கேட்கவே கொடுமை
முந்தைய தலைமுறையினரின் வீடுகளில் அலங்கரித்தும், கைகளில் "டிரான்சிஸ்டராக' தவழ்ந்தும், காதுகளில் தேன்


முந்தைய தலைமுறையினரின் வீடுகளில் அலங்கரித்தும், கைகளில் "டிரான்சிஸ்டராக' தவழ்ந்தும், காதுகளில் தேன் பாய்ச்சியவை வானொலிகள். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்புவரை காலை, மாலை நேரங்களில் "ஆகாசவாணி'யின் தமிழ்ச் செய்தியறிக்கையும், அகில இந்திய வானொலியின் "மாநிலச் செய்தி'களும் ஒலிக்காத வீடுகளே இருக்காது.
தென் மாவட்ட மக்களின் ஆதரவோடு வானொலி ஒலிபரப்பில் புதிய சகாப்தம் படைத்தது இலங்கை வானொலியின் வர்த்தக சேவை. 1980, 1990-ஆம் ஆண்டுகளில் இலங்கை வானொலியைக் கேட்காத தென் மாவட்ட மக்கள் இருக்கவே முடியாது.
திரையிசைப் பாடல்கள், நாடகம், ஒலிச்சித்திரம், கிரிக்கெட் நேரடி வர்ணனை போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, பல மொழிகளில் செய்திகள், ஆன்மிகம், விவசாயம், அறிவார்ந்த விவாதங்கள், விநாடி வினா, மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகள், மருத்துவ ஆலோசனைகள் என்று சமூகம் மற்றும் மக்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கி வந்தன வானொலிகள்.
இன்று தொலைக்காட்சி வந்து வானொலிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்ட நிலையில், வானொலி கேட்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.
ஏ.எம். ரேடியோக்களின் சகாப்தம் முடிவுக்கு வந்து விட்ட நிலையில், எஃப்.எம். எனப்படும் பண்பலை வானொலிகள் அந்த இடத்தைப் பிடிக்க முயல்கின்றன.
சென்னை போன்ற பெரு நகரங்களில் சுமார் 10-க்கும் மேற்பட்ட எஃப்.எம். வானொலிகள் செயல்படுகின்றன. தமிழகத்தின் பிற நகரங்களில் 2 முதல் 3 எஃப்.எம்.கள் ஒலித்து வருகின்றன.
காலத்துக்கு ஏற்ப வானொலிப் பெட்டியின் அளவும் சுருங்கிவிட, பெரும்பாலும் செல்போன்கள் மூலமே இளைஞர், இளைஞிகளின் காதுகளை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.
சிறுதொழில் நடைபெறும் இடங்கள், சில ஹோட்டல்கள், முடி திருத்தகம் உள்ளிட்ட கடைகள், புறநகர் பேருந்துகளில் பண்பலை வானொலி நிகழ்ச்சிகள் ஒலிப்பதை அதிகம் கேட்க முடிகிறது.
வானொலி கேட்கும் பழக்கம் என்பது முழுமையாக முடிந்துவிடவில்லை என்று ஆறுதல் ஏற்பட்டாலும், சில தனியார் எஃப்.எம். ரேடியோக்களில் ஒலிபரப்பாகும் சில நிகழ்ச்சிகள், இதுபோன்ற ஒலிபரப்புகள் தேவைதானா என்ற கேள்வியை எழுப்புகின்றன.
இவ்வகை எஃப்.எம். ஒன்றில் இரவு நேரத்தில் இளைய தலைமுறையினரின் பிரச்னைக்குத் தீர்வு சொல்கிறோம் என்று ஒரு நிகழ்ச்சி. நிகழ்ச்சி தொகுப்பாளரை தொலைபேசியில் அழைக்கும், ஓர் இளைஞர், "அமைந்தகரை, அப்பாசாமி தெரு, அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் அனிதா என்னை ஆறு மாதமாகக் காதலித்தார். ஆனால் இப்போது எங்களுக்குள் சின்ன பிரச்னை, என்னிடம் பேசுவதே இல்லை. நீங்கள்தான் அவரைச் சமாதானப்படுத்த வேண்டும். அவள் உங்கள் நிகழ்ச்சியை தவறாமல் கேட்பாள்' என்று கூறி கசிந்து உருகுகிறார். அவருக்கு "ஐஸ்கிரீம்' குரலில் ஆறுதல் கூறிவிட்டு, யாரென்றே தெரியாத அனிதாவுக்கு காதலைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டுகோள் விடுக்கிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளினி.
