதுதான் முக்கியம்.

தமிழகத்தில் நகரங்கள்தோறும் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் புத்தகக் காட்சிகளுக்கு வரும் புத்தக ஆர்வலர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. விற்பனையாகும் புத்தகங்களும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. ஆனால், மொழிபெயர்ப்பு, மாற்றுமொழி இலக்கியப்  புத்தகங்களுக்கு இணையாக தமிழ் இலக்கியப் புத்தகங்கள் விற்பனை அதிகரிக்கவில்லை என்பதுதான் ஒவ்வொரு புத்தகக் காட்சியின் நிறைவுநாளிலும் கிடைக்கும் கசப்பான செய்தி.

 அண்மையில் சென்னையில் நடந்து முடிந்த 35-வது புத்தகக் காட்சி சொல்லும் செய்தியும் இதுதான். புத்தக ஆர்வலர்கள்தான் அதிகரித்திருக்கின்றனர். தீவிர வாசகர்கள் அல்லது தீவிர இலக்கிய வாசகர்கள் அதிகரிக்கவில்லை. அதனால்தான் தரமான புத்தகங்கள், இலக்கியப் புத்தகங்கள் விற்பனையில் பின்தங்கிவிடுகின்றன என சப்பைக்கட்டு காரணத்தைக்கூறி படைப்பாளிகள் தப்பித்துவிட முடியாது.

தீவிர இலக்கிய வாசகர்கள் (குறிப்பாக இளம் வாசகர்கள்) எண்ணிக்கை கடந்த 10  ஆண்டுகளில் அபரிமிதமாக அதிகரித்திருக்கிறது. புத்தகக் காட்சிகளில் விற்பனையாகும் மொழிபெயர்ப்பு, மாற்றுமொழி புத்தகங்களின் எண்ணிக்கை, வலைப்பூக்களில் தரமான படைப்புகளை எழுதும், படிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை இவைகளே இதற்குச் சாட்சி.

தீவிர இலக்கிய வாசகர்களைக் கவரும் வகையில் சர்வதேச தரத்துக்கு இணையாக, புதுமையான, கலைநயம் மிக்க தமிழ்ச் சிறுகதைகள் அதிக அளவில் வெளிவருகின்றன. அதில், தமிழ்ப் படைப்பாளிகள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர். ஆனால், நாவல்களில் நாம் மிகப்பெரிய அளவில் பின்தங்கியிருக்கிறோம். பெரும்பாலான தமிழ்ப் படைப்பாளிகளின் 2 அல்லது 3 நாவல்களுக்கு மேல் படித்தால் பெரிய அளவில் வித்தியாசத்தை உணர முடியவில்லை. புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியவில்லை என்கின்றனர் வாசகர்கள்.

தீவிர இலக்கிய வாசகர்களின் தேடுதல், ரசனை உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்யும் அளவுக்கு தரமான தமிழ் இலக்கியப் படைப்புகளுக்கு வறட்சி ஏற்பட்டிருக்கிறது. நாவல்களைப் படைக்கும்போது தன் சுயஅனுபவம், தன்னை சுற்றி  அல்லது தன் சமூகத்தைச் சுற்றி நடக்கும் குறுகிய பார்வையுடன் எழுதக்கூடாது. தன்னைச் சுற்றியுள்ள இடத்தில் இருந்து மிகப்பெரிய பரந்துபட்ட சிந்தனையுடன் நாவல்களைப் படைக்கும்போதுதான் அதன் தரம் உயரும்.

கடந்த 50 ஆண்டுகளில் தமிழர் பண்பாடு, கலாசாரம் உள்ளிட்டவற்றில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவற்றை கலைநயமிக்க எழுத்தாக உருமாற்றுவதில் நாம் பின்தங்கியிருப்பதால் தீவிர இலக்கிய வாசகர்களைக் கவரும் வகையில் புதுமையான நாவல்கள் வெளிவருவதில்லை.அதேநேரத்தில் மலையாளம், வங்கம், பிரெஞ்சு, ரஷிய உள்ளிட்ட மொழிகளில் இருந்து வெளிவரும் நாவல்களில் கலைநயமிக்க புதுமை இருப்பதால் அவை தமிழகத்தில் இருக்கும் தீவிர இலக்கிய வாசகர்களைக் கவர்கின்றன  என்பதுதான் இலக்கிய விமர்சகர்கள் உரக்கச் சொல்லும் உண்மை.

