ஆளப்போகும் "ஆண்ட்ராய்ட்'
கணினி என்றவுடனேயே நினைவில் வருவது பில்கேட்சின் மைக்ரோசாப்ட் நிறுவன தயாரிப்பான விண்டோஸ் இயங்குதளம்தான். மென்பொருள்களாகட்டும், விடியோ கேம்ஸ் ஆகட்டும், இணையதளங்களாகட்டும் அனைத்திற்கும் இயங்குதளமாக (ஆப்ரே


கணினி என்றவுடனேயே நினைவில் வருவது பில்கேட்சின் மைக்ரோசாப்ட் நிறுவன தயாரிப்பான விண்டோஸ் இயங்குதளம்தான். மென்பொருள்களாகட்டும், விடியோ கேம்ஸ் ஆகட்டும், இணையதளங்களாகட்டும் அனைத்திற்கும் இயங்குதளமாக (ஆப்ரேட்டிங் சிஸ்டம்) விளங்குவது விண்டோஸ்தான்.
யுனிக்ஸ், மேக் போன்ற இயங்குதளங்கள் இருப்பினும் புதிதாக உருவாக்கப்படும் மென்பொருள்களில் பெரும்பாலானவை விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படும் வகையில்தான் வடிவமைக்கப்படுகின்றன. எனவேதான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.
கணினிக்கு எப்படி ஓர் இயங்குதளம் தேவையோ, அதுபோல செல்போன்களுக்கும் ஓர் இயங்குதளம் தேவை. இந்நிலையில் தற்போது செல்போன் என்றவுடனேயே நினைவில் வரும் வகையில் உள்ளது கூகுள் நிறுவனத்தின் "ஆண்ட்ராய்ட்' இயங்குதளம்தான்.
நோக்கியா செல்போன்களுக்கென தனி இயங்குதளம் உள்ளது. இதுபோல ஆப்பிள் நிறுவன போன்களுக்கென தனி இயங்குதளம் உள்ளது. ஆனால் சாம்சங் உள்ளிட்ட பெரும்பாலான செல்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தையே நம்பியுள்ளன.
இந்த ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை முதன் முதலில் ஆண்ட்ராய்ட் இன் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் உருவாக்கியது. இந்நிறுவனத்தை 2005இல் கூகுள் நிறுவனம் வாங்கியது. அதன் பின்னர் 2007இல் மோட்டோரோலா, சாம்சங், எல்ஜி, டிமொபைல், ஹெச்டிசி, பிராட்காம் கார்ப்பரேசன், இண்டெல், என்வீடியா, குவால்காம் மற்றும் பல முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து "ஓப்பன் ஹேண்ட்செட் அல்லையன்ஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கியது. இதன் மூலம் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் மேலும் மெருகேற்றப்பட்டது.
இந்த இயங்குதளத்தில் ஜாவா நிரல்கள் (புரோகிராம்) மூலம், தங்களுக்குத் தேவையான சிறு சிறு மென்பொருள்களை உருவாக்கி இணைத்துக் கொள்ளமுடியும். இந்த வகையில் இன்று செல்போன்களில் பயன்படுத்தத்தக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விடியோ கேம்ஸ் உள்பட மென்பொருள்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தையே பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன.
ஆண்ட்ராய்ட் இயங்குதள செல்போன்களில் இணையப் பக்கங்களைப் பார்ப்பது, கூகுள் மேப், ஆர்குட் சமூக வலைத்தள சேவை, பிற கணினிகளுடன் இணைப்பது போன்ற வசதிகள் பிற இயங்குதள செல்போன்களின் செயல்பாட்டை விட வேகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்போனில் குறிப்பிட்ட இடத்திற்கான வரைபடத்தை காண்பிக்கும் பெண் "உங்ககிட்ட இல்லையா அங்கிள்' என காரில் வருபவரிடம் கூறுவதாக அமைந்த தொலைக்காட்சி விளம்பரத்தில், ஆண்ட்ராய்ட் பயன்பாடு இல்லாத செல்போன்களை உபயோகிப்போர்கள் பல ஆண்டுகள் பின்னோக்கி இருப்பவர்களாகவே காட்டப்படுகிறது.
அதுபோல கோபமான அதிகாரி, உதிர்க்கும் வார்த்தைகளை அப்படியே திரும்ப பேசுகிறது பூனை. இதைக் கேட்ட அதிகாரி கோபம் பறந்து சிரிக்கிறார் இதுபோன்ற விளம்பரங்களாலும் ஆண்ட்ராய்ட் பதிந்த செல்போன்களை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் ஆவலாகவே இருக்கின்றனர். ஐபோனிற்கு இணையான அம்சங்களோடு, விலை குறைவாக இருப்பது இதன் விற்பனை அதிகரிப்பிற்கு முக்கியக் காரணமாகும்.
இந்நிலையில் மேற்படி வரைபடங்கள், பேசும் பூனை ஆகியவற்றை போனில் நாம் இயக்குவதைவிட, இதுபோன்று மேலும் புதுமைகளைப் படைக்க வேண்டும் என விரும்புவோர்களுக்கு நிரல்கள் எழுத ஏற்றவகையில் உள்ளதுதான் ஆண்ட்ராயின் சிறப்பு.
இத்தனை சிறப்புகள் இருப்பினும் ஆண்ட்ராய்டுக்கு எதிர்ப்புக் குரல்களும் அவ்வப்போது எழவே செய்கின்றன. ஆண்ட்ராய்ட் இயங்குதள செல்போன் மூலம் பொது இணையதள இணைப்பை தொடர்பு கொள்ளும் போது அவரது தொலைபேசி தகவல்கள், தொடர்பு விவரங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்தும் திருடப்படக் கூடிய அபாயம் உள்ளது எனவும், குறிப்பிட்ட நபர் தற்போது எந்த இடத்தில் உள்ளார் என கண்காணிக்கவும் இணையதள திருடர்கள் இந்த முறையைப் பயன்படுத்துவதாக ஜெர்மன் தொழில்நுட்ப பாதுகாப்பு ஆய்வாளர் பாஸ்டியன் கொனிங்ஸ் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற குறைபாடுகள் பின்னாளில் நிவர்த்தி செய்யப்படும் என்ற போதிலும் ஜாவா, டாட்நெட் போல ஆண்ட்ராய்டின் பயன்பாடு குறித்த கல்வியானது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களைச் சென்றடையாமலே உள்ளது.
இந்நிலையில் தற்போது மடிக்கணினிகளுக்கு மாற்றாக டேபிள் பிசி எனப்படும் சிறிய வகை கணினிகளுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளன. இந்த கணினிகளிலும் ஆண்ட்ராய்டுகளே இயங்குதளமாக உள்ளன.
எனவே, வரும்காலத்தில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தைப் பயன்படுத்தி புதிய மென்பொருள்களை உருவாக்கும் சந்தையில் வேலைவாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளது.
அவுட்சோர்ஸிங் முறையில் விடியோ கேம்ஸ், செல்போனில் பயன்படுத்தத்தக்க வகையிலான மென்பொருள்களைத் தயாரித்து விற்கவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, விண்டோசுக்கு மாற்றாக ஆண்ட்ராய்டு ஆளும் காலம் விரைவிலே வரவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...