இதேபோன்ற இளைஞர், இளைஞிகளின் "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த' பிரச்னைகளும், அதற்கான ஆறுதல், ஆலோசனைகளும் எஃப்.எம்.களில் தொடர்கின்றன. இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி, பழிவாங்கும் நோக்குடன் ஒரு பெண் மீது அவதூறு கற்பிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஒருவரது வாழ்க்கை எந்த அளவுக்கு பாதிப்புக்குள்ளாகும் என்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
அடுத்ததாக காலை நேரத்தில் ஒரு நிகழ்ச்சியில், "கூடங்குளத்தில் அணு உலை மூடப்பட்டு விட்டது', "கேப்டன் தோனி கிரிக்கெட்டுக்கு முழுக்குப் போட்டுவிட்டார்' என சில செய்திகளைக் கூறி நம்மை பரபரப்புக்கு உள்ளாக்குகிறார்கள். தொடர்ந்து இப்போது கூறியவற்றில் தவறான செய்திகள் எது? அதைக் கண்டுபிடித்துக் கூறினால், பரிசு என்று கூறி எரிச்சலூட்டுகிறார்கள்.
வெறுத்துப்போய் அடுத்த "ஸ்டேஷனை டியூன்' செய்தால், "நடிகை சொப்பனசுந்தரி வைத்திருந்த காரை அதற்கு முன்பு யாரெல்லாம் வைத்திருந்தார்கள் என்பதை வரிசைப்படுத்திக் கூறுங்கள்' என்று நேயர்களை பொது அறிவுக்கு சவால் விடுகிறார் ஒரு தொகுப்பாளினி.
அடுத்ததாக, அவர்கள் மொழியில் "கலாய்ப்பது, டபாய்ப்பது' என்று கூறிக் கொண்டு, நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நேயர்களையும். நேயர்கள், தொகுப்பாளரையும் தொலைபேசியிலேயே வாய்க்கு வந்தபடி தாறுமாறாகத் திட்டிக் கொள்ளும் ஒரு நிகழ்ச்சி.
மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில், இரட்டை அர்த்தத்தில் அழுத்திப் பேசி அருவெறுப்பின் உச்சக்கட்டத்துக்குச் செல்கிறார் ஒரு தொகுப்பாளர். இவையெல்லாம் சிறு உதாரணங்கள் மட்டுமே. இதுபோன்ற வேண்டத்தகாத, விரும்பத்தகாத, கேட்கவே கொடுமையான நிகழ்ச்சிகள் பல, தனியார் எஃப்.எம்.களில் உண்டு.
இவற்றுக்கு நடுவே அவ்வப்போது நல்ல நிகழ்ச்சிகளும் சில எம்.எஃப்.கள் ஒலிபரப்புகின்றன. ஆனால் அபத்தமான நிகழ்ச்சிகள்தான் அதிகம்.
ஆஸ்திரேலிய எஃப்.எம். ரேடியோ நிகழ்ச்சித் தொகுப்பாளர்களால் ஏற்பட்ட பிரச்னையால் லண்டனில் இந்திய வம்சாவளி செவிலியர் உயிரிழந்த சம்பவம், இவ்வகை வானொலிகள் எப்படி சமூகப் பிரக்ஞை இன்றி நடந்து கொள்கின்றன என்பதற்கு உதாரணம். கட்டுப்பாடுகள் உள்ள ஆஸ்திரேலியாவிலேயே பண்பலை ரேடியோ ஜாக்கியின் தொலைபேசி உரையாடல் ஒரு செவிலியரின் உயிரைப் பறிக்கக் காரணமாக அமைந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் பண்பலை வரிசை நிகழ்ச்சிகளுக்கு உள்ள கட்டுப்பாடுகள் என்ன என்பது கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
திரைப்படங்களுக்குப் பெயரளவிலாவது தணிக்கை உள்ளதைப் போல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் தணிக்கை தேவை என மக்களிடையே பரவலான கருத்து உருவாகிவிட்டது.
பண்பலை வானொலி நிகழ்ச்சிகளுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை என்பதை அவர்கள் வழங்கும் நிகழ்ச்சியின் தரத்திலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. ஊடகங்களுக்கு சமூகக் கடமை உள்ளது. அதுவும் படித்தவர்கள் மட்டுமின்றி பாமரனையும் சென்றடையும் வானொலி போன்ற வெகுஜன ஊடகத்துக்கு அது மிகவும் அவசியம். சமூகப் பிரக்ஞையின்றி வர்த்தக நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக மலினமான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் சில தனியார் பண்பலை வானொலி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும். முதல் கட்டமாக இவற்றுக்கு ஒரு தணிக்கை - கண்காணிப்பு அமைப்பு மிக அவசியம். இல்லையெனில் சமூகச் சீரழிவில் இத்தகைய தனியார் பண்பலை வானொலிகளின் பங்கும் கணிசமாக இருக்கும் என்பதை எதிர்காலத்தில் உணர வேண்டியிருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...