அதேநேரத்தில், தமிழ் வாசகர்களை மட்டுமல்ல, உலக வாசகர்களையும்கூட தன்பால் கவர்ந்திழுக்கும் நாவல்களைப் படைக்கும் வாய்ப்புகள் தமிழ்ப் படைப்பாளிகளுக்குத்தான் அதிகம் இருக்கிறது. தரமான நாவல்கள் உருவாக்கப்படுவதற்கான ஆயிரம், ஆயிரம் விஷயங்கள் நம்மை சுற்றி நடந்துகொண்டிருக்கின்றன.

உலகில் அதிக நாடுகளில் வசிக்கும் இனம் தமிழ் இனம்தான். கலாசாரம், பண்பாடு ஆகியவற்றால் அதிகமாக தாக்கப்படும் இனமும் தமிழ் இனம்தான். எனவே, பிற இனத்தவருடன் ஒப்பிடும்போது நமக்கு உலகளாவிய பார்வை, அனுபவம் அதிகம் கிடைக்கிறது.

இந்த அனுபவத்தைப் பயன்படுத்தி தரமான நாவல்கள், ஆவணப் பதிவுகள் உள்ளிட்ட  சிறந்த படைப்புகளைத் தமிழ்ப் படைப்பாளர்கள் உருவாக்க முடியும் என்கின்றனர் இலக்கிய விமர்சகர்கள்.

பல வரலாற்றுப் பதிவுகளை ஆவணப்படுத்துவதில் நாம் பின்தங்கியிருக்கிறோம். சமகால வரலாற்றுச் சம்பவங்கள்கூட சரியாகப் பதிவு செய்யப்படுவதில்லை. வெள்ளையர்களின் ஆட்சி நடக்கும்போது மருத்துவம், தொழில்நுட்பம், கலைகள் உள்ளிட்டவை தொடர்பான அரிய ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன. அவைகள் இப்போதும், ஜெர்மனி, பிரெஞ்சு, இங்கிலாந்து, ஹாலந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஆவணக் காப்பகங்களில் சிறைபட்டுகிடக்கின்றன.

அவற்றை மீட்க முடியாவிட்டாலும் அதில் இருக்கும் தகவல்களைப் பதிவு செய்து, நமது எதிர்கால சந்ததியினருக்குத் தேவையான சிறந்த பொக்கிஷப் படைப்புகளை உருவாக்க முடியும். வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழ்ப் படைப்பாளிகள் இதைப் பற்றி கவனிப்பது அவசியம்.

இன்னமும் தமிழகத்தில் இருக்கும் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகளை ஆவணப்படுத்த இங்கிருக்கும் இளம்படைப்பாளிகள் கவனம் செலுத்த வேண்டியது அவசர அவசியம். இல்லையெனில் நீண்டகாலம் பாதுகாக்கப்பட வேண்டிய, அடுத்தத் தலைமுறைக்குச் சென்று சேர வேண்டிய அரிய தகவல்களை நாம் இழக்க நேரிடும்.  

தமிழில் இருக்கும் தீவிர இலக்கிய வாசகர்களையும், பிறமொழியில் இருக்கும் வாசகர்களையும் சுண்டி இழுக்கும் தரமான படைப்புகளை உருவாக்கும்போதுதான்  தமிழை உலகம் கவனிக்கும். அப்போதுதான் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் ஒவ்வொரு தமிழனும் தலைநிமிர்ந்து நிற்க முடியும்.  தமிழன்னையின் மணம் உலகம் முழுவதும் வீசும். தமிழின் வலிமையை மட்டுல்ல...தமிழனின் வலிமையையும் உலகம் உணரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.